இலக்கியவாதியும், ஒரு ஜோடி செருப்பும்


முரளிகிருஷ்ணன் என்னை முதன்முதலாக தேடிக் கொண்டு வந்தபோது நான் காணாமல் போன செருப்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.

முதலில் செருப்பைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் புதிதாக 180 ரூபாய்க்கு செருப்பு வாங்கி‍னேன். கவிஞர் ஸ்நேகிதன் தனக்கு மிகவும் வேண்டிய ஒருத்தர் தெப்பக்குளம் வீதியில் செருப்புக்கடை வைத்திருப்பதாகச் சொன்னான். 200 ரூபாய் செருப்பை 180 ரூபாய்க்கு விலைபேசி வாங்கினோம். பழைய செருப்பைக் கழற்றிவிட்டு புதுச்செருப்பை அணிந்து கொண்டேன். சிறிது தூரம் நடந்த பின்னால் செருப்புக்கும் எனக்கும் ஒத்துவரவில்லையோ என்று தோன்றியது. போகப் போக சரியாகிவிடும் என்றான் ஸ்நேகிதன்.

இரவு 8 மணிக்கு மேல் வீட்டுக்குக் கிளம்புவேன். ஒரு 20 நிமிட பஸ் பயணம். அபபுறம் ஊர் வந்ததும் பாலமுருகன் ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய், அங்கே சரவணனைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவது வழக்கம். அங்கே எப்படியும் ஒருமணி நேரம் காலியாகிவிடும். அன்றைக்கு செருப்பைக் கழற்றிவிட்டு கடைக்குள் நுழைந்தேன். அங்கே செந்தில், சக்தி என்று சில நண்பர்கள் இருந்தார்கள். ஒரு முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். எனக்கு நல்ல பசி.

“சரி சரவணா… நான் கிளம்பறேன்…”

வெளியே வந்து பார்த்தபோது செருப்பைக் காணவில்லை. பதற்றத்தோடு தேடினேன்.

“சரவணா… செருப்பைக் காணோம்…”

“செருப்பைக் காணோமா? எங்க விட்டிங்க? நல்லா பாருங்க…”

“இங்கதான் விட்டேன்… புதுச்செருப்பு சரவணா… காணோம்…”

கடையில் வேறு நல்ல வியாபாரம். கூட்டம்.

“யராவது தொட்டுட்டுப் போயிட்டாங்களோ?” என்றான் செந்தில்.

எனக்கு திக்கென்றது. போச்சா? அநியாயமா போச்சா? 180 ரூபாய் செருப்பு. பசங்க விளையாடறாங்களா? உண்மையிலேயே யாராவது திருடிட்டுப் போயிட்டாங்களா? கடையைச் சுற்றி சுற்றித் தேடினேன். எனக்கு குழப்பம், ‍கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு கலக்கி குடித்த மாதிரி இருந்தது.

நாளைக்கு செருப்பில்லாமல் அலுவலகம் போக வேண்டும். செருப்பில்லாமல் பஸ் ஸ்டாப்பில் நிற்பது எவ்வளவு அவமானத்துக்குரிய விஷயம்? இப்போது வீட்டுக்கு செருப்பில்லாமல்தான் நடந்துபோக வேண்டுமா? எனக்கான கவலைகள் என்னைச் சுற்றி வலையாகப் பின்ன ஆரம்பித்தது.

செருப்பை ஒளித்து வைத்து விளையாடறாங்களா? கடைக்குள் செந்திலையும் காணோம். சக்தியும் இல்லை. சரவணன் வியாபாரத்தில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்குப் போவதா? இங்கேயே நிற்பதா? உண்மையிலேயே யாராவது திருடிப் போய்விட்டார்களா? கடையைச் சுற்றிச் சுற்றித் தேடினேன். என் விசனம் புரியாமல் தெருநாய் ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு என் பின்னாலே வந்தது. நான் செருப்பைத் தேடுவது அதற்கு சுவாரசியமாகப் போய்விட்டது. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்கப் போறதில்லே. எந்த முடிவுக்கும் வராமல் அப்படியே கடை முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

அப்போது பார்த்து ஒரு டி.எஸ்.50 வந்து நின்றது. “கனகு… செளக்கியமா?” என்றவனைப் பார்த்தேன். பக்கத்து ஊரான பொன்னாச்சியூர் பாலு. என்னோட படித்தவன். “ம்… செளக்கியம்தான்” என்று ஒப்புக்கு பதில் சொன்னேன்.

“உன்னைத்தான் தேடி வந்தோம்…” என்றான். அப்போதுதான் அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த ஆளைக் கவனித்தேன். இரண்டு பேரு‍மே லுங்கியில் இருந்தார்கள்.

“அப்படியா?” இவங்க் எதுக்கு இந்த நேரத்தில தேடி வந்திருக்கறாங்க. இப்ப எனக்கு செருப்பைத் தவிர வேற எந்த கவனமும் இல்லை.

இரண்டு பேருமே இறங்கி என்னருகே வந்தார்கள்.

“முரளிகிருஷ்ணன்…” என்றான் பாலுவுடன் வந்தவன்.

“எந்த முரளிகிருஷ்ணன்..?” என்று கேட்டேன். அவன் முகம் சட்டென்று மாறிப்போய்விட்டது. எனக்கு அவனை யாரென்று சுத்தமாகத் தெரியவில்லை. அவன் யாரென்று சொல்லிவிட்டு சீக்கிரம் விடைபெற்றுப் ‍போனால் தேவலை. நான் செருப்பைத் தேடுவேன்.

“என்ன கனகு? என்னைத் தெரியலையா? நான் உங்களுக்கு லெட்டர் போட்டிருக்கேன். நீங்ககூட பதில் எழுதியிருந்தீங்களே…”

எனக்கு கொஞ்சம் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் பயமும்… இலக்கியவாதி முரளிகிருஷ்ணனா? அப்ப சீக்கிரம் கிளம்ப வாய்ப்பில்லை. ஏற்கனவே நடேசன் மாதிரி இலக்கியவாதிகளால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருந்த சமயம். எப்படித் தப்பிப்பது? இவர்களை சீக்கிரம் அனுப்பி வைக்கவேண்டும்.

“ஞாபகம் இருக்கு…” என்றேன்.

“முரளி என்னோட நீண்ட கால நண்பன்… ஒரே கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கறோம்… என்னைப் பார்க்க அடிக்கடி வருவான்… உன்னைப்பத்திக் கேட்டான்… நீ இந்த நேரத்துல நீ சரவணன் கடையில இருப்பேன்னு கவிஞர் அம்சப்ரியா சொன்னாரு… அவரோட வீட்டுக்குப் போயிட்டு வர்றோம்…” என்றான் பாலு.

அம்சப்ரியா தப்பிச்சுட்டு என்னை மாட்ட வச்சுட்டாரு…

நான் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டு சிரித்து வைத்தேன்.

“என்னோட செருப்பைக் காணோம்… தேடிட்டு இருக்கேன்…”

“அப்புறம் இலக்கியப்பணியெல்லாம் எப்படி இருக்கு?” என்று முரளிகிருஷ்ணன் கேட்டான்.

இதுக்கு என்ன பதில் சொல்வது என்று சத்தியமாய்த் தெரியவில்லை. “நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.” என்றேன்.

“அது எப்படி எழுதாம இருக்க முடியாதே?” என்றான் முரளிகிருஷ்ணன்.

“முடியுதே…”

அவன் ஏதோ துக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். அப்புறம் கி.ராஜநாரயணனைப் பற்றி பேச ஆரம்பித்தான். கடுமையான விமர்சனம். நான் செருப்பைத் துழாவுவதில் கவனமாயிருந்தேன். சட்டென்று பேச்சை நிறுத்தினான். என்னைக் கவனித்தான். “நீங்க செருப்பைத் தேடிட்டு இருக்கறீங்க…”

“ஆமாங்க…”

“செருப்பு கிடைச்சாத்தான் பேசுவீங்க…?”

சிரிக்கிற மாதிரி நடித்தேன். காணாமல் போன செருப்பு என்னை தவிக்க வைத்தது. என் கவலை இவர்களுக்குப் புரியாது. இவர்களை எப்படி சீக்கரம் அனுப்புவது? ஒரே வழி. டீ சாப்பிட வைத்து அனுப்பிவிடுவது. அப்புறம் வந்து செருப்பைத் தேடுவது.

“டீ சாப்பிடலாம்…” என்றேன்.

“சாப்பிடலாமே…”

எதிரேதான் செந்திலின் டீக்கடை. உள்ளே நுழைந்ததும் செந்தில் விஷமத்தனமாகப் புன்னகைத்தான். “செருப்பு கடைச்சுதாண்ணா?”

எரிச்சலோடு, “இல்லை…” என்றேன்.

“நல்லாத்தேடிப் பாருங்கண்ணா… கிடைக்கும்” என்றான். நான் சந்தேகத்தோடு கடை நோட்டமிட்டேன். கல்லாப்பெட்டி டேபிளுக்கு கீழே என் செருப்பு ஒளிந்து கொண்டிருந்தது.

“ஓவ்… என் செருப்பு…” என்று உற்சாகத்தில் கத்திவிட்டேன்.

“இது உங்க செருப்புங்களாண்ணா…”

“செந்திலு… பாத்தியா உன் வேலைய என்கிட்டயே காட்டிட்டே..”

“பரவாயில்லீங்கண்ணா… எப்படியோ கண்டுபுடிச்சீட்டீங்க…”

நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி படக்கென்று பிடுங்கப்பட்டது.

“இப்ப நம்ம ஃபிரியா பேசலாமா?” என்றான் முரளிகிருஷ்ணன்.

எனக்குப் பசி. “சாப்பிடற நேரமாச்சே?” என்று பலஹீனமாய் சொன்னதற்கு, “நாங்க சாப்பிட்டாச்சு… மட்டன் குழம்பு…”
முரளிகிருஷ்ணன் கையை மூக்கருகே வைத்து வாசனை பிடிக்க வைத்தான்.

போச்சுடா… இன்னைக்கு இலக்கியம் பேசாம போகமாட்டான் போலிருக்கு… மூன்று டீ சொல்லிவிட்டு முரளிகிருஷ்ணனைப் பார்த்தேன்…

அவன் பேச ஆரம்பித்தான்… இல்ல இல்ல… திட்ட ஆரம்பித்தான்.

ஜெயமோகன், குட்டி ரேவதி, சல்மா, வெண்ணிலா, எஸ்.ராமகிருஷ்ணன்… என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல் திட்டினான். குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை… மணி பத்தரைக்கு மேலாகிவிட்டது. பசி தாங்கமுடியாமல் கண்கள் இருட்டிக் கொண்டிருக்க, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். செருப்பு கிடைக்காமலே போயிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.

  • கனகராஜன்