Updates from மார்ச், 2016 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 8:53 am on March 5, 2016 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  அழுத்தம் 

  ஏழாவது படிக்கும் லதிகாவை பிரின்சிபால் அழைப்பதாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது.

  அமெரிக்க பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் எல்லாம் இல்லை. பிரின்சிபால்தான்.

  திடீரென்று ஆஃபிஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டால் பெரும்பாலும்ஏதேனும் பிரச்சனையாகவே இருக்க முடியும்.

  கதவருகே நின்று, “ஹலோ மிஸ்டர் கென், மே ஐ கமின்?” என்கிறாள் லதிகா. முதல்வரானாலும் சரி, ஜனாதிபதியானாலும் சரி சின்னக் குழந்தை கூட பேர் சொல்லிக் கூப்பிடுவதே வழக்கம்.

  “உள்ளே வா லதிகா. சிட் டவுன்.”

  counsஅவர் முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்து லதிகாவுக்குள் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனால் அவருக்கு பக்கவாட்டில் ஸ்கூல் கைடன்ஸ் கவுன்சிலர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாய்த் துணுக்குறவே செய்தாள் லதிகா.

  “ஹவ் ஆர் யூ டூயிங்?” என்றார் பிரின்சிபால்.

  “ஐயாம் குட். தாங்க்ஸ் மிஸ்டர் கென்.”

  கைடன்ஸ் கவுன்சிலர் பெண்மணி அவளை உற்றுப் பார்த்து, “ஈஸ் எவெரிதிங் ஆல்ரைட்?” என்று கேட்டார்.

  “எஸ். ஆல்ரைட் மிஸஸ். அமெண்டா.” – லதிகா குழப்பத்துடனே பதில் அளித்தாள்.

  “ஹவ் ஆர் யூ ஃபீலிங்? ஆர் யூ நார்மல்?”

  “எஸ் ஐயாம் நார்மல்.”

  “நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம். எதுவானாலும் நீ எங்களிடம் வந்து கலந்து பேசலாம்.”

  லதிகாவின் குழப்பம் உச்சத்துக்குப் போனது.

  “ஷ்யூர். ஐ வில் டூ.”

  “உன் பேரன்ட்ஸ் ரொம்ப மிரட்டுகிறார்களா?”

  “வாட்?”

  “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை.” என்றார் கவுன்சிலர்.

  வாஷிங்டன் டி.சி பகுதியில் டி.ஜே ஹை ஸ்கூல் ரொம்ப பிரபலம். ஸ்கூல் பிராஜெக்ட்டாக ஸாட்டிலைட் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகள் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தச் சிறப்புப் பள்ளிக்கு மட்டும் வசிக்குமிடம் முக்கியமில்லை; நுழைவுத் தேர்வு வைத்தே மாணவர் தேர்வு செய்வார்கள். அதற்குக் கடும் போட்டி இருக்கும். போட்டி என்றால் இந்திய, சீன பெற்றோர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. இயல்பாகவே திறமை மிகுதியான குழந்தைகளுக்கு அதிகபட்ச சவால்கள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு தீவிர கோச்சிங், நிறைய மன அழுத்தம் கொடுத்து பூனைகளுக்கு புலி போல சூடு போட்டு அனுப்பும் வேலைகள் நிறைய நடந்து வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே.

  கவுன்சிலர் தொடர்ந்து பேசினார். “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை. அதற்காக தற்கொலை என்ற சிந்தனை எல்லாம் தவறு. அதற்காக என்றில்லை, எதற்காகவும். உன்னுடைய பெற்றோரைக் கூப்பிட்டு நாங்கள் பேசுகிறோம். நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எது முடியுமோ, எது நன்றாக வருமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். ”

  லதிகா ரொம்பவே திடுக்கிட்டுப் போனாள். “மிஸ்டர் கென் அண்ட் மிஸஸ் அமெண்டா, என் பெற்றோர் என்னை எதுவும் சொல்வதில்லை. தற்கொலை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை.”

  இப்போது அவர்களும் குழம்பிப் போனார்கள். யாருக்கோ ஃபோன் போட்டார்கள். லதிகாவைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார்கள். உண்மையில் இன்னொரு பெற்றோர் அந்த ஹைஸ்கூலில் சேர தங்கள் பெண்ணுக்கு உச்சபட்ச மன அழுத்தம் தந்ததில் அந்தப் பெண் தற்கொலை செய்யலாம் போல இருப்பதாக நண்பனிடம் சொல்ல, நண்பன் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அந்த அம்மாவோ PTA (Parents Teacher Association) தலைவி. உடனே பள்ளிக்குத் தகவல் தந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் திலகா. திலகா – லதிகா இந்தியப் பெயர் குழப்பத்தில் திலகாவுக்கு பதிலாக லதிகாவைக் கூப்பிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

  இப்போது மேற்படி உரையாடலை மறுபடியும் படித்து சிரியுங்கள். அமெரிக்கா வந்த பிறகும் பிள்ளைகளுக்கு தேவையற்ற மன அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் சில இந்தியப் பெற்றோர்களை நினைத்து வருந்தவும் செய்யுங்கள்.

  – சத்யராஜ்குமார்

   
 • மீனாட்சி சுந்தரம் 4:31 am on December 30, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கடவுள், கண்டக்டர், பஸ்,   

  கால் ஃப்ரம் கடவுள் 

  வேலை முடிந்து கிளம்பும் அந்த இரவு எட்டு மணியிலும் சென்னைக் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது பஸ்ஸில். டிக்கெட் வாங்க லேட்டாவதில், நெருப்பாய்க் கடுகடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். இதில், மொபைலில் மனைவியின் அழைப்பு வேறு.லேசான காய்ச்சலில் தூங்கத் துவங்கிய அம்மாவை, துணைக்கு ஆளில்லாததால் விளையாட அழைத்துத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் என் மூன்றரை வயது மகன் டேனி வீட்டில். அவனைச் சமாதானம் செய்யச் சொல்லி, என்னை ஃபோனில் அழைத்தாள் மனைவி.

  பேச ஆரம்பித்ததும் கண்டக்டர் கத்தினார்.

  “ஏம்பா… டிக்கெட்டை வாங்கிட்டுப் பேசேன். என்னதான் இருக்கோ அந்த ஃபோன்ல..? எங்க தாலிய அறுக்கறானுக..!”.

  பஸ்ஸில் எல்லோரும் திரும்பி என்னையே பார்க்க, மன்னிப்புக் கேட்டு டிக்கெட்டை வாங்கித் திரும்பும்போது டேனி கேட்டான்.

  “என்னப்பா… பஸ்ஸிலயா வர்ற..?”.

  நான் வர இருக்கும் ஆபத்து புரியாமல், “ஆமாடா..!” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..?” என்று கேட்டான்.

  நான் “கண்டக்டர் மாமாடா…!” என்றதுதான் தாமதம், “ஃபோனைக் கண்டக்டர் மாமாகிட்டக் கொடு…!” என்று ஆரம்பித்துவிட்டான்.

  கண்டக்டரோ கொடூரக் கோபத்தில் எல்லோரையும் கத்திக் கொண்டிருந்தார்.

  என்ன செய்வது என்று யோசித்தபடியே, நானே கண்டக்டர் போல கொஞ்சம் மிமிக்ரி எல்லாம் பண்ணிப் பார்த்தேன். நம்ம ஃபெர்பாமென்ஸ் நாலு வயசுக் குழந்தையைக் கூட ஏமாற்றத் துப்பில்லை.

  கடைசியாய் டேனி கோபத்தில், “ஃபோனை கண்டக்டர் மாமாகிட்டக் குடுடா..!” என்றான். இனி மரியாதையில்லை.

  குழந்தையை மேலும் ஏமாற்ற மனதில்லாமல் நேராய்க் கண்டக்டரிடம் போய், “சார்.. என் பையன் உங்ககிட்டப் பேசணும்ங்கிறான். ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டுக் கொடுங்க சார்…ப்ளீஸ்..!”.

  ‘ஒருவேளை லூஸோ…!” என்று யோசித்தபடி நிமிர்ந்தவர், என் உடையைப் பார்த்துவிட்டு, “சின்னப் பையனா சார்..?” என்றபடி ஃபோனை வாங்கினார்.

  ஒரு மூன்று விநாடிகள்தான் இருக்கும். “ஆமாடா…”, “சாப்டுட்டேன். நீ சாப்டுட்டியா..?”, “ஆமா, அங்கிள்தான் விசிலடிச்சேன்..” என்றவர், அவன் கேட்டானோ என்னவோ மேலும் ஒருமுறை ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டே விசிலடித்தார். அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சியாய் ஃபோனை என்னிடம் கொடுத்தவர், அடுத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

  நானோ எங்கே என் பையன், ‘டிரைவர் மாமாகிட்ட ஃபோனைக் கொடு..!’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..!’ என்று வேகவேகமாய் ஃபோனைக் கட் செய்தேன்.

  அதன்பிறகு, முக்கால் மணி நேரம் என் ஸ்டாப் வரும்வரை கூட்டம் அப்படியே கொஞ்சமும் குறையாமல்தான் இருந்தது. ஆனால், அந்தக் கண்டக்டர் மிகுந்த சந்தோஷத்துடனே எல்லோரையும் நடத்திக் கொண்டு வந்தார்.

  எங்கோ முகம் தெரியாத ஒரு நபரின் மாலையை என் குழந்தை மகிழ்ச்சிகரமாக்கியது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.

  என் குழந்தை மட்டுமில்லை… எந்தக் குழந்தையானாலும் சொல்கிறேன்.

  கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!

  ********

   

  டேனியின் உலகம் இங்கேயும் விரிகிறது:

   
 • சித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: காதல் கதை, , பாடம், ஷேக்ஸ்பியர்   

  பன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை 

  ‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும்? உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா?’

  ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’

  ‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”

  ‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’

  தற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night”  என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

  பாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:

  வயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள்? அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்?

  ஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்?

  ஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

  பிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.

  நான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.

  “எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க? இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா?” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.

  “டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.

   
  • REKHA RAGHAVAN 7:40 முப on திசெம்பர் 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//

   அதானே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

  • என். சொக்கன் 1:01 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

  • காஞ்சி ரகுராம் 1:36 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே!). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

  • செந்தில் 10:43 பிப on திசெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂

  • சித்ரன் 12:34 பிப on திசெம்பர் 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நன்றி! @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி