கூகிள் தேடலும், உங்கள் வலைப்பதிவும்.


சமீபத்தில் கூகிள் வழங்கிகளில் வேலை செய்ய நேர்ந்தது. அப்போது கிடைத்த சில்லறை ஞானங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டால் நம் வலைப்பதிவர்களுக்கு உபயோகப்படுமே என்று தோன்றியது.

முன் எப்போதையும் விட இப்போது இணையத்தில் தமிழ் பக்கங்களை நிர்வகிப்போர் மிக அதிகமாய் உள்ளனர். பலருக்கும் <a>, <b> போன்ற HTML tags இந்நேரம் அத்துபடியாகியிருக்கும். நீங்கள் பதிவை வெளியிட்ட பின் தேடுபொறிகள் அவற்றை தேடி எடுத்துக் கொள்வதையும் அறிவீர்கள். அப்படி தேடி எடுத்துக் கொள்ள keywords என்ற meta tag உபயோகப்பட்டு வந்ததையும் அறிவீர்கள். உதாரணமாக:

<META NAME=”keywords” CONTENT=”நித்யானந்தா, சுவாமிகள், வீடியோ”>
என்று உங்கள் வலைப்பக்கத்தின் <head>-க்கு நடுவே சேர்த்து விடுவது.

மேற்படி மெட்டா கட்டளையை காலம் காலமாக தேடுபொறிகள் உபயோகித்து வந்தன. ஆனால் என்னைப் பற்றி நானே நான் ரொம்ப நல்லவன்ங்க என்று சொல்லிக் கொள்ளும்படி இருப்பதால் கூகிள் இதை மதிப்பதில்லை. எதை எழுதினாலும் அப்போதைக்கு பிரபலமாயிருக்கும் குறிச்சொற்களை போட்டு விட்டால் தங்கள் பக்கத்தை தேடலில் முன்னால் கொண்டு வரலாம் என்று இந்த யுக்தியை பலரும் குயுக்தியாய் மாற்றி விட்டதே காரணம்.

நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்து மீறி நுழைந்து விடியோ எடுத்து உலகுக்கு காட்டிய சன் டிவி போல கூகிள் உங்கள் வலைமனைக்குள் தானாகவே நுழைந்து எல்லாமே எடுத்துக் கொள்ளும் என எண்ணிக் கொள்ள வேண்டாம். அது உங்கள் ப்ரைவசியை நிச்சயம் மதிக்கிறது.

உங்கள் தளத்தில் கூகிள் என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் தேடல் முடிவுகளில் காட்ட வேண்டும் அல்லது காட்டக் கூடாது என்று கூகிள் தேடுபொறிக்கு உங்கள் பதிவிலேயே கட்டளை தர முடியும்.

அப்படியே அது ஒரு பதிவை எடுத்துக் கொள்ள அனுமதித்தாலும், தன் வழங்கியில் அது ஆண்டாண்டு காலத்துக்கும் cache ஆக சேமித்து வைத்துக் கொள்ளலாமா, கூடாதா என்று கூட நீங்கள் வரையறுக்க முடியும். எப்படி? ஓரிரு எளிய robots கட்டளைகளையும், கூகிள் ஸ்விட்சுகளையும் உங்கள் பதிவில் இடுவதன் மூலம் அது சாத்தியமாகும்.

இந்தப் பதிவை தொடாதே:

<META NAME=”robots” CONTENT=”noindex”>

என் பதிவை திரட்டிக் கொள், ஆனால் என் பதிவில் உள்ள தொடுப்புகளுக்குப் போகாதே.

<META NAME=”robots” CONTENT=”nofollow”>

என் பதிவை திரட்டு, ஆனால் உன் வழங்கியில் cache ஆக சேமித்து வைக்காதே.

<META NAME=”robots” CONTENT=”noarchive”>

உங்கள் பக்கம் கூகிளால் திரட்டப்பட்டாலும் அவற்றில் சில பகுதிகளை தேடல் முடிவுகளில் காட்டாதிருக்க உதவுபவை கீழ்கண்ட கூகிள் சுவிட்சுகள்.

மின்னஞ்சல் தேடல் முடிவுகளில் இடம் பெறாதிருக்க:

<!–googleoff: all–>என் மின்னஞ்சல் முகவரி naan@enserver.com
<!–googleon: all–>என் கட்டுரையின் இப்பகுதி தேடல் முடிவுகளில் இடம் பெறலாம்.

ரஞ்சிதா என்ற சொல்லோடு nithyaanandhaa.html பக்கம் தொடர்பு படுத்தப்படாது. ஆனால் நித்யானந்தா என்று தேடினால் fraud.html காண்பிக்கப்படும்.

<!–googleoff: anchor–><A href=”nithyaanandhaa.html”>
ரஞ்சிதா </A>
<!–googleon: anchor–>
<A href=”fraud.html”>
நித்யானந்தா </A>

ரஜினி என்று தேடினால் இந்தப் பக்கத்தை காட்டாதே. அஜீத் என்று தேடுவோருக்கு மட்டும் காட்டினால் போதும்.

<!–googleon: index–>அஜீத் பேச்சுக்கு கை தட்டினார் <!–googleoff: index–>ரஜினி
<!–googleon: index–>அதை கலைஞர் ரசித்தாரா?

உங்கள் கட்டுரையை யாராவது தேடிப் பிடிக்கும்போது, கூகிள் உங்கள் கட்டுரையில் நீங்கள் கண்டித்து மேற்கோள் காட்டியுள்ள கெட்ட வார்த்தைகளை உங்கள் தொடுப்புக்குக் கீழ் காட்டாதிருக்க:

<!–googleoff: snippet–>உங்கள் கட்டுரைக்கு நடுவே சாரு சமீபத்தில் எழுதிய கெட்ட வார்த்தை கட்டுரையின் மேற்கோள்.
<!–googleon: snippet–>உங்கள் கட்டுரையின் வாசகங்கள்.

வாழ்க கூகிளானந்தா!