Updates from ஜூன், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 10:36 am on June 13, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கட்டுரை, , கவுண்டமணி, , செம்மொழி, தமிழ், வடிவேல்   

  வடிவேலகராதி 

  2050-ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் முனைவர் பேராசிரியர் ஆ.கா. தமிழ்ச்செங்கோட்டுவரியன் அவர்கள் வாசித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
  ———————————————–
  ….தமிழில் வடிவேலகராதி என்று ஒன்றைக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு புதிய சொற்றொடர்களும், வார்த்தைகளும் இனிய தமிழில் அக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பது காணவும் கேட்கவும் கிடைக்கின்றன. சினிமா என்ற ஒன்று இதற்கென மெனக்கெட்டு தன்னாலான சிறு பங்கை ஆற்றிக்கொண்டிருந்தது என்பது தற்கால அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ”உதாரணத்திற்கு இஸ்.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்கிற ஒரு சொற்றொடர். இதுவரை நிகழ்ந்த நிகழ்வுக்கே கண்கள் சோர்ந்து ஒருவித மயக்க நிலையை உடலானது அடையத் தொடங்கிவிட்டபோது இனிவரும் நிகழ்வுகளை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் என்று பொருள்பட அமைந்த இந்த வாக்கியம் வடிவேலடிகளாரால் 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

  வெற்றியாளன் என்ற அர்த்தம் கொண்ட தலைப்புடன் வந்த ஒரு சீரிய திரைப்படத்தில்தான் இவர் மிகவும் பரவலான புகழடைந்தாரென்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பேச்சுத்தமிழில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர் இவர். திரைப்படங்களில் இவர் கோலோச்சி வந்த காலகட்டத்தில் இவர் பேசின வசனங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது மட்டுமல்லாமல் அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாடப் புழக்கத்திலும் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன.

  இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில்கூட ஊழியர்களிடையே இவை பரவலான சொல்லாடல்களாக இன்றும் காணப்படுகின்றன. உதாரணம் “நீ இதுவரை பணிபுரிந்ததுபோதும். இனிமேல் நீ வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை” என்று பொருள்பட சொல்லப்படும் வாக்கியம் “ஆணியே புடுங்க வேண்டாம்..”. ஓரிரு வார்த்தைகளிலேயே சுருக்கமாக பல அர்த்தங்களை இது விளக்கிவிடுகிறது என்ற வகையில் இதை ஒரு மிக முக்கியமான பேச்சு வழக்குப்பிரயோகமாகக் கொள்ளலாம்.

  இது மாதிரி கமல்ஹாசன் என்கிற நடிகர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் ”என்ன வூட்ல சொல்ட்டு வந்தியா” என்று பேசப்படுகிற வசனமானது “சாலையில் கவனமாகப் போகவில்லையெனில் கார் போன்ற வாகனத்தில் அடிபட்டு பரலோக பதவி அடைந்துவிட நேரிடும்” என்கிற எச்சரிக்கையை மறைமுகமாகச் சொல்வதுடன் “போய்வருகிறேன். நான் இனி திரும்பி வரமாட்டேன்” என்று சம்பந்தப்பட்டவர் வீட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்து அதற்கேற்ப சாலைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடந்துகொள்கிறார் என்பதையும் மிக அழகாக எடுத்தியம்புகிறது. இவ்வகையில் இது தமிழின் அழியாப் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகவும் நிலைபெற்றுவிட்டதென்றே சொல்லலாம்.

  இது போன்ற சொலவடைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போனால் ஒரு ஆயிரம் பக்க ஆய்வுக்கட்டுரையாகத்தான் அதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுதல் நலம் என்று தோன்றுகிறது.

  ‘ஒய் பிளட்? சேம் பிளட்’ என்கிற ஒன்று தனக்கேற்பட்ட அவமானகர கதிநிலை மற்றவருக்கும் ஏற்பட்டத்தை அறிந்து சந்தோஷம் கொள்ளும் மனப்பான்மையை எடுத்துச் சொல்கிற மிக எளிய வாக்கியம். இதில் ஆங்கில மொழியானது தாறுமாறாக சிதைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தாலும் தமிழின் மிக முக்கிய வாக்கிய இணைப்புகளில் தலையானதாகக் கருதலாம்.

  இதே போல் ‘முடியல’ என்கிற வார்த்தை, சூழலையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து அவரவர் வேவ்வேறு பொருள்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான வார்த்தையாகும்.

  வடிவேலழகர் தவிர கவுண்டமணியார் என்கிறவரும் இதேபோல் புதிய அர்த்தங்களுடன் கூடிய தமிழ்ச் சொற்றொடர்களை தமிழுக்கு வழங்கியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். இவர் உருவாக்கின ”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற வாக்கியம் பொது இடங்களில் பிறர் முன்னிலையில் தன் கையாலாகத்தனம் தெரிந்து கேவலமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டாலும்கூட அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மித மிஞ்சிய நகைப்புடன் இந்த வாக்கியத்தை நீட்டி முழக்கி உச்சரிப்பதன் மூலம் அந்நிலையை சமாளித்துவிட முடியுமென்கிற வலையில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த வாக்கியம் இன்னும் சில நூற்றாண்டுகளாவது தமிழில் வழக்கத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இவர் உருவாக்கின மற்ற சில அரிய சொற்றொடர்கள் ‘கொசுத்தொல்ல தாங்க முடியல’ என்பதும் ‘ஸ்டார்ட் த மீஜிக்” என்பதும்.

  இதுபோல் தமிழில் இப்போதைய வாழ்க்கை நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் அரிய தமிழ் வாக்கியங்கள் சில:

  1. எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்
  2. ஏன் இந்தக் கொலவெறி?
  3. என்ன கொடும சரவணா இது?
  4. வந்துட்டான்யா வந்துட்டான்யா..
  5. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டற மாதிரி
  6. இப்புடுச் சூடு
  7. வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்..
  8. வரும்ம்ம்.. ஆனா.. வராது..
  9. பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் வீக்கு.
  10. அது போன மாசம். இது இந்த மாசம்.
  11. ஐயோ வட போச்சே..
  12. என்ன வெச்சு காமெடி கீமடி எதும் பண்ணலையே..

  சொல்ல வருகிற விஷயத்தை மறைமுகமாகவோ நேராகவோ மிக எளிய முறையில் சொல்வதற்கு உதவுகின்றன என்பதனால் செம்மொழியாம் தமிழ்மொழியில் இந்த வாக்கியப் பிரயோகங்கள் வரலாறுகள் தாண்டி நீடித்து நிலைத்திருக்கும் என்று மொழி ஆராச்சியாளர்கள் கருதுவதுடன் மேலும் இதுபோன்றவைகளை அதிக அளவில் திரைப்பட மின்தகடுகளிலிருந்து மக்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் இவைகளை செவ்வனே பின்பற்றுவோமாக….

   
 • சத்யராஜ்குமார் 7:24 pm on June 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கல்கண்டு, குமுதம், தமிழ்வாணன், லேனா   

  சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 5 

  கறுப்புக் கண்ணாடியைப் பார்த்தால் நினைவுக்கு வருபவர் அமரர் தமிழ்வாணன் மட்டுமல்ல, அவர் வாரிசு லேனா தமிழ்வாணனும்தான். திரு. மணியன் அவர்களுக்குப் பிறகு இவரது பயணக் கட்டுரைகளை வெகு ஆர்வமாய் படித்து வந்த நாட்கள் உண்டு.

  இவரது ஒரு பக்கக் கட்டுரைகளை வலைப்பதிவுகள் எழுத ஆதர்சமாய்க் கொள்ளலாம்.

  நாவலாசிரியர் ராஜேஷ்குமார் க்ரைம் மாத இதழில் நூறு நாவல்கள் எழுதி முடித்திருந்ததைப் பாராட்டி கோவை சௌடேஸ்வரி அம்மன் கோயில் மண்டபத்தில் ஒரு விழா நடந்தது. லேனா தமிழ்வாணனை அங்கேதான் சந்தித்தேன்.

  சரியாய் சொல்லப் போனால் விழா நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக ஒரு ஹோட்டலில் ஏழெட்டுப் பேர் கொண்ட கும்பலோடு கும்பலாய் அறிமுகமானேன். இம்மாதிரி அறிமுகங்கள் நடக்க நேர்கையில் ஹலோ சொல்லி முடிக்கும்போது எல்லார் பெயரும் மறந்து போய் விடும். ஆச்சர்யப்படும் வகையில் அறிமுகம் முடிந்த பின் லேனா முதல் நபரிலிருந்து கடைசி நபர் வரை வரிசையாக, “நீங்க முரளி… நீங்க சேது… ” என ஒவ்வொருவர் பெயரையும் தெளிவாய்ச் சொல்லி பிரமிக்க வைத்தார்.

  அந்த பிரமிப்பு விழா மண்டபத்திலும் தொடர்ந்தது. பல பிரபலங்கள் பேசுகையில் சள சளவென இரைச்சலோடு இருந்த சபை இவர் பேச ஆரம்பித்ததும் கப் சிப்பென அடங்கி விட்டது. அவர் பேசி முடித்த பின்பும் தீர்க்கமான அந்தக் குரல் இன்னும் சற்று நேரம் ஒலிக்காதா என ஏங்க வைத்தது.

  இந்த சந்திப்பின் சர்ப்ரைஸ் எலிமன்ட் இனி மேல்தான் வருகிறது. அடுத்த நாள் ராஜேஷ்குமார் என்னைக் கூப்பிட்டு – லேனா சென்னை கிளம்புகிறார், என் சார்பாக ஹோட்டலிலிருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வர இயலுமா என்று கேட்டார்.

  சந்தோஷமாய் ஒப்புக் கொண்டு, ஏழு மணிக்கெல்லாம் ரயில் நிலையம் அருகே இருந்த லாட்ஜுக்கு போனேன். என்னுடன் எழுத்தாளர் என்.சி. மோகன்தாசும் இருந்ததாய் ஞாபகம். சரியாய் நினைவில்லை.

  அங்கே நாங்கள் மூவர் மட்டுமே. எட்டே கால் மணிக்கு நீலகிரி எக்ஸ்ப்ரஸ் கிளம்பும் வரை ஹோட்டலிலும், ஸ்டேஷனிலுமாக கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த வித பரபரப்புமில்லாமல் லேனா தமிழ்வாணன் அவர்களுடன் அன்னியோன்யமாய் உரையாடும் ஒரு சந்தர்ப்பம்.

  என்னென்னவோ டாபிக்குகள் அந்த சுவாரஸ்யமான மனிதரிடமிருந்து நேரடியாய் கேட்டு மகிழ்ந்தேன். உண்மையில் சொல்லப் போனால் நான் எழுதி சம்பாதித்தது இது போன்ற அரிய தருணங்கள் மட்டுமே!

  மறுமுறை ராஜேஷ்குமார் அவர்களை சந்தித்த போது – இது குறித்து எனக்கு நன்றி சொன்னவர், “ஆமா, நீ ஒரு எழுத்தாளர்ன்னு லேனா கிட்டே சொன்னியா? ” என்று கேட்டார்.

  ஒரு நிமிடம் மலங்க மலங்க விழித்தேன். பிறகு மெல்லக் கேட்டேன்.

  “நான் ஒரு எழுத்தாளரா சார்?”

  என் குரலில் இருந்த அவநம்பிக்கையைப் பார்த்து விட்டு சிரித்தார். “ஒரு கதை எழுதினாலே எழுத்தாளர்தான். நீ எல்லா தமிழ் பத்திரிகையிலும் ஒவ்வொரு கதையாவது எழுதிட்டே. நிச்சயமா நீ எழுத்தாளர்தான்.”

  இணைய ஊடகம் வளர்ந்து விட்ட பிறகு இப்போது ‘எழுத்தாளர்’ என்ற பதத்துக்கு வித விதமாக பொழிப்புரைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர் வட்டத்துக்கான அளவுகோல்களோடு அளவளாவுகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தை எனக்கு மிகப் பெரிய டானிக்.

  இங்கே அமெரிக்காவில் குழந்தைகள் ப்ரீ ஸ்கூல் பாஸ் பண்ணி ஒண்ணாவது போகும்போது கூட ஸ்கூலில் க்ராஜுவேஷன் பார்ட்டி வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த சின்ன வயதில் அது எத்தனை மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தருமோ அது போல எனக்கிருந்தது.

  அப்புறம் உற்சாகத்துடன் நிறைய எழுத ஆரம்பித்தேன், ஒரு கட்டத்தில் குமுதம் பப்ளிகேஷன் இதழ்களில் ஏராளமாக என்னுடைய கதைகள் வெளியாகத் துவங்கின. அந்த சில வருஷங்களில் லேனாவின் மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட பிரபலமானவர்களின் விலாசங்கள் புத்தகத்தில் ‘எழுத்தாளர்கள்’ செக்’ஷனில் என் பெயரும், முகவரியும் இடம் பெற்றிருந்தது.

  கோவை சந்திப்பில் லேனாவிடம், “நான் ஒரு எழுத்தாளர் சார்!” என்று சொல்லாமல் போனதும் சரியே என அப்போது தோன்றியது.


  1 | 2 | 3 | 4 |


   
  • Vijayashankar 8:33 பிப on ஜூன் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   வாழ்க்கையில் ஒரு சில நம்பிக்கை துளிகள் தேடி பெற வேண்டியுள்ளது! நல்ல சந்திப்பு!

  • PADMANABAN 10:32 பிப on ஜூன் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பகிர்வு சத்யா …. ராஜேஷ்குமார் ஒரு காலத்தில் மாய்ந்து மாய்ந்து என்னை படிக்க வைத்த எழுத்தாளர் …அவரது ” பாதரச பறவைகள்” இன்னமும் மனதில் பறந்து கொண்டிரிருக்கிறது … லேனாவின் கல்கண்டு என்றும் இனிப்பானது …இன்றும் குமுதத்தில் ஒரு அவரது மேலாண்மை கட்டுரை மிகவும் பிடிக்கும் …. நீங்கள் முத்தாய்ப்பை சொன்ன வரிகள் அருமை ..சிறு சிறு ஊக்கமளிப்புகள் , அங்கீகாரங்கள் மனிதனுக்குள் இருக்கும் ஆக்கபூர்வமான திறமைகளை வெளிக் கொண்டு வரும் ……..

  • காஞ்சி ரகுராம் 6:22 முப on ஜூன் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சொன்ன விதத்தில், நானே லேனாவை பார்த்தது போலிருந்தது.

   இது போன்ற ஒரு சந்திப்பை என் தந்தை சொல்லியிருக்கிறார்.

   நா. பார்த்தசாரதியை வழியனுப்ப ரிக்‌ஷாவில் உடன் சென்றிருக்கிறார்.

   இவர்கள் பேசியதை கவனித்த ரிக்‌ஷாகாரர், வந்திருப்பது நா.பா எனத் தெரிந்துகொண்டு, சவாரிக்கான கூலி 25 பைசாவை(!!!) வாங்க மறுத்தது சுவையான சம்பவம்.

  • REKHA RAGHAVAN 9:11 முப on ஜூன் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சர்ப்ரைஸ் சந்திப்புகள் சுவாரசியம். அதுவும் லேனாவுடனானது படு சுவாரசியம்.

   ரேகா ராகவன்.

  • Jawahar 11:21 முப on ஜூன் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //உண்மையில் சொல்லப் போனால் நான் எழுதி சம்பாதித்தது இது போன்ற அரிய தருணங்கள் மட்டுமே!//

   அதில் இருக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது. என் முதல் நூல் பிரசுரமாகி இருக்கிறது. அதை விட பெரிய சந்தோஷம் எழுத்தாளர் பா.ரா. வின் நட்புதான்!

   http://kgjawarlal.wordpress.com

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி