Updates from நவம்பர், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சோபா சதீஷ் 4:24 pm on November 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  போதைக்கு அடிமையாகும் தாவரங்கள் 

  மனிதன் தாவரங்களையும் விட்டு வைக்கவில்லை.

  திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்துடன் பிராந்தி கலந்து அடிக்கிறார்களாம். பூச்சிக் கொல்லியைவிட வேகமாய் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்கள் ஆரோக்யமாய் வளர்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

  அரசு மார்க்கெட் செய்யும் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மற்றும் ஒரு விஷயம் கிடைச்சாச்சு.

  ஆக……பயிர்களுக்கு இப்போது ரெண்டு ‘தண்ணி’ தேவைப்படுகிறது.

  முதல் அடிப்படைத் தண்ணீரைத் தரவே பக்கத்திலிருக்கும் மூன்று மாநிலங்களும் தகராறு செய்துவரும் நிலையில் இப்போது அடுத்த தேவை வந்துவிட்டது. தண்ணீர்தான் எவ்வளவு பிரச்னை?

  என்றோ, எங்கிருந்தோ வந்த பென்னி குக் என்னும் ஆங்கிலேயன்.. இங்குள்ள மக்கள் தேவையறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டிக்கொடுத்தான். இங்குள்ள தோழனோ தண்ணீர் தர வீம்பு செய்கிறான். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரம் தயாராகிறது.

  காவிரி ஆற்றில் முதன்முதல் அணை கட்டிய கரிகாலனே இன்று பிறந்து வந்தாலும்கூட, அவனும் காவேரி மினரல் வாட்டர்தான் வாங்கிக் குடிக்க வேண்டி இருக்கும்.

  யோசித்துப் பாருங்கள்…..

  ஊரெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த மினரல் வாட்டர்க்காரனுக்கு பஞ்சமே வரமாட்டேன்கிறது.

  அதேபோல், தண்ணீரை பாட்டிலில் அடைத்து கர்நாடகாவிலிருந்தோ கேரளாவிலிருந்தோ அனுப்பினால் எவனும் தடுப்பதில்லை.

  ஏன்… தடுத்தால் அந்த கம்பெனி, ”சரி… தண்ணீரைத் தமிழகம் கொண்டு செல்லவில்லை. நீயே வைத்துக்கொள். ஆனால் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கொடு…” என்று சொல்லும்.

  ஆக… தண்ணீர் பிரச்னையில்லை. அது இலவசமாய் இருப்பதுதான் பிரச்னை. அதனால்தான் அங்கே அரசியல் விளையாடுகிறது. விஷயம் உணர்வுப்பூர்வமாய் மாறிவிடுகிறது.

  அதையே நீ உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு லிட்டருக்கு 5பைசா என்று சொல்லிப் பாருங்கள்….”அய்யா, எனக்கு இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போதும்; மீதியை எங்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்” என்பான்.

  இப்போது உணர்வுப் பூர்வமாய் இருக்கும் தண்ணீர், பிறகு மேனேஜ்மெண்ட்டாய் மாறிவிடும். பிரச்னை சுலபமாய் தீர்ந்துவிடும்.

  நமக்கு தெரிந்தது… மேலே இருப்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..?

  அடடே… நாம ஆரம்பிச்ச விசயத்துலருந்து எங்கேயோ வந்துட்டோம் போல இருக்கே…

  சமீபத்தில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுக்கப் போயிருந்த இடத்தில் சந்தித்த நண்பரிடம் ஆர்வமாய் இந்த விஷயத்தை சொன்னதும், “வயித்துல இருக்கற தேவையில்லாத புழுக்களைக் கொல்ல பிராந்தியே போதும்… வேற மருந்துகள் தேவையில்லை…. இல்லியா….” என்றார்.

  அவர் ஒரு ‘குடிமகன்’ என்பது அப்புறம்தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

  • சோபா சதீஷ்
   
 • பொன்.சுதா 6:17 am on October 20, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும் 

  நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.

  பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.

  இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
  swine1
  சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.

  7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.

  இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
  swine3
  மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.

  இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.

  முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

  அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • பொன்.சுதா

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
 • மீனாட்சி சுந்தரம் 11:10 pm on October 16, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஒரே நாளில் இரண்டு லட்சம் 

  தீபாவளிக்கு ரெண்டுநாள் முன்பு மாலை டிவியில் சேனல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு செய்திச் சானலை cross செய்ய நேர்ந்தது.

  சாலையில் டிவி செய்தி நிருபரின் மைக்கில் அந்த common man “ ஆமா சார்… என்ன சார் பண்ணுறது? இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சு. அன்னைக்கு இல்லாட்டி என்ன? அடுத்த நாள் பார்த்துக்கிட வேண்டியது தான்..” என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
  MeatShop
  தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர் பேசியதைக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள … ரிமோட்டில் வால்யூம் அதிகம் செய்தேன்.

  அடுத்து ஒரு கோவில் புரோகிதர் அதே மைக்கில் “ பொதுவாவே சனிக்கிழமை விசேஷமானது தான். அதுல புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷம். அதுலயும் ரொம்ப முக்கியம் புரட்டாசியின் கடைசி சனி. அன்னிக்கு பகவானை கும்பிட்டா ஒரு வருஷம் கும்பிட்ட பலன், கும்பிட்டவாளுக்கு” என்றார்.

  புரட்டாசி கடைசி சனி, சாமிகளின் ஜம்போ பேக் போல.

  அடுத்து ஒரு கறிக்கடைக்காரர். “ஆமா சார். இந்த வருஷம் கடைசி சனியில தீபாவளி வருது. அதுனால வியாபாரம் கொஞ்சம் டல்தான். போன வருஷம் சென்னையில மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள் வெட்டுனம். இந்த வருஷம் அஞ்சு, ஆறாயிரம் போனா அதிகம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மறுவியாபாரத்துல கொஞ்சம் நடக்கும்னு நம்புறோம்.” என்றார்.

  வீட்டில் அனைவரும் சைவம். நான் அசைவம் சாப்பிடுவேன்…எப்பவாவது. என்றாலும் ஒரு நாளில் ரெண்டு லட்சம் ஆடுகள் என்றதும் திக்கென்றிருந்தது. கவனிக்கவும்! இது ஆடுகளின் கணக்கு மட்டும்.

  எனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை.

  புகையிலை, புகையிலைப் பொருள்கள் கேடு என்று சொல்லும் அரசு புகையிலை பயிரிடுவதைத் தடுப்பதே இல்லை.

  குடித்தால் கேடு என்னும் அரசே அதை விற்பனை செய்கிறது.

  குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஆனால் பார் இருக்கும். அதில் வண்டி நிறுத்தமும் இருக்கும்.

  வாகனங்களில் ஏர் ஹார்ன் தடை செய்யப் பட்டது. அதன் உற்பத்தி தடை செய்யப்படவில்லை. எனில் உற்பத்தியாகும் ஏர் ஹார்னை யார் உபயோகிக்கிறார்கள்?

  அளவிடும் மீட்டர் டேப்புகள் மொத்தமும் அரசாங்க முத்திரை வாங்கி வருவதில்லை.

  அதே போலத் தான்…

  சினிமாவில் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாயோ, குரங்கோ நடிப்பதை சித்ரவதை என்று மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் ப்ளூகிராஸ் இருக்கும் ஊரில் தான் இத்தனை மட்டன் கடைகள். பிரியாணி ஹோட்டல்கள்.

  யோசித்துப் பார்த்தால் குலை நடுங்குகிறது.

  ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள்.

  போதுமடா அசைவம்.

  • மீனாட்சி சுந்தரம்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
  • kuttysamy 1:42 முப on ஒக்ரோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ரசித்தேன் …தீபாவளி வாழ்த்துக்கள்

  • REKHA RAGHAVAN 1:47 முப on ஒக்ரோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சிந்திக்கவேண்டிய விஷயம். அருமையான பதிவு.

   ரேகா ராகவன்.

  • Vivek 11:17 முப on ஒக்ரோபர் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   கறிக்கடையில் , இறைச்சி வாங்கும் போது கூட இது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழம்பு கொதிக்கும் போது, கூடவே அந்த உணர்வும் கொதித்து ஆவியாகிவிடும். கறி சாப்பிடுவது மட்டுமே மிருகவதையா ? நம்ம அன்றாட வாழ்க்கைல எத்தனையோ இருக்கே! நாம் உபயோகிக்கும் செருப்பு, ஷு, பர்ஸ், பெல்ட், பை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வேளை அது செத்துப்போன மிருகத்தின் தோல் என்பதால் அதை வெஜிடேரியன் மக்களும் ஏற்றுக்கொள்கிறார்களோ ?

   • மீன்ஸ் 9:52 முப on ஒக்ரோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    300 வருசத்துக்கு ஒரு முறை தான் இப்படி வருமாம்.
    அப்படியாவது இரண்டு லக்‌ஷம் உயிரை காப்பாத்தியிருக்கார்னா கடவுள் இருக்கார் தானா?

  • Karthikeyan A 11:20 முப on ஒக்ரோபர் 23, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பேசாமல் தேசிய விலங்காக அறிவித்துவிட்டால் எப்படியிருக்கும்? பாருங்கள், இனிமேல் டால்பின்களை கொல்லமாட்டார்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி