Updates from ஒக்ரோபர், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 9:38 pm on October 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கல்கி, kalki   

    கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியா… 

    கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியான எனது ராட்சஸம் சிறுகதை குறித்து ஹொசூரிலிருந்து பாலுசாமி எழுதிய கடிதம்…

    “ராட்சஸம்” படித்தேன். கதையின் எந்த அம்சத்தை முதலில் எடுத்துக்கொண்டு பேசுவது என்று தெரியவில்லை. அத்தனையும் உயிரோட்டமான பதிவுகள். இல்லை இல்லை நிகழ்வுகள். எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மெசேஜின் சமூக நாட்டம், அதை சொல்லியிருக்கும் இயங்கியல் நடை, ஆங்காங்கே சில மருத்துவக் குறிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய அடையாளமாய் அந்த பொன்னம்மாக் கிழவியின் உயர்ந்த பண்பை மிக இயல்பாய் சொல்லியிருப்பது, வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இயங்கு முறை பிசகாமல் கண் முன்னால் கொண்டு வந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னாம்மா போன்ற கோடிக்கணக்கானவர்களின் சிறு தொழிலை விழுங்கி மேலாதிக்கம் செய்யும் ராட்சஸ பன்னாட்டு நிறுவனங்களை தோலுரித்திருப்பது என, இது ஒரு சிறுகதை வடிவமாக இருந்தாலும் ஒரு தலைமுறை நிகழ் போக்காகவும், படிப்பவரை அந்தச் சூழலோடும், கதைக்கு அப்பால் சொல்லி வரும் சம்பவங்களில் மூழ்கடித்து வெளி வர வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் உழைக்கும் மக்களின் குரல். வாழ்த்துக்கள்!

    ராட்சஸம் படிக்க…
    http://kalkionline.com-ல் இலவசமாக பதிவு செய்து கொண்டு –
    http://kalkionline.com/kalki/2010/oct/24102010/kalki0902.php என்னும்
    சுட்டிக்கு செல்லவும்.

    பின் இணைப்பு: கல்கி ஆன் லைனில் சென்று படிக்க இயலவில்லை என சில நண்பர்கள் தெரிவித்தனர். என்னுடைய தளத்திலும் இக்கதை படிக்கக் கிடைக்கும். சுட்டி: http://www.sathyarajkumar.com/monopoly

    சத்யராஜ்குமார்

     
    • BALAJI 10:43 பிப on ஒக்ரோபர் 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் கதை மிக அருமை இப்படியும் நடக்குமா என அதிர்ந்தேன்
      வாழ்த்துக்கள்

    • Venkat 6:43 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மனதைக் குலுக்கிப் போட்டது இக்கதை. பாவம் பொன்னம்மா பாட்டி. சாப்பிடும் கற்காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை இவர்கள். தில்லியில் கூட தர்பூசணி பழங்களுக்கு சிவப்பு திரவங்களை இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தி மேலும் சிவப்பாக்குகிறார்கள்.

    • REKHA RAGHAVAN 6:51 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதைக் களம். சரளமான நடை. மொத்தத்தில் சுபர்ப்.

      ரேகா ராகவன்

    • பத்மா அர்விந்த் 7:42 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமை. ஆனால் முடிவு ரொம்பவே சினிமாத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுத்து வாங்கிவிடுவதாக சொல்லி இருந்தால் நடைமுறையை ஒத்து இருக்குமோ என்னவோ.

      • சத்யராஜ்குமார் 7:26 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி. இங்கே அமெரிக்காவில் கூட ஜிஎம்ஓ விதைகள் சேகரிக்கப்படாமல் கண்காணிக்க உளவு ஏஜண்ட்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகள் நிறுவனங்களால் சட்டரீதியான மிரட்டலுக்கு உட்படுத்தப்படுவதாகப் படித்தேன். அதனடிப்படையிலேயே இது போன்ற நிகழ்ச்சி அமைத்தேன்.

        • சுப இராமனாதன் 4:30 முப on ஒக்ரோபர் 27, 2010 நிரந்தர பந்தம்

          Food Inc என்ற 2008 ஆவணப்படத்தில் Monsanto போன்ற நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்கள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

          சில வருடங்களுக்கு முன் நம்மூர் வேப்பமரம் சார் பொருட்களுக்கும், மஞ்சளுக்கும் இதே Monsanto காப்புரிமை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.

          நாம் கவனிக்கும் ஒன்றை (கவனித்து, எளிதில் மறக்கும் ஒன்றை), குறிப்பெடுத்து, கதையாக்கம் செய்வதில் சத்யராஜ்குமாருக்கு நிகரிலர்!

          All-Mart பெயர் – நல்ல தேர்வு.

          நல்லதொரு கதை எழுதியமைக்கும், அது பிரசுரம் ஆகியதற்கும் வாழ்த்துகள்.

    • Vijay 8:50 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நெஞ்சை தொட்ட கதை.

    • செந்தில் 7:40 பிப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வாழ்த்துக்கள் சத்யா. சுட்டியில் சென்று படிக்க முடியவில்லை (story link promting for login, though already logged in). படிக்க ஆவல், உதவி தேவை.

    • பத்மா அர்விந்த் 10:37 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Saccharin பற்றீய வழக்கை சொல்கிறீர்களா? வருடங்கள் பல கடந்து விவசாயிக்கு சாதகமாகவே முடிந்தது. நிறைய பணபல நிறுவனங்கள் தோற்றன. நடட் ஈடு கொடுக்க வழக்கின் செலவு உட்பட தீர்ப்பாயிற்று.

  • சத்யராஜ்குமார் 7:50 pm on August 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: இலவசக் கொத்தனார், டைனோபாய், பாஸ்டன் பாலா, பெனாத்தல் சுரேஷ், வெட்டிப்பயல், ஸ்ரீதர் நாராயணன், ILA, KRS   

    ஜஸ்ட் எ மினிட். 

    அந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கு பதினாறு வயதிருக்கலாம். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்போது நான் அட்லாண்ட்டிக் சிட்டியில் சீசர்ஸ் என்னும் சூதாட்ட விடுதியின் பின் வாசலில் நின்றிருந்தேன். சற்றே இருட்ட ஆரம்பித்திருந்தது. கூப்பிடு தூரத்தில் கடல். கடற்கரையை ஒட்டி மரப்பலகைகளால் ஆன அகலமான பிளாட்பாரம். இருமருங்கிலும் கடைகள். இதற்கு போர்டு வாக் என்று பெயர். திருவிழா போல ஜனங்கள் எதிரும் புதிருமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அரை குறை ஆடை யுவதிகளுக்கும் பஞ்சமில்லை. போதையினாலோ, கொண்டாட்ட மனநிலையினாலோ தள்ளாடிக் கொண்டும், கூக்குரலிட்டுக் கொண்டும் சாரை சாரையாய் கடந்து செல்லும் ஜனங்கள். ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக் கொள்பவர்களின் ப்ளாஷ் மின்னல்கள்.

    அவளுக்கு நான் பதில் சொல்ல முயன்ற கணத்தில் என் செல்போன் ஒலித்தது.

    “சத்யா, நான் இளா பேசறங்க. நாங்க சீஸர்ஸுக்கு பின்னால வந்துட்டோம். நீங்க எங்க இருக்கிங்க?”

    துபாயிலிருந்து பணி நிமித்தமாய் அமெரிக்கா வந்திருக்கும் பெனாத்தல் என்னும் ப்ளாகரையும், ராம்சுரேஷ் என்ற எழுத்தாளரையும் ஒரு சேர சந்திப்பதற்காகத்தான் அங்கே காத்திருந்தேன். இதோ வந்து விட்டார்கள்.

    அந்தப் பெண்ணிடம், “ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்… ” என்று சொல்லி விட்டு, “நானும் அங்கதாங்க நிக்கறேன்.” என்று சொல்லிக் கொண்டே கண்களால் ஜனத்திரளை அறுத்த படி மெல்ல நடந்து சென்றேன்.

    சற்று தொலைவில் இலவசக் கொத்தனார், கேயாரெஸ், வெட்டிப்பயல் பாலாஜி, ஸ்’ரீதர் நாராயணன் மற்றும் டைனோபாய் (என அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர்) புடை சூழ சுரேஷ். நெடு நெடுவென உயரமாய் தெரிந்தார். முகத்தில் தாராளமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு. அமெரிக்க வாழ் இந்தியர்களை விட வெள்ளை வெளேர் நிறம்.

    அந்த அசைவ நகரத்தில் வந்ததும் வராததுமாய் பியர்ஸ் மால் எனப்படும் சைவ ஸ்தலத்துக்கு அவர்களை கூட்டிச் செல்ல நேர்ந்ததை எண்ணி லேசாக நெஞ்சம் விம்மினாலும் அங்கே நடந்த ஒலி ஒளி தண்ணீர் நடனத்தை அந்த இளைஞர் கூட்டம் ரசிக்கவே செய்ததால் ஒரு சொட்டு திருப்தி.

    ‘வாட்டர் ஷோ எங்கே எங்கே?’ என போனில் விசாரித்துக் கொண்டே இருந்த பாஸ்டன் பாலாஜி சினிமா போலிஸ் போல எல்லாம் முடிந்த பின் வந்து சேர்ந்தார்.

    அதன் பின் பேசிக் கொண்டே அரை மணி நேரம் போர்டு வாக். சில மணி நேரம் பிட்சா கடை பெஞ்ச்சு. வாய் ஓயாமல் பேச்சு. பற்களும் தாடையும் சுளுக்கிக் கொள்ளுமளவு சிரிப்பு.

    பெரும்பாலும் எழுத்தும், எழுத்தாளர்களும் சார்ந்த அரட்டை. இணைய எழுத்தாளர்கள், இணையா எழுத்தாளர்கள் பற்றி கிண்டல். சமகால எழுத்தாளர்கள், அகால எழுத்தாளர்கள் குறித்த அலசல். மணி இரவு பனிரெண்டு ஆகி விட்டிருக்க, கேசினோ சிட்டிக்கு வந்து விட்டு சூதாட்ட விடுதிக்கு வெளியே அலைவது என் பெயருக்கு முன்னாலுள்ள அடைமொழி போலுள்ளது என்று வெட்டி பாலாஜி விசனப் பட, பெனாத்தல் சுரேஷை அழைத்துக் கொண்டு கேசினோவுக்குள் செல்ல முடிவானது.

    அத்தோடு சந்திப்பை முடித்துக் கொண்டு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட நான், மீண்டும் சீஸர்ஸ் பின் வாசலை நெருங்கிய போதுதான் முதலில் என்னிடம் அங்கே பேசிக் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பற்றிய ஞாபகம் சுருக்கென்று மூளையைக் குத்தியது.

    அவள் இத்தாலியா, அமெரிக்காவா, ப்ரெஞ்ச் வம்சாவளியா என தீர்மானமாய் சொல்ல இயலவில்லை. ஆனால் கவலையின் ரேகைகள் அழுத்தமாய் அவள் முகத்தில் பதிந்திருந்தது. இன்னமும் ப்ளஸ் டூ தாண்டாதவள் என்பதை கண்களைக் கவ்வியிருந்த வெகுளித்தனம் மூலம் அறிய முடிந்தது.

    லேசாய் தளும்பியிருந்த விழிகளோடு, “உன்னோட போனை நான் உபயோகிக்கலாமா? ” என்றுதான் கேட்டாள்.

    என் நெற்றியில் அரும்பிய கேள்விக்குறிகளை உணர்ந்து மேலும் சொன்னாள். “கூட்டத்தில் என்னோட குடும்பத்தை விட்டு பிரிஞ்சிட்டேன். அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணனும்.”

    எனக்கு உதவ விருப்பமாகவே இருந்தது. நேர்மையான பெண்ணாகத்தான் தெரிந்தாள். ஆனாலும் தயக்கம். செல்போனை இரவல் கொடுத்து தீவிரவாதியாக மாட்டிக் கொண்ட அப்பாவி ஆஸ்திரேலிய இந்தியர் நினைவுக்கு வந்து பயமுறுத்தினார்.

    ஏன் பல வருஷங்களுக்கு முன்னால் எனக்கே இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்த புதுசு. ஒரு நேர்முகத் தேர்வுக்கு என்னை காரில் அழைத்துச் சென்றவர், முடிந்த பிறகு கூப்பிடச் சொல்லி செல்போனை இரவல் தந்து விட்டுப் போய் விட்டார். இண்ட்டர்வியூ முடிந்த பின் பார்த்தால் சார்ஜ் காலாவதியாகி உயிரிழந்து கிடந்தது. போவோர் வருவோரிடமெல்லாம் இரவல் கேட்டுப் பார்த்தேன். எல்லோரும் முகத்துக்கு நேராக, “ஸாரி, தர முடியாது. ” என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனார்கள்.

    நேர்முகத் தேர்வளித்த கம்பெனியின் ரிசப்ஷனுக்கே திரும்பிச் சென்று, ஒரு போன் பண்ணிக்கலாமா எனக் கேட்க, சுவரில் மாட்டியிருந்த பொதுத் தொலைபேசியைக் காட்டி, “அதைப் பயன்படுத்து.” என்று நிர்தாட்சண்யமாய் சொன்னார்கள்.

    குவார்ட்டர் எனப்படும் 25 சென்ட் சில்லறைக் காசைப் போட்டால்தான் அது வேலை செய்யும். நல்ல வேளையாய் என்னிடம் இருபது டாலர் இருந்தது. இந்தியாவிலிருந்து கொண்டு வந்த சொற்ப சொத்தில் மிச்சம் இருந்தது அது மட்டும்தான். எனக்கு அடுத்து இண்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண காத்திருந்த தெலுங்கு பெண்ணிடம் தயங்கித் தயங்கி, “போன் பண்ணனும். குவார்ட்டர்ஸ் இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே இருபது டாலரை நீட்டினேன்.

    இருபது டாலரை வாங்கிக் கொள்ள மறுத்தாள். ஆனால், இண்ட்டர்வியூவில் என்னவெல்லாம் கேட்டார்கள் என்று என்னை அவள் பத்து நிமிஷம் பர்சனல் இண்ட்டர்வியூ செய்து தெரிந்து கொண்டு விட்டு, அதன்பின் பர்சில் துழாவி நாலைந்து குவார்ட்டர் நாணயங்களை எடுத்துக் கொடுத்தாள்.

    புதிய தேசத்தில், முகமறியா நபர்களுக்கு மத்தியில் நடுக்கடலில் தத்தளித்தது போன்ற உணர்வு. அதே போலத்தான் இப்போது அந்தச் சிறிய பெண்ணுக்கு இருந்திருக்கும். இந்த இடம் பார்ப்பதற்கு கோலாகலமாய் இருந்தாலும் மிக மிக அபாயகரமான இடமும் கூட. புகையும், சாராயமும், மதுவும், மாதருமாய் குழந்தைகளுக்கு லாயக்கில்லாத தலம்.

    இப்படிப்பட்ட இடத்தில் குழந்தையுமல்லாத, குமரியுமல்லாத ஒரு அழகான பெண் திசை மாறி தனியே அகப்பட்டுக் கொண்டு – அங்கே கடந்து செல்லும் நூற்றுக் கணக்கான ஜனங்களில் ஏனோ என் மேல் நம்பிக்கை கொண்டு உதவி கேட்டிருக்கிறாள்.

    போன் தர தயக்கமாயிருந்தால் இரண்டு டாலர் கொடுத்து பொதுத் தொலைபேசியில் பேசுமாறு சொல்லி விட்டு வந்திருக்கலாம் என்று இப்போது யோசனை தோன்றி மனசு படபடவென்று அடித்துக் கொள்கிறது.

    நான் பாட்டுக்கு ஜஸ்ட் ஏ மினிட் என்று விட்டேற்றியாய் சொல்லி விட்டுப் போயே போய் விட்டேன்.

    அவள் நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாய் இருந்தது.

    பெனாத்தல் சுரேஷையும் மற்ற நண்பர்களையும் சந்தித்த சந்தோஷத்தை விடவும், அந்த வெகுளிப் பெண்ணுக்கு உதவ மறுத்த குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருக்க கனத்த மனத்துடன் அட்லாண்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வந்தேன்.

    வெடிகுண்டுகளால் மனிதர்களை அழிக்கும் தீவிரவாதம் இது போன்ற தருணங்களில் இயல்பாகத் துளிர் விடும் மனிதாபிமானத்தையும் சேர்த்து அழித்து வந்திருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

     
    • வினோ 8:02 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல ஒரு சிறுகதை படித்த திருப்தி

    • sureshkannan 8:17 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல கட்டுரை. இதை நல்லதொரு சிறுகதையாக மாற்றியிருக்கலாம் என்று ஏனோ தோன்றியது. 🙂

      • சத்யராஜ்குமார் 3:17 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சுரேஷ் கண்ணன், சிறுகதை ஆகியிருக்க வேண்டிய விஷயம்தான். அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக ஒரு கதையைப் போன்ற வர்ணனைகளுடன் இக்கட்டுரையை எழுதினேன். எழுதி முடித்ததும் சுஜாதாவின் பொய் சிறுகதையும் நினைவுக்கு வந்தது.

    • Vijayashankar 9:39 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நீங்கள் செய்தது தான் சரி. I missed my parents என சொல்லும் ஆட்களை அங்கும், லாஸ் வேகசிலும், பார்த்துள்ளேன். அவர்கள் எல்லாம் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். அடிக்ட்ஸ்.

      • Vijayashankar 9:50 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சரி அந்த கவர்டர்கள் கிடைத்த இன்டர்வியுவில் வெற்றி பெற்றீர்களா? அந்த பெண் தட்டி சென்றாரா? சுவாரசியம். 🙂

      • சத்யராஜ்குமார் 3:19 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        /வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். அடிக்ட்ஸ்./
        இந்தப் பெண் அப்படித் தோன்றவில்லை.

        /அந்த பெண் தட்டி சென்றாரா? /
        ட்விட்டரில் சொன்னது போல் முடிவு தெரியும் முன் இன்னொரு பக்கம் வேலை கிடைத்துப் போய் விட்டேன்.

    • ஸ்ரீதர் நாராயணன் 9:39 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஓ… செல்ஃபோன் விஷயத்தில் இவ்வளவு சங்கதிகள் இருக்கிறதா? 😦

      நீரூற்று நடனம் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி!

    • கார்த்திக் 11:27 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      // குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருக்க கனத்த மனத்துடன் அட்லாண்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வந்தேன் //

      யாராவது உதவி கேட்டு வந்து உதவாமல் சென்றுவிட்டால், நிச்சயம் குற்ற உணர்ச்சி நம்மைத் தொடரும். ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு உதவலாமல்லவா ? (நாம் எந்த வகையிலும் பாதிக்கப் படாமல்).

      • சத்யராஜ்குமார் 3:24 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        கண்டிப்பாக உதவத்தான் வேண்டும். இந்த சம்பவத்தின் போது ஏனோ வேறு யாரேனும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அலட்சிய மனப்பான்மை தோன்றி விட்டது.

    • என். சொக்கன் 12:09 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சத்யராஜ்குமார். பாராட்டுகள்.

      இங்கே பெங்களூரில் ‘ஊருக்குத் திரும்பிப் போகச் சில்லறை இல்லை. உதவி செய்ங்க’ என்று நல்ல ஆங்கிலத்தில் கெஞ்சும் முதியவர்களைப் பார்க்கலாம். ஒருமுறை ஐம்பது ரூபாய் கொடுத்து ஏமாந்திருக்கிறேன். அப்புறம் அப்படி யார் தென்பட்டாலும் அவர்கள் வாயைத் திறப்பதற்குள் மறுத்துவிடுகிறேன்.

      ஆனாலும் சங்கடமாகதான் இருக்கிறது. நிஜமாகவே வீட்டுக்குத் திரும்பிச் செல்லமுடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு உதவி செய்யாமல் விட்டிருப்போமோ என்று.

      – என். சொக்கன்,
      பெங்களூரு.

      • சத்யராஜ்குமார் 3:27 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி சொக்கன். பெரியவர்கள் குறித்த உங்கள் வருத்தம் நியாயமே. அவள் பணம் கேட்டிருந்தால் கொடுத்திருக்க மாட்டேன். அதற்காக வருந்தியிருக்கவும் மாட்டேன்.

    • கீதப்ப்ரியன்|geethappriyan 12:17 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையாக எழுதியுள்ளீங்கள் சத்யராஜ்குமார்.சம்பவம் நன்றாக இருக்கு

    • கீதப்ப்ரியன்|geethappriyan 12:23 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பினாத்தலார் நல்ல கலகலப்பான மனிதர்

    • கீதப்ப்ரியன்|geethappriyan 12:30 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆனாலும் என்ன செய்வது?
      இங்கே அமீரகத்தில் வயதான பலர் ஹார்ட்பேஷண்ட் என்று நிறுத்தி உதவி கேட்கின்றனர்,
      பலர் குடும்பத்துடன் நல்ல காரில் வந்து நம்மை வழிகேட்பதுபோல நிறுத்தி பெட்ரோல் காலியாகிவிட்டது,ஓமான் போகனும்,கைக்குழந்தையை பார்,உதவு என்கின்றனர்.
      பலர் அலுவலகத்துக்குள்ளேயே வந்து மெடிகல் அட்டையை காட்டி உதவசொல்கின்றனர்.ப்ல அரபி வீட்டு பிள்ளைகள் போர்ஷே காரை பார்க் செய்ய பார்கிங் மெஷினுக்கு சில்லரை போட கடந்து போகும் நம்மிடம் திர்காம் ஸ்டைலாய் கேட்பார்கள்.அல்லது சிகரெட் கேட்பார்கள்,அதுவும் இல்லையா,பார்கில் உட்கார்ந்து இருக்கும் உங்களிடம் என் போனில் பேட்டரில் இல்லை,உன் போன் கொடு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால்,என் ஃப்ரெண்ட் பேசுவான் என்பார்கள்.
      ===
      இதுபோல ஏன் அடிக்கடி நடக்கவேண்டும்,அதுவும் எங்கள் நண்பர்கள் எல்லோருமே அதே வசனத்தை அச்சு பிசகாமல் இப்படித்தானே கேட்டான்?என உச்சரிபோம்,ஏமாந்துவிட்டோமே என வெட்கமாயிருக்கும்!!!நேர்மையானவர்களுக்கும் திண்டாட்டமே!!!

    • சித்ரன் 12:34 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஏதோ பதிவர் சந்திப்புப் பற்றிய பதிவோ என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஃபோட்டோவும் அப்படித்தான் சொன்னது. ஆனால் முடிவு மனசை நெருடவைத்துவிட்டது. (நல்ல சிறுகதையாக எழுதியிருக்கலாம்.)

      @சொக்கன்: இந்த மாதிரி ‘ஊருக்குத் திரும்பிப் போகச் சில்லறை இல்லை. உதவி செய்ங்க’ கேஸை கிட்டத்தட்ட அனைவருமே பார்த்திருப்பார்கள். ஒரு தடவை சென்னைக் கடற்கரையில் ஒரு குடும்பம் (அப்பா, அம்மா, ஒரு வளர்ந்த பையன்) இதைச் செய்துகொண்டிருந்தது. ஒருத்தர்கூட (நான் உட்பட) உதவவில்லை. பீச்சில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் எல்லோரிடமும் சளைக்காமல் உதவிகேட்டு, அவர்களின் சின்ன முகம் திருப்பலில் உதவி மறுக்கப்பட்டு அவர்கள் மெல்ல நடந்துபோவதை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். உதவாததற்கு ஏமாந்துவிடக்கூடாது என்கிற ஒரு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.

      • பத்மா அர்விந்த் 5:32 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சித்ரன், நாம் ஏமாறமல் இருப்பதற்கான ஜாக்கிரைதை உணர்வு அவசியமே, ஆனாலும் அதீத துன்பத்தில் இருப்பதாக சொல்லும் (உண்மையிலேயே அப்படியான துன்பத்தில் இருந்தால்) ஒருவருக்கு உதவாமல் வந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வை விட இழக்கும் ஓரு சில ரூபாய் பெரிதல்லவே. பெரும்பாலான சமயம் நான் என் நோக்கம் பிழையில்லை, அவர்கள் என்னை ஏமாற்றினால் அந்த தவறான நோக்கம் அவர்களதுதானே, என்றே எண்ணி, நான் ஏமாளியாக என்னை நினைப்பதில்லை

      • சத்யராஜ்குமார் 3:31 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சித்ரன், பத்மா அர்விந்த் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். அளிப்பதாக முடிவு செய்தால் ஆராயக் கூடாது.

    • செந்தில் 3:53 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இது ஒரு நல்ல கட்டுரை (கதை என்று எடுத்து கொள்ள மனம் மறுக்கிறது). இது போன்ற தயக்க தருணங்கள் இப்பொழுது நிறைய நடக்கிறது. பெங்களூரில் வாழும் நான் யாருக்கும் பைக்கில் லிப்ட் தருவதில்லை. காரணம் வழிப்பறி பற்றிய பயம். தீவிரவாதம் மட்டும் இந்த தயக்கத்திற்கு காரணம் இல்லை. இது போன்ற திருட்டு பயன்களும் இருக்க தான் செய்கின்றன. முன்னேறிய கலிகாலம்.

    • பத்மா அர்விந்த் 5:25 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அடுத்தமுறை இப்படி யாரேனும் கேட்டால், தயவு செய்து ஒரு காவல் அதிகாரி அல்லது செக்யூரிட்டியிடம் சொல்லுங்கள். சரியான காரணமோ அல்லது தவறான நோகில்லானாதோ அவர்கள் உதவிக்கொள்ளூவார்கள்.
      விஜயஷங்கர், மனிதர்கள் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை. அந்த பெண் உண்மையிலேயே தம் அப்பா அம்மாவை தேடி இருக்க கூடும், அவளுடைய செல்போனில் சார்ஜ் தீர்ந்து போயிருக்க கூடும். 16 வயதென்பதால் நான் போனில் கூப்பிடுகிறேன் என்று சொல்லி தனியாக நடந்திருக்க கூடும். 16 வயதுக்குழந்தைகள் தங்களை adult ஆக நினைத்துக்கொள்ளூம் பெரிய குழந்தைகள்

      • சத்யராஜ்குமார் 3:38 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        ஏனோ அந்த சமயம் எனக்கு புத்தி சரியாய் வேலை செய்யவில்லை. இதெல்லாம் வேண்டாம், விலகிப் போ என்ற உள்ளுணர்வின் கட்டளைக்கு இளா-வின் தொலைபேசி அழைப்பு சாதகமாகிப் போய் விட்டது.

    • REKHA RAGHAVAN 6:07 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      “ஜஸ்ட் எ மினிட்”-டை ஜஸ்ட் லைக் தட் படித்துவிட்டு போக முடியவில்லை. லேசாய் தளும்பியிருந்த விழிகளோடு இருந்த அந்த பெண் குழந்தைக்கு நிஜமாகவே உதவி தேவைப்பட்டிருக்குமோ? நிகழ்வை நீங்கள் விவரிக்க விவரிக்க நெஞ்சுக்குள் ஒருவித சோகம் வந்து அடைத்தது.அவளுக்கு எந்த துன்பமும் நேர்ந்திருக்காது என்று நம்புவோம்

      ரேகா ராகவன்.

    • பத்மநாபன் 6:57 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அவசர உலகத்தில் நம்பிக்கையின்மை கூடி வருவது உண்மை. அந்த ஒரு நிமிடத்தில் எதுவும் நடக்கலாம் . குற்றம் எதோ என்று எண்ணி முன் ஜாக்கிரதையாக தப்பித்து விடலாம் என்றிருந்தது குற்ற யுணர்வில் முடிந்தது ஒரு சிறு கதையை சிறப்பு செய்யலாம் , ஆனால் நேரில் அனுபவித்தது கொடுமை தான் . மீள வாழ்த்துக்கள் .

    • செந்தில் 8:05 பிப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மனம் கணக்கிறது சத்யா. யாரவது உதவியிருபார்கள் என நம்புவோம்.
      கோவையில் ஒரு முரை என் இரண்டு சக்ர வாகனம் பழுது அடைந்த பொழுது மனி இரவு 11, வீட்டின் தொலைவோ இன்னும் 20 கிமி. சாலையில் நிருத்தினால் திருடு போய்விடும் என கருதி, அருகில் இருக்கும் வீடு அல்லது கடையில் நிருத்தி காலையில் சரி செய்ய முடிவு செய்து, உதவி கேடேன். யாரும் உதவவில்லை. காரனம், அம் மாதத்தில் கோவையில் 13 இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவம். அவர்களின் பயத்தை மதித்து, பழுதான வாகனதுடன் வீட்டிற்க்கு நடந்தோம், நானும் என் மனைவியும்.

    • காஞ்சி ரகுராம் 12:11 முப on ஓகஸ்ட் 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பதிவு நெஞ்சை கொஞ்சம் பிழிந்துவிட்டது SRK.

      சிக்னலில் குழந்தைக்குப் பசிக்கிறது என்பதைக் கேட்கும்போது, குழந்தையின் வாடிய முகத்தையும் உடலையும் பார்த்து ஏதாவது தர நெஞ்சம் பதறும். ஆனால், குழந்தையை வாடகைக்கு எடுத்து இப்படிச் செய்வது பரவலாக நடப்பதால் நெஞ்சம் குமுறும். கொடுத்தாலும் அது குழந்தைக்குச் சேராது. சிக்னல் விழ கால் கியரை மாற்றி கிளப்ப மனம் போராட்டத்தில் சிக்கும்.

      பெங்களூரில் நடந்தது: ஐ.டியில் பணிபுரியும் ஒரு தம்பதி, தன் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை நியமித்திருகிறார்கள். அவளோ தினம் நூறு ரூபாய் வாடகைக்கு குழந்தையை பிச்சைக்கு விட்டிருக்கிறாள். ஒரு நாள் உடல்நலமின்மையால் சீக்கிரம் திரும்பிய தாய், குழந்தையைக் காணாமல், நடப்பதை அறிந்து அரண்டு போய் தன் வேலையை விட்டுவிட்டு தானே குழந்தையை பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

      வெடிகுண்டுகளும், குழந்தைகளின் மீதான பயங்கரவாதங்களும் மனிதாபிமானத்தை அழிப்பது உண்மையே.

      சில பழைய வலிகளை இப்பதிவு சற்றே கிளறிவிட்டது SRK.

  • மீனாட்சி சுந்தரம் 12:06 pm on July 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    மூஞ்சில குத்து 

    சென்னையின் வெயிலைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உள்ளதென்றால் அது அந்த வெயிலில் பேருந்தில் போவதுதான். யாராவது உன்னைக் குளிரூட்டப்பட்ட காரில் கூட்டிச் செல்கிறேன், ஒரு கொலை செய்கிறாயா என்று கேட்டால் கூசாமல் கொலை செய்யச் சம்மதிக்கச் சொல்லும் கொடுமை அது.

    அதிலும் இந்த வெப்பத்தில் உடல்கள் உரசிக் கொண்டு நிற்கும் கொடுமை இருக்கிறதே… ஏதோ நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வறுப்பது என்று சொல்வார்களே… சென்னைவாசிகள் நரகம் சென்றால் அது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய பனிஷ்மென்ட்டாய்த் தோன்றாது என்றே தோன்றுகிறது.

    இப்போது யோசித்துப் பாருங்கள்… இதில் நான் காலையும், மாலையும் அலுவலகத்துக்குப் போகவரப் பேருந்தை உபயோகப்படுத்துபவன். ஆனால் இந்தப் பயணங்களில் எக்ஸ்ட்ராவாய் எனக்குப் புரியாத விஷயம் ஒன்று உண்டு.

    எங்கள் ஊரில்,”வெளுக்கறவன் கழுதைக்கு வரப்போக சுமை…” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது பெரும்பாலான  சாஃப்ட்வேர் ஆட்களையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. எல்லாப் பையன்களும் அதிலும் குறிப்பாக கணிப்பொறி ஆட்கள் போலத் தோன்றும் இளைஞர்கள் எல்லோரும் முதுகில் ஒரு பேக் பேக்கை மாட்டியுள்ளார்கள்.

    பேருந்தில் உள்ளிருக்கும் நேரங்களில்கூட அவர்கள் அதைக் கழற்றுவதில்லை. கர்ணனின் உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசம்போல அவர்களுக்கு அது.

    முதலில் தொழில் சம்பந்தமாக லேப்டாப் ஏதாவது கொண்டு செல்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் உண்மையிலேயெ நான் சொன்ன கழுதை போல் துவைக்கும் துணிகளைச் சுமந்து செல்கிறார்களோ என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் கொண்டு செல்லும் அந்தப் பைகள் அவ்வளவு பெரிதாய்ப் புடைத்திருக்கின்றன.

    அதிலும் அந்த பேக்கை மாட்டிகொண்டு பேருந்தின் உள்ளே கூட்டத்தின் இடையே புகுந்து எல்லோருடைய முகத்திலும் பேக் உரச உரச நடப்பதும், கூட்டத்தின் நடுவே வந்து அந்த பேக்குடன் அப்படியே நின்றுகொள்வதும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் இஷ்டத்திற்கு மொபைல் பேச்சும் அதுவுமாய்ச் சுற்றுகையில் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதோ இவர்களுக்கு என்றே எண்ணத் தோன்றும்.

    முதலில்  பொறுத்துக்கொண்டாலும் நாட்பட நாட்பட இது ஒருவாறு பெரும் எரிச்சலாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் காலையில் பேருந்தில் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்க, நல்ல எரிச்சலுடனும் ஆனால் முகத்தில் ஒரு மாறாத புன்சிரிப்புடனும் அந்த இளைஞனைக் கேட்டேன்.

    “ஏன் தம்பி… இந்த பேக்கை கழற்றி உட்கார்ந்திருக்கும் யாரிடமாவது கொடுக்கக் கூடாதா…? எல்லோருக்கும் கஷ்டமாய் இருக்கில்ல…?”.

    சொல்லிவிட்டு இத்தனைபேர் எதிரில் கேட்டுவிட்டோமே… அவன் ஏதாவது வருத்தப்படுவானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பதிலுக்கு அவன் கேட்ட கேள்வி என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    “சார்… நீங்க வெளியூரா…?”.

    ஆக, பேக் முகத்தில் இடிக்கிறது… கொஞ்சம் கழற்றி வை…!” என்று பேருந்தில் சொல்பவன் சென்னைக்குப் புதுசு என்ற புதிய உண்மை எனக்கு அன்றைக்குத் தெரியவந்தது.

     
    • காஞ்சி ரகுராம் 12:37 பிப on ஜூலை 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இல்ல சார், இந்த கணினிக்காரர்கள்தான் மாநகரப் பேருந்துக்குப் புதுசு. சென்னைவாசிகள் பஸ்ஸில் ஏறியதுமே, கையில் இருப்பது டிபன் பாக்ஸாக இருந்தாலும் யாரிடமாவது கொடுத்துவிட்டு ஹாயாக நிற்கவே பார்ப்பார்கள். அதிலும் மகளிர் வரிசையில் கொடுத்து நிற்பதில் அலாதி பிரியமானவர்கள்.

      ஆனால், இந்த கணினிக்காரர்கள், இத்தனை நாட்களாக அவர்களின் கம்பெனி பஸ்ஸில் சொகுசாகச் சென்று, அங்கே விலை ஏற்றப்பட்டதும் மாநகரப் பேருந்துக்குப் புதிதாக மாற்றலாகி, நின்று கொண்டு இம்சை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

      ஆக, இனி நீங்கள், “தம்பி, நீ பஸ்ஸுக்கு புதுசா” என்று தாராளமாக கேட்கலாம் 🙂

    • மீனாட்சி சுந்தரம் 1:27 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆனா, அந்த பையில் அவர்கள் என்ன கொண்டு போகிறார்கள் என்று சொல்லவில்லையே ரகுராம்…!

      • காஞ்சி ரகுராம் 7:51 முப on ஓகஸ்ட் 5, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        அது எனக்கும் புரியாத புதிர்.

        அதை அறிந்துகொள்ள நெற்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

        டைடல் பார்க்கில் திடீரென்று செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டது. எல்லாருடைய பையையும் திறந்து திறந்து பலத்த சோதனையிட்டார்கள். ஒரு ஐந்து நிமிடம் அங்கே நின்றிருந்தால் பையிலிருக்கும் மர்ம வஸ்துக்களைப் பார்த்திருக்கலாம்.

        ஆனால் அப்போது அது தோன்றாததில், அந்த பொன்னான வாய்ப்பை வீணடித்துவிட்டேன் 😦

    • கார்த்திக் 1:29 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஏன் சாப்டுவேர் வாசிகளெல்லாம், அவங்க கேப் (CAB) ல தானே போவாங்க?. எல்லாம் ரிசசென் எஃபக்டா?

    • ஜெகதீஸ்வரன் 1:14 பிப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

      – ஜெகதீஸ்வரன்

    • துளசி கோபால் 1:47 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சென்னை வெயிலெல்லாம் ஜுஜூபி. இங்கே சண்டிகர் வந்து பாருங்க. மனுசனை வடாம் போட்டுறலாம்:(

      • சத்யராஜ்குமார் 5:31 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நீங்க சண்டிகர்லயா இருக்கிங்க? பஞ்சாப் பிரச்னை தலை விரிச்சு ஆடிட்டிருந்த சமயம் 47 செக்டர் கிட்டே கொஞ்ச நாள் இருந்திருக்கேன். ரோஸ் கார்டன்ல உக்காந்து சில கதைகள் கூட எழுதியிருக்கேன்!

    • padmahari 3:50 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்த இடுகையைப் படிக்கும்போது எனக்கு என் பள்ளிக்காலங்கள் நியாபகத்துக்கு வருகின்றன. படிக்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக இருக்கவேண்டிய நோட்டுகள்/புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் எங்களுக்கு உண்டு (எல்லோருக்குமே). அதன்படி எடுத்துச்செல்லவில்லையென்றால் வாத்தியார் அடிப்பார், எடுத்துச்சென்றால் பஸ்ஸிலுள்ளவர்கள் ஏகத்துக்கும் கமெண்ட் அடிப்பார்கள். ஆக, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். அந்தப் பைகளை கொடுக்க நாங்கள் தயாராக இருந்தாலும், பெருந்தன்மையுடன் வாங்கிக்கொள்ள ஆட்கள் குறைவு என்பதுதான் நிதர்சனம்! அது இந்தப் பதிவுக்கும் பொருந்துமோ என்னவோ?!
      பத்மஹரி,
      http://padmahari.wordpress.com

    • துளசி கோபால் 12:21 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இப்ப ஒரு மூணு மாசமாச்சு இங்கே வந்து. பட்டி(Buddi. H. P)யில் ஒரு ஃபேக்டரி போடும் வேலை கோபாலுக்கு. அநேகமாக இந்த வருசக் கடைசிவரை இருக்கவேண்டி வரலாம்.
      செக்டர் 21 இல் இருக்கோம்.

    • pamaran 11:05 முப on பிப்ரவரி 10, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பேக் பேக்-ல இருக்குறது லேப் டாப்-யா. அத உங்கள மாதிரி ஆட்கள்ட்ட கொடுத்தா, திருப்பி வாங்கும் போது பேக் பேக் இருக்கும் . உள்ள லேப் டாப் இருக்காது -னு எங்களுக்கு தெரியுமையா

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி