வடக்கிருத்தல்


இரவுப் படுக்கை தயாராய் இருந்தது. தூக்கம் சுழலும் விழிகளோடு அன்புமதி வடப்புறம் தலையணையைப் போட்டு படுக்கப் போனாள்.

அன்புமதி என் மகள். வயது 7.

வழக்கமாக தெற்கில் தான் தலை வைத்துப் படுப்பது வழக்கம்.


“அப்பிடியே தூங்கிறப் போற அன்பு. இந்தப் பக்கம் வைச்சுப் படுத்துகோ” என்றேன். தூக்கம் மறந்து கேள்விகள் முளைத்துக் கொண்டது அன்புமதிக்கு..

” ஏம்பா அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?”

என்னிடம் தான் பதிலிருந்ததே.. எங்கோ கேட்டுப் பதிந்து கிடந்த ஒன்று அல்லது படித்து கிடைத்தது. ‘ வடக்குப் பக்கத்தில காந்த சக்தி இருக்குதாம் அது மூளையை பாதிக்குமாம்’ மகளுக்கு ஒன்றை கற்பித்த செருக்குடன் சொன்னேன்.

நொடி நேரத்தில் அடுத்த கேள்வி வந்தது “காலை வடக்குப் பக்கம் நீட்டுனா காலுக்கு ஒன்னும் ஆகாதாப்பா?”

முக்கியமான கேள்வி தான் எனக்கே நான் சொன்ன விசயத்தில் குழப்பம் வந்தது “கால்ல மூளை இல்லையே பாப்பா..” என்றேன்.

ஓ அப்படியா என்பது போல் பார்த்துவிட்டு தூங்கத் தயாராள் அன்புமதி. எனக்குத் தான் தூங்க நேரமானது.

இதை என்னிடம் யார் முதன் முதலில் சொன்னது. நண்பனுக்காக பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று பள்ளியில் படித்தது.
வடக்கிருத்தல் என்றால் என்ன என்றோ? வழி முறைகள் பற்றியோ வேறெங்காவது பதிவுகள், தரவுகள், கிடைக்கின்றனவா?

அதுவும் படுக்கும் போது மட்டும் ஏன் பார்த்துப் படுக்க வேண்டும். நடக்கும் போது, உட்காரும் போது திசையெல்லாம் பார்த்துவிட்டா செய்கிறோம். நாம் எப்படி நடந்தாலும், அமர்ந்தாலும் உடலின் ஒரு பகுதி, தலையின் ஒரு பகுதி எப்போதும் வடக்கை நோக்கி இருந்து கொண்டு தானே இருக்கிறது.

பொத்தம் பொதுவாய் அறிவியல் சொல்கிறது என்று எங்கேயே கேட்ட ஞாபகம். அது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது. என்ன சோதனைகள் மேற் கொண்டார்கள். விளைவுகள் என்ன. அப்படி பாதிக்கப்பட்டது யார்? அப்படி ஒரு விசயம் இருக்குமானால் ஏன் பாடப் புத்தகங்களில் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை?

இடது புறமாகவே நட, தலைகவசம் முக்கியம், இப்படி எண்ணற்ற விதிகள், அறிவிப்புகள் போடுகிறார்களே. இடதுபுறம் தலை வைத்து தூங்காதீர்கள் என்று எங்கேயும் இல்லையே. இல்லை எந்த நாட்டிலாவது அப்படியும் அறிவிப்புகள் இருக்கிறதா? குழப்பமாக இருந்தது.

எப்போதாவது அதற்கான விடை தெரிய வரும் என்றாலும், நமக்கே சரியாய் தெரியாத, புரியாத விசயங்களை குழந்தைகளுக்குச் சொல்கிறோமே என்ற குற்ற உணர்வு சரியாய் தூங்கவிடவில்லை அன்று. இப்படி கேள்விகள் இன்றி எத்தனை எத்தனை செயல்களை, கருத்துக்களை பரம்பரை பரம்பரையாக மானிட இனம் சுமந்தலைந்து கொண்டிருக்கிறது!

  • பொன்.சுதா