மொட்டை மாடி.. மொட்டை மாடி…
கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.
கோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது. பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல் அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.
துணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.
அந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும். தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.
எங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.
எங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள்? ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.
எப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.
பல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று. நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது? அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.
ஆயில்யன் 12:22 பிப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் |
மொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂
அதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம்! மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட!
//அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./
LOL:)))))))
ஜெகதீஸ்வரன் 11:00 முப on ஜூன் 26, 2010 நிரந்தர பந்தம் |
இரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே!…
வாழ்க வளமுடன்!
– ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com