சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 4


ஒரு வெள்ளிக்கிழமை காலை பாஸ்டன் பாலா ட்விட்டரில் நம்பர் பெற்று செல்பேசியில் அழைத்தார்.

ஜெயமோகன் வாஷிங்டன் டி சி வரார். ஒரு பஸ் டூர் போறோம். நீங்களும் வரலாமே?”

சில மாதங்கள் முன்புதான் அவர் அமெரிக்க வருகை குறித்து இணைய தளத்தில் படித்தேன். எப்படியும் வெள்ளை மாளிகையை பார்க்க வருவீர்கள். அதற்கு மிக அருகில்தான் எனது அலுவலகம். அங்கே வரும்போது கூப்பிட்டால் உங்களை வந்து சந்திக்கிறேன் என அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

உங்கள் பெயரை நான் அறிவேன். ஆனால் நீங்கள் எழுதிய கதைகளை படித்ததில்லை. நிச்சயம் சந்திக்கலாம் என ஜெமோ பதிலனுப்பினார்.

ஏதேனும் ஒரு வகையில் அறிமுகமானவர்கள் டி சி வருவதாக அறிந்தால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கத் தவறுவதில்லை. சிலர் அதை சம்பிரதாயமாக கருதலாம். சிலருக்கு அதற்கான அவகாசம் இல்லாமல் போகலாம். இலவசக் கொத்தனார் போல சிலர் ஒரு முறை தவறினாலும் மறு முறை சந்தித்து விடலாம். ஜெமோ விசிட் என்பது முதல் இரண்டு வகைகளில் ஒன்றாகப் போய் விடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஏனோ என் மனதுக்கு தோன்றி விட்டதால் இது குறித்து அதற்கப்புறம் நான் மறந்தே போனேன். பாலா கூப்பிட்டு பேசும் வரை.

நியூயார்க் போன்ற நகரங்களுடைய சைசில் நாலில் ஒரு பங்கு கூட இல்லை வாஷிங்டன் டிசி. பஸ் டூர் எதற்கு? பார்க்க வேண்டிய இடங்களை உத்தேசமாய் தீர்மானித்துக் கொண்டால் ரயிலில் போவது உத்தமம் என்று நான் சொல்ல, ரயிலில் நகரம் தொட்டு, பின் நடப்பதென முடிவானது.

மாலை டி சி தமிழ்சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அழைத்தார். அவர் வீட்டில்தான் ஜெமோ தங்க உள்ளார். நாங்கள் அப்போதுதான் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்கிறோம். உங்கள் சிறுகதைகளை பத்திரிகையில் வாசித்திருக்கிறேன் என்று சொல்லி மகிழ்ச்சி ஊட்டினார் வேல்முருகன். அச்சிதழ்களில் எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலான பின்னும் கொஞ்சம் பேரேனும் என்னை நினைவில் வைத்திருப்பதை அறியும்போது, நெஞ்சம் சில்லிடுகிறது. மறு நாள் காலை East Falls Church ரயில் நிலையத்தில் எல்லோரும் சந்தித்துக் கொள்ள முடிவானது.

காலை ஒன்பதரை வாக்கில் Falls Church ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஜெமோ-வை சந்தித்தேன். மனிதரின் பார்வை கூர்மையாக துளைக்கிறது. சுமார் முப்பது வினாடிகளுக்கு என்னை உச்சி முதல் பாதம் வரை துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வெறுமனே புன்னகைத்தபடி அவர் என்ன யோசிக்கிறார் என புதிராய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாலா எல்லோரையும் நிற்க வைத்து பிளாக்பெர்ரியில் போட்டோ எடுத்த பின் ரயில் வந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவருடன் சுவாரஸ்யமாக, படு வேகமாக கடந்தன. நான் கலகலவென பேசக்கூடியவனல்ல எனினும், பாலா மற்றும் நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த அரவிந்த் ஆகியோரின் சரம் சரமான கேள்விகளுக்கு ஜெமோவின் பதில்கள் பனிப்பொழிவு போல கொட்டிக் கொண்டே இருந்ததை கேட்டு மகிழ முடிந்தது. கேள்விகள் ஓயும் தருணங்களில் அவரே ஒரு புது டாபிக்கை ஆரம்பித்து வைத்து விடுகிறார்.

வெள்ளை மாளிகையை ஒட்டிய பூங்காவில் சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்திருந்த அமெரிக்க அகோரியை ஆர்வமாய் படம் பிடித்துக் கொண்ட ஜெமோ, ‘நான் கடவுள்’ இயக்குனர் பாலாவிடம் இதைக் காட்ட வேண்டும் என்றார்.

இடையில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் முன்னர் நான் எழுதி பிழைத்த கதையை கேட்டுத் தெரிந்து கொண்ட ஜெமோ, ”நீங்க மாத நாவல் மாயையில் அகப்படாமல் தப்பித்து இங்கு வந்தது பெரிய விஷயம்.” என்றார். அவ்வப்போது இலக்கியம் பற்றி பேசாத சமயங்களில் அவரிடம் ஒரு தகப்பன் மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை கவனிக்க முடிந்தது.

கட்டிடங்களையும், நினைவிடங்களையும் பார்த்தலைந்து வெய்யிலில் வறுபட்ட பின் மாலை தமிழ் சங்க நிகழ்ச்சி. ஆர்ப்பாட்டமில்லாமல் மென்மையாய் உரையாடும் பதிவர் நிர்மலின் அறிமுகம் அங்கே கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் புதுக் கவிதைகளின் ஆதிக்கம் தமிழ் மொழியின் அழகியலை தொலைத்து விட்டதா என்ற வாசகரின் கேள்வி மிக நல்ல கேள்வி என்றார் ஜெமோ.

அன்றிரவு ஒரு பத்து நிமிஷம் என் வீட்டில் தேநீர் அருந்திச் செல்ல எந்த தயக்கமுமில்லாமல் ஒப்புக் கொண்டார். அடுத்த பத்து நாட்களில் காலி செய்ய இருந்ததால் வீடு ஆங்காங்கே கொஞ்சம் பல்லிளித்துக் கொண்டு அலங்கோலமாகத்தான் இருந்தது. அமெரிக்க நடுத்தர மக்களின் வீடுகள் பற்றி அவர் எழுதிய கட்டுரையை அந்த கணம் மறு பரிசீலனை செய்திருப்பார் என நினைக்கிறேன்.

என் மனைவி நன்றாக சமைக்கக் கூடியவர். ஆனால் ஜெமோ இரவுகளில் பழங்கள் தவிர வேறேதும் உண்ண மாட்டார் என்றறிந்ததும் பதட்டமாகி விட்டார். அன்றைக்குப் பார்த்து ப்ரிட்ஜ் காலி. தப்பிப் பிழைத்திருந்த ஓரிரு ஆரஞ்சுப் பழங்களையும் , எலுமிச்சம்பழத்தையும் வைத்து ஒப்பேற்றியதில் எனக்கும் ஒரு மாதிரி மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அதையெல்லாம் ஜெமோ சட்டை செய்த மாதிரி தெரியவில்லை. அரவிந்த், பாஸ்டன் பாலா, வேல்முருகனிடம் மிக சுவாரஸ்யமாய் இலக்கிய விவாதம் புரிந்து கொண்டிருந்தார்.

க்ரைம் புதினங்கள் எழுதிக் கொண்டிருந்தவனின் வீட்டில் ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிய விவாதம். இந்த சந்திப்பு அப்பட்டமான ஒரு மாய யதார்த்த நிகழ்வு.


1 | 2 | 3 |