கிரந்தம் தவிர்!


சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.

ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.

இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.

அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.

நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

@kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.

தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.