அஹோபிலம் – பயணங்கள் ’முடிய’வில்லை 

பயணங்கள் எப்போதும் சுகமானதுதான். அது யாருடன் எங்கே செல்கிறோம் என்பதைப் பொருத்து அதன் விளைவுகள் அமைந்தாலும், இடமாற்றங்கள் மனதிற்கும் உடம்பிற்கும் ஒரு  மாற்றம் தரவே செய்கிறது. அப்படி சமீபத்தில் நாங்கள் போன இடம் அஹோபிலம் – ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 330 கி.மீ. தொலைவு. கடப்பாவிலிருந்து 112 கி.மீ. நந்தியாவிலிருந்து 65 கி.மீ.

ஹிரண்யனின் கிருதயுகத்தில் அரண்மனை இந்த இடத்தில்தான் அமைந்திருந்ததாம். பிரகலாதனின் பிராத்தனைக்கு அருள் புரிந்து ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் ஒரு தூணை பிளந்து நரசிம்மராக நாராயணன் வெளிப்பட்டாராம். பிறகு ஹிரண்யனை அள்ளியெடுத்து மடியில் கிடத்தி நகங்களால் அவனது வயிற்றை கிழித்து வதம் புரிந்த இடம் இதுதான் என்பது இந்த ஸ்தலப் புராணம். (பக்த பிரகலாதன் படம் பார்த்தால் மேலும் புரியலாம்).  இதுதான் அரண்மனை என்று சில சிதலமானப் பாறைகளையும், இதுதான் பிரகலாதன் குருகுலத்தில் படித்தபோது எழுதின எழுத்துக்கள் என பாறையில் சில புரியாத கோட்டு அமைப்புகளையும் காட்டுகிறார்கள்.

கோயில் பகுதிக்குள் நுழைந்த உடனேயே வாடகைக்கு கையில் மூங்கில் குச்சிகளை தந்து விடுகிறார்கள். கூச்சப்பட்டு வாங்க மறுத்தவர்கள் அதன் அருமையை கொஞ்ச தூரத்திலேயே உணர்ந்து கொண்டார்கள். நீரில்லாமல் காய்ந்த பவநாசினி நதி. ஆகவே, வழியெங்கும் பாறைகள்தான். அதுவும் வழுக்கு பாறைகள். மற்றும் செங்குத்துப் பாறைகள். மற்றவர்கள் உதவியில்லாமல் கடப்பது  நிறைய இடங்களில் சிரமமாயிருந்தது குச்சியின் உதவியுடன் தான் அதை ஓரளவு கடக்க முடிந்தது. இதில் பாட்டு சொல்லிக் கொடுக்கும் என் நண்பரின் மாணவர்கள் நாற்பது பேர் வந்திருந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே அனைவரும் திரும்பி குருவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சார் சரியா பாடாம தப்பு பண்ணியிருந்தா அங்கயே ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து இம்போஸிஸன் கொடுக்கணுமா என்றார்கள். இன்னும் சிலர் முன்னாடியே சொல்லியிருந்தா சொத்தெல்லாம் எழுதி வச்சுட்டு வந்திருப்பனே என்றார்கள்.

அஹோபில நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர் என  நரசிம்மர் ஆலயங்களை ஏழெட்டாக பிரித்து அதையும் பல கிலோமீட்டர் இடைவெளிகளில் அமைத்திருக்கிறார்கள். சரிவர அமைக்காத பாதைகள். உருக்கும் வெய்யில்.  வழியில் கொண்டு போன பாட்டில் தண்ணீர் தவிர  வேறு தண்ணீர் வசதியில்லை. தண்ணீர் குடித்து மாளாத தாகம் வழியெங்கும் துரத்தியது. கவனம் தப்பினால் மரணம் என்கிற விதமாய் அதலபாதாளங்கள்.  மிக வயதான சில பெரியவர்களை அவர்களின் அதீத பக்தி நகர்த்திக் கொண்டிருந்தது. 2,800 அடி உயரத்தில் உள்ள ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தை நெருங்கும் போது பாதிப் பேர் இளைத்துப் போயிருந்தார்கள். இந்த அவதாரம் ஊட்டி கொடைக்கானல் போன்ற கொஞ்சம் கூலான இடத்தில் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. நரசிம்மரை டிரான்ஸ்பர் பண்ண முடியாதா என்று காய்ந்த உதடுகளில் நண்பர்கள் ஜோக்கடித்துக் கொண்டார்கள். தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதே நிறைய பேருக்கு கால் வீங்க ஆரம்பித்து விட்டது.

அடுத்த நாள். பவன நரசிம்மர் ஆலயம். அஹோபிலத்திலிருந்து 7 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஆலயம். நாங்கள் ஏழெட்டு ஜீப்புகளில் கிளம்பிக்கொண்டோம். கரடு முரடான பாதைகள். முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது. நிறைய இடங்களில் ஜீப் ஒரு புறம் சாய்ந்து இரண்டு சக்கரத்திலேயே போனது. ஏற்ற இறக்கத்தில் எலும்புகள்  தளர்ந்துப் போவது போல் இருந்தது.  பத்து தூரிகள் ஒன்றாய் விளையாடின மாதிரி அடி வயிறு பயங்கரமாய் கலங்கியது. வழியெங்கும் எழுந்த புழுதி மொத்தமாய் மூடி எங்களை அடையாளம் தெரியாமல் கீழே இறக்கியது. அப்படியே ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் மேக்கப்பிற்கு அவார்ட் கிடைத்திருக்கும்.  கோயிலுக்குள் விடுவார்களா என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. இறங்கி துணிகளை உதற ஒவ்வொருவரிடமும் ஒரு அரை கிலோ செம்மண் உதிர்ந்தது. அனைவரின் பிரார்த்தனைகளும் மேல் மூச்சு வாங்கத் தொடர்ந்தது. அனைவரின் கண்களிலும் ’பய’பக்தியை முதல்முதலாய் நான் அங்குதான் பார்த்தேன்.

எங்கள் சுற்றுப்பயணம் தலை சுற்றும் அளவுக்கு இருந்தது. பயணம் முடிந்து ஊர் திரும்பும் போதும் அதன் தாக்கம், நடுக்கம் எங்களை தொடர்ந்துக் கொண்டிருந்தது. என்றாலும் இக்கட்டான இந்த மலைகளை குடைந்து கோயில்களாக கட்டியிருக்கும் மனித உழைப்பை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ஆச்சர்யம் தவிர பயணம் தந்த பரவசம் நிறைய முகங்களில் தெரிந்தது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்பதாக இங்கே கூட்டிவந்த குருவிற்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள். எப்படியிருந்தாலும் பயணம் என்பது அனுபவம்தான். நம்மை மேலும் புதுபித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத்தான் எனக்கு தோன்றியது. புது இடமும் புது மனிதர்களும் நமக்கு ஏதோவொரு சொல்லிவிட முடியாத செய்தியை சொல்லி விட்டுத்தான் போகிறார்கள். மொத்ததில் பக்திமான்கள் தவிர சாகஸ சிங்கங்களும் ஒரு முறை அஹோபிலம் போய் வரலாம்.

-சரசுராம்.