இறந்த இலக்கியங்களும், மறைந்த ஜனரஞ்சகங்களும்


மதியம் டீ சாப்பிட நண்பருடன் கடைக்குச் சென்றிருந்தேன். தினத்தந்தியைப் பிரித்தபோது எழுத்தாளர் அனுராதாரமணன் அவர்களின் மரணச் ‍செய்தியைப் படிக்க நேர்ந்தது. சட்டென்று அதிர்ச்சி.

“அடப்பாவமே… அனுராதாரமணன் இறந்துட்டாங்களா?” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன்.

நண்பர் ‘அனுராதாரமணன் யார்?’ என்று கேட்டார். அவரைப் பற்றி சொல்ல வேண்டியதாயிற்று.
அவரிடம் விடைபெற்று வந்த பின்னால் அனுராதாரமணன் பற்றிய யோசனைகள். ஜனரஞ்சக இதழ்களில் வெகு காலம் எழுதிப் பிரபலமான ஒரு எழுத்தாளரை யார் என்று விளக்க வேண்டிய சூழ்நிலையில் இன்னும் வாசிப்பு விவகாரம் மந்தமாக உள்ளது. இந்த லட்சணத்தில் இலக்கியக் குப்பை கொட்டி என்ன பயன் என்று ஆயாசமும் எழுகிறது.

ஒன்பதாவதோ பத்தாம் வகுப்போ படிக்கிற போது அனுராதாரமணன் கதைகளைப் படிக்க நேர்ந்தது. லட்சுமி கதைகளுக்கும் அனுராதாரமணன் கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடிந்தது. அவர் எழுத்துக்களில் ஜனரஞ்சகத் தன்மை இருந்தாலும் அதையும் மீறிய ஒரு தைரியம் இருந்தது. ஜெயகாந்தன், ஜானகிராமன் பாதிப்பு அவர் கதைகளில் இருந்தது. ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் எழுத்துகில் எதிர்பாராமல் நுழைய நேர்ந்த கதையை பாக்கெட் நாவல் மூலமாக ‍தெரியவந்தது. அவரின் குடும்ப சூழ்நிலை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பொறுப்பான, சுதந்திரமான தாயாக… அவரின் பேட்டிகள் மூலமாக, வாழ்க்கைக் குறிப்புகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டத்தில் தமிழில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் என்கிற குறிப்பையும் படித்த நினைவு வந்தது.

சுபமங்களா இதழுக்கு ஆரம்பத்தில் அவர்தான் ஆசிரியர். அது ஒரு ஜனரஞ்சக இதழாக இருந்தாலும் பல நல்ல படைப்பாளிகளின் படைப்புகளையும் வெளியிட்டு வந்தார். பின்னாளில் அது கோமல்சுவாமிநாதனின் இலக்கிய இதழாக மாறியது. அப்போது பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தில் ஒருவர் அனுராதாரமணனின் சுபமங்களா பற்றி கடுமையான விமர்சனம் செய்தார். ஆனால் அந்த அளவுக்கு அது மோசமான இதழ் இல்லை. கூட்டம் முடிந்தபின் இதைப் பற்றி அவரிடம் ‍கேட்டபோது, தான் அனுராதாரமணன் சுபமங்களா பார்த்ததில்லை என்றார். ஆனால் அது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தாராம்.

அனுராதாரமணன் சுபமங்களாவில் பிரபஞ்சன், அசோமித்திரன், லா.சா.ரா, திலகவதி, வாஸந்தி, ம.வே.சிவக்குமார், செ.யோகநாதன், சுப்ரபாரதிமணியன்… என்று பல படைப்பாளிகள் பங்கு பெற்றிருந்தார்கள்.

சுபமங்களாவுக்குப் பின் வளையோசை நடத்தினர். இது இரண்டோ மூன்றோ இதழ்கள்தாம் வந்தன. சுபமங்களாவுக்கு முன் அவர் வேறு இதழ்களுக்கும் ஆசிரியரா இருந்திருக்கிறார் என்று அறிகிறேன். அவர் ஆசிரியராக இருந்த பழைய வளையோசை ஒன்று மாத நாவலாக பார்த்திருக்கிறேன்.

இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை சந்தித்தபோது அரசியல்-பல்வேறு பயமுறுத்தல்களும் எழுந்தபோது தைரியமாக எதிர்த்து உறுதியோடு இருந்தார். அவரது விதைகள் என்கிற தொகுப்பு (2 பாகங்கள்) அவரது எழுத்துலக அனுபவங்களை வெளிக்காட்டியிருந்தது. அன்புடன் அனுராதாரமணன் தொடர் மூலம் நல்ல தீர்வுகளையும் மன ஆறுதல்களையும் அவர் பலருக்குத் தந்திருக்கிறார்.

அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதால் இலக்கியப் இதழ்கள் அவர் மறைவைப் பற்றியான செய்திகளை எப்படி வெளியிடும் என்று தெரியவில்லை. அவரின் வாழ்க்கைக் குறிப்பை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த தலைமுறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களைப் பற்றி எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெளிநாட்டு படைபபாளிகளின் பெயர்களால் நம்மைத் திணற அடித்து பயமுறுத்துகிறார்கள். நகுலனின் மறைவுக்குப் பின்னால்தான் அப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று அறிந்து கொண்ட படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் செ.யோகநாதன் மறைவை இணையத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு பின்நவீனத்துவப் படைப்பாளிகளைச் சந்தித்தபோது இந்தத் தகவலைச் சொன்னேன். “யாரு அவரு? எதில எழுதியிருக்காரு?” என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதே தகவலை வளர்ந்த ஒரு மூத்த இலக்கியவாதியிடம் சொன்னபோது. “அவரு கமர்ஷியல் ரைட்டர்தானே…” என்றார் சாதாரணமாக. இலக்கிய இதழ்கள் பலவற்றில் எழுதிய செ.யோகநாதன் எந்த மாதிரியான எழுத்தாளர் என்கிற ஆராய்ச்சிதான் முக்கியமாக இருந்தது.

அவரிடம் செ.யோகநாதனின் மறைவுக்கான அனுதாபம் இல்லை.

  • கனகராஜன்