Updates from ஜூலை, 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • மீனாட்சி சுந்தரம் 12:06 pm on July 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மூஞ்சில குத்து 

  சென்னையின் வெயிலைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உள்ளதென்றால் அது அந்த வெயிலில் பேருந்தில் போவதுதான். யாராவது உன்னைக் குளிரூட்டப்பட்ட காரில் கூட்டிச் செல்கிறேன், ஒரு கொலை செய்கிறாயா என்று கேட்டால் கூசாமல் கொலை செய்யச் சம்மதிக்கச் சொல்லும் கொடுமை அது.

  அதிலும் இந்த வெப்பத்தில் உடல்கள் உரசிக் கொண்டு நிற்கும் கொடுமை இருக்கிறதே… ஏதோ நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வறுப்பது என்று சொல்வார்களே… சென்னைவாசிகள் நரகம் சென்றால் அது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய பனிஷ்மென்ட்டாய்த் தோன்றாது என்றே தோன்றுகிறது.

  இப்போது யோசித்துப் பாருங்கள்… இதில் நான் காலையும், மாலையும் அலுவலகத்துக்குப் போகவரப் பேருந்தை உபயோகப்படுத்துபவன். ஆனால் இந்தப் பயணங்களில் எக்ஸ்ட்ராவாய் எனக்குப் புரியாத விஷயம் ஒன்று உண்டு.

  எங்கள் ஊரில்,”வெளுக்கறவன் கழுதைக்கு வரப்போக சுமை…” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது பெரும்பாலான  சாஃப்ட்வேர் ஆட்களையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. எல்லாப் பையன்களும் அதிலும் குறிப்பாக கணிப்பொறி ஆட்கள் போலத் தோன்றும் இளைஞர்கள் எல்லோரும் முதுகில் ஒரு பேக் பேக்கை மாட்டியுள்ளார்கள்.

  பேருந்தில் உள்ளிருக்கும் நேரங்களில்கூட அவர்கள் அதைக் கழற்றுவதில்லை. கர்ணனின் உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசம்போல அவர்களுக்கு அது.

  முதலில் தொழில் சம்பந்தமாக லேப்டாப் ஏதாவது கொண்டு செல்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் உண்மையிலேயெ நான் சொன்ன கழுதை போல் துவைக்கும் துணிகளைச் சுமந்து செல்கிறார்களோ என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் கொண்டு செல்லும் அந்தப் பைகள் அவ்வளவு பெரிதாய்ப் புடைத்திருக்கின்றன.

  அதிலும் அந்த பேக்கை மாட்டிகொண்டு பேருந்தின் உள்ளே கூட்டத்தின் இடையே புகுந்து எல்லோருடைய முகத்திலும் பேக் உரச உரச நடப்பதும், கூட்டத்தின் நடுவே வந்து அந்த பேக்குடன் அப்படியே நின்றுகொள்வதும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் இஷ்டத்திற்கு மொபைல் பேச்சும் அதுவுமாய்ச் சுற்றுகையில் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதோ இவர்களுக்கு என்றே எண்ணத் தோன்றும்.

  முதலில்  பொறுத்துக்கொண்டாலும் நாட்பட நாட்பட இது ஒருவாறு பெரும் எரிச்சலாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் காலையில் பேருந்தில் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்க, நல்ல எரிச்சலுடனும் ஆனால் முகத்தில் ஒரு மாறாத புன்சிரிப்புடனும் அந்த இளைஞனைக் கேட்டேன்.

  “ஏன் தம்பி… இந்த பேக்கை கழற்றி உட்கார்ந்திருக்கும் யாரிடமாவது கொடுக்கக் கூடாதா…? எல்லோருக்கும் கஷ்டமாய் இருக்கில்ல…?”.

  சொல்லிவிட்டு இத்தனைபேர் எதிரில் கேட்டுவிட்டோமே… அவன் ஏதாவது வருத்தப்படுவானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பதிலுக்கு அவன் கேட்ட கேள்வி என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

  “சார்… நீங்க வெளியூரா…?”.

  ஆக, பேக் முகத்தில் இடிக்கிறது… கொஞ்சம் கழற்றி வை…!” என்று பேருந்தில் சொல்பவன் சென்னைக்குப் புதுசு என்ற புதிய உண்மை எனக்கு அன்றைக்குத் தெரியவந்தது.

   
  • காஞ்சி ரகுராம் 12:37 பிப on ஜூலை 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இல்ல சார், இந்த கணினிக்காரர்கள்தான் மாநகரப் பேருந்துக்குப் புதுசு. சென்னைவாசிகள் பஸ்ஸில் ஏறியதுமே, கையில் இருப்பது டிபன் பாக்ஸாக இருந்தாலும் யாரிடமாவது கொடுத்துவிட்டு ஹாயாக நிற்கவே பார்ப்பார்கள். அதிலும் மகளிர் வரிசையில் கொடுத்து நிற்பதில் அலாதி பிரியமானவர்கள்.

   ஆனால், இந்த கணினிக்காரர்கள், இத்தனை நாட்களாக அவர்களின் கம்பெனி பஸ்ஸில் சொகுசாகச் சென்று, அங்கே விலை ஏற்றப்பட்டதும் மாநகரப் பேருந்துக்குப் புதிதாக மாற்றலாகி, நின்று கொண்டு இம்சை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

   ஆக, இனி நீங்கள், “தம்பி, நீ பஸ்ஸுக்கு புதுசா” என்று தாராளமாக கேட்கலாம் 🙂

  • மீனாட்சி சுந்தரம் 1:27 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஆனா, அந்த பையில் அவர்கள் என்ன கொண்டு போகிறார்கள் என்று சொல்லவில்லையே ரகுராம்…!

   • காஞ்சி ரகுராம் 7:51 முப on ஓகஸ்ட் 5, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

    அது எனக்கும் புரியாத புதிர்.

    அதை அறிந்துகொள்ள நெற்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

    டைடல் பார்க்கில் திடீரென்று செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டது. எல்லாருடைய பையையும் திறந்து திறந்து பலத்த சோதனையிட்டார்கள். ஒரு ஐந்து நிமிடம் அங்கே நின்றிருந்தால் பையிலிருக்கும் மர்ம வஸ்துக்களைப் பார்த்திருக்கலாம்.

    ஆனால் அப்போது அது தோன்றாததில், அந்த பொன்னான வாய்ப்பை வீணடித்துவிட்டேன் 😦

  • கார்த்திக் 1:29 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஏன் சாப்டுவேர் வாசிகளெல்லாம், அவங்க கேப் (CAB) ல தானே போவாங்க?. எல்லாம் ரிசசென் எஃபக்டா?

  • ஜெகதீஸ்வரன் 1:14 பிப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

   – ஜெகதீஸ்வரன்

  • துளசி கோபால் 1:47 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சென்னை வெயிலெல்லாம் ஜுஜூபி. இங்கே சண்டிகர் வந்து பாருங்க. மனுசனை வடாம் போட்டுறலாம்:(

   • சத்யராஜ்குமார் 5:31 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நீங்க சண்டிகர்லயா இருக்கிங்க? பஞ்சாப் பிரச்னை தலை விரிச்சு ஆடிட்டிருந்த சமயம் 47 செக்டர் கிட்டே கொஞ்ச நாள் இருந்திருக்கேன். ரோஸ் கார்டன்ல உக்காந்து சில கதைகள் கூட எழுதியிருக்கேன்!

  • padmahari 3:50 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த இடுகையைப் படிக்கும்போது எனக்கு என் பள்ளிக்காலங்கள் நியாபகத்துக்கு வருகின்றன. படிக்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக இருக்கவேண்டிய நோட்டுகள்/புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் எங்களுக்கு உண்டு (எல்லோருக்குமே). அதன்படி எடுத்துச்செல்லவில்லையென்றால் வாத்தியார் அடிப்பார், எடுத்துச்சென்றால் பஸ்ஸிலுள்ளவர்கள் ஏகத்துக்கும் கமெண்ட் அடிப்பார்கள். ஆக, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். அந்தப் பைகளை கொடுக்க நாங்கள் தயாராக இருந்தாலும், பெருந்தன்மையுடன் வாங்கிக்கொள்ள ஆட்கள் குறைவு என்பதுதான் நிதர்சனம்! அது இந்தப் பதிவுக்கும் பொருந்துமோ என்னவோ?!
   பத்மஹரி,
   http://padmahari.wordpress.com

  • துளசி கோபால் 12:21 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இப்ப ஒரு மூணு மாசமாச்சு இங்கே வந்து. பட்டி(Buddi. H. P)யில் ஒரு ஃபேக்டரி போடும் வேலை கோபாலுக்கு. அநேகமாக இந்த வருசக் கடைசிவரை இருக்கவேண்டி வரலாம்.
   செக்டர் 21 இல் இருக்கோம்.

  • pamaran 11:05 முப on பிப்ரவரி 10, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பேக் பேக்-ல இருக்குறது லேப் டாப்-யா. அத உங்கள மாதிரி ஆட்கள்ட்ட கொடுத்தா, திருப்பி வாங்கும் போது பேக் பேக் இருக்கும் . உள்ள லேப் டாப் இருக்காது -னு எங்களுக்கு தெரியுமையா

 • சத்யராஜ்குமார் 9:56 am on July 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கதை, தொடர், பத்மினி, மின்மினி தேசம், , மீன்ஸ்   

  மின்மினி 

  பத்மினி என்கிற – மீன்ஸ் என்கிற – மீனாட்சி சுந்தரம் திருமணத்திற்குப் பின்பும் தனது அதீத நகைச்சுவை உணர்வை இழந்து விடாத அரிய நண்பர்.

  “இப்பல்லாம் அர்த்தமுள்ள பாடல்கள் வர்றதில்லை.” என்று அலுத்துக் கொண்ட பெரியவரிடம், “திருடா திருடாங்கிற படத்தில் வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாட்டை கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க.” என்று சிரிக்காமல் சொன்னவர். சேரன் போக்குவரத்துக் கழக பஸ் கண்டக்டரின் நெஞ்சில் ‘பாண்டியன்’ என்ற பெயர்ப் பட்டையைப் பார்த்து விட்டு, “நீங்கதான் சேரன் பாண்டியனா?” என்று கேட்டவர்.

  இன்று – Today -யில் அவரை எப்படியும் எழுத வைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயத்தனப்பட்ட பின் – சென்ற வருடம் சில பதிவுகள் எழுதினார். அதன் பின் வலைப்பதிவின் சௌகரியங்களை அறிந்து கொண்டு விட்டார்.

  விளைவு – மின்மினி தேசம்.

  ஒரே மாசத்தில் நூறுக்கும் மேற்பட்ட குட்டிக் கதைகள். கண்டது, கேட்டது, படித்ததில் தன் சொந்தச் சரக்கையும் கலந்து கட்டி – சிரிக்கவும், சற்றே சிந்திக்கவும் வைக்கும் ஊசி வெடிக் கதைகள்.

  சமீபத்தில் ‘தோள் மேலே…’ என்றும் ‘தோள் மேலே… தோள் மேலே..‘ என்றும் இரு அத்தியாயங்கள் எழுதி விட்டு, நேற்றைக்கு என்னை அழைத்து, அடுத்த அத்தியாயம் நீங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார்.

  அவர் எழுதிய இரண்டு அத்தியாயங்களும் தனித்தனியாகப் படித்தாலும் ஒரு மின்மினி தேசத்துக் குட்டிக் கதையாக உள்ளது. தொடர்ச்சியாகப் படிக்கையில் கண்ட்டினியுட்டியும் இருக்கிறது. இதே மாதிரி இன்னொரு அத்தியாயமா?

  ஒரு அரை மணி நேரம் மூளையை கசக்கியதில் ஓரிரு கதைகள் தட்டுப்பட்டன. அவற்றில் ‘கடவுள் சொன்ன பொய்’ என்ற இந்த அத்தியாயம் மின்மினி தேசம் வாசகர்களுக்குப் பிடித்தமாயிருக்கும் என முடிவு செய்து எழுதி அனுப்பி வைத்தேன்.

  உங்களுக்கும் பிடிக்கிறதா பாருங்கள்.


  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2


  கடவுள் சொன்ன பொய்.

  அத்தியாயம் – 3

  கணேஷ் சாயந்திரம் வீடு திரும்பியபோது, வாசலில் வசந்தியின் செருப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

  எப்போது வந்தாள்?

  என்றைக்குமே இல்லாத ஆர்வத்தோடு வசந்தி ஓடோடி வந்து, ஏதோ விருந்தாளியை வரவேற்பது போல் வரவேற்றாள்.

  தொடர்ந்து படிக்க…


   
  • காஞ்சி ரகுராம் 11:38 முப on ஜூலை 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மணிரத்னத்தின் ஆய்த எழுத்து திரைப்படத்தில் ஒரே காட்சி மூன்று ஆங்கிளில் வருவது போல ஒரே கண்ணாடி மூன்று கதைகளாக, அத்தியாயங்களாக; கண்ட்டினிடியுடன் நகைச்சுவையுடன் வந்திருக்கிறது. பிடிக்காமலும் இருக்குமா? 🙂

  • சித்ரன் 1:00 பிப on ஜூலை 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சத்யராஜ்குமார்.. கதை நல்லாருக்கு. க்ளைமாக்ஸ் வாய்விட்டு சிரிக்க வைத்தது.

  • சித்ரன் 1:05 பிப on ஜூலை 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   முன்பொருமுறை தான் வேலை செய்யும் கம்பெனிக்கு ட்ரெய்னிங்குக்காக வந்த காலேஜ் பெண்களிடம் “தண்ணில இருந்து கரண்ட் எடுக்கறாங்க. ஏன் தெரியுமா?” என்று ஒரு டெக்னிகல் கேள்வியைக் கேட்டு, அவர்கள் பதில் தெரியாமல் திரு திருவென்று விழிக்க.. “அட.. கரண்ட் எடுக்கலைன்னா தண்ணிய தொட்டா ஷாக் அடிக்கும்ங்க.. “ என்று கூறி மீன்ஸ் அவர்களை மிரள வைத்தது ஞாபகம் வருகிறது.

  • சென்ஷி 10:40 பிப on ஜூலை 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சமீப காலத்திய பதிவர்களில் நகைச்சுணர்வோடு எழுதும் கலையை செவ்வனே கொண்டிருப்பவர். எனக்கு அவருடைய சில இடுகைகள் முன்பே படித்த்தாயிருந்தாலும் அவர் அந்த இடுகைக்கு வைக்கும் தலைப்பு கலாய்த்தலின் உச்சமாக இருக்கும். அவரைப்பற்றிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி..

   நீங்கள் எழுதிய குறுங்கதை.. குறும்பு :)))

  • ஆயில்யன் 1:01 முப on ஜூலை 10, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //சமீப காலத்திய பதிவர்களில் நகைச்சுணர்வோடு எழுதும் கலையை செவ்வனே கொண்டிருப்பவர். //

   அதே! அதே!

   நகைச்சுவை உணர்வுகளினை வெளிப்படுத்தும் பதிவுகளின் வரத்து நொம்ப குறைச்சுபோச் அப்படின்னு ஃபீல் செஞ்சுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொபுக்கடீர்ன்னு குதிச்சு கலக்கிக்கொண்டிருக்கும் மின்மினி தேசத்துக்காரருக்கு வாழ்த்துக்கள் மிக்ஸ்டு வித் நன்றிகள் :))

   அப்புறம் நீங்க எழுதி முடித்த 3 வது பாகம் கில்பான்ஸான முடிவுக்கு கொண்டு வந்து வுட்டது சூப்பரூ!

  • செந்தில் 9:19 முப on ஜூலை 10, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நகைச்சுவை விருந்து, மீன்ஸ்ன் தொடக்கமும் சத்யாவின் முடிவும்.

  • பத்மினி 7:18 முப on ஜூலை 13, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @சத்யராஜ்குமார்& சித்ரன்: நீங்கள் சொன்னது எல்லாம் நான் சொன்னதுதானா என்று யோசிக்க வைக்கிறது காலம். ஒரு சின்ன நிகழ்வுக்கே இத்தனை எதிர்வினை இருக்கும்போது நாகேஷ், வடிவேலு போன்றவர்கள் எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல… எல்லோரது சிரிப்பிலும் இறைவன் இருக்கிறான் என்பதுதானே உண்மை. சத்யராஜ்குமார், உங்கள் கதை மின்மினிதேசத்தில் அதிக ஹிட் வாங்கிய ஒன்று என்பதைச் சந்தோஷத்துடன் சொல்லிகொள்கிறேன். மற்றும் அனைவருக்கும் நன்றி.

  • கார்த்திக் 2:40 முப on ஜூலை 14, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இன்று – today – வில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல் :))). இன்னும் பல சிகரங்கள் எட்ட வாழ்த்துக்கள்.

 • சத்யராஜ்குமார் 5:06 pm on July 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: , e-Zine, , short stories,   

  ஐ போனும், குமுதமும் 

  எண்பதுகளில் எழுத ஆரம்பித்த போது பத்திரிகைகளுக்கு கதை அனுப்பி விட்டு காத்திருந்ததுதான் ஞாபகம் வந்தது.

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் அப்ளிகேஷன் ஸ்டோரும் கிட்டத்தட்ட குமுதம், விகடன் மாதிரி ஒரு பத்திரிகை ஆபிஸ்தான். உங்கள் படைப்புத் திறமையை காட்ட முயலும் அதே சமயத்தில் நிறுவனத்தின் எழுதப்படாத சட்ட திட்டங்களுக்குள் அவை அடங்கும் வண்ணம் உங்கள் படைப்பை ஒரு கட்டுக்குள் வடிவமைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.

  இல்லையேல் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் என்பது போல் “Application Rejected” என்று படாரென்று திருப்பியடிக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.

  eNool-ஐ போன வாரம் ஆப்பிள் ஸ்டோரில் சமர்ப்பித்து விட்டு காத்திருந்த போது – முதல் முதலாய் குமுதத்துக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியது போலத்தான் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. குமுதம் திருப்பி அனுப்பியது போல இங்கு நிகழவில்லை. eNool அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆப்பிள் ஸ்டோரில் இன்று முதல் கிடைக்கும்.

  ஆப்பிள் ஒரு ஐபோன் அப்ளிகேஷனை நிராகரிக்கும் சாத்தியங்கள் என்னென்னெ? பல அறிந்த காரணங்களும், சிற்சில அறியாத காரணங்களும் உள்ளன.

  நானறிந்த மூன்று முக்கிய காரணங்கள் கீழே.

  • HIG எனப்படும் ஹ்யூமன் இண்டர்பேஸ் கைடன்ஸ்-ஐ மீறி எழுதப்படும் அப்ப்ளிகேஷன்கள்தான் நிராகரிப்புக்கு தலையாய காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு முறை என் சுவேகா டீலக்ஸ் மொபெட்டில் ஆக்ஸிலேட்டர் கேபிள் அறுந்து போய் விட, மெக்கானிக்கிடம் போக சோம்பல் பட்டு முன் பக்க ப்ரேக்கின் கேபிள் ஒயரை கார்ப்புரேட்டரில் மாட்டி விட்டு ஓட்டிச் செல்ல ஆரம்பித்தேன். முன் பிரேக் பிடித்தால் வண்டி ஓடும். பின் பக்க பிரேக்கை பிடித்தால் நிற்கும். இது பக்கா HIG அத்து மீறல். புதிதாய் யாராவது அந்த மொபெட்டை எடுத்து ஓட்டினால் பரலோகப் ப்ராப்தி நிச்சயம். ஆகவே ஐபோனில் நீங்கள் அப்ளிகேஷன் எழுதும்போது, கேன்சல் செய்வதற்காக ஆப்பிள் உருவாக்கிய இந்த உருவத்தை ஒரு படத்தையோ, கோப்பையோ அழிப்பதற்கான பட்டனில் வைத்தால் நிராகரிப்பு நிச்சயம். டெலிட் செய்வதற்கான அடையாளப்படம் இதுவாகும்.
  • அதற்கடுத்தபடியாக சரியான பிழை செய்தி தராத அப்ளிகேஷன்களும் வெகுவாக நிராகரிக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் அப்ளிகேஷன் செயல்பட இணைய இணைப்பு தேவைப்படும் பட்சத்தில், இணைய இணைப்பு இல்லாத இடங்களில் பிழை செய்தி தர வேண்டும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது.
  • “நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்லுவேன்” என்ற ரஜினிகாந்த் பன்ச் டயலாக் ஒவ்வொரு ஐபோன் டெவெலப்பரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அப்ளிகேஷன் என்ன செய்யும் என்பதை நீங்கள் விவரித்திருக்கிற படியே அது செயல் பட வேண்டும். டிஸ்க்ரிப்ஷனோடு ஒத்துப் போகாத அப்ளிகேஷன்களும் பெருமளவில் நிராகரிப்புக்கு இலக்காகின்றன.

  போகப் போக இன்னும் பல அனுபவங்கள் கிடைக்குமென நினைக்கிறேன். எப்படி என் சிறுகதை அனுபவங்களை பல இடங்களிலும் பகிர்ந்து வந்தேனோ, அப்படியே இதையும் அவ்வப்போது அவசியம் பகிர்வேன்.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி