அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்


ஒன், டூ, த்ரீ, ஃபோர்… உலகின் அதிவேக லிஃப்டினுள் மானிட்டர், வினாடியைவிட வேகமாய் எண்ணிக்கையை காட்டத் தொடங்கியது. அதன் பின்புறத்தில் மேகங்கள் கீழிறங்குவது போல் அனிமேஷன். சரி, லிஃப்ட் புறப்படப்போகிறது என நினைத்தேன். சில நொடிகளில், விமான டேக் ஆஃப்-இல் நிகழ்வது போல காதடைத்த போதுதான் லிஃப்ட் நகர்வதே உறைத்தது. அசைவின்றி, நகரும் உணர்வு சிறிதுமின்றி, வினாடிக்கு 18 மீட்டர் வேகம் (64 km/h). ஒண்ணரை நிமிடத்தில், 124-ஆவது தளத்தில் கதவு திறந்தது.

அட் தி டாப் – பர்ஜ் கலீஃபா.

160 தளங்களுடன் உலகின் உயரமான கட்டிடம். 124 தளம் வரை மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி. தளர்வான மணலின்மேல், தளராமல் எழுப்பப்பட்ட கட்டிடம் வாய்பிளக்க வைக்கிறது. 95 கிலோமீட்டர் வரை இதன் உச்சி தெரியுமாம்.

நான்கு நாட்கள் முன்னதாகவே டிக்கெட் வாங்கினால்தான் உச்சிக்குச் செல்ல முடியும். அவ்வளவு கூட்டம்.  உச்சியிலிருந்து இண்டராக்டிவ் டெலஸ்கோப் மூலம் ஒட்டு மொத்த துபாயும் தெரிகிறது. ஒரு பொட்டல்வெளிப் பாலைவனத்தில், தொலைநோக்குத் திட்டமுடன், எத்தகைய உழைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹரிசாண்டல் சிட்டி – துபாய் என்பதை, அத்தனை உழைப்பையும் ஓரிடத்தில் குவித்து உருவாக்கப்பட்ட வெர்ட்டிகல் சிட்டி – பர்ஜ் கலீஃபாவின் உச்சி உலகிற்கே பாடம் நடத்துகிறது.

தரைதளத்தில் இது உருவாக்கப்பட்ட விதம், அதன் குழு பற்றி ப்ரொஜெட்டர்கள் படம் ஓட்டிகொண்டே இருக்கின்றன. உலகின் பல மூலைகளிலிருந்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குழு அது. தினமும் 12,000 நபர்களை வழிநடத்திய குழு அது. அவர்களெல்லாம் நம்மைப் போல் சாதாரண மனிதர்களே. ஆனால், ஒரு குறிக்கோளுடன் ஓர் அலைவரிசையில் இணைந்து உழைத்தால் எவ்வளவு தூரம் உயர முடியும் என்பதற்கு இக்குழு உதாரணம். 828 மீட்டர் உயர்ந்திருக்கிறார்கள்.

இக்கட்டிடத்தின் கீழ் தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது – துபாய் மால். பல இண்டர்நேஷனல் பிராண்ட் கடைகள், நேஷனல்-ஜியோகிராஃபிக் சானலில் மட்டுமே பார்த்த பலவித மீன்களைக் கொண்ட அக்வேரியம், அரண்மனை போன்ற தோற்றத்துடன் தங்க வைர கடைகள், பலதேச ருசிகளுடன் உணவகங்கள் – இப்படி பலப்பல. இங்கே வருபவர்களில் ஐரோப்பியர்கள் அதிகம். பிறந்து ஒருவாரமே ஆன பிஞ்சுக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

பெட்ரோலைத் தவிர வேறெந்த வளமுமற்ற மணலில், நீர், உணவு, வசிப்பிடம், அதி நவீன வசதிகள், சாதனைச் சின்னங்கள் என அனைத்தையும் ‘டெவலப் ஆர் டை’ என்ற மனநிலையுடன் தருவித்ததில் இன்று இருநூறுக்கும் மேற்பட்ட தேசத்தவர் வசிக்கிறார்கள். ஒரு வரியில் சொல்வதென்றால், வசிக்கவே முடியாத நிலத்தில் இந்திரப்பிரஸ்தம் உருவாக்கிய பாண்டவர்களின் இதிகாச உவமைக்கு கலிகால உவமேயம் – துபாய்.

அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!

அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்