சிறுகதை. சிக்கல்கள். [2]


ஒரு சிறுகதை எழுத பேனா, பேப்பரை விட எனக்கு முதலில் தேவைப்படுவது விஷயம்.

அதாவது எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்கிற தெளிவு.

கதை எழுத வழி காட்டும் புத்தகங்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும் கண்ணில் படும் சிறுகதைக்கான விஷயங்களை ஒரு டயரியில் குறித்து வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

இல்லா விட்டால் அவை மறந்து போகும் என்பதே அந்த அறிவுரைக்கான காரணம்.

எனக்கு அந்தப் பழக்கமே இல்லை.

நான் மறந்து போகும் விஷயங்கள் கதைக்கு உதவாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாரஸ்யமான விஷயங்களை எத்தனை நாளானாலும் என்னால் மறக்க முடியாது.

நான் மூன்றாங்கிளாஸ் படிக்கையில் பள்ளியின் வேலிக்கருகில் அநாதையாய் விடப்பட்டிருந்த நாய்க்குட்டியை வகுப்பறைக்கு எடுத்து வந்து விட்டேன்.

பெஞ்ச்சில் அதை என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள பேபி டீச்சர் அனுமதித்ததும், திருதிருவென விழித்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி வகுப்பறையையும், நாங்கள் அந்த நாய்க்குட்டியையும் வேடிக்கை பார்த்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

அதில் ஒரு சிறுகதைக்கான சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கிறது.

ஆகவே சிறுகதைக்கான விஷயத்தைத் தேடி நான் எங்கும் போவதில்லை. வருடக் கணக்காய் அவை மனதுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)


அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.