அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!


ஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணோம்! சாலையின் இருகோடிக்கும் விரிந்திருந்த அப்போர்டைத் தாண்டி அதே வேகத்தில் டாக்ஸி சென்றது. சந்தேகத்தை கேட்டு விட்டேன். டிரைவர் நம்ம மலையாளிதான். என் கன்னித் தமிழைப் புரிந்துக் கொண்டு, மலையாளத் தமிழில் விடை தந்தார். கார்களின் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கார்டைச் சுட்டிச் சொன்னார், “அது ரீசார்ஜபிள் ப்ரீ பெய்டு ரோடு டாக்ஸ் கார்ட் (டாக்ஸிகள் விதிவிலக்கு). டோல் கேட்டைக் கடக்கும்போது, அதனடியில் இருக்கும் சென்சார்கள் தொடர்பு கொண்டு அச்சாலைக்கான சுங்கதைக் கழித்து விடும்”. அட!

மெட்ரோ இரயில். ஸ்மார்ட் கார்டுதான் டிக்கெட். பயணத் தேவைக்கேற்றபடி அதையும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். கண்ணாடிக் கட்டடக்கலை நிபுனத்துவத்தை எடுத்துக் காட்டும் இரயில் நிலையங்கள். டிரைவரின்றி இயங்கும் ஆடோமேடிக் இரயில்கள். பிளாட்ஃபாரமும் கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இரயில் வந்து நிற்கும் போது, அதன் கதவுகளும், பிளாட்ஃபார்மின் கதவுகளும் ஒருசேரத் திறக்க ஏசியில் குளிர்ந்தபடியே இரயிலினுள் நுழையலாம். ஐயோ, ஃபர்ஸ்ட் கிளாசில் நுழைந்து விட்டேனோ என பயம் கவ்விக் கொண்டது. (பின்னே என்ன சார், மூல பௌத்திர நோட்டிஸ்கள் இல்லாவிட்டால் எப்படி?). இரயிலின் கோடிவரை விழிகளை ஓட்டினால், எல்லாமெ டாப் கிளாஸ். முதல் பெட்டி மட்டும் கோல்ட் கிளாஸ். அதற்குத் தனியாக கோல்ட் ஸ்மார்ட் கார்ட். நான் நினைத்ததை விட நான்கு ஸ்டேசன் முன்னாடியே இறங்க வேண்டி வந்தது. நிலைய வாயிலில் இருக்கும் ஆக்ஸெஸ் பாய்ண்ட்டில் ஸ்மார்ட் கார்டைக் காட்டிய போது, நான் பயணித்த தூரத்திற்கு மட்டும் உண்டான தொகையை கழித்துக் கொண்டு மீதியைக் காட்டியது டிஸ்பிளே. அட!

மெட்ரோ பஸ். GPS கருவி பொருத்தப்பட்ட இப்பஸ்ஸில் அடுத்து வரப்போகும் மூன்று ஸ்டாபிங்கின் பெயர்கள் அதற்கான தூரம் எல்லாம் டிவியில் ஒளிர்கிறது. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க என்று சகபயணியை நச்சரிக்க வேண்டியதில்லை. முக்கியமாக இதில் கண்டக்டரே இல்லை. இரயிலுக்கு எடுத்த அதே ஸ்மார்ட் கார்ட் இங்கும் செல்லுபடியாகும் (ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து). இறங்கும் போது கதவருகே இருக்கும் கருவி பயணத்தொகையை ஸ்மார்ட் கார்டில் கழித்துவிடும். அட!

அன்றைய அலுவல் முடித்து டாக்ஸியில் ஹோட்டலுக்குத் திரும்பினேன். ரிசப்ஷனிஸ்ட்டிடம் சற்று நேரம் அளவளாவி விட்டு (இங்கே டிமாண்டுக்கு ஏற்ப, வார விடுப்பு நாட்களுக்கு ஏற்ப ரூம் வாடகை மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பற்றி மட்டும்தான் பேசினேன். வேறொன்றுமில்லை!) என் ரூமினுள் நுழைந்தேன். ரூம் கீயும் ஸ்மார்ட் கார்டுதான். கட்டிய தொகைக்கான நாட்கள் கடந்துவிட்டால் கதவு திறக்காது. சட்டென உணர்ந்தேன். மொபைலைக் காணவில்லை. ஹோட்டல் போனிலிருந்து என் எண்ணை அவசரமாய் அழைக்க, டாக்ஸி டிரைவர்தான் பேசினார். “இது சீட்டுக்கடியில் விழுந்து விட்டது. இப்போது ஒரு சவாரியை விடச் சென்று கொண்டிருக்கிறேன். இருபது நிமிடத்தில் வந்து தருகிறேன்” என்றார் (ஹிந்தியில்). சொன்னபடி வந்து விட்டார். சவாரியை விட்ட இடத்திலிருந்து புதிய சவாரியாக மீட்டரை ஓடவிட்டு வந்திருக்கிறார். மொபைலைத் தந்து, மீட்டர் காட்டிய 24 திராம்-ஐ (துபாய் கரன்ஸி) மட்டும் பெற்றுக் கொண்டு சலாம் சொன்னார் அந்த பாகிஸ்தானி ட்ரைவர். அட!

எவ்வூருக்குச் சென்றாலும், காலையில் வாக்கிங்கோ ஜாகிங்கோ செல்வது என் சிலநேரப் பழக்கம். அதன்படி துபாய் சாலைகளில் ஓட்டமாய்த் துவங்கினேன். தார் சாலைகளையும், அதை ஒட்டி இருக்கும் டைல்ஸ் நடைபாதைகளையும் தவிர்த்து விட்டால் எங்கும் மணல் மணல் மட்டுமே. அதில் ஓடியபடி காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் வழி விட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டிடங்களை ரசித்தேன். அதனருகில் நின்றிருந்த கார்களில் ஒன்று மட்டும் மணலை அப்பிக் கொண்டிருக்க அதன் முகப்பு வைப்பரில் ஒரு துண்டு சீட்டு சொருக்கப்பட்டிருந்தது. அருகே சென்று படித்தால், துடைக்காமல் வைத்திருந்ததற்கு அபராதம் 100 திராம். ஓ! வியப்படைந்த எனக்கு வேறோரு விஷயம் உறுத்தியது. சாலைகளில் மழை நீருக்கு வடிகால்களைக் காணோம். மணல் அப்படியே நீரை உறிஞ்சும் விதமாக ஏதேனும் ஹைடெக்காக செய்திருப்பார்களோ எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. பின்பு விசாரித்ததில் தெரிந்தது. துபாயில் மழையே பெய்யாதாம். அடக் கடவுளே!

அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்