Updates from ஜனவரி, 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சரசுராம் 7:39 am on January 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பாரதியார் இல்லத்தில் ஜகபதிபாபு 

  திருவல்லிகேணி. பாரதியார் இல்லம். இந்த வருடம் அவரின் பிறந்தநாளை ஒட்டி நடந்த இசை நிகழ்ச்சி. இல்லம் முழுதும் அவரின் நினைவுகளோடு சேர்ந்து பாடல்களும் நிறைந்திருந்தது. முழுவதும் தமிழ் மணக்கும் பாடல்கள். குறிப்பாய் பாரதியின் பாடல்கள் மட்டுமே அங்கு பாடப்படும். ஆக, சிந்துபைரவி சுகாசினிக்கெல்லாம் அங்கு வேலையில்லை. ஒவ்வொரு வருடமும் வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பாக இது நடக்கும். நித்தியஸ்ரீ, விஜய்சிவா, T.M.கிருஷ்ணா என பல பிரபலங்கள் வந்து பாடினார்கள். ‘அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்..’ , ‘ஆசைமுக மறந்து போச்சே..’ , ‘மனதில் உறுதி வேண்டும்..’ என அவரது பிரபல பாடல்களை ஒரே சமயத்தில் அங்கே கேட்க முடிகிற சுக அனுபவம் அது. அதுவும் பாடல்கள் வழக்கமாய் கேட்ட மாதிரி இல்லாமல் புதுபுது ராகத்தில் கேட்க கேட்க மிக இனிமையாய் இருந்தது. இதையெல்லாம் காது குளிர கேட்க பாரதியார் இல்லாதது வருத்தம் தந்தது.

  அப்போதுதான் என் நண்பனை பார்த்தேன். அவன் எனக்கு முன் இருக்கையில் வலது ஓரமாய் அமர்ந்திருந்தான். ரொம்ப நாட்களுக்கு பிறகு அவனை அங்கு பார்க்கிறேன். அவனது கண்கள் மூடியிருந்தது. கைகளில் அந்த பாடல்களை ரசிக்கும் அபிநயம். அவன் அந்த பாடல்களில் லயித்திருந்தான். பாடல் முடியும்போது கைதட்டல் சத்தத்தில் மட்டும் கண்களை திறந்து பார்த்தான். பிறகு பழைய நிலை தொடர்ந்தது. நானும் அவனும் ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனர்களாய் வேலை பார்த்திருக்கிறோம். ஆள் பார்க்க நன்றாகவே இருப்பான். அவனது உடைகள் பல்வேறு தெலுங்கு பட கதாநாயகர்களை ஞாபகப்படுத்தும். நாங்கள் அவனை நீ தெலுங்கு பக்கம் போனால் ஒரு ஜகபதிபாபு ஆகலாம் என்று கிண்டலடிப்போம். பிறகு ’ஜகபதிபாபு’ என்றே அவனைக் கூப்பிட ஆரம்பித்தோம். அந்த படத்திற்கு பிறகு அவன் அவ்வவ்போது என்னை தேடி வருவான். பல்வேறு கம்பெனிகளில் கதை சொல்வதாக சொல்வான். இன்னும் சில படங்களில் வேலை பார்க்கச் சொல்லி மட்டும் நான் அறிவுறுத்துவேன். படம் பண்ணாத கம்பெனியாய் பார்த்து அவன் கதை சொல்ல ஆரம்பித்த போது நான் அவனிடம் பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டேன்.

  அதற்கு பிறகு அவனை நான் பல வருடம் பார்க்கவில்லை. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அவனை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு பக்கத்தில் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியவில்லை. மிக கருப்பாகியிருந்தான். சுத்தமில்லாத உடைகள். மேலும் இலேசான தாடி. தெளிவில்லாமல் உதிரும் வார்த்தைகள். முற்றிலும் புதிய தோற்றத்தில் இருந்தான். ஜகபதிபாபுவுக்கு என்னாயிற்று என்று யோசித்தேன். வா ஜூஸ் சாப்பிடலாம் என்றான். நான் மறுக்க இது எங்க கடைதான் என்றான். கடையில் இருந்த தன் அம்மா அப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தினான். அம்மா ஜூஸ் தந்தார்கள். அப்புறம் கண்கலங்கி என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். அவ்வவ்போது துணைக்குரலில் அவனது அப்பா. ஜகபதிபாபுக்கு பொதுவாகவே பக்தி அதிகம். திடீரென கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவனது பக்தியின் அளவு மீட்டரைத் தாண்டி ஓடியிருக்கிறது. திருப்பதி, மந்திராலயம் என அடிக்கடி போயிருக்கிறான். அதன் உச்சம் அதில் ஏதோவொரு சாமி தனக்குள் இருப்பதாக கற்பனை செய்திருக்கிறான். நடு இரவுகளில் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி அந்த மந்திரங்களை சொல்லச் சொல்லியிருக்கிறான். ஆசிர்வாதம் தருகிறேன் என்று அவர்களின் தலைகளை நீட்டிச்சொல்லி ரத்தம் வர கொட்டியிருக்கிறான். மேலும் அவன் செய்த அழிச்சாட்டியங்கள் தாங்க முடியாமல் அண்ணன் தெளிவானாலும் வரமாட்டேன் என அவனது தம்பி வீட்டை விட்டே ஓடியிருக்கிறான். டாக்டரிடம் கூட்டிப்போக அழைத்தால் அனைவருக்கும் அடிஉதைதான். அவன் வேலைக்கும் போவதில்லை. எங்காவது சேர்த்து விட்டாலும் தங்குவதில்லை. எங்கு போகிறான் எங்கு வருகிறான் என எதுவும் தெரிவதில்லையாம். வீட்டில் சீரியலை விடவும் துன்பங்களாம். அவர்களிடம் அதை விடவும் அழுகைகள். என்னிடம் அவனுக்கு எதாவது அறிவுரை சொல்லச் சொன்னார்கள். என்ன சொல்வது? வார்த்தைகளில் மாறிவிடுகிற நிலையிலா இருக்கிறான் ஜகபதிபாபு? அவன் பெற்றோர்களின் ஆறுதலுக்காக அவனிடம் பேசினேன். அளவுக்கு மிஞ்சினால் பக்தியும் நஞ்சு என்றேன். மனசு விட்டு பேச நல்ல நண்பர்கள் வைத்துக்கொள். உனக்கு பிடித்த வேலையில் சேர். முடிந்தவரை வீட்டிற்கு உதவாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள் என்று சில வார்த்தைகள் மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மனசு கஷ்டமாயிருந்தது. வசதியில்லாத குடும்பம். மகன் வளர்ந்து உதவுவான் என எதிர்பார்க்கிறபோது அவன் மேலும் சுமையாய் மாறினதை எந்த விதியில் சேர்ப்பது?

  அதன் பிறகு அவனை நான் அவ்வவ்போது வழியில் சந்திப்பேன். ஏதேதோ தொடர்பில்லாமல் பேசுவான். ஒரு கம்பெனியில் என்னை கதாநாயகனாக கேட்டிருக்கிறார்கள் என்பான். நான் சிரித்துக் கொண்டு விலகிக் கொள்வேன். இன்னொரு முறை வழியில் அவனது அம்மாவை பார்த்தேன். அவன் அப்படியேதான் இருக்கிறான் என்றார்கள். இப்ப எந்த கோயிலில் இருக்கிறானோ தெரியவில்லை என்றார்கள். இது நடந்து சில மாதங்களுக்கு பிறகுதான் அவனை பாரதியார் இல்லத்தில் பார்த்தேன். இன்னும் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். இளைத்துப் போயிருந்தான். ஒரு கதாநாயகன் வில்லனை விடவும் மோசமான தோற்றத்திற்கு மாறிப்போனதைப் பார்க்க எனக்கு கஷ்டமாய் இருந்தது.

  ஒரு சின்ன இடைவெளியில் அவன் அருகில் போய் அமர்ந்தேன். மெதுவாய் பேச்சுக் கொடுத்தேன். அவனது பேச்சில் எந்த மாற்றமும் இல்லை. பாட்டெல்லாம் பிடிக்குமா என்றேன். பாரதியார் பாட்டென்றால் பிடிக்கும் என்றான். பிறகு பொதுவான பேச்சுக்கள். அதன் பிறகு மீண்டும் அவனிடம் அமைதி. மேடையில் ‘நல்லதோர் வீணை செய்தே..’ வை பாடத் தொடங்கியிருந்தார்கள். அவன் கண்களை மூடி ரசிக்க ஆரம்பித்தான். கைகளில் அந்த அபிநயம் மீண்டும் தொடங்கியிருந்தது. கொஞ்ச நேரமாவது அவனை அமரவைத்து அவனுக்கு அமைதியை தந்த பாரதியாருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். அவனிடமிருந்து விடைப்பெற்றேன். ‘சொல்லடீ, சிவசக்தி.. எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்..’. அந்த பாடலின் மிச்ச வரிகளை அவனது உதடுகள் முணுமுணுக்க ஆரம்பித்தது.

  • சரசுராம்
   
 • சரசுராம் 12:44 pm on November 5, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: bachelor, cats   

  பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம் 

  bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

  என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

  விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

  நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

  பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

  -சரசுராம்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
  • Kumar AK 1:41 முப on நவம்பர் 6, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Nice and well said. A simple incident added with flavors and served tastefully. weldone Ramu.

  • SARA 12:11 முப on திசெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   GOOD, YOU EXPOSE THE BASIC FEELINGS OF THE NORMAL MAN. BUT NOWADAYS MAN MENTALITY TURNING AROUND CUNNING & SELFISH WITHOUT HUMANITY.
   PLEASE TEACH MAN HUMANITY STORIES LIKE THIS TO ALL. YOUR AIM ALWAYS WELCOME. I AM EXPECTING SOME MORE FROM YOU LIKE THIS TYPE OF STORIES.
   THANKS FRIEND
   SARA

 • சரசுராம் 6:09 am on September 16, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  காற்றில் பேசும் மனிதர்கள் 

  இந்த மனிதர்களை நீங்களும் பார்த்திருக்கலாம். ரோட்டில் நடந்தபடி ரயிலின் கதவோரங்களில் பார்க்கில் தனியே பென்ஞ்சில் அமர்ந்தபடி என அவர்களை பார்த்திருக்கலாம். ஒருமுறை சிக்னலில் அந்த மனிதர்களில் ஒருவரைப் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் திரும்பி பார்த்தேன். பெரியதாய் மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தார். அப்புறம் தனது வண்டியில் அழுத்தமாய் ஒரு குத்து விட்டு மீண்டும் ஏதோ பேசினார். அவர் போனில்தான் பேசுகிறாரென ஹெட்போன் தேடினேன். talking-to-windஆனால் ஹெட் மட்டும்தான் இருந்தது. போனெதுவும் இல்லை. சிக்னலில் எந்த பிரச்சனையும் இல்லை. இவரிடம்தான் ஏதோ பிரச்சனை என்று தோன்றியது. அன்று நான் அவரை குழப்பமாய் பார்த்துவிட்டுப் போனேன்.

  சரசுராமின் முதல் பதிவில் அவரைப் பற்றிய அறிமுகம் ஏன் இல்லை என்று சித்ரன் கேட்டார். முதல் காரணம் அப்போது எனக்கு நேரமில்லை. இரண்டாவது சரசுராம் பற்றியும், அவர் கதைகள் பற்றி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும் முன்னரே இன்றுவில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. உங்கள் வசதிக்காக அந்தப் பதிவுக்கான லின்க் இதோ: சரசுராம் என்றொரு எழுத்தாளர்

  • சத்யராஜ்குமார்

இன்னொரு நாள். என் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டி. அவசரமாய் பஸ் ஏறினேன். சீட்டில் இடம் பிடித்து உட்கார மீண்டும் அதே மாதிரி மனிதரை அந்த பஸ்ஸில் சந்தித்தேன். அருகில் இருந்த அந்த ஜன்னல் மனிதர் ஏதோ கேட்ட மாதிரி இருக்க என்ன சார் என்றேன். அவர் என்னை இலேசாய் முறைத்து விட்டு திரும்பி மீண்டும் ஜன்னல் வழியே பார்வையை தொடர்ந்தார். ஆள் நன்றாகவே இருந்தார். வயது கிட்டதட்ட ஐம்பது இருக்கலாம். சதுர கண்ணாடி. ஷேவ் செய்த சாந்தமான முகம். நல்ல உடை. கையில் லன்ச் பேக். மிக சாதாரணமாய் ஒரு ஆபிஸிற்கும் போகும் சகல அடையாளங்களுடன் இருந்தார். கொஞ்ச நேரத்தில் அவர் கைகளை மெல்ல அசைக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் நிறைய எரிச்சல். சட்டென அவரிடமிருந்து கோபம் வெடித்தது. சரளமாய் ஒரு கெட்ட வார்த்தையை தயக்கமின்றி விட்டார். முடியெல்லாம் முன்னால் விழாமல் திடீரென அவர் ஒரு அந்நியனாய் மாறிப்போனார். நான் அவரை இலேசான பயத்துடன் பார்த்தேன். பிறகு சில நிமிட மெளனம். சில நிமிடம் உரையாடல் என அவரிடம் தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாமே எதிரே ஆள் இருப்பதாய் பாவித்து அவர் செய்யும் விஷயங்கள் என மெல்ல புரிய ஆரம்பித்தது. என்ன பிரச்சனை சார் என்று கேட்க நினைத்தேன். கேட்டால் நிச்சயம் அடி விழும் எனத் தோன்ற வெறும் கவனிப்போடு நிறுத்திக் கொண்டேன்.

எனக்கு சட்டென மனசு கனமானது. ஏதேதோ யோசனைகள் வழியெங்கும் என்னைத் துரத்தியது. இதை என்னவென்று நினைப்பது? என்னவென கணிப்பது? பகிர்தலே இல்லாததன் விளைவா? உனக்கு என்ன பிரச்சனை என அவர் தோள் தொட்டு சொல்ல ஒரு சினேகிதம் கூடவா இல்லை? என்ன கொடுமை இது? வீடென்று எதுவும் இல்லையா அவருக்கு? அல்லது வீடுதான் பிரச்சனையா? அப்படியென்றால் வீடு என்பதன் அர்த்தம்தான் என்ன? பிரச்சனைகளின் துரத்தல் யாருக்குத்தான் இல்லை? இரவைவிட பகல் அதிகம் பயமுறுத்துகிறது. அப்படியென்றால் எது ஆறுதல்? எந்த இடம் சந்தோஷம் என ஏதேதோ யோசனைகள்.

இதுதான் சந்தோஷமென எப்படி குறிப்பிட்டு சொல்ல முடியும்? ஒவ்வொருவருக்கு ஒரு சந்தோஷம். ஒருவருக்கு படிப்பதில். ஒருவருக்கு பாடுவதில். ஒருவருக்கு உதவி செய்வதில். ஒருவருக்கு உபத்திரவம் செய்வதில். ஆனால் எல்லோருக்கும் ஏதோவொரு சந்தோசம் தேவைப்படுகிறது. மன ஆறுதல் தேவைப்படுகிறது. நம் பிரச்சனைகளை நம்பிக்கையானவர் என் நினைத்து ஒருவரிடம் சொல்லி அதை அப்படியே வேறொருவர் வாயிலிருந்து கேட்க நேர்ந்தாலும் பகிர்தல் அவசியம் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நான் பார்த்த சந்தித்த அந்த காற்றில் பேசும் மனிதர்கள் மாதிரி நாமும் ஆகிவிடுவோம் என்று உறுதியாய் தோன்றியது.

பஸ்ஸை விட்டு இறங்க இறங்க அந்த பர்த்டே நண்பனிடமிருந்து போன் வந்தது. மச்சான் இன்னும் எங்கடா இருக்க? கேக் வெட்டாம எல்லாரும் உனக்காக வெயிட்டிங். சீக்கிரம் வந்து தொலை என்று அவன் திட்டினாலும் எனக்கு கேட்க சந்தோசமாய்தான் இருந்தது!

 • சரசுராம்
 
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி