உலகக் கொட்டாவி


இந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:

இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.

சிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.

உள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே!.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.

இப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை.

திரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும்? நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.

வெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.

ரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.

கோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.

சினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா?

தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.

தியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.

கரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.