ஜவ்வு மிட்டாஆஆஆஆய்…


”தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்” என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர்.

நாடே கவனிக்கும் ஒரு வழக்கில், ஒரு மாநில முதல்வர் இவ்வாறு கூறும் அளவுக்கு வழக்குகள் இழுக்கப்பட வேண்டிய அவசியம் மட்டும் புரிவதேயில்லை. கிட்டத்தட்ட முடிந்துபோன வழக்கு, மறுபடி ‘ஐயா.. வணக்கம்’ என்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு மாநில அரசு தொடர்ந்த வழக்கே இப்படி என்றால் சாதாரண குடிமகன் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட நாற்பது விழுக்காட்டுக்கு மேல் விசாரணைக் கைதிகள். பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்பு திருடிய ஒருவர் மூன்றரை வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாய் இருக்கிறார். அதற்கு தண்டனை கொடுத்திருந்தாலே அதிகபட்சம் எட்டு மாதங்கள்தானாம்.

ஆனால், பைனான்ஸ் கம்பெனி அதிபர் எல்லாம் பெயிலில் வந்து பர்த்டே கொண்டாடுகிறார்கள்.

வேறு நாட்டில் இருந்து விசா இல்லாமல் வந்து ரயில்வே ஸ்டேஷன், ரஸ்தா எல்லாம் சுட்டுக் கொண்டே போனதை வீடியோ பார்த்த நீதிபதி இன்னும் விசாரித்துக் கொண்டே இருக்கிறார். அவனோ பிரியாணியில் வேண்டுமென்றே உப்பை அதிகமாய்ப் போட்டுவிட்டார்கள் என்று உண்ணாவிரதம் இருக்கிறான்.

தெய்வங்கள் நின்று கொல்லட்டும்…. நீதிமன்றங்களும் அதையே செய்யவேண்டுமா என்ன…?

இவர்கள் நின்று நிதானித்துக் கொல்வதற்குள் அவனவனே சுகமாய் விதி முடிந்து செத்துவிடலாமென்ற தைரியத்தில்தான் பல ஊழல்களை தைரியமாய் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்கோர்ட் சொன்ன தீர்ப்பை மேல்கோர்ட் மாற்றுகிறது. உயர்நீதிமன்றம் சொன்னதை உச்சநீதி மன்றம் மறுக்கிறது. விசாரணை நீண்டுகொண்டே போகிறது. யார் சொன்ன நீதி தப்பு என்று தெரிவதேயில்லை.

‘தப்பு செய்தாயா… தண்டனை உடனே’ என்று சொல்லிப் பாருஙகள்; தவறுகள் எவ்வளவு சடுதியில் குறைகிறதென்று?

விஷம் குடிக்க மறுப்பவன் மதுவருந்துவது எதனால்…?

விஷம் உடனே கொல்லும்… மது கொல்ல இன்னும் பத்து வருடம் ஆகும் என்பதால்தானே?

புகையினால் கேன்ஸர் வரும்…. ஆனால் இருபது வருடம் கழித்து – என்பதால்தானே புகையிலைப் பொருட்கள் வியாபாரம் கனஜோராய் நடக்கிறது.

இதே மனோபாவம்தான் தண்டனை தாமதமாகும் எனத் தெரிவதால் தவறுகளைத் துணிந்து செய்ய வைக்கிறது.

தெய்வமே ஆகட்டும். அடுத்தவன் கையை வெட்டினால் உன் கை, அடுத்தவன் தலையை வெட்டினால் உன் தலை கழண்டு விழுந்துவிடும் என்று இருந்திருக்கட்டும்…. எவனாவது அடுத்தவனை வெட்ட அருவாளை எடுப்பானா?

அவ்வளவு ஏன்…?

பொய் சொன்னால் உன் நாக்கு அறுந்துவிடும் என்றோ, தாவாங்கட்டை கழண்டுவிடும் என்றோ தண்டனை இருந்திருக்கட்டுமே……

………எவனாவது கட்டின பெண்டாட்டியைப் பார்த்து “ஐ லவ் யூ…” சொல்லிவிடுவானா என்ன…?

-மீனாட்சி சுந்தரம்