திருவல்லிகேணி. பாரதியார் இல்லம். இந்த வருடம் அவரின் பிறந்தநாளை ஒட்டி நடந்த இசை நிகழ்ச்சி. இல்லம் முழுதும் அவரின் நினைவுகளோடு சேர்ந்து பாடல்களும் நிறைந்திருந்தது. முழுவதும் தமிழ் மணக்கும் பாடல்கள். குறிப்பாய் பாரதியின் பாடல்கள் மட்டுமே அங்கு பாடப்படும். ஆக, சிந்துபைரவி சுகாசினிக்கெல்லாம் அங்கு வேலையில்லை. ஒவ்வொரு வருடமும் வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பாக இது நடக்கும். நித்தியஸ்ரீ, விஜய்சிவா, T.M.கிருஷ்ணா என பல பிரபலங்கள் வந்து பாடினார்கள். ‘அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்..’ , ‘ஆசைமுக மறந்து போச்சே..’ , ‘மனதில் உறுதி வேண்டும்..’ என அவரது பிரபல பாடல்களை ஒரே சமயத்தில் அங்கே கேட்க முடிகிற சுக அனுபவம் அது. அதுவும் பாடல்கள் வழக்கமாய் கேட்ட மாதிரி இல்லாமல் புதுபுது ராகத்தில் கேட்க கேட்க மிக இனிமையாய் இருந்தது. இதையெல்லாம் காது குளிர கேட்க பாரதியார் இல்லாதது வருத்தம் தந்தது.
அப்போதுதான் என் நண்பனை பார்த்தேன். அவன் எனக்கு முன் இருக்கையில் வலது ஓரமாய் அமர்ந்திருந்தான். ரொம்ப நாட்களுக்கு பிறகு அவனை அங்கு பார்க்கிறேன். அவனது கண்கள் மூடியிருந்தது. கைகளில் அந்த பாடல்களை ரசிக்கும் அபிநயம். அவன் அந்த பாடல்களில் லயித்திருந்தான். பாடல் முடியும்போது கைதட்டல் சத்தத்தில் மட்டும் கண்களை திறந்து பார்த்தான். பிறகு பழைய நிலை தொடர்ந்தது. நானும் அவனும் ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனர்களாய் வேலை பார்த்திருக்கிறோம். ஆள் பார்க்க நன்றாகவே இருப்பான். அவனது உடைகள் பல்வேறு தெலுங்கு பட கதாநாயகர்களை ஞாபகப்படுத்தும். நாங்கள் அவனை நீ தெலுங்கு பக்கம் போனால் ஒரு ஜகபதிபாபு ஆகலாம் என்று கிண்டலடிப்போம். பிறகு ’ஜகபதிபாபு’ என்றே அவனைக் கூப்பிட ஆரம்பித்தோம். அந்த படத்திற்கு பிறகு அவன் அவ்வவ்போது என்னை தேடி வருவான். பல்வேறு கம்பெனிகளில் கதை சொல்வதாக சொல்வான். இன்னும் சில படங்களில் வேலை பார்க்கச் சொல்லி மட்டும் நான் அறிவுறுத்துவேன். படம் பண்ணாத கம்பெனியாய் பார்த்து அவன் கதை சொல்ல ஆரம்பித்த போது நான் அவனிடம் பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டேன்.
அதற்கு பிறகு அவனை நான் பல வருடம் பார்க்கவில்லை. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அவனை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு பக்கத்தில் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியவில்லை. மிக கருப்பாகியிருந்தான். சுத்தமில்லாத உடைகள். மேலும் இலேசான தாடி. தெளிவில்லாமல் உதிரும் வார்த்தைகள். முற்றிலும் புதிய தோற்றத்தில் இருந்தான். ஜகபதிபாபுவுக்கு என்னாயிற்று என்று யோசித்தேன். வா ஜூஸ் சாப்பிடலாம் என்றான். நான் மறுக்க இது எங்க கடைதான் என்றான். கடையில் இருந்த தன் அம்மா அப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தினான். அம்மா ஜூஸ் தந்தார்கள். அப்புறம் கண்கலங்கி என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். அவ்வவ்போது துணைக்குரலில் அவனது அப்பா. ஜகபதிபாபுக்கு பொதுவாகவே பக்தி அதிகம். திடீரென கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவனது பக்தியின் அளவு மீட்டரைத் தாண்டி ஓடியிருக்கிறது. திருப்பதி, மந்திராலயம் என அடிக்கடி போயிருக்கிறான். அதன் உச்சம் அதில் ஏதோவொரு சாமி தனக்குள் இருப்பதாக கற்பனை செய்திருக்கிறான். நடு இரவுகளில் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி அந்த மந்திரங்களை சொல்லச் சொல்லியிருக்கிறான். ஆசிர்வாதம் தருகிறேன் என்று அவர்களின் தலைகளை நீட்டிச்சொல்லி ரத்தம் வர கொட்டியிருக்கிறான். மேலும் அவன் செய்த அழிச்சாட்டியங்கள் தாங்க முடியாமல் அண்ணன் தெளிவானாலும் வரமாட்டேன் என அவனது தம்பி வீட்டை விட்டே ஓடியிருக்கிறான். டாக்டரிடம் கூட்டிப்போக அழைத்தால் அனைவருக்கும் அடிஉதைதான். அவன் வேலைக்கும் போவதில்லை. எங்காவது சேர்த்து விட்டாலும் தங்குவதில்லை. எங்கு போகிறான் எங்கு வருகிறான் என எதுவும் தெரிவதில்லையாம். வீட்டில் சீரியலை விடவும் துன்பங்களாம். அவர்களிடம் அதை விடவும் அழுகைகள். என்னிடம் அவனுக்கு எதாவது அறிவுரை சொல்லச் சொன்னார்கள். என்ன சொல்வது? வார்த்தைகளில் மாறிவிடுகிற நிலையிலா இருக்கிறான் ஜகபதிபாபு? அவன் பெற்றோர்களின் ஆறுதலுக்காக அவனிடம் பேசினேன். அளவுக்கு மிஞ்சினால் பக்தியும் நஞ்சு என்றேன். மனசு விட்டு பேச நல்ல நண்பர்கள் வைத்துக்கொள். உனக்கு பிடித்த வேலையில் சேர். முடிந்தவரை வீட்டிற்கு உதவாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள் என்று சில வார்த்தைகள் மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மனசு கஷ்டமாயிருந்தது. வசதியில்லாத குடும்பம். மகன் வளர்ந்து உதவுவான் என எதிர்பார்க்கிறபோது அவன் மேலும் சுமையாய் மாறினதை எந்த விதியில் சேர்ப்பது?
அதன் பிறகு அவனை நான் அவ்வவ்போது வழியில் சந்திப்பேன். ஏதேதோ தொடர்பில்லாமல் பேசுவான். ஒரு கம்பெனியில் என்னை கதாநாயகனாக கேட்டிருக்கிறார்கள் என்பான். நான் சிரித்துக் கொண்டு விலகிக் கொள்வேன். இன்னொரு முறை வழியில் அவனது அம்மாவை பார்த்தேன். அவன் அப்படியேதான் இருக்கிறான் என்றார்கள். இப்ப எந்த கோயிலில் இருக்கிறானோ தெரியவில்லை என்றார்கள். இது நடந்து சில மாதங்களுக்கு பிறகுதான் அவனை பாரதியார் இல்லத்தில் பார்த்தேன். இன்னும் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். இளைத்துப் போயிருந்தான். ஒரு கதாநாயகன் வில்லனை விடவும் மோசமான தோற்றத்திற்கு மாறிப்போனதைப் பார்க்க எனக்கு கஷ்டமாய் இருந்தது.
ஒரு சின்ன இடைவெளியில் அவன் அருகில் போய் அமர்ந்தேன். மெதுவாய் பேச்சுக் கொடுத்தேன். அவனது பேச்சில் எந்த மாற்றமும் இல்லை. பாட்டெல்லாம் பிடிக்குமா என்றேன். பாரதியார் பாட்டென்றால் பிடிக்கும் என்றான். பிறகு பொதுவான பேச்சுக்கள். அதன் பிறகு மீண்டும் அவனிடம் அமைதி. மேடையில் ‘நல்லதோர் வீணை செய்தே..’ வை பாடத் தொடங்கியிருந்தார்கள். அவன் கண்களை மூடி ரசிக்க ஆரம்பித்தான். கைகளில் அந்த அபிநயம் மீண்டும் தொடங்கியிருந்தது. கொஞ்ச நேரமாவது அவனை அமரவைத்து அவனுக்கு அமைதியை தந்த பாரதியாருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். அவனிடமிருந்து விடைப்பெற்றேன். ‘சொல்லடீ, சிவசக்தி.. எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்..’. அந்த பாடலின் மிச்ச வரிகளை அவனது உதடுகள் முணுமுணுக்க ஆரம்பித்தது.
ஸ்ரீதர்பாபு 1:02 பிப on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
ரூம் போட்டு யோசிப்பீங்களோ? சுவாரஸ்யமான பொருத்தம்தான்.
பொன்.சுதா 1:02 பிப on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
ஆமாங்க .. அப்படியே தான் இருக்கு. ஆனா தனியா பூச்சியின் புகைப்படத்தை மட்டும் பார்த்திருந்தால் எனக்குத் தோணி இருக்காது … அபாரம் ரகு..
டைனோ 3:49 பிப on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
பெரும்பான்மையான காமிக் ஹீரோக்கள் எதாவது விலங்கின் அடிப்படையிலேயே இருப்பார்கள்.
சந்துரூ 6:31 முப on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
‘ஈ’து புதுசு!
Gowtham 7:50 முப on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
interesting observation Raghu
சித்ரன் 7:52 முப on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பொன்சுதா, டைனோ, சந்துரூ, கெளதம்.
Sentil 10:10 பிப on பிப்ரவரி 23, 2010 நிரந்தர பந்தம் |
அருமை சித்ரன், உங்கள் கோக்குமாக்கான கிரியேட்டிவிட்டி!!!
sentil 10:13 பிப on பிப்ரவரி 23, 2010 நிரந்தர பந்தம் |
Chitran Sir, one more question, how did you find out, it is a female fly (அவளும்)?
சித்ரன் 2:08 முப on பிப்ரவரி 27, 2010 நிரந்தர பந்தம் |
”அவளும்”-ங்கறது நெய்த்திரிங்க. (எல்லாருமே கோக்குமாக்கா யோசிச்சா எப்படி?)