சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3


வருடம் நினைவில்லை.

எழுத்தாளர் ராம் ‘சரசுராம்’ என்ற பெயரில் எழுதத் துவங்குவதற்கு முன்பொரு நாள். சாயந்தரம் போல வீட்டுக்கு வந்தவர், “ப்ரீயா இருந்தா வாங்களேன். சென்னையில் இருந்து வந்திருக்கும் என் நண்பர் ஒருவர் அஷோக் ஹோட்டலில் தங்கியிருக்கார். பார்த்துட்டு வரலாம்.”
lit-bad-luck
புதுப் புது சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியன. யார் என்று கூட கேட்கவில்லை. சாவி இதழுக்காக எழுதிக் கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டு புறப்பட்டேன். எழுதிக்கொண்டிருந்த அந்த சிறுகதை பற்றி வழக்கம் போல ராமிடம் விவாதித்துச் சென்றதில் மூன்று கிலோ மீட்டர்களை சட்டென்று கடந்தோம்.

பொள்ளாச்சியில் சினிமா ஷூட்டிங்குகள் அமோகமாக நடை பெற்று வந்த நாட்கள் அவை. அஷோக் ஹோட்டல் போன்ற லாட்ஜ்கள் சினிமா கலைஞர்களால் நிரம்பியிருக்கும். ராம் இரண்டாம் தளத்தில் இருந்த அறைக்கதவை தட்டியபோது, தலைவாசல் விஜய் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். (ஏன் முறைத்தார் என்று தெரியவில்லை)

கதவு திறந்தது. கண்ணாடி அணிந்த, லேசாய் தலை சிலும்பிய, இளம் மஞ்சள் டி ஷர்ட்டும், நீல நிறத்தில் கட்டம் கட்டிய லுங்கியும் தரித்திருந்த இளைஞர், ”வாங்க ராம். ” என்றார். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. ”இவர்தான் எழுத்தாளர் ம.வே.சிவகுமார்!” என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் சரசுராம்.

அந்த சமயத்தில் நான் கமர்ஷியல் இலக்கியத்தில்(!) முழு மூச்சாய் இருந்ததால் ஒரு அற்புதமான எழுத்தாளரை சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், ”ஹலோ.” என்று சும்மா கை குலுக்கி விட்டு, ஓரமாய் நின்று அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தேவர் மகன் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்தது. பாங்க்கில் நல்ல வேலையில் இருப்பவர். சினிமா வெறியில் காலவரையற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு கமல், பாலச்சந்தர் போன்றோரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தேன். ஒரு சிகரட் தீர்ந்தால் பயர் குறையாமல் அடுத்த சிகரட் பற்ற வைத்துக் கொண்டு பேசினார்.

சுமார் ஒரு மணி நேர சந்திப்பிற்குப் பிறகு வீடு திரும்புகையில், ”அவர் புக் ஏதாச்சும் இருக்கா?” என்று கேட்க, சரசுராம் அவர் வீட்டிலிருந்து ‘வேடந்தாங்கல்’ நாவலை எடுத்துக் கொடுத்தார். துள்ளலும், எள்ளலும் நிறைந்த எழுத்து நடை. படிக்கப் படிக்க பிரமித்தேன். இரு பொருள் பொதிந்த அந்த தலைப்பு அதன் பின் பல சிறுகதைகளுக்கு நல்ல பெயர் சூட்ட இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

பல வருஷம் கழித்து தேவர்மகன் ஷுட்டிங் அனுபவத்தை வைத்து ம.வே.சிவகுமார் எழுதிய ஒரு சிறுகதை குமுதத்தில் வெளி வந்தது. இசைக் கலைஞர் ஒருவரின் நாதஸ்வரத்தை செட் ப்ராப்பர்ட்டியாக வாங்கிக் கொடுத்து விட்டு மன அவதிப்படும் உதவி டைரக்டரின் கதை. அஷோக் ஹோட்டல் சந்திப்பு மனசுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. சமீபத்தில் விகடனில் அவர் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்த போது, அந்த சந்திப்பு பற்றி எழுத வேண்டும் என தோன்றியது.

பதிவை எழுதி முடித்து, அவர் படம் கிடைக்குமா என்று இணையத்தில் தேடியவனுக்கு கிடைத்தது கருணை மனு என்ற அதிர்ச்சி தரும் இந்த கட்டுரை.

மிக இளம் வயதில் நமது சமூகம் சிலருக்கு அளிக்கும் அங்கீகாரம் வரம் போன்ற கலர் பேப்பரில் சுருட்டித் தரும் சாபம்.


சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1 | சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2