தமிழுக்காகத் தவிக்கிறவர்கள்!


வாஷிங்டன் டு சான்ஃபிரான்சிஸ்கோ விமானத்தில் ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ படித்தேன். இலவசக் கொத்தனார் எழுதிய புத்தகம்.

படிக்க வேண்டிய லிஸ்ட்டில் ரொம்ப நாளாய் வைத்திருந்த இப்புத்தகத்தை இப்போது எடுக்கக் காரணம் போன வாரம் ஃபேர்ஃபேக்ஸ் தமிழ்ப் பள்ளியில் சந்தித்த நண்பர். அங்கே என் குழந்தைகளை சேர்த்திருப்பது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். என் மனைவி தன்னார்வத்துடன் அக்குழந்தைகளுக்குப் பாடமும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது உபரி தகவல்.

பள்ளி நடக்கும் இரண்டு மணி நேர கேப்பில் பள்ளித் திண்ணையில் காத்திருக்கும் அப்பா, அம்மாக்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படிப் பழக்கமானவர்தான் முன்னே குறிப்பிட்ட நண்பர்.

திண்ணை நட்பு ஃபேஸ்புக்கில் நீள, நான் எழுதுபவன் என்றறிந்து தமிழ் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினார். இங்கிலீஷ் மீடியத்தில் படித்த அவருக்குத் தமிழின் மேல் பேரார்வம். அதன் காரணமாகவே தன் குழந்தையை இங்கே சேர்த்திருக்கிறேன் என்றார்.

ஆனால் அவருடைய வருத்தம் எல்லாம் படிப்பதும், எழுதுவதும் இப்போது குறைந்து போனதால் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருவதாக உணர்கிறேன் என்கிறார். முன்பெல்லாம் பிழையான வார்த்தையைப் பார்த்தால் இதில் பிழை உள்ளதென்று ஆணித்தரமாய் சொல்லிவிடக்கூடிய அவருக்கு இப்போது அது பிழைதானா, இல்லை சரிதானா என்ற சந்தேகம் வந்து விடுகிறதாம். இணையத்தில் மட்டுமல்ல பாரம்பரியமிக்க பத்திரிகைகளிலும் ஆங்காங்கே தப்பும் தவறுமாய் எழுதுவதால் எது சரி, எது தப்பு என்ற குழப்ப வைரஸ் அவருக்குள் புகுந்து விட்டது என்றார்.

ஆங்கிலத்தில் சரளமாகக் கட்டுரை எல்லாம் எழுதுவாராம். தமிழில் எழுத ஆர்வமிருந்தும் தப்பாக எழுதி விடக்கூடாது என்ற பயத்தினால் தயக்கத்துடன் விலகிக் கொள்வதாகச் சொல்கிறார்.

அவருடைய முக்கியமான குழப்பங்கள் எங்கே க், ச் போன்ற சந்திகள் போட வேண்டும், எங்கே போடக் கூடாது, எங்கே ற வரும், எங்கே ர வரும் போன்றவை. இது நண்பரின் தனிப் பிரச்சனை அல்ல, பொதுப் பிரச்சனை.

மிகச் சரியாக இந்த மாதிரி விஷயங்களுடன், வலி மிகுதல் (கொஞ்சம் அதிகமாகவே மிகுந்தது), வலி மிகாதிருத்தல், புணர்ச்சி, உருபுகள், குற்றியலுகரம், குற்றியலிகரம், குழூஉக்குறி என்று பல தமிழ் இலக்கண குஜால்களை ஜாலியாக சினிமாப் பாடல்களை உதாரணமாய் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறது இந்த இலக்கண நூல். கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் இப்புத்தகத்தை நண்பருக்கும், நண்பரையொத்த தவிப்புடன் இருக்கும் ஏனையோருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

புத்தகத்தில் இருக்கும் 99 சதவீத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், ஒன்றிரண்டு விஷயங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விவாதம் எழுப்ப விரும்பவில்லை. ஏனெனில் நான் அவ்வளவு பெரிய இலக்கணப்புலி இல்லை. அப்புறம் புத்தகத்தை எழுதிய இலவசக் கொத்தனார் ஓடோடி வந்து, இந்தக் கட்டுரையிலேயே கூட பதினேழு பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுவார்.

  • சத்யராஜ்குமார்