ஐ போனும், குமுதமும்


எண்பதுகளில் எழுத ஆரம்பித்த போது பத்திரிகைகளுக்கு கதை அனுப்பி விட்டு காத்திருந்ததுதான் ஞாபகம் வந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் அப்ளிகேஷன் ஸ்டோரும் கிட்டத்தட்ட குமுதம், விகடன் மாதிரி ஒரு பத்திரிகை ஆபிஸ்தான். உங்கள் படைப்புத் திறமையை காட்ட முயலும் அதே சமயத்தில் நிறுவனத்தின் எழுதப்படாத சட்ட திட்டங்களுக்குள் அவை அடங்கும் வண்ணம் உங்கள் படைப்பை ஒரு கட்டுக்குள் வடிவமைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.

இல்லையேல் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் என்பது போல் “Application Rejected” என்று படாரென்று திருப்பியடிக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.

eNool-ஐ போன வாரம் ஆப்பிள் ஸ்டோரில் சமர்ப்பித்து விட்டு காத்திருந்த போது – முதல் முதலாய் குமுதத்துக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியது போலத்தான் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. குமுதம் திருப்பி அனுப்பியது போல இங்கு நிகழவில்லை. eNool அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆப்பிள் ஸ்டோரில் இன்று முதல் கிடைக்கும்.

ஆப்பிள் ஒரு ஐபோன் அப்ளிகேஷனை நிராகரிக்கும் சாத்தியங்கள் என்னென்னெ? பல அறிந்த காரணங்களும், சிற்சில அறியாத காரணங்களும் உள்ளன.

நானறிந்த மூன்று முக்கிய காரணங்கள் கீழே.

  • HIG எனப்படும் ஹ்யூமன் இண்டர்பேஸ் கைடன்ஸ்-ஐ மீறி எழுதப்படும் அப்ப்ளிகேஷன்கள்தான் நிராகரிப்புக்கு தலையாய காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு முறை என் சுவேகா டீலக்ஸ் மொபெட்டில் ஆக்ஸிலேட்டர் கேபிள் அறுந்து போய் விட, மெக்கானிக்கிடம் போக சோம்பல் பட்டு முன் பக்க ப்ரேக்கின் கேபிள் ஒயரை கார்ப்புரேட்டரில் மாட்டி விட்டு ஓட்டிச் செல்ல ஆரம்பித்தேன். முன் பிரேக் பிடித்தால் வண்டி ஓடும். பின் பக்க பிரேக்கை பிடித்தால் நிற்கும். இது பக்கா HIG அத்து மீறல். புதிதாய் யாராவது அந்த மொபெட்டை எடுத்து ஓட்டினால் பரலோகப் ப்ராப்தி நிச்சயம். ஆகவே ஐபோனில் நீங்கள் அப்ளிகேஷன் எழுதும்போது, கேன்சல் செய்வதற்காக ஆப்பிள் உருவாக்கிய இந்த உருவத்தை ஒரு படத்தையோ, கோப்பையோ அழிப்பதற்கான பட்டனில் வைத்தால் நிராகரிப்பு நிச்சயம். டெலிட் செய்வதற்கான அடையாளப்படம் இதுவாகும்.
  • அதற்கடுத்தபடியாக சரியான பிழை செய்தி தராத அப்ளிகேஷன்களும் வெகுவாக நிராகரிக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் அப்ளிகேஷன் செயல்பட இணைய இணைப்பு தேவைப்படும் பட்சத்தில், இணைய இணைப்பு இல்லாத இடங்களில் பிழை செய்தி தர வேண்டும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது.
  • “நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்லுவேன்” என்ற ரஜினிகாந்த் பன்ச் டயலாக் ஒவ்வொரு ஐபோன் டெவெலப்பரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அப்ளிகேஷன் என்ன செய்யும் என்பதை நீங்கள் விவரித்திருக்கிற படியே அது செயல் பட வேண்டும். டிஸ்க்ரிப்ஷனோடு ஒத்துப் போகாத அப்ளிகேஷன்களும் பெருமளவில் நிராகரிப்புக்கு இலக்காகின்றன.

போகப் போக இன்னும் பல அனுபவங்கள் கிடைக்குமென நினைக்கிறேன். எப்படி என் சிறுகதை அனுபவங்களை பல இடங்களிலும் பகிர்ந்து வந்தேனோ, அப்படியே இதையும் அவ்வப்போது அவசியம் பகிர்வேன்.