நாளை மறுநாள்


எங்கள் ஊரில் எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனக்கு வேலையிலிருந்து விரைவில் ஓய்வு (Retirement) கிடைக்கப் போவதாகச் சொன்னார். சொன்ன போது அவர் கண்களில் அப்படியொரு சோகம். அந்த சோகம் அவரை சட்டென மிக வயதானவராய் தோற்றம் காண வைத்தது. விட்டால் அழுதுவிடுவார் போலிருந்தது. 35 வருட அரசாங்க உத்தியோகம். அதிலும் இடம் மாறாமல் அவர் அத்தனை வருடமும் பணியாற்றியது ஒரே இடத்தில். அதே இடம். அதே ஃபேன். அதே காற்று. எப்போதாவது மாறும் மனிதர்கள். ஆச்சர்யம் தாங்காமல் எப்படி முடிந்தது என்றேன். கை சொடுக்குவதற்குள் போய் விட்டது என்றார். இவ்வளவு மோசமான கை சொடுக்கை நான் கேள்விப்பட்டது இல்லை என்றேன். ஒய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறேன் என நினைத்தாலே அடிவயிற்றில் அமிலம் சுரப்பதாகச் சொன்னார். ஓய்வென்பது அவ்வளவு பயங்கர விஷயமாயென்ன? கேட்டதும் எனக்கும் சேர்த்தே அந்த அமிலம் சுரந்தது.

அவர் கொஞ்சம் இலக்கியம் பேசுவார். ஜெயகாந்தன், லா.ச.ரா., சி.சு.செல்லப்பா என அவர் பட்டியல் இலக்கியவாதிகள். அவருக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் அந்த ஏரியாவில் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால் அவர் அவர்களுடன் பேசுவதை விட எங்களுடன்தான் பேசுவதையே அதிகம் விரும்புவார். ஏன் என்று காரணம் கேட்க அவர் சொன்னார். பேச்சில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த காலத்தின் ஆபிஸ் விஷயங்கள், புளித்துப்போன அதே அரசியல், அக்கம் பக்கத்து வீட்டை பற்றிய புரளி பேசுவது என அந்த வட்டம் மிக குறுகியதாக இருக்கும் என்றார். சரியோ தப்போ நட்பும் பகிர்தலும் சுமையை குறைக்கும் இல்லயா என்றேன். நான் சொன்னதில் இருந்த உண்மை புரிந்து சரி பார்ப்போம் என்றார்.
இந்த மாதிரி வேலை பார்ப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஓய்வுக்கு முன்பு. ஓய்வுக்கு பின்பு என்று. வேலைக்கு போகும் போது அவர்களின் தோற்றம் மிக உற்சாகமானதாக இருக்கும். ஓய்வுக்கு பிறகு உடனே தளர்ந்து போய் விடுவார்கள். திடும்மென ஒளவையார் மாதிரி வயதானவர்களாக தோற்றம் மாறி விடுவார்கள்.  அவர்களின் பேச்சின் தொனிக்கும் வயதாகிப் போவதை உணர்ந்திருக்கிறேன். என்ன காரணம்?  அவர்களின் உடலிற்கு தந்த ஓய்வை அவர்களின் மனத்திற்கும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மனம் அற்புதமானது. அதற்கு நிறம் இல்லை. மணம் இல்லை. வடிவம் இல்லை. அது தினமும் புது புது உடைகள் மாற்றி தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன் வயதை மட்டும் யோசிக்கவில்லை என்றால் அதன் இளமைக்கு எப்போதும் மேக்கப்பே தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களுக்கு சென்னை மாதிரியான பெருநகரங்கள் வரப் பிரசாதங்கள் என்று சொல்லுவேன். நாடகம் விருப்பமென்றால் நாடகங்கள். கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் போன்றோரின் கிச்சுகிச்சு நாடகங்கள் தவிர நவீன நாடகங்களும் பார்க்கலாம்.  நல்ல திரைப்படங்கள் (தமிழ் படங்கள் அல்ல) வேண்டுமென்றால் Alliance Francoise, Indo Cine Appreciation Foundation (ICAF) போன்ற அமைப்புகள் காட்டும் தரமான உலக சினிமாக்கள். லைட் மியூசிக்கா அல்லது பாலமுரளிகிருஷ்ணா, அருணா சாய்ராம், ஒ.எஸ்.அருண் போன்றோரின் கிளாசிக் வேண்டுமா ஹிண்டுவோ தினமணி தினமும் புரட்டினால் ‘இன்றைய நிகழ்ச்சி’களில் கிடைக்கும் அதற்கான வாய்ப்பு. அதற்கு பிறகு அரசியல் நெடி அதிகம் இருந்தாலும் கொஞ்சம் சகித்துக் கொண்டால் அடிக்கடி நடக்கும் இலக்கிய கூட்டங்கள். மற்றும் மிக பிரமாண்ட நூலகங்கள் என நம்மை நமது நேரங்களை மிக பயனுள்ளதாக, மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லுவேன்.

குறிப்பாய் ஓய்வுக்கு பிறகு. இவைகள் தவிர நேரமில்லையென விட்டுப்போன நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்களின் நட்பை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் எல்லோரும் அறிந்த கோயில்கள் குளங்கள்.

நான் அவரிடம் இந்த லிஸ்டை ஒப்புவித்தேன். அவரும் ஏற்றுக் கொண்டு அந்த ஊரில் கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக சொன்னார். அப்போது அவரது குரலில் நல்ல உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது.

அடுத்த முறை பார்க்கும் போது அவருக்கு முன்பு ஓய்வு பெற்ற அந்த நண்பர்களோடு (நான் ஏற்கெனவே சொன்ன) அண்ணா கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை பார்த்துவிட்டு நகர பிறகு அவர் என்னை பார்த்த போது சொன்னது இதுதான். ”நான் ஓய்வு பெற்றதற்கு பிறகு வந்து இவங்களோடு நட்பு வச்சுகிட்டா அது ரொம்ப சுயநலமா போய்விடும். அதுதான் இப்ப இருந்தே அவங்களோடு பேசி பழக ஆரம்பிச்சுட்டேன்”.
-சரசுராம்.