Updates from நவம்பர், 2013 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 2:15 am on November 19, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  தமிழுக்காகத் தவிக்கிறவர்கள்! 

  வாஷிங்டன் டு சான்ஃபிரான்சிஸ்கோ விமானத்தில் ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ படித்தேன். இலவசக் கொத்தனார் எழுதிய புத்தகம்.

  படிக்க வேண்டிய லிஸ்ட்டில் ரொம்ப நாளாய் வைத்திருந்த இப்புத்தகத்தை இப்போது எடுக்கக் காரணம் போன வாரம் ஃபேர்ஃபேக்ஸ் தமிழ்ப் பள்ளியில் சந்தித்த நண்பர். அங்கே என் குழந்தைகளை சேர்த்திருப்பது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். என் மனைவி தன்னார்வத்துடன் அக்குழந்தைகளுக்குப் பாடமும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது உபரி தகவல்.

  பள்ளி நடக்கும் இரண்டு மணி நேர கேப்பில் பள்ளித் திண்ணையில் காத்திருக்கும் அப்பா, அம்மாக்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படிப் பழக்கமானவர்தான் முன்னே குறிப்பிட்ட நண்பர்.

  திண்ணை நட்பு ஃபேஸ்புக்கில் நீள, நான் எழுதுபவன் என்றறிந்து தமிழ் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினார். இங்கிலீஷ் மீடியத்தில் படித்த அவருக்குத் தமிழின் மேல் பேரார்வம். அதன் காரணமாகவே தன் குழந்தையை இங்கே சேர்த்திருக்கிறேன் என்றார்.

  ஆனால் அவருடைய வருத்தம் எல்லாம் படிப்பதும், எழுதுவதும் இப்போது குறைந்து போனதால் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருவதாக உணர்கிறேன் என்கிறார். முன்பெல்லாம் பிழையான வார்த்தையைப் பார்த்தால் இதில் பிழை உள்ளதென்று ஆணித்தரமாய் சொல்லிவிடக்கூடிய அவருக்கு இப்போது அது பிழைதானா, இல்லை சரிதானா என்ற சந்தேகம் வந்து விடுகிறதாம். இணையத்தில் மட்டுமல்ல பாரம்பரியமிக்க பத்திரிகைகளிலும் ஆங்காங்கே தப்பும் தவறுமாய் எழுதுவதால் எது சரி, எது தப்பு என்ற குழப்ப வைரஸ் அவருக்குள் புகுந்து விட்டது என்றார்.

  ஆங்கிலத்தில் சரளமாகக் கட்டுரை எல்லாம் எழுதுவாராம். தமிழில் எழுத ஆர்வமிருந்தும் தப்பாக எழுதி விடக்கூடாது என்ற பயத்தினால் தயக்கத்துடன் விலகிக் கொள்வதாகச் சொல்கிறார்.

  அவருடைய முக்கியமான குழப்பங்கள் எங்கே க், ச் போன்ற சந்திகள் போட வேண்டும், எங்கே போடக் கூடாது, எங்கே ற வரும், எங்கே ர வரும் போன்றவை. இது நண்பரின் தனிப் பிரச்சனை அல்ல, பொதுப் பிரச்சனை.

  மிகச் சரியாக இந்த மாதிரி விஷயங்களுடன், வலி மிகுதல் (கொஞ்சம் அதிகமாகவே மிகுந்தது), வலி மிகாதிருத்தல், புணர்ச்சி, உருபுகள், குற்றியலுகரம், குற்றியலிகரம், குழூஉக்குறி என்று பல தமிழ் இலக்கண குஜால்களை ஜாலியாக சினிமாப் பாடல்களை உதாரணமாய் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறது இந்த இலக்கண நூல். கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் இப்புத்தகத்தை நண்பருக்கும், நண்பரையொத்த தவிப்புடன் இருக்கும் ஏனையோருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

  புத்தகத்தில் இருக்கும் 99 சதவீத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், ஒன்றிரண்டு விஷயங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விவாதம் எழுப்ப விரும்பவில்லை. ஏனெனில் நான் அவ்வளவு பெரிய இலக்கணப்புலி இல்லை. அப்புறம் புத்தகத்தை எழுதிய இலவசக் கொத்தனார் ஓடோடி வந்து, இந்தக் கட்டுரையிலேயே கூட பதினேழு பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுவார்.

  • சத்யராஜ்குமார்
   
 • சத்யராஜ்குமார் 7:07 am on November 18, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  அமெரிக்க தமிழ் சிறுகதைகள் 

  சமீபத்தில் ஆப்பிள் ஐபுக்கிலும், அமேசான் கிண்டில் புக் ஸ்டோரிலும் வெளியிட்ட எனது அமெரிக்க சிறுகதைகள் தொகுப்பைப் படித்து விட்டு நண்பரும், எழுத்தாளருமான சரசுராம் எழுதியனுப்பிய மிக நீண்ட மின்னஞ்சல்:

  ————
  நிமிடங்களாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. திரும்பிப் பார்ப்பதற்குள் பல யுகங்களை கடந்திருப்போம். கழியும் நொடிகளை அனுபவித்து ரசித்து போகிறவர்கள் நிச்சயம் புத்திசாலிகள். பாக்யவான்கள். இது சராசரி. நான் சொல்ல வருவது அதுவல்ல. அதையும் தாண்டி புனிதமானது என்கிற மாதிரி ஒன்று. அது கரையும் காலத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்ட படைப்பாளியை பற்றியது.. அதுவும் ஒரு எழுத்தாளனைப் பற்றியது. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் எதுவுமே வீணில்லை என்று சொல்லலாம். அவனுக்கு நடக்கும் நல்லதும் சரி கெட்டதும் சரி அதை தன் வெளிப்பாடாய் படைப்பாய் மாற்றிக் கொள்ளும் வரம் பெற்றவன் அவன். அதை உங்கள் “துகள்கள்’ மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. துகள்கள் துகள்களல்ல. ஒவ்வொன்றும் மலைகள். ஒவ்வொன்றையும் கடக்க கடக்க ஒரு அனுபவத்தை மனதில் ஒரு பாடமாய் எழுதிச் செல்கிறது.

  அமெரிக்கா மீது இருக்கும் வெறும் கனவுகளை உங்கள் துகள்கள் தைரியமாய் உடைத்து எறிகிறது. அது தூசிபடாத தேசம் என்கிற இமேஜின் மீது எச்சிலை உமிழ்கிறது. அங்கிருக்கும் துக்கங்கள் சந்தோசங்கள் அங்கே பொழப்பு நடத்த பண்ணுகிற தகிடுதத்தங்கள் என அது உலகம் அனைத்திற்கான பொதுவிதியென சொன்னதோடு இல்லாமல் அமெரிக்காவின் முகமூடியையும் அது கிழித்தெறிகிறது.

  ”பிழைப்பு’ கதையில் வருகிற அந்த சேல்ஸ்மேனின் நிலையும், ’மோப்பக் குழையும்’ கதையில் வரும் தியாகு மற்றும் மேனகாவின் வெளிப்பாடும் பின்தங்கிய நாடுகளைவிட மோசமானதாய் இருந்தது. எதிரில் பேசுபவன் ஓர் இந்தியன் என்று தெரிந்தும் அவனை ஏமாற்ற துணிவது அவன்மீது எந்த சினேகமும் வராமல் எப்படி அங்கே வாழ்ந்துவிடவேண்டுமென்கிற முனைப்பு பரிதாபமாய் இருந்தது. வேலையில்லா காலத்தில் ’எக்ஸானந்தா’வை நம்பவேண்டிய சூழ்நிலை சிரிப்புக்கு பின்னால் மறைந்திருந்த அந்த பரிதாபம், ஒருத்தருக்கொருத்தர் இந்தியர்களாக இருந்தாலும் உதவி செய்யக்கூட முடியாத அந்த நிலையில்லாத சூழலைச் சொல்லும் ‘பஸ் சினேகம்’, அந்த அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம் வாழந்து பார்க்க ஆசைப்பட்டு பொய்களாய் அடுக்கி மாட்டிக் கொள்ளும் “கனேடியன் விஸ்கி’யில் வரும் ரவியும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆயிரம் யோசனைகள், பெற்ற குழந்தையை கூட வைத்துக் கொள்ளமுடியாத அந்த ’பாலூட்டிகள்” கதையில் வரும் அந்த பெண்ணின் பரிதாபமும், ’மிச்சம்’ கதையில் வரும் அமெரிக்கா இந்தியா என இருபக்கமுமான அந்த நியாயமும் (’என் சொந்த நாட்டில் நான் ஒரு மைனாரிட்டி மாதிரி உணர்கிறேன்’), அரைஞாண் கயிற்றால் மாட்டிக் கொண்டு மீளூம் அந்த இளைஞனும், ’ஒரு தடவை பலி கொடுத்தது போதும்..’ என்று அமெரிக்க வாழ்வின் துயரத்தை ஒற்றை வரியில் சொல்லி முடிக்கும் அந்த சுமிதா (பலூன்) வும் மறக்கவே முடியாதவர்கள். அதிலும் அந்த ‘மையவிலக்கு’ சிறுகதை இந்தியா எப்படி இருந்த போதிலும் தான் விட்டு வந்த வாழ்க்கையை மீட்க துடித்து டிக்கெட் எடுத்து தன் ஊருக்கு வந்து கண்கலங்கி பேசும் கிரிதரன் இந்த மொத்த கதைகளுக்குமான ஹைலைட்டாக இருந்தார்.

  ‘மன்னிக்கவும்..’ ‘கடல் கடந்தவன்’ ‘பாண்டேஜ்’ ‘கிச்சாமி’ ”நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு’ என மற்ற கதைகளும் பக்கங்களை நிரப்பியதாக இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் ரசிக்க வைத்தன.

  அமெரிக்க வாழ்க்கையையும், அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் இவ்வளவு தூரம் இனி எழுதிவிட முடியுமா தெரியவில்லை. தலைக்கு மேல் எப்போதும் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிற வரிகள் அமெரிக்க வாழ்விற்கான சாரம்சம்.

  இதை இங்கிருக்கும் மெயின்ஸ்ட்ரீம் பத்திரிக்கைகளில் எழுதியிருந்தால் இதன் ரீச் இன்னும் உச்சத்தைத் தொட்டிருக்கும். படிக்கிறவனை மென்மையாய் கைபிடித்து ரசிக்க சொல்கிற நடை. இயல்பாய் வருகிற சுவாரஸ்யம். அழகாய் வெளிப்படுகிற நகைச்சுவை. தமிழ் எழுத்துலகம் உங்களை மிஸ் பண்ணிவிட்டது சத்யராஜ்குமார். தமிழ்நாட்டில் இருந்து எழுத்துலகில் ஆட்சி செய்யாமல் உலகத்தின் ஒரு மூலையில் கொஞ்சம் பேருக்கு மட்டும் படைத்துக் கொண்டு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பொருளாதார துரத்தலில் இன்னும் எழுத்தையும் சுமந்து கொண்டு சலிக்காமல் நீங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

  வாழ்ந்த காலம். நாம் அறிந்த மனிதர்கள். நமக்கு மட்டுமே நடந்த அனுபவங்கள் இவற்றை சொல்லிவிட்டு, பதிவு செய்துவிட்டு போவதைவிட இலக்கியத்திற்கு வேறென்ன செய்துவிட முடியும்? அதைவிட வேறென்ன இலக்கியமாக இருக்க முடியும்? ஒரு அமெரிக்க வாழ்க்கையின் சின்ன விமர்சனம் போல் வந்திருக்கும் உங்கள் “துகள்களுக்கு என் வாழ்த்துகள். கடைசியாய் ஒரு வேண்டுகோள். தொடர்ந்து எழுதுங்கள்.
  ————

  அமேசான் லின்க்:
  http://www.amazon.com/gp/search/ref=sr_nr_seeall_1?rh=k%3Asathyarajkumar%2Ci%3Astripbooks&keywords=sathyarajkumar&ie=UTF8&qid=1382093347

  ஆப்பிள் லின்க்:
  https://itunes.apple.com/us/book/tukalkal/id723822513?mt=11

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி