அழுத்தம் 

ஏழாவது படிக்கும் லதிகாவை பிரின்சிபால் அழைப்பதாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது.

அமெரிக்க பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் எல்லாம் இல்லை. பிரின்சிபால்தான்.

திடீரென்று ஆஃபிஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டால் பெரும்பாலும்ஏதேனும் பிரச்சனையாகவே இருக்க முடியும்.

கதவருகே நின்று, “ஹலோ மிஸ்டர் கென், மே ஐ கமின்?” என்கிறாள் லதிகா. முதல்வரானாலும் சரி, ஜனாதிபதியானாலும் சரி சின்னக் குழந்தை கூட பேர் சொல்லிக் கூப்பிடுவதே வழக்கம்.

“உள்ளே வா லதிகா. சிட் டவுன்.”

counsஅவர் முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்து லதிகாவுக்குள் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனால் அவருக்கு பக்கவாட்டில் ஸ்கூல் கைடன்ஸ் கவுன்சிலர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாய்த் துணுக்குறவே செய்தாள் லதிகா.

“ஹவ் ஆர் யூ டூயிங்?” என்றார் பிரின்சிபால்.

“ஐயாம் குட். தாங்க்ஸ் மிஸ்டர் கென்.”

கைடன்ஸ் கவுன்சிலர் பெண்மணி அவளை உற்றுப் பார்த்து, “ஈஸ் எவெரிதிங் ஆல்ரைட்?” என்று கேட்டார்.

“எஸ். ஆல்ரைட் மிஸஸ். அமெண்டா.” – லதிகா குழப்பத்துடனே பதில் அளித்தாள்.

“ஹவ் ஆர் யூ ஃபீலிங்? ஆர் யூ நார்மல்?”

“எஸ் ஐயாம் நார்மல்.”

“நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம். எதுவானாலும் நீ எங்களிடம் வந்து கலந்து பேசலாம்.”

லதிகாவின் குழப்பம் உச்சத்துக்குப் போனது.

“ஷ்யூர். ஐ வில் டூ.”

“உன் பேரன்ட்ஸ் ரொம்ப மிரட்டுகிறார்களா?”

“வாட்?”

“டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை.” என்றார் கவுன்சிலர்.

வாஷிங்டன் டி.சி பகுதியில் டி.ஜே ஹை ஸ்கூல் ரொம்ப பிரபலம். ஸ்கூல் பிராஜெக்ட்டாக ஸாட்டிலைட் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகள் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தச் சிறப்புப் பள்ளிக்கு மட்டும் வசிக்குமிடம் முக்கியமில்லை; நுழைவுத் தேர்வு வைத்தே மாணவர் தேர்வு செய்வார்கள். அதற்குக் கடும் போட்டி இருக்கும். போட்டி என்றால் இந்திய, சீன பெற்றோர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. இயல்பாகவே திறமை மிகுதியான குழந்தைகளுக்கு அதிகபட்ச சவால்கள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு தீவிர கோச்சிங், நிறைய மன அழுத்தம் கொடுத்து பூனைகளுக்கு புலி போல சூடு போட்டு அனுப்பும் வேலைகள் நிறைய நடந்து வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே.

கவுன்சிலர் தொடர்ந்து பேசினார். “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை. அதற்காக தற்கொலை என்ற சிந்தனை எல்லாம் தவறு. அதற்காக என்றில்லை, எதற்காகவும். உன்னுடைய பெற்றோரைக் கூப்பிட்டு நாங்கள் பேசுகிறோம். நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எது முடியுமோ, எது நன்றாக வருமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். ”

லதிகா ரொம்பவே திடுக்கிட்டுப் போனாள். “மிஸ்டர் கென் அண்ட் மிஸஸ் அமெண்டா, என் பெற்றோர் என்னை எதுவும் சொல்வதில்லை. தற்கொலை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை.”

இப்போது அவர்களும் குழம்பிப் போனார்கள். யாருக்கோ ஃபோன் போட்டார்கள். லதிகாவைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார்கள். உண்மையில் இன்னொரு பெற்றோர் அந்த ஹைஸ்கூலில் சேர தங்கள் பெண்ணுக்கு உச்சபட்ச மன அழுத்தம் தந்ததில் அந்தப் பெண் தற்கொலை செய்யலாம் போல இருப்பதாக நண்பனிடம் சொல்ல, நண்பன் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அந்த அம்மாவோ PTA (Parents Teacher Association) தலைவி. உடனே பள்ளிக்குத் தகவல் தந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் திலகா. திலகா – லதிகா இந்தியப் பெயர் குழப்பத்தில் திலகாவுக்கு பதிலாக லதிகாவைக் கூப்பிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது மேற்படி உரையாடலை மறுபடியும் படித்து சிரியுங்கள். அமெரிக்கா வந்த பிறகும் பிள்ளைகளுக்கு தேவையற்ற மன அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் சில இந்தியப் பெற்றோர்களை நினைத்து வருந்தவும் செய்யுங்கள்.

– சத்யராஜ்குமார்