Updates from காஞ்சி ரகுராம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • காஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, , காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்   

  காற்றடைத்த பையடா! 

  பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

  கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

  இந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.

  கார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப்  பட்டியலிடுகிறார்.

  கைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை நாம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா?!)

  உடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.

  1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.

  2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.

  3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.

  சில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

  உலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

  நாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன?

   
 • காஞ்சி ரகுராம் 4:41 am on July 12, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அக்வேரியம், அட்லாண்டிஸ், டால்பின் பே, தீவு,   

  அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள் 

  அந்த ஜெல்லி மீனைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது! பெல்லி மீன் என்றும் சொல்லலாம். வயிறு மட்டும்தான் இருக்கிறது. கண், காது என மெய்ப்புலன்களில் நான்கைக் காணோம். மீனின் உருவம் குடை போல, பூ போல இருக்கிறது. அதன் நடுவே பஞ்சுப் பிஞ்சாய் உறுப்புகள். விளிம்புகளில் ஓரங்குல இடைவெளியில் ஓரடி நீளத்திற்கு நார் போன்ற உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிசின் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அசினின் ஷாம்பு விளம்பரத்தில் கூந்தல் வழுக்கிக் கொண்டுச் செல்வதைப் போல, சக மீன்களின் உறுப்புகளோடு சிக்கிக் கொள்ளாமல் வழுக்கிக் கொண்டு நீந்துகின்றன.

  இடம். துபாய் – அட்லாண்டிஸ் வாட்டர் பார்க்.

  அட்லாண்டிஸ். கடலில் மண்ணைக் கொட்டி செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு. ஆற்றில் போட்டாலும்… நம்மவூர் பழமொழியெல்லாம் அங்கே கிடையாதோ என்னவோ?! கடலில்கூட அளவில்லாமல் மணலை, பணத்தைக் கொட்டி தீவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அடுக்கடுக்காக, ஆர்ப்பாட்டமாக அபார்ட்மெண்ட்கள், ஹோட்டல்கள். அதன் கட்டுமானங்களும், நேர்த்தியும் பிரமிக்க வைத்தாலும், பார்வை அதன் திரைமறைவிற்குச் செல்லும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

  பாலைவன வெப்பத்தாலும், மனப் புழுக்கத்தாலும் சிந்துவதற்கு முன்பே வியர்வை காய்ந்துவிட்ட, அடித்தட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சி எழுப்பப்பட்ட மாளிகைகள்தானே அவை? பர்ஜ் கலீஃபாவை ரசித்த இரண்டாம் நாளே அச்செய்தியைப் படித்தேன். ரத்த சொந்தத்தின் துர்மரணத்திற்கு, ஊருக்குச் செல்ல விடுப்பு கிடைக்காத விரக்தியில், அக்கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்திருக்கிறான் ஒரு தொழிலாளித் தமிழன். என்ன செய்ய! சமஸ்தானங்களும், சாம்ராஜ்யங்களும் பலரது கண்ணிரின் மீதுதானே எழுப்படுகின்றன? சரி, தண்ணீருக்குத் திரும்புகிறேன்.

  இந்த வாட்டர் பார்க்-இல் இருக்கும் அக்வேரியத்தில் 65 ஆயிரம் மீன்கள் நீந்துகின்றனவாம். 65k கலரில் கூட இருக்கின்றன! அக்வேரியத்தின் அமைப்பு குகை போன்று இருக்கிறது. உள்ளே செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் பெரியப்பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் இனவாரியாக கடல்வாழ் உயிரினங்கள். எல்லவற்றையும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்காமல், அருகே சென்று, அதன் செதில்களின் அசைவுகளை, மடிப்பு அம்சா தாடைகளை, கோலிபோல உருளும் கண்களை, வாய்திறக்கும்போது செவ்வந்திப் பூ நிறத்தில் தெரியும் உள்வயிற்றை… ஒவ்வொரு அங்கத்தையும் மனதினில் வீடியோவே எடுத்துக் கொண்டேன்!

  அக்வேரியத்தின் நடுப்பகுதியில் கடலுடன் இணைக்கப்பட்ட மூன்று மாடி உயர பிரம்மாண்ட தொட்டி.  அதில் ரகம் ரகமாய் ஆயிரக்கணக்கில் மீன்கள். இமைக்க முடியாமல் பார்த்தேன். படைத்தவனுக்குத்தான் எத்தனை விதமான உருவ, வடிவ கற்பனைகள்; அழகுணர்ச்சிகள்; ரசனைகள்! பட்டம்போன்ற தன் துடுப்புகளை, பறவைபோல் அசைத்து, நீரில் எந்த சலனத்தையும் எழுப்பாமல் அதிவேகமாகச் செல்லும் மீன்கள்; கூட்டம் கூட்டமாய், இரு கோடிக்கும் மாறி மாறி, ஒவ்வொரு முறையும் அணிவகுப்பை மாற்றி மாற்றிப் பயணிக்கும் மீன்கள்; எந்த இனமென்றாலும், காதல் இல்லாமலா?! ஜோடி ஜோடியாய் பல மீன்கள். வாழ்வின் மகோன்னதத்தை அடைந்துவிட்டது போல வயது முதிர்ந்த பெரிய மீன்கள் தனிமையில் ஏகாந்தமாய் அசைவற்று இருக்கின்றன. அதன் விழியருகே இருக்கும் செதில் மட்டும், ஊதுபத்தியின் புகைபோல் லேசாக அசைந்து கொண்டிருந்தது. எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும், ஜாதிகள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் இவைகளெல்லாம் சண்டை போட்டுக் கொள்வதில்லை!

  பண்டைய அட்லாண்டிஸ் நகரின் இடிபாடுகளின் மேல் இந்த அக்வேரியத்தை அமைத்திருக்கிறார்கள். அதன் சிதிலங்களினூடே மீன்கள் செல்வது கொள்ளை அழகு. குகையின் சுவரில் போர் வீரர்களின் முழு உடல் கவசங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. நம்ம ஊரில் சிக்ஸ் பேக் சிங்கமென சிலர் சிலிர்க்கிறார்கள். கவசங்களைப் பார்த்தால் வீரர்கள் சிக்ஸ்டீன்பேக்-ல் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறார்கள்!

  இந்த வாட்டர் பார்க்-யில் அக்வேரியம் ஒரு பகுதிதான். டால்பின் பே – டால்பின்களுடன் நீந்தி விளையாடி அவற்றை முத்தமிடலாம். அட்வென்சர் டனல் – இதில் வழுக்கிச் சென்று சுறா கூட்டத்தைக் காணலாம். டைவ் செண்டர் – படகில் பயணித்து, கடலினுள் குதித்து (அதற்குரிய உபகரணங்களுடன்), சிதிலமடைந்த கப்பல்கள், சுதந்திரமாய்த் திரியும் உயிரினங்களுடன் நாமும் ஒருவராய் நீந்தி வரலாம். இன்னமும் சங்கதிகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை சுற்றியதற்கே என் பர்ஸ் இளைத்து விட்டதால், போதுமென்ற மனமே ஊர் திரும்பும் வழி என புதுமொழி கண்டேன்.

  மீன்களின் அசைவுகள்; பயணத்தின் சுவடுகள்; இவ்வூர் வந்து ஏதேதோ வேலைகளைச் செய்து இன்னல்படும் இந்தியரின் தவிப்புகள்; மனித உழைப்பை உறிஞ்சியதைப் போலவே எண்ணையையும் உறிஞ்சியதில், அவ்வளம் நீர்த்துவிட, இன்று கடனில் தத்தளிக்கும் துபாயின் நிலையற்ற தன்மைகள்… அனைத்தையும் அசைபோட்டபடி, தங்கியிருந்த ஹோட்டலின் மேல் தளத்தில், நீச்சல் குளத்தில் மல்லாந்து நீந்திக் கொண்டிருந்தேன். நாள் முழுதும் வெப்பம் கக்கிய வானம் தணிந்திருக்க, அதில் சின்னதாய் ஒரு விமானம். ம்ம்… நாளை இந்தியா திரும்ப வேண்டும்.

  (முற்றும்)

  அடடா துபாய்! – 1 : துபாய் மெயின் ரோடு

  அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

  அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

  அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

   
 • காஞ்சி ரகுராம் 4:34 am on June 26, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: டிரைவர், , நண்பன், பாகிஸ்தானி, பாகிஸ்தான், பின் லாடன், ஹிந்தி   

  அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி! 

  லேன் மாறிச் சென்று விட்டது நான் சென்ற டாக்ஸி. அரை நொடியில் சுதாரித்த டிரைவர், படு எக்ஸ்பர்ட்டாக சரியான லேனுக்குத் திருப்பி விட்டார். இருப்பினும் சாலையைக் கண்காணிக்கும் கேமரா, ராடாரில் சிக்கியிருப்போம் என நினைத்து பெரு மூச்சு விட்டார்.  வேகத்திலும் கட்டுக்கோப்பாக வாகனங்கள் சீராகச் செல்லும் துபாய் சாலையில் இதுபோன்ற தவறு அபூர்வம். சற்று நிதானித்து கேட்டு விட்டேன்.

  ‘வை திஸ் மிஸ்டேக்?’

  “மெண்டல் டிப்ரஷன் சார்” என்றார். அவரே தொடர்வாரென மெளனித்தேன்.

  “பின் லாடன் வாஸ் கில்டு திஸ் மார்னிங் பை அமெரிக்கா”.

  அச்செய்தி தெரியாததாலும், டிரைவர் பாகிஸ்தானி என்பதாலும் திடுக்கிட்டேன். (இந்த ஊர் பேப்பரைப் படிப்பதில்லை. பக்கத்துக்கு பக்கம் ஒரே சண்டை மயம். செய்திச் சேனலும் பார்ப்பதில்லை. ஏதாவது ஒரு அக்கம் பக்க நாட்டில் டாங்குகள் உருள நிலமெல்லாம் ரத்தம்). மேலும் தொடர்ந்தார்.

  “நாட் டிப்ரஸ்டு பிகாஸ் ஹி வாஸ் கில்டு. பட் இட் ஹாப்பெண்ட் இன் அவர் கண்ட்ரி பாகிஸ்தான். வி டோண்ட் சப்போர்ட் ஹிம்”.

  முஸ்லீம் என்றாலே தீவிரவாதி, குறிப்பாக பாகிஸ்தானி என்ற உலக எண்ண மாயையை இந்த பதில் பட்டென உடைத்துவிட்டது. பின்பு நான் சந்தித்த பாகிஸ்தானி டிரைவர்களும் இதே மனநிலையில்தான் இருந்தார்கள். இதைத்தான் இம்ரான்கானின் பேட்டி வெளிப்படுத்தியது.

  துபாய்க்கு வந்தபோது, பாகிஸ்தானி டிரைவர்கள் என்னை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கம் இருந்தது. காரணம் மைசூர். ஒரு முறை அங்குச் சென்ற போது, நான் ரிசர்வ் செய்த பஸ்ஸை அடையாளம் காண முடியாமல் டிரைவர்/கண்டக்டர்களை அணுகியபோது, நான் தமிழனென்று திட்டி வெறுத்து விரட்டினர். அங்கே சகோதரனும் பகைவனாய்த் தெரிய, இங்கு பகைவனே நண்பனாகப் பழகுகிறான். தொலைந்த என் மொபைலை திருப்பித் தந்த டிரைவர் ஒரு உதாரணம் (அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!).

  பயணங்களில் கிரிக்கெட் பற்றி, உலகக்கோப்பையைப் பற்றி, ஐபிஎல் பற்றி, டோனி அப்ரிதி பற்றி அவர்களுடன் சகஜமாக உரையாட முடிந்தது. ஆனால் சரளமாக இல்லை. அவர்கள் ஹிந்தி எனக்கும், என் ஆங்கிலம் அவர்க்கும் ஒருவாறு புரிந்ததில் உரையாடல் தடுக்கித்தடுக்கியே நடந்தது. என்ன செய்ய, நான் இந்தி கற்கவில்லை. பாராளுமன்றத்திலும் செம்மொழி செப்பிய இனத்தைச் சார்ந்தவனாயிற்றே! இந்தி தெரியாததில், நம் நாட்டின் பிற மாநிலங்களுக்குச் சென்றபோது ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறேன். அந்நிலை இங்கேயும் தொடர்ந்ததில் வருத்தமே.

  எனக்கு வழி தெரியாவிட்டாலும், செல்ல வேண்டிய இடத்தில் இவர்கள் சரியாக இறக்கி விடுகிறார்கள். நான் நன்றி சொல்லும் போது தன் இதயத்தைத் தொட்டு புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு பாகிஸ்தானி டிரைவர், “எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்று சொல்லி அசரடித்தார். அவர் தமிழர், மலையாளிகளுடன் ஒரே இடத்தில் தங்கி, சமைத்துக் கொண்டு இங்கே வேலை செய்வதாய்ச் சொல்ல, என் புருவம் உயர்ந்தது!

  அலுவலகத்திலும் என் குழுவில் அனைவருமே பாகிஸ்தானியர். ஒருவர் மட்டும் அவர்களின் பஞ்சாபில் பிறந்த வம்சாவளி இந்தியர். தேச எல்லைகளைக் கடந்து, தேச அடையாளங்களைக் களைந்து அவர்கள் என்னிடம் நட்பு காட்டியதை விவரிக்க வார்த்தைகளில்லை. இருபது பாகிஸ்தானியர் ஒன்றிணைந்து இந்தியாவிலிருந்து வந்த எங்கள் நால்வர் குழுவிற்கு ஒரு தீம் ரெஸ்டாரண்டில் விருந்தளித்து கெளரவப்படுத்தியது, பல நாட்கள் என் நினைவினில் நிழலாடும். (ரெஸ்டாரண்டில் சர்வர்கள் மொகலாய வீரர்கள் போல் உடையணிந்து, பீர்பால் தொப்பியெல்லாம் அணிந்து கொண்டு, ஈட்டி வாட்களுடன் கட்டியம் கூறி உணவைப் பரிமாறியதெல்லாம் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்!)

  இன்று சந்தித்த முதிய பாகிஸ்தானி டிரைவர், நான் இறங்கும் போது கண்ணியமான குரலில் சொன்னார்.

  “லேர்ன் ஹிந்தி வென் யு ஆர் பாக் டு இண்டியா”.

  அடடா துபாய்! – 1 : துபாய் மெயின் ரோடு!!

  அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

  அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

  அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்

   
  • கீதப்ப்ரியன்|geethappriyan 4:45 முப on ஜூன் 26, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஆமாம் நண்பரே,
   இங்க அனாதை மொழியான இந்தியில் பேசுவதை தான் பெருமையாக நினைப்பானுங்க,பல ஹைதராபாதிங்களுக்கு ஹிந்தி தான் பேச வரும்,ஆங்கிலம் பிழையின்றி பேசவராது,அதனால் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று எதிர்படுவோரிடம் புளுகி,அதை உனக்கு பேச தெரியாதா?என்பார்கள்,உஷாராக இருங்கள்.
   உங்க நல்ல நேரம் நல்ல டாக்ஸி பத்தான் ட்ரைவர்களாக வாய்த்தனர்,ஒரு சிலர் மத வெறியர்களாகவும் இருப்பர் உஷார்.எப்போதும் ஹிந்தி தெரியவில்லை என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள்,அது தான் இங்கே பாலபாடம்,
   எனக்கு ஐந்து வருடமாய் ஹிந்தி தேவையே படவில்லை என்பது தான் உண்மை.

  • சத்யராஜ்குமார் 7:42 முப on ஜூன் 26, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   என்னுடைய அலுவலகத்திலும் ஒரு பாகிஸ்தானி இருக்கிறார். மதம், நாடு குறித்த விவாதங்கள் எழும்போதும் கூட மிகவும் பக்குவமாகப் பேசுவார். பழகுவதற்கு இனியவர்.

  • Nadodi paiyyan 8:18 முப on ஜூன் 26, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Interesting post. Thanks.

  • rangarajan 1:31 பிப on ஜூலை 13, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   aahaa its great.. The enmity with Indian Karnataka fellows is worse than the friendship shown by Pakistanis.. true..

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி