அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்


அந்த ஜெல்லி மீனைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது! பெல்லி மீன் என்றும் சொல்லலாம். வயிறு மட்டும்தான் இருக்கிறது. கண், காது என மெய்ப்புலன்களில் நான்கைக் காணோம். மீனின் உருவம் குடை போல, பூ போல இருக்கிறது. அதன் நடுவே பஞ்சுப் பிஞ்சாய் உறுப்புகள். விளிம்புகளில் ஓரங்குல இடைவெளியில் ஓரடி நீளத்திற்கு நார் போன்ற உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிசின் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அசினின் ஷாம்பு விளம்பரத்தில் கூந்தல் வழுக்கிக் கொண்டுச் செல்வதைப் போல, சக மீன்களின் உறுப்புகளோடு சிக்கிக் கொள்ளாமல் வழுக்கிக் கொண்டு நீந்துகின்றன.

இடம். துபாய் – அட்லாண்டிஸ் வாட்டர் பார்க்.

அட்லாண்டிஸ். கடலில் மண்ணைக் கொட்டி செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு. ஆற்றில் போட்டாலும்… நம்மவூர் பழமொழியெல்லாம் அங்கே கிடையாதோ என்னவோ?! கடலில்கூட அளவில்லாமல் மணலை, பணத்தைக் கொட்டி தீவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அடுக்கடுக்காக, ஆர்ப்பாட்டமாக அபார்ட்மெண்ட்கள், ஹோட்டல்கள். அதன் கட்டுமானங்களும், நேர்த்தியும் பிரமிக்க வைத்தாலும், பார்வை அதன் திரைமறைவிற்குச் செல்லும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

பாலைவன வெப்பத்தாலும், மனப் புழுக்கத்தாலும் சிந்துவதற்கு முன்பே வியர்வை காய்ந்துவிட்ட, அடித்தட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சி எழுப்பப்பட்ட மாளிகைகள்தானே அவை? பர்ஜ் கலீஃபாவை ரசித்த இரண்டாம் நாளே அச்செய்தியைப் படித்தேன். ரத்த சொந்தத்தின் துர்மரணத்திற்கு, ஊருக்குச் செல்ல விடுப்பு கிடைக்காத விரக்தியில், அக்கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்திருக்கிறான் ஒரு தொழிலாளித் தமிழன். என்ன செய்ய! சமஸ்தானங்களும், சாம்ராஜ்யங்களும் பலரது கண்ணிரின் மீதுதானே எழுப்படுகின்றன? சரி, தண்ணீருக்குத் திரும்புகிறேன்.

இந்த வாட்டர் பார்க்-இல் இருக்கும் அக்வேரியத்தில் 65 ஆயிரம் மீன்கள் நீந்துகின்றனவாம். 65k கலரில் கூட இருக்கின்றன! அக்வேரியத்தின் அமைப்பு குகை போன்று இருக்கிறது. உள்ளே செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் பெரியப்பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் இனவாரியாக கடல்வாழ் உயிரினங்கள். எல்லவற்றையும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்காமல், அருகே சென்று, அதன் செதில்களின் அசைவுகளை, மடிப்பு அம்சா தாடைகளை, கோலிபோல உருளும் கண்களை, வாய்திறக்கும்போது செவ்வந்திப் பூ நிறத்தில் தெரியும் உள்வயிற்றை… ஒவ்வொரு அங்கத்தையும் மனதினில் வீடியோவே எடுத்துக் கொண்டேன்!

அக்வேரியத்தின் நடுப்பகுதியில் கடலுடன் இணைக்கப்பட்ட மூன்று மாடி உயர பிரம்மாண்ட தொட்டி.  அதில் ரகம் ரகமாய் ஆயிரக்கணக்கில் மீன்கள். இமைக்க முடியாமல் பார்த்தேன். படைத்தவனுக்குத்தான் எத்தனை விதமான உருவ, வடிவ கற்பனைகள்; அழகுணர்ச்சிகள்; ரசனைகள்! பட்டம்போன்ற தன் துடுப்புகளை, பறவைபோல் அசைத்து, நீரில் எந்த சலனத்தையும் எழுப்பாமல் அதிவேகமாகச் செல்லும் மீன்கள்; கூட்டம் கூட்டமாய், இரு கோடிக்கும் மாறி மாறி, ஒவ்வொரு முறையும் அணிவகுப்பை மாற்றி மாற்றிப் பயணிக்கும் மீன்கள்; எந்த இனமென்றாலும், காதல் இல்லாமலா?! ஜோடி ஜோடியாய் பல மீன்கள். வாழ்வின் மகோன்னதத்தை அடைந்துவிட்டது போல வயது முதிர்ந்த பெரிய மீன்கள் தனிமையில் ஏகாந்தமாய் அசைவற்று இருக்கின்றன. அதன் விழியருகே இருக்கும் செதில் மட்டும், ஊதுபத்தியின் புகைபோல் லேசாக அசைந்து கொண்டிருந்தது. எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும், ஜாதிகள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் இவைகளெல்லாம் சண்டை போட்டுக் கொள்வதில்லை!

பண்டைய அட்லாண்டிஸ் நகரின் இடிபாடுகளின் மேல் இந்த அக்வேரியத்தை அமைத்திருக்கிறார்கள். அதன் சிதிலங்களினூடே மீன்கள் செல்வது கொள்ளை அழகு. குகையின் சுவரில் போர் வீரர்களின் முழு உடல் கவசங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. நம்ம ஊரில் சிக்ஸ் பேக் சிங்கமென சிலர் சிலிர்க்கிறார்கள். கவசங்களைப் பார்த்தால் வீரர்கள் சிக்ஸ்டீன்பேக்-ல் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறார்கள்!

இந்த வாட்டர் பார்க்-யில் அக்வேரியம் ஒரு பகுதிதான். டால்பின் பே – டால்பின்களுடன் நீந்தி விளையாடி அவற்றை முத்தமிடலாம். அட்வென்சர் டனல் – இதில் வழுக்கிச் சென்று சுறா கூட்டத்தைக் காணலாம். டைவ் செண்டர் – படகில் பயணித்து, கடலினுள் குதித்து (அதற்குரிய உபகரணங்களுடன்), சிதிலமடைந்த கப்பல்கள், சுதந்திரமாய்த் திரியும் உயிரினங்களுடன் நாமும் ஒருவராய் நீந்தி வரலாம். இன்னமும் சங்கதிகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை சுற்றியதற்கே என் பர்ஸ் இளைத்து விட்டதால், போதுமென்ற மனமே ஊர் திரும்பும் வழி என புதுமொழி கண்டேன்.

மீன்களின் அசைவுகள்; பயணத்தின் சுவடுகள்; இவ்வூர் வந்து ஏதேதோ வேலைகளைச் செய்து இன்னல்படும் இந்தியரின் தவிப்புகள்; மனித உழைப்பை உறிஞ்சியதைப் போலவே எண்ணையையும் உறிஞ்சியதில், அவ்வளம் நீர்த்துவிட, இன்று கடனில் தத்தளிக்கும் துபாயின் நிலையற்ற தன்மைகள்… அனைத்தையும் அசைபோட்டபடி, தங்கியிருந்த ஹோட்டலின் மேல் தளத்தில், நீச்சல் குளத்தில் மல்லாந்து நீந்திக் கொண்டிருந்தேன். நாள் முழுதும் வெப்பம் கக்கிய வானம் தணிந்திருக்க, அதில் சின்னதாய் ஒரு விமானம். ம்ம்… நாளை இந்தியா திரும்ப வேண்டும்.

(முற்றும்)

அடடா துபாய்! – 1 : துபாய் மெயின் ரோடு

அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!