Updates from மீனாட்சி சுந்தரம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • மீனாட்சி சுந்தரம் 12:00 am on August 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: ஃபைன், இன்ஸ்பெக்டர், ஊழல், , பள்ளி, , பைக், போலீஸ், மாணவர்கள்   

    சட்டங்களும் நஷ்டங்களும் 

    காலங்கார்த்தாலே போலீஸிடம் மாட்டுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

    அன்று காலையில் கிளம்பும் போதே பயங்கர லேட்டாய்த்தான் கிளம்பினேன். பைக்கில் பறந்தடித்துச் சென்றாலும் கவுண்டம் பாளையத்திலிருந்து சரவணம் பட்டிக்கு இருபது நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குள் கண்டிப்பாய் கார்ட் பஞ்ச் பண்ண முடியாது என்று தெரிந்தும், ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தேன். ஜி.என்.மில்ஸ் தாண்டி ரயில்வே க்ராஸிங் தாண்டும் போது பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருந்த இரண்டு சிறுவர்கள் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டினார்கள்.

    நிற்க நேரமில்லாமல் வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்த நான், பள்ளிச் சிறுவர்கள் என்றதும் பிரேக்கை மிதித்தேன். பார்த்ததுமே தெரிந்தது. அண்ணன்-தம்பி… அண்ணன் ஏழாம் கிளாஸும் தம்பி ஆறாம் கிளாஸும் படிக்கிறார்களாம்.

    பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாலும், மிக லேட்டாகி விட்டதாலும் கொஞ்சம் அவசரமாய் வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விட்டால் போதும் என கெஞ்சும் நிலையில் கேட்டுக் கொள்ளவே பைக்கில் இருவரையும் உட்காரச் சொல்லி திராட்டிலைத் திருகினேன்.

    மூன்று நிமிடம் இருக்கும். அடுத்த க்ராஸிங்கைக் கடக்கும் சமயத்தில் அந்த ட்ராஃபிக் போலீஸ் ஸ்குவாட் விசிலடித்துக் கூப்பிட்டதை சத்தியமாய் நான் கவனிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு கான்ஸ்டபிள் எங்களை விரட்டி மடக்கி வண்டிச் சாவியைப் பறித்தபோது, அரை கிலோமீட்டர் தாண்டியிருந்தேன். “வண்டியைத் தள்ளிட்டு வாப்பா. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு. மூணு பேரும் வாங்க..!” சொல்லியபடியே தான் வந்த வண்டியைத் திருப்பினார் கான்ஸ்டபிள்.

    கடுப்புடன் திரும்பி நான் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, “ஸாரிண்ணா..!” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்தபடி வந்தாலும், சிறுவர்களின் முகத்தில் பள்ளிக்கு லேட்டாவதின் பயம் தெரிந்தது.

    வண்டியைத் தள்ளியபடி அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு டெர்ரரிஸ்ட்டைப் பிடித்த பெருமையுடன் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரொம்பக் கறாராய்,

    “ட்ரிபிள்ஸ். நிக்காமப் போனா விட்டுடுவமா.? பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா..!”.

    ஒரு உதவி செய்யப் போய் அலுவலகத்துக்கு லேட்டாவதுடன், அறுநூறு ரூபாய் தண்டம் வேறு. நான் திரும்பி கோபமாய் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, அதில் பெரியவன் தைரியமாய் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

    “சார் இந்த அண்ணன் மேல ஒண்ணும் தப்பு இல்ல சார்… நாங்கதான்.! அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்..!”.

    அந்த இன்ஸ்பெக்டர் திரும்பி, “தம்பி சும்மா இரு. ஃபைன வண்டிய ஓட்டினவங்கதான் கட்டப் போறாங்க. உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.!” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே.! யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி.? வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன்.!”.

    அத்தனை பேர் முன்னால் அவமானப்பட்ட வலியுடன் கண்கள் கலங்க அவன் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவனை ஏதும் பேச வேண்டாம் என சைகை செய்துவிட்டுக் காத்திருந்தேன். அதற்கப்புறம், மேலும் பத்து நிமிடம். இருநூறு ரூபாயில் பேரம் முடிந்து. அதே சிறுவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, இனி வாழ்க்கையில் எவனுக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

    இந்தப் பதிவின் நோக்கம் ட்ரிபிள்ஸ் போகாதே, போலீஸ் ஊழல், உதவி செய்யாதே என்று எதுவும் சொல்வது அல்ல. ஐந்தாவது நிமிடம் அந்தச் சிறுவர்களை வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விடும்போது நடந்ததுதான் நான் சொல்ல வந்தது.

    வண்டியை விட்டு இறங்கியதும், “பார்த்து போங்கப்பா..!” என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலரேட்டரை முறுக்க எத்தனித்த போது அந்த ஏழாம் வகுப்புப் பெரியவன் கூப்பிட்டான்.

    “அண்ணா..!”

    “என்ன.?” என்பது போல் நான் திரும்பிப் பார்த்ததும் அவன் தொடர்ந்தான்.

    “சாரிண்ணா… இப்பிடி ஆகும்னு தெரியலைண்ணா. எங்களால உங்களுக்கு இருநூறு ரூபா நஷ்டம். அண்ணா… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. நாங்க ஸ்கூலுக்கு வந்திட்டு போக எங்க அப்பா கொடுத்த இருபது ரூபா இருக்குண்ணா. இத நீங்க வாங்கிக்கணும்..!” என்றவன் நீட்டிய கையில் இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

     
    • kullabuji 7:07 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிகவும் வ௫த்தமளிக்கிறது.

    • தகடு 7:07 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்லாருக்கு…

    • காஞ்சி ரகுராம் 8:01 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மாணவர்களின் கள்ளமற்ற மனதைக் காட்டிய பதிவு.

      நேற்று மூன்று மாணவர்கள் லிஃப்ட் கேட்டனர். மூவரையும் எப்படி ஏற்றிச் செல்வது?! இருவரை ஏற்றிக் கொண்டு ஒருவனை தனிந்து விடுவதும் சரியாக இருக்காதே என நினைத்தபடியே வண்டியை நிறுத்தினேன். என் யோசனை களைவதற்குள்ளேயே ஒருவன் என் கைகளினிடையே நுழைந்து முன்னால் ஏறிக் கொள்ள, மற்ற இருவரும் குதிரை மீது ஏறுவது போல் தாவி என்னை கட்டிக் கொண்டு, “போலாணா, ரைட்.. ரைட்.. ” என்று சொல்ல, அவர்களின் பிஞ்சு மனதை நினைத்து புன்னகைத்தபடியே பள்ளியில் இறக்கி விட்டேன். என்ன ஒன்று, போலிஸ் இருக்கும் இடங்களை ஜாக்கிரதையாக தவிர்க்க வேண்டியிருந்தது.

      இம்மாணவர்களின் மனசு சில போலிஸ்-க்கு இருந்தாலே உதவிகள் நீளும்.

    • chinnapiyan v.krishnakumar 8:02 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கொடூரத்திலும் கொடூரம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

    • sri 10:31 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நெஞ்சம் நெகிழ்கிறது இது போன்ற பொறுப்பான இளம் மாணவர்கள் இருப்பதை அறியும்போது!

    • Anand Raj 10:56 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      காவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.

    • David Jebaraj 12:06 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      எனக்கும் இது போல் ஒரு சம்பவம். அவசரமாய் போய்கொண்டிருக்கையில் (உச்சி வெயில் நேரம், மாணவர்கள் தேர்வு நேரம்) அவசர அவசரமாய் காலில் செருப்பு இல்லாமல் போய்கொண்டிருந்த சிறுவனை நானே அழைத்து பைக்கில் அமர்த்தி போனேன். பள்ளியில் இறக்கி விடும் சமயம், ‘ஏம்பா உங்கப்பாட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கி போடலாமில்லே’ என்று கேட்டவுடன் ‘அண்ணே எங்கப்பா (சமீபத்தில் நடந்த, நாங்கள் அறிந்த, கோரமான) ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாருண்ணே’ என்றான். அவர் ஒரு ஆசிரியரும் கூட. சட்டென்று மனம் பதைக்க நான் ‘தம்பி என்கூட வா. நான் உனக்கு செருப்பு வாங்கி தாரேன்’ என்று கூப்பிட்டேன். அதற்கு அவன் ‘வேண்டாண்ணே. எங்கம்மா யார்ட்டேயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க. தேங்ஸ்னே’ என்றபடியே நிழல் நிழலாக தாவி பள்ளி உள்ளே ஓடி மறைந்தான். நான் அவன் போன பின்பும் சிறிது நேரம் வெறித்து பார்த்தபடியே அங்கே நின்று விட்டு கிளம்பினேன். மனதில் ‘கொள்ளென கொடுத்தல் உயர்ந்தன்று… கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று’ என்ற செய்யுள் ஓடியது…

    • asksukumar 12:35 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      யதார்த்தம் இப்படித் தான் இருக்குங்க! அந்த தம்பிங்க காலத்துலயாவது இது மாறனும்!

    • Sakthivel 12:44 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வருத்தமளிக்கிறது. வருத்தபடாதீர், ஓர் அனுபவம்.

      சென்னை தேவலாம், நன்றாக பேரம் பேசினால் கடைசியில்
      ” மொத போனி டீ செலவுக்காசும் கொடுத்துட்டு போப்பா” னு முடிப்பாங்க.

    • லாரிக்காரன் 11:15 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இருநூறு ரூபாயில் நீங்கள் இந்தியாவை நொந்தபோது இருபது ரூபாயில் இளைய தலைமுறை ந்ம்பிக்கையூட்டியது சமூகம் கண்டிப்பாக மாறும் இது போல் இளையவர்களால்

    • கோமாளி செல்வா 1:32 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கடைசில அந்தப் பையன் சொன்னது உண்மைலயே ரொம்ப சிலிர்ப்பா இருக்குனா.. ரொம்ப அருமையான பதிவு 🙂

    • பாலா 1:41 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வருத்தமே… போக்குவரத்து காவலர் சிறுவர்களிடம் பேசிய முறை தவறெனப்படுகிறது.. காவலர்கள் மீதான அந்தச் சிறுவர்களின் பிம்பம் எப்படியும் மாசுபட்டிருக்கும்..

    • Mohan 6:29 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Super Boss.. Nalla paarunga antha paiyan naan than…

    • anand 9:53 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Sir

      Please make this page as print out and send to all Police staion and Coimbatore commisoner office including Traffic department head office. All police men should read it and they should relaise this.

      Hope you can understand my request.

      Regards
      Anand
      Pollachi

    • Ramesh 4:56 முப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      காவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.

    • Elango 9:10 முப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      குழந்தைகள் மனது தான் எவ்வளவு உயர்ந்தது.

    • Tharique Azeez | உதய தாரகை 8:16 பிப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உள்ளத்தை நெகிழ வைத்த உணர்ச்சிபூர்வமான கட்டம், அந்தப் பையன் ஈற்றில் சொன்ன விடயம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    • கோளாறு 12:10 பிப on ஓகஸ்ட் 13, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சட்டம் சாமானியர்களிடம் தன் கடமையை (???) செய்யும்,கை குழந்தையிடமும் கையூட்டு கேட்பார்கள்.யதார்த்தமான பதிவு தலைவரே.. வழிப்பறி கொள்ளையர்களை பற்றியும் வஞ்சமில்லா சிறார்கள் பற்றியும் !!!

    • amas32 12:23 பிப on ஓகஸ்ட் 13, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இது போன்ற பதிவுகள் தாம் மனித நேயத்தையும், அன்பின் ஆழத்தையும் காட்டுகின்றன. போலிஸ்காரர் செய்யும் தவறு நாம் எப்பொழுதும் பார்ப்பது தான் ஆனால் நீங்கள் செய்ததும் அந்த சிறுவன் செய்ததும் பெருமைக்குரியவை. நல்லப் பதிவு!
      amas32

    • sarbudeen 10:59 முப on ஓகஸ்ட் 14, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Antha siruvarkalin elakiya manathu ennai rombaum nehilach seithathu

    • sss.cbe 9:47 முப on ஓகஸ்ட் 15, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      தல இதைத்தான் கலாம் சொன்னாரு!உங்க டோனி எங்க ப்ரானு எல்லாம் பார்த்துக்குவங்க! நோ கவலைஸ், நாம அவங்களுக்கு வேல்யூஸ் சொல்லிக்கடுத்தா போதும்

    • தினேஷ் குமார் 11:43 முப on ஓகஸ்ட் 22, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ம்ம்ம்..

      இந்தச் சிறுவர்கள் இளைஞர்களாவதற்குள் இந்தச் சமுதாயம் அவர்களையும் கெடுத்து வைத்திருக்குமே என்றெண்ணும்போது இன்னும் வருத்தமாயிருக்கிறது.

    • ganesan 11:28 முப on பிப்ரவரி 21, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      போலிஸ்காரர் செய்யும் தவறு மிகவும் வ௫த்தமளிக்கிறது.

    • Sara Durai 10:35 முப on ஜூன் 6, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நேரத்துக்கு பேருந்து விட்டா ஏன் ட்ரிபுள்ஸ் ,ஓவர்ஸ்பீடெல்லாம்

    • Azhagan 12:13 முப on ஓகஸ்ட் 7, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அவர்கள் சிறுவர்கள் அல்ல: நம்பிக்கையூட்டும் எதிர்கால இந்திய இளைஞர்கள்

  • மீனாட்சி சுந்தரம் 4:31 am on December 30, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கடவுள், கண்டக்டர், பஸ்,   

    கால் ஃப்ரம் கடவுள் 

    வேலை முடிந்து கிளம்பும் அந்த இரவு எட்டு மணியிலும் சென்னைக் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது பஸ்ஸில். டிக்கெட் வாங்க லேட்டாவதில், நெருப்பாய்க் கடுகடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். இதில், மொபைலில் மனைவியின் அழைப்பு வேறு.லேசான காய்ச்சலில் தூங்கத் துவங்கிய அம்மாவை, துணைக்கு ஆளில்லாததால் விளையாட அழைத்துத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் என் மூன்றரை வயது மகன் டேனி வீட்டில். அவனைச் சமாதானம் செய்யச் சொல்லி, என்னை ஃபோனில் அழைத்தாள் மனைவி.

    பேச ஆரம்பித்ததும் கண்டக்டர் கத்தினார்.

    “ஏம்பா… டிக்கெட்டை வாங்கிட்டுப் பேசேன். என்னதான் இருக்கோ அந்த ஃபோன்ல..? எங்க தாலிய அறுக்கறானுக..!”.

    பஸ்ஸில் எல்லோரும் திரும்பி என்னையே பார்க்க, மன்னிப்புக் கேட்டு டிக்கெட்டை வாங்கித் திரும்பும்போது டேனி கேட்டான்.

    “என்னப்பா… பஸ்ஸிலயா வர்ற..?”.

    நான் வர இருக்கும் ஆபத்து புரியாமல், “ஆமாடா..!” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..?” என்று கேட்டான்.

    நான் “கண்டக்டர் மாமாடா…!” என்றதுதான் தாமதம், “ஃபோனைக் கண்டக்டர் மாமாகிட்டக் கொடு…!” என்று ஆரம்பித்துவிட்டான்.

    கண்டக்டரோ கொடூரக் கோபத்தில் எல்லோரையும் கத்திக் கொண்டிருந்தார்.

    என்ன செய்வது என்று யோசித்தபடியே, நானே கண்டக்டர் போல கொஞ்சம் மிமிக்ரி எல்லாம் பண்ணிப் பார்த்தேன். நம்ம ஃபெர்பாமென்ஸ் நாலு வயசுக் குழந்தையைக் கூட ஏமாற்றத் துப்பில்லை.

    கடைசியாய் டேனி கோபத்தில், “ஃபோனை கண்டக்டர் மாமாகிட்டக் குடுடா..!” என்றான். இனி மரியாதையில்லை.

    குழந்தையை மேலும் ஏமாற்ற மனதில்லாமல் நேராய்க் கண்டக்டரிடம் போய், “சார்.. என் பையன் உங்ககிட்டப் பேசணும்ங்கிறான். ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டுக் கொடுங்க சார்…ப்ளீஸ்..!”.

    ‘ஒருவேளை லூஸோ…!” என்று யோசித்தபடி நிமிர்ந்தவர், என் உடையைப் பார்த்துவிட்டு, “சின்னப் பையனா சார்..?” என்றபடி ஃபோனை வாங்கினார்.

    ஒரு மூன்று விநாடிகள்தான் இருக்கும். “ஆமாடா…”, “சாப்டுட்டேன். நீ சாப்டுட்டியா..?”, “ஆமா, அங்கிள்தான் விசிலடிச்சேன்..” என்றவர், அவன் கேட்டானோ என்னவோ மேலும் ஒருமுறை ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டே விசிலடித்தார். அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சியாய் ஃபோனை என்னிடம் கொடுத்தவர், அடுத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

    நானோ எங்கே என் பையன், ‘டிரைவர் மாமாகிட்ட ஃபோனைக் கொடு..!’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..!’ என்று வேகவேகமாய் ஃபோனைக் கட் செய்தேன்.

    அதன்பிறகு, முக்கால் மணி நேரம் என் ஸ்டாப் வரும்வரை கூட்டம் அப்படியே கொஞ்சமும் குறையாமல்தான் இருந்தது. ஆனால், அந்தக் கண்டக்டர் மிகுந்த சந்தோஷத்துடனே எல்லோரையும் நடத்திக் கொண்டு வந்தார்.

    எங்கோ முகம் தெரியாத ஒரு நபரின் மாலையை என் குழந்தை மகிழ்ச்சிகரமாக்கியது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.

    என் குழந்தை மட்டுமில்லை… எந்தக் குழந்தையானாலும் சொல்கிறேன்.

    கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!

    ********

     

    டேனியின் உலகம் இங்கேயும் விரிகிறது:

     
  • மீனாட்சி சுந்தரம் 10:10 am on August 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கர்நாடகா, கிராமம், , , , karnataka, village   

    கூகுள் கிராமம் 

    இன்டர்நெட் பற்றியே தெரியாத ஒரு கிராமத்தின் பெயர் “கூகுள்” என்றால் நம்பமுடிகிறதா…?

    கர்நாடகாவின் பெங்களுருவிலிருந்து 510 கிமீ தொலைவில், ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. கிருஷ்ணா நதிக்கரையில் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமங்களில் இதுவும் ஒன்று. இதன் மக்கள் தொகை மொத்தமுமே சற்றேறக்குறைய 1000.

    அங்கிருக்கும் பெரியவர்களிடம் உலகின் முன்னணி இணையதள சேவை நிறுவனமான கூகுள் பற்றிச் சொன்னால், அது எங்கள் கிரமத்தின் பெயர் என்கிறார்களாம். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களோ,”எங்கள் கிராமத்தின் பெயரில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்…” என்கிறார்களாம். இதனால், எங்கள் கிராமத்துக்குப் பெருமை என்றும் ஒன்றிரண்டு பேர் சொல்கிறார்களாம். மற்றவர்களுக்கோ அதுகூடத் தெரியவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியா ‘மவுண்டன் வியூ’வில் உள்ள கூகுள் இணையசேவை நிறுவனத்திற்குப் பெயர் வைக்க இந்த கிராமம் காரணம் அல்லவென்றாலும், இந்த கிராமத்திற்கு இப்பெயர் வர ஒரு புராணக் கதை இருக்கிறது.

    முன்னம் ஒரு காலத்தில், அல்லம்மா பிரபு என்னும் துறவி ‘பசவ கல்யாண்’ என்னும் இடத்திலிருந்து ஆந்திராவின் ‘ஸ்ரீசைலம்’ செல்லும் போது இந்த கிராமத்தில் தங்கியதால், அவர் தங்கிய குகையை ‘காவி கல்லு’ என்று அழைத்திருக்கிறார்கள். நாளடைவில் அது மருவி கூகல்லு ஆகி, இப்போது ஸ்டைலாக இன்னும் சுருங்கி கூகுள் ஆகிவிட்டதாம்.

    இணைய இணைப்புகள்தான் இல்லை என்றால், கிராமத்தில் எங்கும் ஆங்கிலத்தில்கூட ‘கூகுள்’ இல்லையாம். ஆங்கிலம் கூடாது என மக்கள் போராடியதால், எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் கன்னடத்தில் மட்டுமே கூகுள் இருப்பதால்… கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.

     
    • கார்த்திக் 10:18 முப on ஓகஸ்ட் 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      /// கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே ///

      :)))

      தெரிஞ்சா, முதலாளி அந்த கிராமத்துக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    • C.S.சந்திரசேகர் 9:33 முப on செப்ரெம்பர் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்த விஷயத்த Google’ ல தேடி புடிச்சீங்களா?

      • மீனாட்சிசுந்தரம் 9:36 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இல்லை… கர்னாடகாவுல இருக்கையில ஒரு பேப்பர்ல படிச்சேன் சேகர்.

    • காஞ்சி ரகுராம் 11:35 பிப on செப்ரெம்பர் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கூகுளாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா என நம் வாழ்க்கை ஆகி விட்டதால், ஒரு முறையேனும் அந்த கிராமத்திற்க்குச் செல்ல ஆசையாக இருக்கிறது.

    • chollukireen 4:43 முப on நவம்பர் 21, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கூகிளுக்கும் அர்த்தம் சொல்லுகிறது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி