சிறுகதை. சிக்கல்கள். [1]


சிறுகதைகள் எழுதுவது கஷ்டம் என்று எழுத்தாளர் சுஜாதா முதல் எழுத்தாளர் சாதா வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். உண்மையில் கஷ்டமா என்றால் இல்லை, ஓரளவு சுலபம். நல்ல சிறுகதைகள் எழுதுவது மட்டுமே கஷ்டம்.

எழுதுவது எப்படி என்று ஏராளமான கட்டுரைகள் வந்து விட்டன. வலைப்பதிவுகளிலும், வலைத்தளங்களிலும் பலரும் அவற்றைத் தொகுத்தும், சமைத்தும் போட்டு விட்டனர்.

எல்லாம் படித்த பின்னும் குழப்பமாயிருக்கிறதென்று எனக்கு எப்போதாவது வரும் ஒரு சில மின்னஞ்சல்கள் சொல்கின்றன. எப்படி சிறுகதை எழுதுவதென்று அரைத்த மாவை அரைக்க இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை.

சென்ற வருடம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வாஷிங்டன் டி.சி வந்த போது அவர் கதை எழுதும் முறை குறித்து சுருக்கமாய் சில நிமிஷம் பேசி அறிந்து கொள்ள முடிந்தது.

அதற்கும் நான் எழுதும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவருடைய தளம் வேறு, வீச்சு வேறு, பிராபல்யம் வேறு, இலக்குகள் வேறு என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சில நிமிஷ உரையாடல் இதை எழுதுவதற்கான யோசனையை அளித்தது.

அதாவது பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளில் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய நுட்பங்கள், வழிமுறைகள். கதைகளுக்கான என்னுடைய இண்ட்டர்னல் பிராசசிங் ப்ளோ பற்றி விலாவாரியாக எழுத உத்தேசம்.

இலக்கியத்தில் கரை கண்டவர்கள் நிரம்பி வழியும் இணையம் இது. அவர்களைப் போன்ற விற்பன்னர்களுக்கான கட்டுரை அல்ல. சிறுகதை என்னும் வடிவம் தமிழில் இறந்து விட்டதாக சொல்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கானதும் அல்ல.

அவ்வப்போது இணையத்தில் சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படும்போது ஒரு கூட்டம் உற்சாகத்தோடு கை தட்டி வரவேற்கிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கு பெறுகிறது. ஐம்பது, நூறு சிறுகதைகளை ஆவலுடன் படித்து விமர்சனம் எழுதவும் சிலரால் முடிகிறது.

இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதற்கு பிராணவாயு அளிப்பவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

பல எழுத்தாளர்களின் சின்னச் சின்ன அனுபவங்களை பேட்டிகளாய், துணுக்குகளாய் படித்த போதுதான் எனக்குள் சில கற்பனை சுவிட்சுகள் தட்டி விடப்பட்டன.

அதே மாதிரி இந்த மின்னல் குறிப்புகள் ஆர்வமுள்ள சொற்பம் பேரிடம் சில சுவிட்சுகளைத் தட்டி விடக் கூடும்.

[ தொடரும் ]


அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.