சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 5


கறுப்புக் கண்ணாடியைப் பார்த்தால் நினைவுக்கு வருபவர் அமரர் தமிழ்வாணன் மட்டுமல்ல, அவர் வாரிசு லேனா தமிழ்வாணனும்தான். திரு. மணியன் அவர்களுக்குப் பிறகு இவரது பயணக் கட்டுரைகளை வெகு ஆர்வமாய் படித்து வந்த நாட்கள் உண்டு.

இவரது ஒரு பக்கக் கட்டுரைகளை வலைப்பதிவுகள் எழுத ஆதர்சமாய்க் கொள்ளலாம்.

நாவலாசிரியர் ராஜேஷ்குமார் க்ரைம் மாத இதழில் நூறு நாவல்கள் எழுதி முடித்திருந்ததைப் பாராட்டி கோவை சௌடேஸ்வரி அம்மன் கோயில் மண்டபத்தில் ஒரு விழா நடந்தது. லேனா தமிழ்வாணனை அங்கேதான் சந்தித்தேன்.

சரியாய் சொல்லப் போனால் விழா நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக ஒரு ஹோட்டலில் ஏழெட்டுப் பேர் கொண்ட கும்பலோடு கும்பலாய் அறிமுகமானேன். இம்மாதிரி அறிமுகங்கள் நடக்க நேர்கையில் ஹலோ சொல்லி முடிக்கும்போது எல்லார் பெயரும் மறந்து போய் விடும். ஆச்சர்யப்படும் வகையில் அறிமுகம் முடிந்த பின் லேனா முதல் நபரிலிருந்து கடைசி நபர் வரை வரிசையாக, “நீங்க முரளி… நீங்க சேது… ” என ஒவ்வொருவர் பெயரையும் தெளிவாய்ச் சொல்லி பிரமிக்க வைத்தார்.

அந்த பிரமிப்பு விழா மண்டபத்திலும் தொடர்ந்தது. பல பிரபலங்கள் பேசுகையில் சள சளவென இரைச்சலோடு இருந்த சபை இவர் பேச ஆரம்பித்ததும் கப் சிப்பென அடங்கி விட்டது. அவர் பேசி முடித்த பின்பும் தீர்க்கமான அந்தக் குரல் இன்னும் சற்று நேரம் ஒலிக்காதா என ஏங்க வைத்தது.

இந்த சந்திப்பின் சர்ப்ரைஸ் எலிமன்ட் இனி மேல்தான் வருகிறது. அடுத்த நாள் ராஜேஷ்குமார் என்னைக் கூப்பிட்டு – லேனா சென்னை கிளம்புகிறார், என் சார்பாக ஹோட்டலிலிருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வர இயலுமா என்று கேட்டார்.

சந்தோஷமாய் ஒப்புக் கொண்டு, ஏழு மணிக்கெல்லாம் ரயில் நிலையம் அருகே இருந்த லாட்ஜுக்கு போனேன். என்னுடன் எழுத்தாளர் என்.சி. மோகன்தாசும் இருந்ததாய் ஞாபகம். சரியாய் நினைவில்லை.

அங்கே நாங்கள் மூவர் மட்டுமே. எட்டே கால் மணிக்கு நீலகிரி எக்ஸ்ப்ரஸ் கிளம்பும் வரை ஹோட்டலிலும், ஸ்டேஷனிலுமாக கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த வித பரபரப்புமில்லாமல் லேனா தமிழ்வாணன் அவர்களுடன் அன்னியோன்யமாய் உரையாடும் ஒரு சந்தர்ப்பம்.

என்னென்னவோ டாபிக்குகள் அந்த சுவாரஸ்யமான மனிதரிடமிருந்து நேரடியாய் கேட்டு மகிழ்ந்தேன். உண்மையில் சொல்லப் போனால் நான் எழுதி சம்பாதித்தது இது போன்ற அரிய தருணங்கள் மட்டுமே!

மறுமுறை ராஜேஷ்குமார் அவர்களை சந்தித்த போது – இது குறித்து எனக்கு நன்றி சொன்னவர், “ஆமா, நீ ஒரு எழுத்தாளர்ன்னு லேனா கிட்டே சொன்னியா? ” என்று கேட்டார்.

ஒரு நிமிடம் மலங்க மலங்க விழித்தேன். பிறகு மெல்லக் கேட்டேன்.

“நான் ஒரு எழுத்தாளரா சார்?”

என் குரலில் இருந்த அவநம்பிக்கையைப் பார்த்து விட்டு சிரித்தார். “ஒரு கதை எழுதினாலே எழுத்தாளர்தான். நீ எல்லா தமிழ் பத்திரிகையிலும் ஒவ்வொரு கதையாவது எழுதிட்டே. நிச்சயமா நீ எழுத்தாளர்தான்.”

இணைய ஊடகம் வளர்ந்து விட்ட பிறகு இப்போது ‘எழுத்தாளர்’ என்ற பதத்துக்கு வித விதமாக பொழிப்புரைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர் வட்டத்துக்கான அளவுகோல்களோடு அளவளாவுகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தை எனக்கு மிகப் பெரிய டானிக்.

இங்கே அமெரிக்காவில் குழந்தைகள் ப்ரீ ஸ்கூல் பாஸ் பண்ணி ஒண்ணாவது போகும்போது கூட ஸ்கூலில் க்ராஜுவேஷன் பார்ட்டி வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த சின்ன வயதில் அது எத்தனை மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தருமோ அது போல எனக்கிருந்தது.

அப்புறம் உற்சாகத்துடன் நிறைய எழுத ஆரம்பித்தேன், ஒரு கட்டத்தில் குமுதம் பப்ளிகேஷன் இதழ்களில் ஏராளமாக என்னுடைய கதைகள் வெளியாகத் துவங்கின. அந்த சில வருஷங்களில் லேனாவின் மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட பிரபலமானவர்களின் விலாசங்கள் புத்தகத்தில் ‘எழுத்தாளர்கள்’ செக்’ஷனில் என் பெயரும், முகவரியும் இடம் பெற்றிருந்தது.

கோவை சந்திப்பில் லேனாவிடம், “நான் ஒரு எழுத்தாளர் சார்!” என்று சொல்லாமல் போனதும் சரியே என அப்போது தோன்றியது.


1 | 2 | 3 | 4 |