கறுப்பு வெள்ளை கட்டங்கள்


அறுபத்தி நாலு கட்டங்கள். கோடை விடுமுறையில் கோவை போகும்போது அறிமுகமானது. உறவுக்காரப் பையன்கள் பட்டை கிளப்புவார்கள். என்னுடைய சிப்பாய்களையும், குதிரைகளையும் கண்ட துண்டமாய் வெட்டிப் போடுவார்கள். ஒரு முறை கூட வென்றதில்லை.

போன வார ஆட்டம்.


லீவு முடிந்து சொந்த ஊர் திரும்பியதும், பக்கத்து வீட்டு பாலாஜியிடம் வீரம் காட்ட முயன்றேன். டிஸ்கவர்ட் அட்டாக் மாதிரி பாலாஜியின் முதுகுக்குப் பின்னிருந்து அவன் அண்ணன் முளைத்தான். மூன்றே மூவ்களில் என்னை Fool’s Mate பண்ணி தலை தெறிக்க ஓட வைத்தான்.

அப்புறம் டீனேஜ் பருவத்தில் நண்பனின் அப்பா கிடைத்தார். அவருக்கு இலக்கிய ஈடுபாடு நிறைய உண்டு. நானும் அவரும் செஸ் விளையாடிக் கொண்டே இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் தோற்பேன். ஏன் ஜெயித்தேன்? ஏன் தோற்றேன்? காரணம் தெரியாது.

பல வருஷங்களுக்குப் பின் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கும்போது மீண்டும் செஸ். முத்து என்னும் நண்பர் என் ராஜாவை விரட்டி விரட்டி அடிப்பது வழக்கம்.

சூழ்ந்து நிற்கும் நண்பர்கள் கும்பல் அங்கே நகர்த்து, இங்கே நகர்த்து என கட்டளை விட ஆரம்பித்தால், கோபத்துடன் எழுந்து போய் விடுவேன். பேக் சீட் டிரைவிங் எனக்கு சுத்தமாக பிடிக்காது. தோற்றாலும் ஜெயித்தாலும் அது நானாக இருக்க வேண்டும்.

வெறும் மூவ்மெண்ட்ஸ் மட்டும் தெரிந்திருந்தால் செஸ் ஆட்டம் தெரியும் என்று அர்த்தமல்ல என்று அங்குதான் புரிந்தது.

செஸ் என்பது பகவத் கீதை. உற்று நோக்க நோக்க நிறைய தெரியும். அறுபத்து நாலு கட்டங்களுக்கிடையே நிறைய பதுங்கு குழிகள், வலை விரிப்புகள், கண்ணிகள், வஞ்சகங்கள் எல்லாம் இருப்பது கண்ணுக்குப் புலப்படும். வெறும் சிப்பாய்தானே என்று அலட்சியம் காட்டும் ராஜாக்களின் கர்வம் வீழ்வது புரியும்.

அதற்கப்புறம் எனக்கு இந்த விளையாட்டுக்கு சரியாய் ஆள் கிடைக்கவில்லை. அமெரிக்கா வந்த பின் திடீரென ஒரு நாள், “அப்பா, வாங்க செஸ் விளையாடலாம்!” என்றான் அகில். அவனுக்கு சதுரங்கம் ஆடத் தெரியும் என்று எனக்கு அப்போதுதான் தெரியும். எனக்கு என் அப்பாவா சொல்லித் தந்தார்? அவ்வப்போது நானும், அவனும் விளையாட ஆரம்பித்தோம்.

நாலைந்து மாதங்களுக்கு முன்புதான் இங்கே வாஷிங்டன் டி.சி யில் ஒரு செஸ் சென்ட்டர் இருப்பதறிந்தேன். ஒரு டோர்னமெண்ட் தினத்தில் அங்கே சென்று பார்த்த போது திருவிழா கூட்டம். குழந்தைகள் வயதில் மூத்த ஆட்டக்காரர்களையும் பிய்த்துப் பிய்த்து உதறிக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளை ஆட விட்டு விட்டு, லேப் டாப் மேயும் தந்தைகள். ரவுண்ட் இடைவெளிகளில் குழந்தைகளின் வாயில் சாண்ட்விச் திணிக்கும் அம்மாக்கள்.

நாலு ரவுண்ட் ஆட்டம் நாள் பூராவும் நடக்கிறது. என்னால் சும்மா உட்கார்ந்து வயர்லஸ் வெளியில் மேய்ந்து கொண்டிருக்க முடியவில்லை. நானும் யு எஸ் சி எப்பில் உறுப்பினராகி டோர்னமென்ட்களில் விளையாட ஆரம்பித்து விட்டேன்.

பத்தொன்பது ஆட்டங்களுக்குப் பின் எனது ரேட்டிங் ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. பி கே எஸ்ஸின் பையன் இந்த விளையாட்டில் ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங் என்று ட்விட்டர் வழியே அறிந்துள்ளேன். போன மாதம் அகஸ்மாத்தாக அவரை சந்தித்த போது, “கொஞ்சம் முயன்றால் ஆயிரத்தி ஐநூறு வரை சுலபமாய் எட்டி விடலாம். அதற்கப்புறம் சரக்கு இருந்தால்தான் மேலே போக முடியும்.” என்றார்.

என் மர மண்டைக்கு ஆயிரத்தி ஐனூறை எட்டினால் போதும். நான் ரிட்டையர் ஆகி விடுவேன்.