சிறை


முந்தா நாள் நண்பர் வீட்டில் ஒன்று கூடல். ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த மாதிரி இடங்களில் நிச்சயம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அம்மா-அப்பாக்களைப் பார்க்கலாம். அன்றும் மூன்று தந்தைமார்களைப் பார்த்தேன்.

“மூணு மாசம் இருக்கச் சொல்றாங்க. என்னால பத்து நாள் கூட இருக்க முடியுமா தெரியலை.”

டீக்கடை இல்லை. பெட்டிக்கடை இல்லை. தானாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. நிறைய மனிதர்களை கண்ணில் காண முடியவில்லை. அருகிலேயே தெரிந்தவர் வீடு இருந்தாலும் சட்டென்று அங்கே சென்று கதவைத் தட்டி பேசி விட்டு வர முடிவதில்லை. முன் கூட்டியே செல்லில் பேசி, சந்திப்பைத் திட்டமிட்டு… எல்லாம் ரொம்ப செயற்கை. இப்படியே குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தாங்கள் முள் மேல் இருப்பது போல ஒரு வித பதட்டத்துடனே பேசுகிறார்கள். இது வாழ்நாளில் தங்களுக்குக் கிடைத்து விட்ட மிகப் பெரிய தண்டனை போல் கருதுகிறார்கள்.

அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இது வேறு உலகம். இந்த உலகத்தின் தன்னியல்புகளை புரிந்து கொள்ள முயன்றால் அதற்கு மூன்று மாதமில்லை, ஆறு மாதம் கூட போதாது என்பது புரியும்.

வெகு சிலரே அந்தக் கலையில் தேர்ந்துள்ளார்கள். இங்கே வந்ததும் தங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார்கள். காலை பத்து மணிக்கு மேல் மகனும் – மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் ரசிக்கிறார்கள். இண்ட்டர்னெட்டில் தினமலரோ, ஹிந்துவோ வாசிக்கக் கற்றுக் கொண்டு படித்து மகிழ்கிறார்கள். அருகாமை நூலகத்தைக் கண்டு பிடித்து பொழுதைக் கழிக்க தெரிந்து கொள்கிறார்கள்.

இந்தப் புதிய உலகை ரசிக்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆறு நொடிகள் போல கடக்கின்றன.

தங்களுக்கான அன்றாட வாழ்க்கை சொந்த ஊரில் இருக்கவே இருக்கிறது என்பதை ஒரு பெரும் கூட்டத்தின் விதிவிலக்குகளாக இருக்கும் இவர்கள் புரிந்து கொண்டிருப்பதே இதன் சூட்சுமம்.