பலூன்
வம்சி சிறுகதைப் போட்டிக்காக!
நாற்றம் குடலைப் புரட்டியது. விரல் நரம்புகள் அறுந்து விழும் போல வலி. இந்த கண்றாவியின் பெயர் ட்யூனா என்றார்கள். ஆழக்கடலில் அகப்படும் ஏதோ ஒரு மீனின் வகை. பதினொரு மணிக்குள் இதை மாவு மாதிரி பிசைந்து வைக்க வேண்டும்.
“சுமிதா, முடிஞ்சதா?” – சப்வே துரித உணவகத்தின் மேனேஜர் மேத்யூஸ் ஆங்கிலத்தில் கத்தினான்.
தாங்க முடியாத நாற்றம் குமட்டியதில் அவனுக்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை. எதுவோ ஒன்று வயிற்றினடியிலிருந்து கிளம்பி, தொண்டைக்குழி அருகே வந்து அடைத்துக் கொண்டு மொத்தமாய் வெளியே வர எத்தனித்தது.
பிசையும் ட்யூனாவை அப்படியே போட்டு விட்டு, பாத்ரூமுக்குள் ஓடினேன். உவ்வேஏஏய் என்று வாஷ்பேசின் பூராவும் வெள்ளையும், மஞ்சளுமான திரவமாய் தெறித்தேன். கண்களிரண்டிலும் குட்டை மாதிரி நீர் நிரம்பியது. வயிற்றைப் புரட்டிப் போட்டதால் மட்டுமல்ல, அழுகை பீறிட்டெழுந்ததாலும்தான்.
வாயைக் கொப்பளித்து, முகத்தைக் கழுவின பின் – பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது, மேத்யூஸ் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். படபடப்போடு கத்தினான். “இன்னும் அரை மணி நேரத்தில் லஞ்ச் கூட்டம் அலை மோதும். தயாரா இருக்க வேண்டாமா? என்ன பண்ணிட்டிருக்கே நீ?”
அவன் முன்னால் அழுது விடுவேன் போலிருந்தேன். “என்னால முடியலை மேத்யூஸ். இந்த ட்யூனா பிசையற வேலையை மட்டும் தயவு செஞ்சு எனக்குத் தராதே.”
ஒரு பெரிய மூச்சிறைப்போடு கோபமாய் ஏதோ சொல்ல வந்தவன், விவாதித்துக் கொண்டிருந்தால் இப்போதைக்கு வேலையாகாது என்று முடிவெடுத்தவன் போல மிஷேலைக் கூப்பிட்டான்.
மிஷேல் கறுப்பி. ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். அலட்சியமாய் பிசைய ஆரம்பித்தாள். எனக்கு குடலைப் புரட்டும் நாற்றம் அவளுக்கு நறுமணம் போல தெரிகிறது. பிசைந்து முடித்து கையைக் கழுவப் போகையில், கையில் ஒட்டியிருக்கும் மீன் மாவை ஆசையாய் நக்கவும் செய்வாள்.
மிஷேல் செய்து கொண்டிருந்த வேலையை இப்போது நான் செய்ய வேண்டும். பெரிய பெரிய ட்ரேக்களில் அடுக்கி வைக்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை இயந்திர அடுப்பின் ரேக்குகளில் சொருகி சொருகி பதமாய் வெளியே எடுக்க வேண்டும்.
ட்யூனா பிசைவது குடலைப் புரட்டும் கஷ்டம் என்றால் இது வேறு மாதிரி உயிரை வாங்குகிறது. அரிசி சாப்பிட்டு வளர்ந்த உடம்பில் அவ்வளவு வலு இல்லை. ட்ரேயை உயரமாய் தூக்கித் தூக்கி சீக்கிரத்திலேயே தோள்களிரண்டிலும் வலியெடுக்க ஆரம்பித்தது.
ரொட்டித் துண்டுகளை அடுக்குகிற போது ஒரு துண்டு தவறி தரையில் விழுந்ததற்கு முந்தா நாள் மேத்யூஸ் அப்படித் திட்டித் தீர்த்தான். ஆங்கிலம் கூட சரியாகப் பேசத் தெரியாத இந்த மெக்சிகனிடம் சில டாலர்களுக்காக என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது.
துரித உணவக வேலை என்பது ஸாண்ட்விச் சாப்பிடுகிற மாதிரி சுலபமாக இருக்கும் என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம். வெங்காயம் நறுக்கிப் போடுவதைத் தவிர வேறெதுவும் என்னால் முடியவில்லை.
சேகரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வருகையில் பிரமித்துப் பார்த்த அமெரிக்கா வண்ணங்கள் நிரம்பிய மிகப் பெரிய பலூன் என்பது இப்போது புரிகிறது. ஆறே மாதத்தில் அது உடைந்து கிழிந்து அதன் உட்புற அசிங்கங்களை பார்க்க நேரிடும் என்று கற்பனை கூட செய்யவில்லை.
முதன் முதலாக ஏர்போர்ட்டிலிருந்து வருகையில் – பெரிய பெரிய கட்டிடங்களையும், அகன்ற நெடுஞ்சாலைகளையும், அதில் தலை விளக்குகள் எரிய வரிசை கட்டி ஓடும் கார்களையும் குழந்தை மாதிரி பார்த்து பிரமித்துக் குதூகலித்தது இன்னும் மறக்கவில்லை.
வீட்டு வாசலில் ஜம்மென்று ராஜாத்தி மாதிரி நின்றிருந்தது பி.எம்.டபுள்யூ கார். சமீபத்தில்தான் சினிமா நடிகை ஶ்ரீஷா வாங்கினார் என்று ஒரு வார இதழில் படித்தது ஞாபகம் வந்தது.
கோட்டை மாதிரி வீடு. ஏழு படுக்கையறை. நாலு பாத்ரூம். இது சொந்த வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் மகாராணி. சந்தோஷத்தில் திக்குமுக்காடி ஹால் நடுவில் சேகரை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்தது அடிக்கடி கனவில் வரும்.
அப்புறம் வாடைக் காற்றுக்கு இதமாய் சேகரை உரசிக் கொண்டே நயாகரா, நியூயார்க், க்ரேண்ட் கேன்யான் என்று சுற்றி வந்த ஹனிமூன். அவனுடைய வெகேஷன் முடிந்ததும், தேனிலவு பொசுக்கென்று முடிந்து விட்டது.
ஆபிசுக்கு இறக்கை கட்டிக் கொண்டு பறந்தான். ராத்திரி ஆசையாய் அவனை கட்டியணைக்கும் போதுதான் ப்ளாக் பெர்ரி ஃபோனில் அலுவலக அழைப்பு வரும். லேப்டாப்பைத் திறந்து வி.பி.என் குகைக்குள் புகுந்தானென்றால் எப்போது மீண்டு வந்து படுக்கிறான் என்பதே தெரியாது. ப்ரொடக்’ஷன் சப்போர்ட்டாம்.
“சுமிதா, கல்யாணம் முடிவானதும் ரெண்டு சம்பளம் வரும்ங்கிற நம்பிக்கையில்தான் வீடு வாங்கினேன். நீயும் வேலைக்குப் போனால்தான் வீட்டுக் கடன், கார் கடன் எல்லாம் கட்ட முடியும்.”
வேலை பார்க்க அனுமதி அட்டை கிடைப்பதற்குள் சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் க்ராஷ் கோர்ஸ் அனுப்பி வைத்தான். மென்பொருள் துறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும். என்னதான் டெஸ்ட்டிங் சுலபம் என்று எல்லோரும் சொன்னாலும், எம். ஏ வரலாறு படித்த மண்டையில் இதெல்லாம் ஏறுவேனா என்றது. படிக்கக் கட்டிய பணம் போனதுதான் மிச்சம். நாலு இண்ட்டர்வியூவில் உளறிக் கொட்டிய பின், “எனக்கு சாப்ஃட்வேர் வராது சேகர்.” என்று அழுதேன்.
சப்வே கடை எடுத்து நடத்தும் வட இந்திய நண்பர் மூலமாக இந்த வேலையை பிடித்துக் கொடுத்தான். இந்த வேலையின் கஷ்ட நஷ்டம் பற்றி கண்ணீல் நீர் முட்ட சேகரிடம் சொல்ல முயன்றால், “தயவு செஞ்சு வேலையை விட்டுடறேன்னு சொல்லிடாதே சுமிதா. ஏற்கெனவே ராத்திரி பகல், சனி, ஞாயிறுன்னு பார்க்காம வேலை பார்த்துட்டிருக்கேன். வீட்டுக் கடன் முடியற வரைக்கும் ரெண்டு பேருமே கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.”
வேலை நாளில் சப்வேயில் உழன்றால், லீவு நாளில் அந்த நாலடுக்கு, ஏழு படுக்கையறை மாளிகைக்கு வேக்வம் போட்டு தாவு தீர்கிறது. ஆபிஸ் வேலை என்று சேகர் நழுவி விடுகிறான். முதலில் பார்த்து பிரமித்த அதே விஸ்தாரமான வீடு இப்போது எரிச்சலூட்டுகிறது.
போதாக் குறைக்கு வீட்டைச் சுற்றி இருக்கும் லான் தரையில் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். புல் கொஞ்சம் தாறு மாறாய் வளர்ந்து விட்டால், கம்யூனிட்டி அழகு கெடுவதாக இருநூறு டாலர் அபராதம் விதித்து சிவப்பு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.
போன மாசம் லான் சமன்படுத்தும் போது, அடிவயிற்றில் சளீரென்று ஒரு மின்னல் தெறித்து, முதல் முதலாய் உருவான கரு கலைந்ததைப் பற்றி ஊருக்கு ஃபோன் பேசிய போது அம்மாவிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அம்மா அதிர்ச்சியில் ஆடிப் போவாள்.
அவ்வப்போது ஒரு சில வாரக் கடைசிகளில் சேகருடைய நண்பர்களுடன் பாட்லக் என்ற பெயரில் கூட்டாஞ்சோறு! வெளியே ஒப்புக்கு சிரித்து கொண்டாடுகிற மாதிரி நடித்தாலும், இதற்கு வேறு தனியாய் சமைக்கணுமா என்று அயர்ச்சியாய் இருக்கும்.
லஞ்ச் நேரம் முழுவதும் கால் கடுக்க நின்று ஸாண்ட்விச் கட்டிக் கொடுக்கும் வேலை இயந்திரத்தனமாய் நடந்தது. நாலு மணிக்குத்தான் அப்பாடா என்று மூச்சு வாங்க முடிந்தது.
மேத்யூஸ் கூப்பிட்டு டாலர்களைக் கவரில் போட்டுக் கொடுத்தான். இன்றைக்கு சம்பள நாளா என்ன?
“சுமிதா, ஐயாம் ஸாரி. உன்னை விட கொஞ்சம் வலுவான, துடிப்பான ஆள் வேணும். சம்பளக் கணக்கை செட்டில் பண்ணியிருக்கேன்.”
என் கண்கள் மனசுக்குக் கட்டுப்படாமல் சட்டெனத் தளும்பியது. அதை அவனிடம் காட்டிக் கொள்ள விருப்பமின்றி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கடையை விட்டு அகன்றேன்.
வீட்டில் சேகர் கடுப்போடு உட்கார்ந்திருந்தான். ராத்திரி பூராவும் என்னிடம் பேசவே இல்லை. இந்நேரம் இருபது முப்பது பேரிடம் எனக்கு அடுத்த வேலை கிடைப்பதற்காக போன் பேசியிருப்பான். காலையிலும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிப் போய் விட்டான்.
பனிரெண்டு மணி நேரமாய் யாரிடமும் வாயைத் திறந்து பேச முடியாமல் மவுனமாய் இருப்பதே பைத்தியம் பிடிக்க வைத்து விடும் போலிருக்கிறது.
கார்ட்லெஸ் போன் எடுத்து இந்தியாவுக்கு எண்களை அழுத்தினேன். மறுபக்கம் அப்பாவின் குரல் கேட்டது. “சுமிதா, எப்படி இருக்கேம்மா?”
“நல்லாருக்கேம்பா” என்ற சம்பிரதாயமான பொய்யைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.
“நீ அனுப்பின ஃபோட்டோ, விடியோ எல்லாம் தங்கராசு இப்பதான் டிவிடில போட்டுக் காட்டினாம்மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. எம்மாம் பெரிய வீடுன்னு பக்கத்து வீட்டு மணியகாரர் வாயைப் பிளந்தாரு. அக்கா பிஎம்டபுள்யூவா வெச்சிருக்கான்னு காலேஜுல படிக்கிற சபரீசுப் பையன் ஆச்சரியமாக் கேட்டான். எப்படியோ நாங்க ஆசைப்பட்டபடி காரு பங்களாவோட அமெரிக்காவுல ஒரு சொகுசான வாழ்க்கை உனக்கு ஆத்தா புண்ணியத்தில் அமைஞ்சிருச்சு. நேர்த்திக் கடன் மட்டும் இன்னும் பாக்கி இருக்கம்மா. ஒரு வருசம் நல்லபடியாப் போகட்டும்ன்னுதான் காத்திருந்தேன். அம்மனுக்கு நேர்ந்து விட்ட நம்ம லட்சுமி ஆட்டை அடுத்த வாரம் கோயில்ல பலி குடுக்கலாம்ன்னு இருக்கோம்.”
“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். ■
Sethu 6:24 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
nice one 🙂
சத்யராஜ்குமார் 9:01 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி!
Karthick 6:41 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
அருமையான சவுக்கடி! எங்கயோ கேட்டது போல உள்ளது.
சத்யராஜ்குமார் 9:03 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
கார்த்திக், கேட்டதை அலங்கரித்துப் பகிர்வதே கதை.
REKHA RAGHAVAN 7:44 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
அருமை. நிச்சயம் பரிசு பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
சத்யராஜ்குமார் 9:06 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
ரேகா ராகவன், எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி.
பினாத்தல் சுரேஷ் 8:38 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
ஒய்யாரக்கொண்டையாம் பிஎம்டபிள்யூவாம், உள்ளே இருக்கிறது ட்யூனா மாவாம்!
சத்யராஜ்குமார் 9:07 பிப on ஒக்ரோபர் 31, 2011 நிரந்தர பந்தம் |
நல்லா இருக்கே புது மொழி! 🙂
P.Gopalakrishnan 5:01 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
Dear Sri Sathyaraj Kumar,
The last line of the story brought tears to my eyes. I am now worried about my near and dear who are abroad with own big bungalows and BMW. Thank you very much
சத்யராஜ்குமார் 6:51 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
உங்களைக் கவலைக்குள்ளாக்கியதற்கு வருந்துகிறேன். சில நிதர்சனங்களை கதையின் வாயிலாக சொல்ல நேர்கிறது. மற்றபடி உங்கள் அன்புக்குரியவர்கள் உட்பட நாங்கள் இங்கே மகிழ்ச்சியாகவே இருப்போம். உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பத்மா 8:01 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
அலங்கரிப்பது பரவாயில்லை, மிகைப்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். வாழ்க்கை இத்தனை மோசமாக இல்லை:)
சத்யராஜ்குமார் 8:20 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
பத்மா, சொகுசுக்குப் பின்னாலிருக்கும் சிரமங்களை சொல்வதே நோக்கம். தவிர, இது முழுவதும் கற்பனையல்ல. என்னிடம் பகிரப்பட்ட அனுபவங்களே.
N Ulaganathaan 8:27 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
சத்யராஜ்குமார் சார், ஏன் எங்களை எல்லாம் பரிசு வாங்கவே விட மாட்டீங்களா? சிறு கதை போட்டின்னா ஓடி வந்து ஒரு நல்ல கதையை எழுதீடறீங்க. சூப்பர் சார். அருமையா இருக்கு.
சத்யராஜ்குமார் 8:37 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
உலகநாதன், பாராட்டுக்கு நன்றி. சிறுகதை எழுதுவது என்னை மகிழ்விப்பதால் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் உற்சாகமாய் பங்கு கொள்கிறேன்.
பத்மா 8:28 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
It depends on people, She could have taken it with interest and moved on to a different job and learnt new skills ( husband’s support) or made compromise to less comforts. happiness is state of mind, some how the last sentence seem too dramatic for me, perhaps thats needed for story .
எதுவுமே இலவசம் இல்லை கொடுக்கவேண்டிய விலையையும் வாங்கவேந்டிய பொருளையும் அவரவரே தீர்மானிக்கிறார்கள்.
சத்யராஜ்குமார் 8:38 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
பத்மா, நீங்கள் சொல்வது வாழ்க்கைப் பாடம். நான் சொல்லியிருப்பது கதை. நீங்கள் சொல்ல வருவது தீர்வு. நான் எழுதியிருப்பது பிரச்னை. 🙂
சத்யராஜ்குமார் 9:17 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
அப்புறம், தமிழ் வேலை செய்ததா?
ஜெய் 9:59 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
எதார்த்தமான கதை.நிச்சயம் பரிசு பெறும்.
வாழ்த்துக்கள்.
சத்யராஜ்குமார் 10:01 முப on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் |
ஜெய், நன்றி.
Sentil 5:38 முப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
Dear SRK,
Excellent short story.
Best Regards.
சத்யராஜ்குமார் 6:06 முப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி செந்தில்.
Peter 6:17 முப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்.// really superb.
சத்யராஜ்குமார் 1:15 பிப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி
bandhu 3:23 பிப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
//“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்//
what a nice touch!
சத்யராஜ்குமார் 4:34 பிப on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் |
Thank you.
arun 7:58 முப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
hello mr.sathiyaraj sir,
உங்ககிட்ட கத்துக்க வேண்டியது ரொம்ப அதிகம் இருககு….. சார் நாங்க பார்க்காத, பார்க்கவும் விரும்பாத ஒரு அமெரிக்காவை சொல்கிறீர்கள்……. மகி நன்றி……….
// “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். // மகி உருக்கமான வரிகள்…………………
சத்யராஜ்குமார் 9:25 முப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
கருத்துக்கு நன்றி அருண். இங்கே நம்மால் விரும்பப்படக் கூடிய, பார்க்க வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கு.
sundaravadivelu.v 1:16 பிப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
colorful balloon… but with colorful pains
சத்யராஜ்குமார் 6:39 பிப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி சுந்தர்.
subhashree 1:51 பிப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
having 100% satisfaction of reading a good short story….most of the NRIs ..are leading the same life as sumitha’s…very sad…to some extent i will support Padma’s views.”.எதுவுமே இலவசம் இல்லை கொடுக்கவேண்டிய விலையையும் வாங்கவேந்டிய பொருளையும் அவரவரே தீர்மானிக்கிறார்கள்.'”….
for sure u will win…jsk:))
சத்யராஜ்குமார் 6:42 பிப on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் |
சுபாஶ்ரீ, நன்றி. பத்மாவின் கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன். அவ்வளவு புரிதல்களோடு எல்லோரும் இருந்து விட்டால் இது போன்ற கதைகள் பிறக்காமல் போகும். 🙂
விஜய் 11:08 முப on நவம்பர் 8, 2011 நிரந்தர பந்தம் |
//“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்.//
அருமை!
நிறைய பேர் (தேசிகள்) ஸ்டாப் லாஸ் பண்ண தெரியாமல் வீண் பெருமைக்காக அப்படி செய்வதை பார்த்துள்ளேன். என்ன இருந்தாலும் அமேரிக்கா வாசம் அருமை தான், அங்கு வாழ தெரிந்திருந்தால். கைக்கு மேலே அளவிற்கு மேலே முழம் போடக்கூடாது!
சத்யராஜ்குமார் 11:13 முப on நவம்பர் 8, 2011 நிரந்தர பந்தம் |
//கைக்கு மேலே அளவிற்கு மேலே //
உண்மை.
chollukireen 11:49 பிப on நவம்பர் 10, 2011 நிரந்தர பந்தம் |
அங்கும், சிக்கனமாக, சமயத்தில் அவசியமென்றால், கிடைக்கும் பணிப்பெண்களிடம் பணம் கொடுத்து வேலை வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.. தன் காலில் தான் நிற்பதற்கு எல்லாவிதத்திலும் பயிற்சி ஏற்பட்டு விடுகிறது. ஆரம்பத்தில் கஷ்டப்படுகிறவர்கள் கூட பழக்கமாகிவிட்டால் நம்நாட்டையே குறை சொல்லத் துவங்கி
விடுகிறார்கள். விருப்பப்பட்டு, வேண்டுதல் செய்யும் காணிக்கைதான் இது.
chollukireen 11:51 பிப on நவம்பர் 10, 2011 நிரந்தர பந்தம் |
கதையதார்த்தமாக இருக்கிறது.
சத்யராஜ்குமார் 7:21 முப on நவம்பர் 11, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் கருத்துக்கு நன்றி.
Mo 10:35 முப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் |
சத்யா ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டத்தை கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார். அதற்காக இப்படிதான் எல்லா இந்தியர்களும் மேலை நாடுகளில் வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. சென்னையில் ஒரு சேரியில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை படித்து விட்டு இப்படிதான் எல்லாரும் சென்னையில் வாழ்கிறார்கள் என்று எப்படி நாம் நினைக்க முடியாதோ அதே போல் தான் இதுவும். வாழ்க்கை ஒரு போராட்டம் தான், எங்கே இருந்தாலும்.
சத்யராஜ்குமார் 7:54 முப on திசெம்பர் 5, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி. எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனாலேயே எழுத்துக்கும், வாசிப்புக்குமான தேவை எழுகிறது.