கிரந்தம் தவிர்! 2.0 

ஐந்து வருடங்களூக்கு முன்பு என்னிடமிருந்த புல்வெளி டாட் காம் (http://pulveli.com) என்ற இணைய முகவரியில் கிரந்தம் தவிர்! என்ற தேடுபொறியை என்னாலான சிறு தமிழ்ச் சேவையாக அமைத்துக் கொடுத்தேன்.

அப்போதே சொன்னது போல ஒரு புனைவு எழுத்தாளனாக முற்றிலுமாக கிரந்தச் சொற்களைத் தவிர்த்து எழுதுவது எனக்கு இயலாத செயலாக இருந்தாலும், தமிழ்க் கட்டுரைகளில், தமிழ் வர்ணனைகளில்  தமிழ்ச் சொற்களை முடிந்த வரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதிலிருப்பதே நல்ல விஷயமாகும் என்று நினைக்கிறேன். இது ஆங்கிலச் சொல் கலப்புக்கும் பொருந்தும்.

சமஸ்கிருதம், ஹிந்தி உட்பட உலகத்தின் எந்த மொழியையும் நான் வெறுப்பவன் அல்ல. கிரந்த எழுத்துக்களைத் தமிழில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனும் இல்லை. ஜானி ஜானி யெஸ் பாப்பா என்று உச்சரிக்க ஜா-வும், ஸ்-உம் கை ஒலி கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறேன்.

அதே சமயம் பல நேரங்களில் இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்ற தடுமாற்றம் ஏற்படும்போது ஓர் எளிய தேடு கருவி இருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி உருவாக்கிய இந்தப் பொறி இன்று முதல் புல்வெளி டாட் காம் என்ற முகவரியிலிருந்து  சொல் டாட் புல்வெளி டாட் காம் (http://chol.pulveli.com) என்ற முகவரிக்கு இடம் பெயர்கிறது.

இக்கருவியின் தொழில்நுட்பப் பங்களிப்பு மட்டுமே என்னுடையது. இதன் ஆன்மா @kryes ஆவார். அதாவது இக்கருவியில் நீங்கள் தேடிப் பெறும் 90 சதவீத சொற்களை உள்ளிட்டிருப்பவர் அவரே. மீதி பத்து சதவீதம் பயனர்கள் அளித்திருக்கிறார்கள். பயனர் தந்த சொற்களை மட்டுறுத்துபவர்கள் @kryes, @arutperungo மற்றும் @madhankrish ஆவார்கள்.

எல்லோரையும் கிரந்தம் தவிர்க்கச் சொல்லிப் பிரசாரம் செய்வது என் நோக்கம் இல்லை. அது என் வேலையும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ்க் கதைகளில் ஆங்கிலம் மிகக் கலந்து எழுதி வந்த எனக்கு ஒரு பேட்டியில் சுஜாதா தமிழ்க் கட்டுரை, கதைகளில் முடிந்த வரை நல்ல  தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் குறிப்பிட்ட பிறகுதான் உறைத்தது. அதன்பின் என்னை மாற்றிக் கொண்டேன். அது மாதிரி எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தக் கருவி சிறு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான செய்தி. இத்தளத்தை மொபைல் ஃபோனில் படிக்க வசதியாக இப்போது மாற்றி வடிவமைத்திருக்கிறேன். இனி உங்கள் செல்பேசியிலும் இதைப் பயன்படுத்தி மகிழ்க.

கிரந்தம் தவிர்! புதிய முகவரி குறித்துக் கொள்க!: http://chol.pulveli.com

5 வருடங்களுக்கு முன்பு கிரந்தம் தவிர்! கருவி உருவான கதை: https://inru.wordpress.com/no-kranth/