கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா? 

கல்பாக்கம் அணு மின் நிலையம்

கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது. திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்… நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை? அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது? ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.

சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.

அது ஒரு இளங்காலை.

பக்கத்து நகரிலிருந்து வரப்போகும் பேப்பர் பையனுக்காக, வாசல் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். அன்றைய தின சுழற்சிக்கு அக்கிராமம் தயாராகிக் கொண்டிருந்தது. பொதியிழுக்க தினவெடுத்து சில காளைகள் செல்ல, அதைத் தொடர்ந்து ஒரு வாத்துக் கூட்டம் தன்னொலிகளை ரம்மியமாக எழுப்பியபடி நகர்ந்தது.

ஆஹா, இன்று இயற்கையை ரசிக்க வாய்த்திருக்கிறது. விழிகளைச் சுழலவிட வேண்டியதுதான் என எண்ணியபோது என் பார்வை, வாசல் தூணில், திருஷ்டி பொம்மைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வஸ்துவில் தட்டுப்பட்டு நின்றது.

அது மூணங்குல சதுர வெள்ளை வஸ்து. அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஒரு தடிமனான நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஐ.டி கம்பெனியின் ஆக்ஸெஸ் கார்டு மாதிரி இருந்தது.

அட இது என்ன? திருஷ்டி பொம்மைக்குக் கூட ஆக்ஸெஸ் கார்டு கொடுக்கிறார்களோ?! எனக் குசும்பாய் நினைக்கும்போதே, வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இரண்டு அதிகாரிகள் இறங்கினர். ஐயோ, சிபிஐ இங்கேயும் வந்து விட்டதோ எனத் திகிலடைந்தேன். சேச்சே… இப்போ கடந்து சென்ற வாத்தைவிட நாம்தான் அப்பிராணியாச்சே எனத் தெளிந்து, அவர்களை முறுவலித்து வரவேற்றேன்.

பதில் முறுவல் தந்த அவர்கள், நேராக அந்த வஸ்துவிடம் சென்று, வேறேதோ கருவி கொண்டு அதை உற்று நோக்கினர். பின் அதை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக புதியதொன்றை மாட்டி விட்டனர். அப்போது என் உறவினர் அவ்விடம் வர, ஒருவர் அவரை நலம் விசாரித்து தான் கொண்டு வந்த கேனில் எங்கள் வீட்டு கிணற்று நீரை பெற்றுக் கொண்டார். மற்றவர் அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று, கீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு வந்தார்.

‘அட, என்னதான் நடக்கிறது இங்கே?’ என நான் குழம்பிய போது, ஜீப்பின் முகப்பில் தென்பட்ட வாசகம்: கல்பாக்கம் அணு மின் நிலையம்.

அவர்கள் புறப்பட்டதும் உறவினர் விளக்கினார். “காத்துல அணுவோட ரேடியேஷனை பதிவு செய்யும் கருவி அது (அந்த வஸ்து). மாசம் ஒருவாட்டி காத்துல, தண்ணில, இங்கே விளையறத வெச்சு மண்ணுல அணுவோட ரேடியேஷனை கணக்கிடுகிறார்கள்…” அவர் சொல்லச் சொல்ல என்னுள் ஓராயிரம் அணுக்கள் வெடிக்கத் தொடங்கின.

கூவக்கரை வீட்டின் கொசுக்களைப் போல, அணுவின் கதிர்கள் எப்போதும் நம்மை சுற்றிச் செல்கின்றனவா? சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால்? அணு உலையின் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி? கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி? நினைக்கவே முடியவில்லை. இன்னொரு தசாவதாரக் கதையை ஆக்கவோ, பார்க்கவோ அணு விட்டு வைக்காது.

சுற்றும் பூமியின் வெளியில், வளி மட்டும் சுற்றிய காலம் டைனோசர்கள் வாழ்ந்த நாட்கள் மட்டும்தானா? இன்று இப்பாதுகாப்பற்ற நிலை ஏன்?

மனிதனின் பெருகி விட்ட தேவைகளால், விஞ்ஞானமயமாக்கல் எல்லைகளைக் கடந்து விட்டது. அண்டத்தின் கதிர்களிடமிருந்து காத்த ஓசோனை ஓட்டை போட்டதோடு மட்டுமல்லாமல், உள்ளிருந்தே கணக்கற்ற கதிர் வீச்சுகளுக்கு அடிகோலிவிட்டது அறிவியல்.

கோடிக்கணக்கான உயிரினங்கள் ஆனந்தமாக வாழ, அனைத்து வளங்களுடன் படைக்கப்பட்ட பூமி அறிவியலால் மாசடைந்ததில், பல இனங்கள் என்றோ மடிந்து விட்டன. மனித இனமும் அக்கதி நோக்கியே.

அணுவைத் துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தி… அன்று பாட்டி சொன்னது, இன்று விபரீதமாய்த் தொணிகிறது.