சிறுகதை. சிக்கல்கள். [3]


சிறுகதை ஒன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் நூலகத்தில் புத்தகம் தேடுவதைப் போல நினைவடுக்குகளைப் புரட்டிப் போட்டு ஞாபக மிச்சங்களைத் தேடுவதே என் வழக்கம்.

அடுத்து எழுதப் போகும் கதை காலையில் பார்த்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அல்லது போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட நாய்க்குட்டி சம்பவம் போல முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகவும் இருக்கலாம்.

சில விஷயங்களில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும். அதைச் சுற்றி கதையைப் பின்ன கொஞ்ச நேரம் தேவைப்படும்.

ஆனால், வேறு சில சம்பவங்களோ அப்படியே சிறுகதையாகவே மனசுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி ஒட்டிக் கொண்ட கதைகளுக்கு என்றுமே வீரியம் ஜாஸ்தி.

குமுதத்தில் எழுதிய ‘காதல்’ என்ற சின்னஞ்சிறிய கதை என் மனசுக்குள் சிறுகதையாகவே போய் பதிந்து கொண்ட ஒன்றாகும்.

ஒரு முறை வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு காசு கொடுத்தபோது, பாக்கியாகக் கிடைத்த ரூபாய் நோட்டில் ‘சாந்தி ஐ லவ் யூ’ என்று கிறுக்கியிருந்தது.

அந்தக் கிறுக்கலைப் பார்த்த கணமே ‘காதல்’ சிறுகதை மனதில் உதித்து, அப்படியே சிறுகதை வடிவிலேயே அந்த ரூபாய் நோட்டு என் மனசுக்குள் பதிவாகிக் கொண்டது.

இது மாதிரி கதைகள் உடனே எழுதி விட வேண்டும் என்ற உந்துதலைத் தருபவை.

அவசரமாய் யாராவது கதை கேட்டால் இப்படி சிறுகதையாகவே பதிந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உடனே எழுதிக் கொடுத்து விடலாம். அவகாசம் நிறைய இருப்பின் சுவாரஸ்யம் என்று குறித்து வைக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாவகாசமாய் அதைச் சுற்றி கதை ஒன்று பின்னலாம்.

மனசு வடிகட்டி வைத்திருக்கும் விஷயம் என்பதால் சந்தேகமில்லாமல் அது பிறரால் விரும்பிப் படிக்கப்படும்.

போன பாராவுக்கு முந்தைய பாராவில் குறிப்பிட்ட ‘கதை பின்னுகிற’ சமாசாரம் பற்றி இனி சொல்கிறேன்.

(தொடரும்)


அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.