Updates from கனகராஜன் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • கனகராஜன் 9:03 am on May 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  இறந்த இலக்கியங்களும், மறைந்த ஜனரஞ்சகங்களும் 

  மதியம் டீ சாப்பிட நண்பருடன் கடைக்குச் சென்றிருந்தேன். தினத்தந்தியைப் பிரித்தபோது எழுத்தாளர் அனுராதாரமணன் அவர்களின் மரணச் ‍செய்தியைப் படிக்க நேர்ந்தது. சட்டென்று அதிர்ச்சி.

  “அடப்பாவமே… அனுராதாரமணன் இறந்துட்டாங்களா?” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன்.

  நண்பர் ‘அனுராதாரமணன் யார்?’ என்று கேட்டார். அவரைப் பற்றி சொல்ல வேண்டியதாயிற்று.
  அவரிடம் விடைபெற்று வந்த பின்னால் அனுராதாரமணன் பற்றிய யோசனைகள். ஜனரஞ்சக இதழ்களில் வெகு காலம் எழுதிப் பிரபலமான ஒரு எழுத்தாளரை யார் என்று விளக்க வேண்டிய சூழ்நிலையில் இன்னும் வாசிப்பு விவகாரம் மந்தமாக உள்ளது. இந்த லட்சணத்தில் இலக்கியக் குப்பை கொட்டி என்ன பயன் என்று ஆயாசமும் எழுகிறது.

  ஒன்பதாவதோ பத்தாம் வகுப்போ படிக்கிற போது அனுராதாரமணன் கதைகளைப் படிக்க நேர்ந்தது. லட்சுமி கதைகளுக்கும் அனுராதாரமணன் கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடிந்தது. அவர் எழுத்துக்களில் ஜனரஞ்சகத் தன்மை இருந்தாலும் அதையும் மீறிய ஒரு தைரியம் இருந்தது. ஜெயகாந்தன், ஜானகிராமன் பாதிப்பு அவர் கதைகளில் இருந்தது. ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் எழுத்துகில் எதிர்பாராமல் நுழைய நேர்ந்த கதையை பாக்கெட் நாவல் மூலமாக ‍தெரியவந்தது. அவரின் குடும்ப சூழ்நிலை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பொறுப்பான, சுதந்திரமான தாயாக… அவரின் பேட்டிகள் மூலமாக, வாழ்க்கைக் குறிப்புகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டத்தில் தமிழில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் என்கிற குறிப்பையும் படித்த நினைவு வந்தது.

  சுபமங்களா இதழுக்கு ஆரம்பத்தில் அவர்தான் ஆசிரியர். அது ஒரு ஜனரஞ்சக இதழாக இருந்தாலும் பல நல்ல படைப்பாளிகளின் படைப்புகளையும் வெளியிட்டு வந்தார். பின்னாளில் அது கோமல்சுவாமிநாதனின் இலக்கிய இதழாக மாறியது. அப்போது பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தில் ஒருவர் அனுராதாரமணனின் சுபமங்களா பற்றி கடுமையான விமர்சனம் செய்தார். ஆனால் அந்த அளவுக்கு அது மோசமான இதழ் இல்லை. கூட்டம் முடிந்தபின் இதைப் பற்றி அவரிடம் ‍கேட்டபோது, தான் அனுராதாரமணன் சுபமங்களா பார்த்ததில்லை என்றார். ஆனால் அது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தாராம்.

  அனுராதாரமணன் சுபமங்களாவில் பிரபஞ்சன், அசோமித்திரன், லா.சா.ரா, திலகவதி, வாஸந்தி, ம.வே.சிவக்குமார், செ.யோகநாதன், சுப்ரபாரதிமணியன்… என்று பல படைப்பாளிகள் பங்கு பெற்றிருந்தார்கள்.

  சுபமங்களாவுக்குப் பின் வளையோசை நடத்தினர். இது இரண்டோ மூன்றோ இதழ்கள்தாம் வந்தன. சுபமங்களாவுக்கு முன் அவர் வேறு இதழ்களுக்கும் ஆசிரியரா இருந்திருக்கிறார் என்று அறிகிறேன். அவர் ஆசிரியராக இருந்த பழைய வளையோசை ஒன்று மாத நாவலாக பார்த்திருக்கிறேன்.

  இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை சந்தித்தபோது அரசியல்-பல்வேறு பயமுறுத்தல்களும் எழுந்தபோது தைரியமாக எதிர்த்து உறுதியோடு இருந்தார். அவரது விதைகள் என்கிற தொகுப்பு (2 பாகங்கள்) அவரது எழுத்துலக அனுபவங்களை வெளிக்காட்டியிருந்தது. அன்புடன் அனுராதாரமணன் தொடர் மூலம் நல்ல தீர்வுகளையும் மன ஆறுதல்களையும் அவர் பலருக்குத் தந்திருக்கிறார்.

  அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதால் இலக்கியப் இதழ்கள் அவர் மறைவைப் பற்றியான செய்திகளை எப்படி வெளியிடும் என்று தெரியவில்லை. அவரின் வாழ்க்கைக் குறிப்பை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த தலைமுறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களைப் பற்றி எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெளிநாட்டு படைபபாளிகளின் பெயர்களால் நம்மைத் திணற அடித்து பயமுறுத்துகிறார்கள். நகுலனின் மறைவுக்குப் பின்னால்தான் அப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று அறிந்து கொண்ட படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்.

  சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் செ.யோகநாதன் மறைவை இணையத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு பின்நவீனத்துவப் படைப்பாளிகளைச் சந்தித்தபோது இந்தத் தகவலைச் சொன்னேன். “யாரு அவரு? எதில எழுதியிருக்காரு?” என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதே தகவலை வளர்ந்த ஒரு மூத்த இலக்கியவாதியிடம் சொன்னபோது. “அவரு கமர்ஷியல் ரைட்டர்தானே…” என்றார் சாதாரணமாக. இலக்கிய இதழ்கள் பலவற்றில் எழுதிய செ.யோகநாதன் எந்த மாதிரியான எழுத்தாளர் என்கிற ஆராய்ச்சிதான் முக்கியமாக இருந்தது.

  அவரிடம் செ.யோகநாதனின் மறைவுக்கான அனுதாபம் இல்லை.

  • கனகராஜன்
   
 • கனகராஜன் 7:46 pm on March 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  இலக்கியவாதியும், ஒரு ஜோடி செருப்பும் 

  முரளிகிருஷ்ணன் என்னை முதன்முதலாக தேடிக் கொண்டு வந்தபோது நான் காணாமல் போன செருப்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.

  முதலில் செருப்பைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் புதிதாக 180 ரூபாய்க்கு செருப்பு வாங்கி‍னேன். கவிஞர் ஸ்நேகிதன் தனக்கு மிகவும் வேண்டிய ஒருத்தர் தெப்பக்குளம் வீதியில் செருப்புக்கடை வைத்திருப்பதாகச் சொன்னான். 200 ரூபாய் செருப்பை 180 ரூபாய்க்கு விலைபேசி வாங்கினோம். பழைய செருப்பைக் கழற்றிவிட்டு புதுச்செருப்பை அணிந்து கொண்டேன். சிறிது தூரம் நடந்த பின்னால் செருப்புக்கும் எனக்கும் ஒத்துவரவில்லையோ என்று தோன்றியது. போகப் போக சரியாகிவிடும் என்றான் ஸ்நேகிதன்.

  இரவு 8 மணிக்கு மேல் வீட்டுக்குக் கிளம்புவேன். ஒரு 20 நிமிட பஸ் பயணம். அபபுறம் ஊர் வந்ததும் பாலமுருகன் ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய், அங்கே சரவணனைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவது வழக்கம். அங்கே எப்படியும் ஒருமணி நேரம் காலியாகிவிடும். அன்றைக்கு செருப்பைக் கழற்றிவிட்டு கடைக்குள் நுழைந்தேன். அங்கே செந்தில், சக்தி என்று சில நண்பர்கள் இருந்தார்கள். ஒரு முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். எனக்கு நல்ல பசி.

  “சரி சரவணா… நான் கிளம்பறேன்…”

  வெளியே வந்து பார்த்தபோது செருப்பைக் காணவில்லை. பதற்றத்தோடு தேடினேன்.

  “சரவணா… செருப்பைக் காணோம்…”

  “செருப்பைக் காணோமா? எங்க விட்டிங்க? நல்லா பாருங்க…”

  “இங்கதான் விட்டேன்… புதுச்செருப்பு சரவணா… காணோம்…”

  கடையில் வேறு நல்ல வியாபாரம். கூட்டம்.

  “யராவது தொட்டுட்டுப் போயிட்டாங்களோ?” என்றான் செந்தில்.

  எனக்கு திக்கென்றது. போச்சா? அநியாயமா போச்சா? 180 ரூபாய் செருப்பு. பசங்க விளையாடறாங்களா? உண்மையிலேயே யாராவது திருடிட்டுப் போயிட்டாங்களா? கடையைச் சுற்றி சுற்றித் தேடினேன். எனக்கு குழப்பம், ‍கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு கலக்கி குடித்த மாதிரி இருந்தது.

  நாளைக்கு செருப்பில்லாமல் அலுவலகம் போக வேண்டும். செருப்பில்லாமல் பஸ் ஸ்டாப்பில் நிற்பது எவ்வளவு அவமானத்துக்குரிய விஷயம்? இப்போது வீட்டுக்கு செருப்பில்லாமல்தான் நடந்துபோக வேண்டுமா? எனக்கான கவலைகள் என்னைச் சுற்றி வலையாகப் பின்ன ஆரம்பித்தது.

  செருப்பை ஒளித்து வைத்து விளையாடறாங்களா? கடைக்குள் செந்திலையும் காணோம். சக்தியும் இல்லை. சரவணன் வியாபாரத்தில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்குப் போவதா? இங்கேயே நிற்பதா? உண்மையிலேயே யாராவது திருடிப் போய்விட்டார்களா? கடையைச் சுற்றிச் சுற்றித் தேடினேன். என் விசனம் புரியாமல் தெருநாய் ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு என் பின்னாலே வந்தது. நான் செருப்பைத் தேடுவது அதற்கு சுவாரசியமாகப் போய்விட்டது. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்கப் போறதில்லே. எந்த முடிவுக்கும் வராமல் அப்படியே கடை முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

  அப்போது பார்த்து ஒரு டி.எஸ்.50 வந்து நின்றது. “கனகு… செளக்கியமா?” என்றவனைப் பார்த்தேன். பக்கத்து ஊரான பொன்னாச்சியூர் பாலு. என்னோட படித்தவன். “ம்… செளக்கியம்தான்” என்று ஒப்புக்கு பதில் சொன்னேன்.

  “உன்னைத்தான் தேடி வந்தோம்…” என்றான். அப்போதுதான் அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த ஆளைக் கவனித்தேன். இரண்டு பேரு‍மே லுங்கியில் இருந்தார்கள்.

  “அப்படியா?” இவங்க் எதுக்கு இந்த நேரத்தில தேடி வந்திருக்கறாங்க. இப்ப எனக்கு செருப்பைத் தவிர வேற எந்த கவனமும் இல்லை.

  இரண்டு பேருமே இறங்கி என்னருகே வந்தார்கள்.

  “முரளிகிருஷ்ணன்…” என்றான் பாலுவுடன் வந்தவன்.

  “எந்த முரளிகிருஷ்ணன்..?” என்று கேட்டேன். அவன் முகம் சட்டென்று மாறிப்போய்விட்டது. எனக்கு அவனை யாரென்று சுத்தமாகத் தெரியவில்லை. அவன் யாரென்று சொல்லிவிட்டு சீக்கிரம் விடைபெற்றுப் ‍போனால் தேவலை. நான் செருப்பைத் தேடுவேன்.

  “என்ன கனகு? என்னைத் தெரியலையா? நான் உங்களுக்கு லெட்டர் போட்டிருக்கேன். நீங்ககூட பதில் எழுதியிருந்தீங்களே…”

  எனக்கு கொஞ்சம் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் பயமும்… இலக்கியவாதி முரளிகிருஷ்ணனா? அப்ப சீக்கிரம் கிளம்ப வாய்ப்பில்லை. ஏற்கனவே நடேசன் மாதிரி இலக்கியவாதிகளால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருந்த சமயம். எப்படித் தப்பிப்பது? இவர்களை சீக்கிரம் அனுப்பி வைக்கவேண்டும்.

  “ஞாபகம் இருக்கு…” என்றேன்.

  “முரளி என்னோட நீண்ட கால நண்பன்… ஒரே கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கறோம்… என்னைப் பார்க்க அடிக்கடி வருவான்… உன்னைப்பத்திக் கேட்டான்… நீ இந்த நேரத்துல நீ சரவணன் கடையில இருப்பேன்னு கவிஞர் அம்சப்ரியா சொன்னாரு… அவரோட வீட்டுக்குப் போயிட்டு வர்றோம்…” என்றான் பாலு.

  அம்சப்ரியா தப்பிச்சுட்டு என்னை மாட்ட வச்சுட்டாரு…

  நான் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டு சிரித்து வைத்தேன்.

  “என்னோட செருப்பைக் காணோம்… தேடிட்டு இருக்கேன்…”

  “அப்புறம் இலக்கியப்பணியெல்லாம் எப்படி இருக்கு?” என்று முரளிகிருஷ்ணன் கேட்டான்.

  இதுக்கு என்ன பதில் சொல்வது என்று சத்தியமாய்த் தெரியவில்லை. “நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.” என்றேன்.

  “அது எப்படி எழுதாம இருக்க முடியாதே?” என்றான் முரளிகிருஷ்ணன்.

  “முடியுதே…”

  அவன் ஏதோ துக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். அப்புறம் கி.ராஜநாரயணனைப் பற்றி பேச ஆரம்பித்தான். கடுமையான விமர்சனம். நான் செருப்பைத் துழாவுவதில் கவனமாயிருந்தேன். சட்டென்று பேச்சை நிறுத்தினான். என்னைக் கவனித்தான். “நீங்க செருப்பைத் தேடிட்டு இருக்கறீங்க…”

  “ஆமாங்க…”

  “செருப்பு கிடைச்சாத்தான் பேசுவீங்க…?”

  சிரிக்கிற மாதிரி நடித்தேன். காணாமல் போன செருப்பு என்னை தவிக்க வைத்தது. என் கவலை இவர்களுக்குப் புரியாது. இவர்களை எப்படி சீக்கரம் அனுப்புவது? ஒரே வழி. டீ சாப்பிட வைத்து அனுப்பிவிடுவது. அப்புறம் வந்து செருப்பைத் தேடுவது.

  “டீ சாப்பிடலாம்…” என்றேன்.

  “சாப்பிடலாமே…”

  எதிரேதான் செந்திலின் டீக்கடை. உள்ளே நுழைந்ததும் செந்தில் விஷமத்தனமாகப் புன்னகைத்தான். “செருப்பு கடைச்சுதாண்ணா?”

  எரிச்சலோடு, “இல்லை…” என்றேன்.

  “நல்லாத்தேடிப் பாருங்கண்ணா… கிடைக்கும்” என்றான். நான் சந்தேகத்தோடு கடை நோட்டமிட்டேன். கல்லாப்பெட்டி டேபிளுக்கு கீழே என் செருப்பு ஒளிந்து கொண்டிருந்தது.

  “ஓவ்… என் செருப்பு…” என்று உற்சாகத்தில் கத்திவிட்டேன்.

  “இது உங்க செருப்புங்களாண்ணா…”

  “செந்திலு… பாத்தியா உன் வேலைய என்கிட்டயே காட்டிட்டே..”

  “பரவாயில்லீங்கண்ணா… எப்படியோ கண்டுபுடிச்சீட்டீங்க…”

  நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி படக்கென்று பிடுங்கப்பட்டது.

  “இப்ப நம்ம ஃபிரியா பேசலாமா?” என்றான் முரளிகிருஷ்ணன்.

  எனக்குப் பசி. “சாப்பிடற நேரமாச்சே?” என்று பலஹீனமாய் சொன்னதற்கு, “நாங்க சாப்பிட்டாச்சு… மட்டன் குழம்பு…”
  முரளிகிருஷ்ணன் கையை மூக்கருகே வைத்து வாசனை பிடிக்க வைத்தான்.

  போச்சுடா… இன்னைக்கு இலக்கியம் பேசாம போகமாட்டான் போலிருக்கு… மூன்று டீ சொல்லிவிட்டு முரளிகிருஷ்ணனைப் பார்த்தேன்…

  அவன் பேச ஆரம்பித்தான்… இல்ல இல்ல… திட்ட ஆரம்பித்தான்.

  ஜெயமோகன், குட்டி ரேவதி, சல்மா, வெண்ணிலா, எஸ்.ராமகிருஷ்ணன்… என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல் திட்டினான். குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை… மணி பத்தரைக்கு மேலாகிவிட்டது. பசி தாங்கமுடியாமல் கண்கள் இருட்டிக் கொண்டிருக்க, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். செருப்பு கிடைக்காமலே போயிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.

  • கனகராஜன்
   
  • அருள் 12:08 முப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பாவம்-ங்க கனகராஜன் நீங்க. உங்க வேதனை எனக்கு புரியுது. இது மாதிரிதான் நாட்டுல பல பேரு பாதிக்கப் பட்டிருக்காங்க.

  • madurai saravanan 11:13 முப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   good article . but feeling good

  • REKHA RAGHAVAN 12:36 பிப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //செருப்பு கிடைக்காமலே போயிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.//

   புத்தம் புது செருப்பை வாங்கிய கையோடு தொலைப்பது என்பது எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

   ரேகா ராகவன்.

 • கனகராஜன் 6:33 am on October 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: நகைச்சுவை   

  பேரு பெத்த பேரு! 

  பெயரில் என்ன இருக்கிறது? நிறைய இருக்குதுங்க… எனக்குத் தெரிஞ்சதைக் கொஞ்சம் சொல்றேன்…

  குஜராத் பேக்கரி என்றால் குஜாரத்தில் உள்ள பேக்கரி அல்ல. பொள்ளாச்சி எஸ்.எஸ். கோயில் வீதியில் உள்ள பேக்கரியின் பெயர் குஜராத்.

  “ஹலோ… நீ எங்க இருக்கே?” அலைபேசியில் நண்பர் கேட்டதுக்கு, “நான் குஜராத்ல டீ சாப்டுட்டு இருக்க‍ேன்…” என்று பதில் வர, “என்ன குஜராத்தா…? என்ன விளையாடறியா? காலைலதானே உன்னைப் பார்த்தேன்…”

  “அய்யோ… இங்க குஜராத் பேக்கரியில டீ சாப்டுட்டு இருக்கேன்…”

  இப்படி உரையாடல் நிகழ்ந்தால் பிரச்சினை இல்லை. இங்கே சீனி என்கிற நண்பன் இருக்கிறான். டிப்ளமோ முடித்துவிட்டு கோயமுத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை. ஊர் ஊராகப் போகிற வேலை. அவன் அடிக்கடி புத்தகக் கடைக்கு வருவான்.

  ஒருநாள், “சீனி எங்கடா?” என்று கேட்டுக் கொண்டு அசோக் வந்தான். “அவன் குஜராத் போயிருக்கான்…” என்று நசீர் சொல்ல, அவன் ஏதோ குஜராத் பேக்கரிதான் போயிருக்கிறான் என்று இவன் நினைத்துக் கொண்டுவிட்டான்.

  ஒருமணி நேரம் கழித்து, “எங்கடா சீனியை இன்னும் காணோம்…?” என்று கேட்க, நசீர் திகைத்தான். “அதுதான் சொன்னனல்லடா… அவன் நேத்தே குஜராத் போயிட்டான்…”

  “அடப்பாவி… நான் ஏதோ குஜராத் பேக்கரி போயிருக்கறான்னு நினைச்சேன்..” என்று சற்று அதிர்ந்து போய் தலையிலடித்துக் கொண்டான்.

  சித்ரா என்கிற பஸ் ஸ்டாப் இருக்கிறது. கொஞ்சம் காலேஜ் கூட்டம் இருக்கிற பஸ் ரூட். சித்ராவோடு திரும்புகிற ஒரு தனியார் பஸ்சுக்கு சித்ரா பஸ் என்று பெயர். ஐ.டி.ஐ படிக்க ரூம் எடுத்துத் தங்கியிருந்த காலம். ஆனந்த் என்கிற கொடைக்கானல்காரன் ஒருத்தன் சாயங்காலம் ஆகிவிட்டால், “சித்ராவைப் பார்க்கப் போறேன்…” என்று கிளம்பிவிடுவான். நான் ஏதோ அவனுடைய காதலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ஒருநாள் தெரிய, அறை நண்பர்கள் எல்லாரும் தினமும் சித்ராவைப் பார்க்கப் போனார்கள்.

  ஈரோடு மாவட்டம் (இப்ப திருப்பூர் மாவட்டமுன்னு நினைக்கிறேன்) சூரியப்பம்பாளையம்னு ஒரு ஊர் இருக்கிறது. அதுவல்ல பிரச்சினை… சூரிபாளையம்னு இன்னொரு ஒரு ஊர் இருக்கிறது. இன்னும் பிரச்சினை இருக்குதுங்க… அங்க டவுன்பஸ் ஒவ்வொரு ஊருக்கும் ரெண்டு மணி நேரம் இல்லாங்காட்டி மூனு மணிநேரத்துக்கு ஒரு வாட்டிதான் இருக்கும். அங்க இருக்கிற எங்க மாமாவைப் பார்க்கப் போயி சூரியப்பம்பாளையத்துக்குப் பதிலா சூரிபாளையம் பஸ் ஏறிட்டேன். என்னடா ஊரே மாறிப் போயிடுச்சு… இதுக்குத்தான் அடிக்கடி ஊருக்கு வரணும்னு நெனச்சுட்டேன். சூரிபாளையம் இறங்குங்கன்னு கண்டக்டர் விசிலடிக்க, இறங்கி குழம்பிப்போய் விசாரிச்சா… அப்புறம் தெரியுது. நொந்து நூலாயிட்டேன்… அப்புறம் ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு பஸ் வர மறுபடியும் நம்பியூர் போயி, அங்க ஒரு ரெண்டு மணிநேரம் சூரியப்பம்பாளையம் பஸ்சுக்கு காத்திருந்து ஒரு நாளைத் தொலைச்சுட்டு ஊருக்குப் போனேன்…

  இங்க பொள்ளாச்சியில தங்கம் தியேட்டர் என்று ஒன்று இருக்கிறது. அந்த ஸ்டாப்பிங் பெயர் தங்கம். “தங்கமெல்லா இறங்குங்க…”ன்னு கண்டக்டர் சொல்ல ஒரு வயசானவர் (நல்ல மப்பு) “ஆமா தங்கம் மட்டும் இறங்குங்க… பித்தளை எல்லாம் அப்படியே இருங்க…” என்று
  நக்கலடிச்சார்.

  எனக்கு எப்பவும் பஸ்சுல கடைசி சீட்டுத்தான் ‍கெடைக்குது. அன்னைக்கு ரெண்டு பெருசுக பேசிட்டு வந்துச்சு…

  “பொன்னா.. இந்தக் கூத்தைக் கேளு… நேத்து டிவியில திருவிளையாடல் போடறாங்கன்னு சொன்னாங்கப்பா… நானும் ரொம்ப ஆசையா கணேசன் நடிச்ச படம்ன்னு, வேலைக்குப் போறதை விட்டுட்டு, வீட்டுல இருந்துட்டேன்… பார்த்தா… ‍அதே ‍பேர்ல தனுசு நடிச்ச படத்த போடறாங்கப்பா… ”

  பெயர் ரொம்ப முக்கியம்தான். செந்தில் என்கிற பெயர் தமிழில் அதிகம் இருக்கும் போல. ஒண்ணாம் வகுப்பில் இருந்து பார்த்துவிட்டேன். செந்தில் என்கிற பெயரில் யாராவது ஒருத்தன் வகுப்பில் இருந்துவிடுவான். ஐ.டி.ஐ படிக்கும்போது ஒரு செந்தில்… அப்ரண்டீஸ் போகும்போது செந்தில் என்கிற பெயரில் ஒரு ரூம் மேட். கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் போது ஒரு செந்தில்… எட்டாம் வகுப்பு படிக்கும்போது மூன்று செந்தில் இருந்தார்கள். இதனால் இனிஷியல் போட்டு கூப்பிடுவோம். அப்படியும் ஒரு பிரச்சினை இருந்தது. S.செந்தில்குமாருக்கு சிரமம் வாய்க்கவில்லை. மற்ற இரண்டு பேருமே T. செந்தில்குமார்கள். இன்னொரு முன்னெழுத்தாக ஊர்ப்‍பெயரை வைக்க ஆறுச்சாமி வாத்தியார் முடிவு செய்தார். ஒருத்தன் சமத்தூர் என்பதால் S.T. செந்தில்குமார் ஆனான். இன்னொருத்தன் பக்கத்து ஊரான கரியாஞ்செட்டிபாளையத்திலிருந்து வருகிறான். அவன். K.T. செந்தில்குமாரானான். ஆனால் அது நிலைக்கவில்லை. அவன் பெயர் “கேடி” ஆனது.

  கதைகளில்கூட பேர் வைப்பதில் நிறைய தந்திரங்கள் உண்டு. வயசான ஆளுக்கு ஆகாஷ், சுரேஷ், சந்துரு, பாபு, கோபு என்றோ பெயர் வைக்கமாட்டார்கள். தர்மலிங்கம், நாகப்பன், சோமசுந்தரம் என்று வைப்பார்கள். அடியாள்களுக்கு வழக்கம்போல மாரி, முத்து… என்று பெயர். நம்பியார் பாணியில் கூப்பிட்டுக் கொள்ளலாம். பெண்களுக்கும் பெயர்கள் அப்படித்தான். நித்யா, வித்யா, மைதிலி என்று இருக்கும். சுந்தரவடிவு என்றால் வயதான கேரக்டர் என்று முடிவு செய்து கொள்ளலாம். எனக்குத் தெரிந்த ஒரு அக்கா இருந்தார்கள். நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கம் அந்த அக்காவுக்கு இருபது வயசிருக்கும். பேபி அக்கா என்று கூப்பிடுவோம். அந்தக் அக்காவை கோயமுத்தூருக்கு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். எப்போதவது வரும். இப்போது வயசு ஐம்பதை தாண்டியிருக்கும். இப்போதும் பேபி அக்காதான்.

  என் நண்பர் ஒருவர் சிற்றிதழ் நடத்திக் கொண்டிருந்தார். அடிக்கடி ஒரு சின்னக் கட்டத்தில் “உங்கள் குழந்தைக்கு அழகுப் பெயரில் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்” என்று பிரச்சாரம் செய்வார். அவ்வப்போது தலையங்கத்தில் அதை வலியுறுத்துவார். நண்பருக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருடைய குழந்தைக்கு வித்தியாசமான தமிழ்ப் பெயரை வைத்திருப்பார் என்று நினைத்து பெயரைக் கேட்டேன். வாயில் நுழையாத ஒரு வடமொழிப் பெயரைச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஏங்க இப்படி என்று கேட்டால் எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி “நியூமராலஜிப்படி இப்படித்தான் வைக்கணும்” என்றார்.

  இன்னும் பேரைப் பத்திச் சொல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு.. என் பேரைக் காப்பாத்தறதுக்காக இத்தோட நிறுத்திக்கறேன்.

  • கனகராஜன்
   
  • முத்துலெட்சுமி 6:58 முப on ஒக்ரோபர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பேருல நிறைய இருக்குதுன்னு ஒத்துகிறேன்.. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் எங்க ஊரு மயிலாடுதுறைக்கு நேர் பஸ் பாத்து ஆச்சரியப்பட்டுப் போனேன் ஆனா அது டவுன்பஸ்ன்னு அப்பறம் தான் சரியா கவனிச்சேன்.. 🙂

   • REKHA RAGHAVAN 8:46 முப on ஒக்ரோபர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இவ்வளவு காலமாக எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் உங்கள் நகைச் சுவையை? சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போச்சுப்பா! வெல்டன் கனகு. (கனகராஜன் என்ற உங்கள் பெயரை தான் சுருக்கி கனகு என்று ஆக்கிவிட்டேன். பெயரில் என்ன இருக்கிறது? )

    ரேகா ராகவன்.

   • soundr 9:38 முப on ஒக்ரோபர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    பேருல நிறைய இருக்குது தான்….

    மதுரை அருகில் உள்ள திருப்பத்தூர் பல முறை சென்று வந்தவன் நான். ஒரு முறை வேலூர் பஸ் ஸ்டாண்டில் திருப்பத்தூர் நேர் பஸ் பாத்து ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனா அப்புறம் தான் தெரிந்த்தது, இது வேற திருப்பத்தூர்னு.

    செந்தில் என்கிற பெயர் போல சரவணன் / சரவண குமார் பெயர்களும் தமிழில் அதிகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    கண்ட, பழகிய, கேள்வி பட்ட மனிதர்களில் பெயர்களுக்கும் குணத்திற்கும் சில சம்மந்தம் கண்டேன்.
    (based on about 4 or 5 persons in every name)
    For Example:
    Priya – ‍ சற்று சேட்டைகார பெண்
    Senthil புன்னகை அதிகம் காணலாம் இவரிடம்
    Saravanan – காரியகாரர்
    Saravana Kumar – சற்று பண்பானவர்
    Dhanabal – ஓவர் வாய்
    Dhanaraj – சண்ட கோழி

    • Jawahar 6:43 முப on ஒக்ரோபர் 3, 2009 நிரந்தர பந்தம்

     பெயர்க் குழப்பங்களை ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.

     1989 ன்னு ஞாபகம். சந்திரசேகர் பிரதம மந்திரி ஆயிட்டாருன்னு சொன்னதும் என் நண்பர் ஒருத்தர்,

     “படா கில்லாடிய்யா அந்த ஆளு. நல்ல ஸ்பின் பௌலரா இருந்தாரு. அப்புறம் வயலின் வாசிக்கக் கத்துகிட்டாரு. தாடி வெச்சிகிட்டு சினிமாவிலே நடிச்சாரு. விஜயகாந்த்தை வெச்சி படமெல்லாம் டைரெக்ட் பண்ணாரு. இப்போ பிரதமர் ஆயிட்டாரே” என்று வியந்தார்.

     அது சரி, உங்க ப்ளாக்கிலே பின்னூட்டம் போடற லிங்க் எங்கே இருக்கு? அது தெரியாம சௌந்தருக்கு பதிலா இதைப் பதிவு பண்ணிக்கிட்டு இருக்கேன். போன வாரம் எஸ் ஆர் கே யோட ஆர்ட்டிகிள் ஒண்ணுக்கு பின்னூட்டம் போட கஜ கரணம் கோ கரணம் போட்டேன்…

     http://kgjawarlal.wordpress.com

    • சத்யராஜ்குமார் 7:14 பிப on ஒக்ரோபர் 4, 2009 நிரந்தர பந்தம்

     ஜவஹர், குழு பதிவுக்கு அழகாக இருக்கும் இந்த டெம்ப்ளேட்டில் பின்னூட்ட லின்க் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் பளிச்சென்று பார்வையில் படாத கலரில் வைக்கப்பட்டிருக்கிறது. வர்ட் ப்ரஸ் டெம்ப்ளேட்டின் மேல் கை வைக்க முடியாது என்பதால் அடுத்த பதிவிலிருந்து பின்னுட்ட லின்க் எங்கே உள்ளது என்று பதிவின் இறுதியில் ஒரு குறிப்பு கொடுத்து விட உத்தேசம். கரணம் போட்டாவது பதில் போட்ட அன்புக்கு கனகராஜன் சார்பாக நன்றி!

   • கனகராஜன் 7:03 முப on ஒக்ரோபர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இங்க பொள்ளாச்சில கோட்டாம்பட்டி, பொன்னாபுரம், முத்தூர், சங்கம்பாளையம், கோபாலபுரம் எல்லாமே ரெண்டு ரெண்டு ஊரா இருக்குதுங்க.

    • சித்ரன் 9:24 பிப on ஒக்ரோபர் 3, 2009 நிரந்தர பந்தம்

     அட, பேருன்னு ஒன்ன வெச்சுப்போட்டாலே கொளப்பந்தாங். என்ன பண்றதுங்? நாமதா போற எடம்பாத்து சாக்கரதையா பஸ்ல ஏறிக்கோணுங். என்னுங் நா சொல்றது?

  • அறிவிலி 9:49 முப on ஒக்ரோபர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பேர்ல என்னங்க இருக்கு? திருப்பதி பழனிக்கு போறதையும், பழனி திருப்பதிக்கு போறதையும் நாம பார்த்ததில்லையா? அட அவ்வளவு ஏன்?,பாவாடை வேஷ்டி கட்றாரு…..

  • கனகராஜன் 7:05 முப on ஒக்ரோபர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஆமாங்கோவ்வ்வ்…

  • kuttysamy 10:15 முப on ஒக்ரோபர் 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   really nice…keepup the good work. my best wishes

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி