மூன்றாம் காதல் – Beta Version
என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் தொழில் நுட்பக் காதல் நன்றாகவே தெரியும்.
தமிழில் முதல் முதலாக ஒரு மொபைல் மின்னூல் கொண்டு வந்து ஐஃபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆப் ஸ்டோரில் வெளியிட்டதும் தெரியும். இதில் முக்கியமான விஷயம் அப்போது அந்த ஃபோன்களில் தமிழ் எழுத்துருவுக்கான சப்போர்ட் வந்திருக்கவில்லை. இப்போதும் அமேசான் கிண்டிலில் தமிழ் சப்போர்ட் இல்லை. இருந்த போதிலும் திக்குமுக்காடி ஒரு தமிழ்ப் புத்தகத்தை அதில் பதிப்பித்திருக்கிறேன். ஆப்பிள் ஐ-புக்கிலும் அமெரிக்க பின்னணியிலான இருபது சிறுகதைகள் கொண்ட அதே புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.
போன வாரம் எழுத்தாளர் @nchokkan கூகிள் புக்ஸ் பற்றி எழுதி என் கவனத்தைக் கவர்ந்தார். துகள்கள் சிறுகதைத் தொகுப்பை சோதனை ஓட்டமாக அதில் வெளியிட்டுப் பார்த்தேன். சுய பதிப்புக்கு இந்த பிளாட்பார்ம் மிக இலகுவாக இருப்பதாக உணர்கிறேன்.
ஒரு காலத்தில் பிரபல வார இதழ்களில் சிறுகதைகள் எழுதுவதோடல்லாமல், பொழுதுபோக்கு நாவல்களும் எழுதிக் குவித்து வந்தேன். மாலைமதி, மோனா உட்பட ஏராளமான மாத இதழ்கள் தொடர்ந்து என் கதைகளை விரும்பி வெளியிட்டு வந்ததே அதற்கு முக்கிய காரணம். டி.வி தொடர்கள் பிரபலமடையத் துவங்கியபோது மாத நாவல்களுக்கு ஒரு தேக்கம் வந்தது. அதே சமயம் நான் அமெரிக்கா வந்து விட்டேன்.
எப்படி சிறுகதைக்கென்று ஒரு கிக் இருக்கிறதோ அதே போல் இது போன்ற பொழுது போக்குக் கதைகளில் ஒரு கட்டுரையாக வறட்சி தட்டும் விஷயங்களைக் கூட மிக எளிதாக வாசகருக்குக் கடத்தி விட முடியும் சௌகரியம் இருக்கிறது. ஒரு குற்றமும், அதற்கான தீர்வுமே பெரும்பாலான கதைகளின் மையக் கருவாக இருந்தாலும், ஒவ்வொரு கதையிலும் வரும் விதவிதமான கதாபாத்திரங்கள், பாத்திரச் சூழல்கள் கதையின் பரிமாணத்தை மாற்றிக் காட்டுகின்றன.
கூகிள் புக்ஸ் என்னை அப்படிப்பட்ட கதைகளை மீண்டும் எழுதேன் என்கிறது.
எதையோ தேடப் போய் என் இணைய தளத்தில் தடுக்கி விழுந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் முற்றிலும் புதிய வாசகர்களும் அவ்வப்போது எதையாவது எழுதினால்தான் என்ன என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தபடி இருக்கிறார்கள்.
ஆகவே, “மூன்றாம் காதல் ” என்று ஒரு பொழுது போக்கு நாவல் எழுத உத்தேசித்திருக்கிறேன். வாஷிங்டன் டி.சி வாழ்க்கைக்கென்றே சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிற பகுதிகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கே கூட பரிச்சயமற்றவையாக இருப்பதை அறிந்து வியந்ததுண்டு. இந்த வட்டார வாழ்க்கையே கதையின் களம். அந்த வகையில் இதை ஓர் அமெரிக்காவின் வட்டார நாவல் எனக் கொள்ளலாம். எதைப் படித்தாலும் அதில் ஆன்ம தரிசனம் தேடும் போக்கு இணையத்தில் தற்சமயம் இருப்பதால் அதெல்லாம் இங்கே கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் இந்த முறை ஒரு புதிய அணுகுமுறையை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். அதாவது நாவலை கூகிள் புக்ஸில் பதிப்பிப்பதற்கு முன்னதாக Beta Version-ல் வாசகர்களைப் பங்கு பெறச் செய்து பார்க்கலாமே என்று எண்ணுகிறேன். விருப்பமுள்ளவர்கள் srk.writes at gmail.com என்ற முகவரிக்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version என்று சப்ஜெக்ட்டில் போட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். அல்லது @ksrk -க்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version எனக் குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சலை DM செய்யுங்கள். அத்தியாயங்கள் நான் எழுத எழுத சுடச் சுட உங்களை வந்து சேரும். அத்தியாயங்கள் குறித்து நீங்கள் ஆக்கபூர்வமான கருத்துகள் சொன்னால், குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால், அவைகள் எனக்கு ஏற்புடையவையாக இருந்தால், அதன்படி கதை மாற்றியமைக்கப்படும். இறுதிப் புத்தகத்தில் ஏற்கத்தக்க ஆலோசனை அளித்தவர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்வேன்.
மொத்தத்தில் இது ஒரு சோதனை முயற்சி. கால வரையறை எதையும் தீர்மானிக்கவில்லை. வாரம் ஓர் அத்தியாயம் எழுதக் கூடும். என்னுடைய நேரமும், உங்களுடைய வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளதென்பதைப் பொறுத்து இந்த ப்ராஜெக்ட் இனிதே நிறைவு பெறும் அல்லது நிறைவு பெறாமலே போனாலும் போகும். 🙂
This project is on hold now. Sorry about that! 😦
மறுமொழி