யூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ


அப்பாடா… சென்னை மாநகரப் பேருந்துகளிலேயே முதன் முறையாக, முன் சீட்டில் கால் முட்டி உராய்ந்து ஜிவுஜிவுக்காமல் நிம்மதியாக அமர முடிந்தது. கால்களுக்கும் மனமுண்டு என அதற்குரிய இடவசதியைத் தந்த பேருந்து, இப்போது சென்னையில் பரவலாக ஓடத் தொடங்கியிருக்கும் டாட்டாவின் மார்கோபோலோ.

கணினிக்கான மென்பொருள்களை உருவாக்கும்போது, அதைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக, எளிமையாக, உபயோகத்திறனைக் அதிகரிக்கக் கூடிய யூஸபிலிட்டி தியரியைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். இத்தியரியை பேருந்து வடிவமைப்பிலும் புகுத்தியிருக்கிறது டாடா நிறுவனம். இதனால் பல வசதிகள். அவைகளில் சில:

சச்சின், இஷாந், தோனி… இவர்களைப் பாருங்கள். வெவ்வேறு உயரங்களில் இருப்பதுதான் இந்தியர்களின் உடல்வாகு. ஆனால் தற்போதைய பேருந்துகளில் உயரம் குறைவான பயணிகள் நிற்கும்போது பிடித்துக்கொள்ள வசதியாக குறுக்குவாட்டுக் கம்பிகள் இருப்பதில்லை. அது இங்கே மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு கம்பி அதே உயரத்திலிருக்க, இரண்டு கம்பிகள் சீட்டு வரிசையின் விளிம்பில் மேல் தாழ்வாக கைப்பிடி ஹாண்டில்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. தீர்ந்தது பிரச்சனை. எவ்வுயரத்தவரும் குதுப்மினார் போல உறுதியாக நிற்கலாம். மேலும் இக்கம்பிகளைப் பிடிக்க பயணிகள் ஓரமாக நிற்பதால், அதிக இடவசதியும் கிடைக்கிறது.

வாயில்கள்: இரு வாயில்களையும் வழக்கத்தை விட அகலமாக்கி, முன் வாயிலை சற்றே நடுப்பகுதியை நோக்கி நகர்த்தி விட்டார்கள். இதனால் உள்ளே எங்கிருந்தாலும் உடனே வாயிலை அடைய முடிவதால் வாயில் அருகே ஏற்படும் தேவையற்ற நெரிசல் தவிர்க்கப் படுகிறது.

வாயிற் கதவுகள்: தானியங்கிக் கதவுகளால் தொல்லைகளும் அதிகம். அவை படிக்கட்டுகளின் பெருமளவு பகுதியை ஆக்கிரமிக்கின்றன. மேல் படிக்கட்டுகளும் குறுகலாக இருக்க வேண்டியிருக்கிறது. கதவுகளும் அங்கே யாரேனும் இருந்தால் முட்டிக் கொண்டே மூடுகின்றன. மடித்துக் கொள்ளும் தானியங்கிக் கதவுகள் அறிமுகப்படுத்தியதில் இப்பிரச்சனைகள் தீர்ந்தன. அவை முதல் படிக்கட்டிலேயே அடங்கி விட்டதில், அனைத்து படிக்கட்டுக்களும் ஒரே அளவில் இருக்கின்றன. கதவடியில் பிரஷ்கள் பொருத்தியதில், அவை மூடிக் கொள்ளும் போது படியில் இருக்கும் மண்ணைப் பெருக்கி வெளித்தள்ளி விடுகின்றன. படிக்கட்டும் சுத்தமாச்சு.

சீட்டுகள்: தாழ்தள சொகுசுப் பேருந்து என்று ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் பல சீட்டுகளில் உட்காரவே முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கும். நாம் கர்ப்பத்திலிருந்ததைவிட உடலை குறுக்கிக்கொண்டுதான் உட்கார வேண்டும். டிரைவர் இடப்பக்கம் டயருக்கு மேல் இருக்கும் சீட்டுதான் ரொம்ப மோசம். தரை தட்டுப்படாததில் ஒரு கால் தொங்கிக் கொண்டே இருக்கும். இப்பிரச்னையும் தீர்ந்தது. பேருந்தின் நீளத்தை சற்றே நீட்டி, வாயில்களின் இடமாற்றத்தால் கிடைத்த இடத்தை சரியாகப் பயன்படுத்தி, சீரான இடைவெளியில் கிட்டதட்ட சீரான உயரத்தில் சீட்டுகள் அமைந்ததில் அப்பாடா என்று அமர முடிகிறது.

கியர் கம்பி: இவை சற்றுப் பழசானால் லொடலொடவென ஆடிக் கொண்டிருக்கும். ஒரு முறை, தன்னைவிட வேகமாக இது ஆடுவதைப் பார்த்த குடிமகன் இதைப் பிடித்துகொள்ளப்போக டிரைவர் பதறி அலறி எழுந்த கூத்தையும் பார்த்திருக்கிறேன். இதை, காரில் இருப்பதைப் போல கையடக்கமாக மாற்றி டிரைவருக்கு அருகில் வைத்ததில், அவருக்கும் வசதியாச்சு, நிற்பதற்கு இடமும் அதிகமாச்சு.

இப்படி பல வசதிகளை யோசித்து யோசித்து வடிவமைத்திருக்கிறது ஒரு டீம். சற்றே கண்மூடி மனசுக்குள் அவர்களைப் பாராட்டி, அவர்களுக்காக பிரார்த்தித்து இமை திறந்தேன்.

நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கை எப்பவோ தாண்டிச் சென்று கொண்டிருந்தது… டாடா மார்கோபோலோ.