அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!


லேன் மாறிச் சென்று விட்டது நான் சென்ற டாக்ஸி. அரை நொடியில் சுதாரித்த டிரைவர், படு எக்ஸ்பர்ட்டாக சரியான லேனுக்குத் திருப்பி விட்டார். இருப்பினும் சாலையைக் கண்காணிக்கும் கேமரா, ராடாரில் சிக்கியிருப்போம் என நினைத்து பெரு மூச்சு விட்டார்.  வேகத்திலும் கட்டுக்கோப்பாக வாகனங்கள் சீராகச் செல்லும் துபாய் சாலையில் இதுபோன்ற தவறு அபூர்வம். சற்று நிதானித்து கேட்டு விட்டேன்.

‘வை திஸ் மிஸ்டேக்?’

“மெண்டல் டிப்ரஷன் சார்” என்றார். அவரே தொடர்வாரென மெளனித்தேன்.

“பின் லாடன் வாஸ் கில்டு திஸ் மார்னிங் பை அமெரிக்கா”.

அச்செய்தி தெரியாததாலும், டிரைவர் பாகிஸ்தானி என்பதாலும் திடுக்கிட்டேன். (இந்த ஊர் பேப்பரைப் படிப்பதில்லை. பக்கத்துக்கு பக்கம் ஒரே சண்டை மயம். செய்திச் சேனலும் பார்ப்பதில்லை. ஏதாவது ஒரு அக்கம் பக்க நாட்டில் டாங்குகள் உருள நிலமெல்லாம் ரத்தம்). மேலும் தொடர்ந்தார்.

“நாட் டிப்ரஸ்டு பிகாஸ் ஹி வாஸ் கில்டு. பட் இட் ஹாப்பெண்ட் இன் அவர் கண்ட்ரி பாகிஸ்தான். வி டோண்ட் சப்போர்ட் ஹிம்”.

முஸ்லீம் என்றாலே தீவிரவாதி, குறிப்பாக பாகிஸ்தானி என்ற உலக எண்ண மாயையை இந்த பதில் பட்டென உடைத்துவிட்டது. பின்பு நான் சந்தித்த பாகிஸ்தானி டிரைவர்களும் இதே மனநிலையில்தான் இருந்தார்கள். இதைத்தான் இம்ரான்கானின் பேட்டி வெளிப்படுத்தியது.

துபாய்க்கு வந்தபோது, பாகிஸ்தானி டிரைவர்கள் என்னை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கம் இருந்தது. காரணம் மைசூர். ஒரு முறை அங்குச் சென்ற போது, நான் ரிசர்வ் செய்த பஸ்ஸை அடையாளம் காண முடியாமல் டிரைவர்/கண்டக்டர்களை அணுகியபோது, நான் தமிழனென்று திட்டி வெறுத்து விரட்டினர். அங்கே சகோதரனும் பகைவனாய்த் தெரிய, இங்கு பகைவனே நண்பனாகப் பழகுகிறான். தொலைந்த என் மொபைலை திருப்பித் தந்த டிரைவர் ஒரு உதாரணம் (அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!).

பயணங்களில் கிரிக்கெட் பற்றி, உலகக்கோப்பையைப் பற்றி, ஐபிஎல் பற்றி, டோனி அப்ரிதி பற்றி அவர்களுடன் சகஜமாக உரையாட முடிந்தது. ஆனால் சரளமாக இல்லை. அவர்கள் ஹிந்தி எனக்கும், என் ஆங்கிலம் அவர்க்கும் ஒருவாறு புரிந்ததில் உரையாடல் தடுக்கித்தடுக்கியே நடந்தது. என்ன செய்ய, நான் இந்தி கற்கவில்லை. பாராளுமன்றத்திலும் செம்மொழி செப்பிய இனத்தைச் சார்ந்தவனாயிற்றே! இந்தி தெரியாததில், நம் நாட்டின் பிற மாநிலங்களுக்குச் சென்றபோது ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறேன். அந்நிலை இங்கேயும் தொடர்ந்ததில் வருத்தமே.

எனக்கு வழி தெரியாவிட்டாலும், செல்ல வேண்டிய இடத்தில் இவர்கள் சரியாக இறக்கி விடுகிறார்கள். நான் நன்றி சொல்லும் போது தன் இதயத்தைத் தொட்டு புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு பாகிஸ்தானி டிரைவர், “எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்று சொல்லி அசரடித்தார். அவர் தமிழர், மலையாளிகளுடன் ஒரே இடத்தில் தங்கி, சமைத்துக் கொண்டு இங்கே வேலை செய்வதாய்ச் சொல்ல, என் புருவம் உயர்ந்தது!

அலுவலகத்திலும் என் குழுவில் அனைவருமே பாகிஸ்தானியர். ஒருவர் மட்டும் அவர்களின் பஞ்சாபில் பிறந்த வம்சாவளி இந்தியர். தேச எல்லைகளைக் கடந்து, தேச அடையாளங்களைக் களைந்து அவர்கள் என்னிடம் நட்பு காட்டியதை விவரிக்க வார்த்தைகளில்லை. இருபது பாகிஸ்தானியர் ஒன்றிணைந்து இந்தியாவிலிருந்து வந்த எங்கள் நால்வர் குழுவிற்கு ஒரு தீம் ரெஸ்டாரண்டில் விருந்தளித்து கெளரவப்படுத்தியது, பல நாட்கள் என் நினைவினில் நிழலாடும். (ரெஸ்டாரண்டில் சர்வர்கள் மொகலாய வீரர்கள் போல் உடையணிந்து, பீர்பால் தொப்பியெல்லாம் அணிந்து கொண்டு, ஈட்டி வாட்களுடன் கட்டியம் கூறி உணவைப் பரிமாறியதெல்லாம் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்!)

இன்று சந்தித்த முதிய பாகிஸ்தானி டிரைவர், நான் இறங்கும் போது கண்ணியமான குரலில் சொன்னார்.

“லேர்ன் ஹிந்தி வென் யு ஆர் பாக் டு இண்டியா”.

அடடா துபாய்! – 1 : துபாய் மெயின் ரோடு!!

அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்