Updates from ஜூன், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 12:47 pm on June 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: திரைப்படம், பொழுதுபோக்கு, விமர்சனம்   

  உலகக் கொட்டாவி 

  இந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:

  இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.

  சிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.

  உள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே!.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.

  இப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை.

  திரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும்? நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.

  வெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.

  ரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.

  கோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.

  சினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

  ஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா?

  தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

  பிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.

  தியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.

  கரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

   
  • சத்யராஜ்குமார் 8:13 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அத்தி பூத்தாற்போல வரும் நல்ல படங்களின் கலையழகை உணர்வதற்கு அடிக்கடி வரும் நொள்ளைப் படங்கள் பெரும் உதவி புரிகின்றன என்பதால் அவைகளையும் வரவேற்கிறேன். 🙂

  • சித்ரன் 12:01 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @சத்யராஜ்குமார்: சும்மா வரவேற்பது மட்டும்தானா? இல்லை தியேட்டரில் போய்ப் பார்க்கிறீர்களா?

  • Karthik 12:20 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பதிவு.
   ஆங்கில படங்களை : லவ், ஆக்க்ஷன், காமெடி, டிராமா, ஹாரர் ன்னு வகைப்படுத்தர மாதிரி.
   தமிழ்ப் படங்களை : நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல ஃபோட்டோகிராபி ன்னு தான் சொல்ல முடியுது.

  • பொன்.சுதா 1:23 முப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பதிவு சித்திரன்.

 • தனபால் பத்மநாபன் 11:36 am on December 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஆழ்மனதின் சலனம் 

  நண்பர்களாக ‘இன்று’வில் எழுதுவதால் சற்று personal ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  அன்றாடம் நிகழும் சம்பவங்கள் எனக்கு ஏதோ ஒரு செய்தியை பிரத்யேகமாக சொல்லிச் செல்வதாகத் தோன்றுகிறது.

  ‘இன்று’ பதிவில் முதல் முறையாக எழுதுவதால் சமீபத்தில் சந்தித்த இரண்டு மகிழ்ச்சியான ‘பிரத்யேகச் செய்திகளை’ சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

  தனபால் கம்யூனிச சிந்தனை கொண்டவராக முதலில் அறிமுகமானார். அதன் பின் கொஞ்ச நாளில் தீவிர இலக்கிய ஆர்வலராகத் தெரிந்தார். கோமல் சுவாமினாதனின் சுபமங்களாவில் ஒரு சிறுகதை எழுதின போதுதான் இவர் எழுத்தாளர் என்றறிந்தேன். அதன் பின் சில வருட இடைவெளிக்குப் பின் சந்தித்த போது கணினி தொழிலதிபராக மாறியிருந்தார். அப்போது நான் கொஞ்சம் இவருடன் நெருங்கிப் பழகியிருந்தேன். இவருடைய இலக்கு தொழிலதிபராவதோ, எழுத்தாளராவதோ அல்ல என அறிந்தேன். திரைப்படம். அதற்கு அச்சாரமாக டாக்டர் திரு.கலாம் அவர்களின் வாழ்க்கையை ஒட்டிய டாக்குமெண்ட்டரி ஒன்றை குழந்தைகளுக்காக இயக்கி வெளியிட்டார். இவருடைய அனுபவங்களை சின்ன சின்ன விஷயங்களாக இன்று-Today-ல் பகிர்ந்து கொள்ள கேட்டேன். இதோ முதல் பதிவை அளித்துள்ளார். தொடர்வார் என நம்புகிறேன்.

  -சத்யராஜ்குமார்

  ஒன்று:

  Mani Ratnamகோவா திரைப்பட விழாவில் மிகுந்த தடுமாற்றத்திற்குப் பிறகு அந்தக் கேள்வியை மணிரத்னத்திடம் கேட்டேன்.

  ‘உங்களுக்கு மிகவும் பிடித்த இருவர் படத்தில் ஏன் அரசியல்வாதிகளின் இருண்ட பக்கங்களைக் காட்டவில்லை?’

  மணிரத்னம் சொன்னார், ‘I left it for you.’

  ‘You’ என்பது என்னை மட்டுமல்ல, புதிய தலைமுறை இயக்குனர்கள் அனைவரையும் குறிக்கும் என்பதை உணர்ந்தாலும் அந்த பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  இரண்டு:

  Dr. Kalamஇன்று டாக்டர்.கலாம் அவர்களை அவருடைய டெல்லி இல்லத்தில் சந்தித்தேன். ஒரு விழாவிற்கு என்னையும் அழைத்துப் போனார்.மாலையில் அவர் இல்லத்திற்குத் திரும்பியதும் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார், ‘You have to come up big, you are deserved.’

  எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. Because he knows all hardships I went through.

  ஒரு புதிய மனிதரை சந்திப்பது, தினசரியில் சிறு குறிப்பாக ஒரு செய்தியை படிக்க நேர்வது, எதிர்பாராத நேரத்தில் ஒலிக்கும் ஆத்மார்த்தமான திரைப் பாடல், திடீரென வரும் பிரிவு, ஒரு நட்பு என எல்லாவற்றிலும் பிரத்யேகமான செய்தி ஒன்று ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது. சந்தோஷம் தர வேண்டிய கணங்கள் கூட ஆழ்மனதில் மிகுந்த அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுக்கின்றன.

  வயதாகிக் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

  • தனபால் பத்மநாபன்
   
  • ஆர்ஜி 12:26 பிப on திசெம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மற்றவர்கள் நம்மீது அபரிமிதமான நம்பிக்கை வைக்கும்போது நம்மை நாமே தராசில் நிறுத்திப் பார்க்கிறோம். நிரூபித்தாகவேண்டிய சூழல் மற்றும் அதனால் ஏற்படுகிற உணர்வுகள்தான் நீங்கள் சொல்வது என்று தோன்றுகிறது. மேலும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள் தனபால்.

  • மீன்ஸ் 10:13 முப on திசெம்பர் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்வரவு தனபால்.

  • பொன்.சுதா 5:14 முப on திசெம்பர் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள் தனபால். சுபமங்களா சிறுகதைக்கு பிறகு உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஷாராஜ் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவார். பாராட்டுக்கள். மிக பெரிய மனிதர்களுடனான சந்திப்புகளை நீங்கள் இன்னும் விரிவாகவே எழுதலாம். தொடர்ந்து எழுதுங்கள் தனபால்.

   • சரசுராம் 5:33 முப on திசெம்பர் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    வாழ்த்துக்கள் தனபால். ’இன்று’ மூலம் மீண்டும் உங்கள் எழுத்தை படிப்பதில் சந்தோசம். தொடர்ந்து எழுதுங்கள்.

   • தனபால் பத்மநாபன் 7:13 முப on திசெம்பர் 19, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நன்றி சுதா & ராம். நேரம் இருக்கும்போது http://minveli.wordpress.com/ பாருங்கள். சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். (தமிழ்நாட்டின் 6 கோடி கவிஞர்களில் நானும் ஒருவனாகிவிட்டேன்!) 🙂

 • சத்யராஜ்குமார் 6:06 pm on September 25, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: உன்னைப் போல் ஒருவன், கமல், , kamal, kamalhasan   

  உன்னைப் போல் ஒருவன்: விமர்சனம் அல்ல 

  சென்ற வெள்ளிக்கிழமை. திரையிட்ட இரண்டாம் நாள். இரவு 9.45-க்கு ஷோ. ‘ரஜினி படம்ன்னா வரேன். கமல் படம் DVD வந்த பிறகு பார்த்துக்கறேன்.’ என்று சொல்லி விட்ட common woman மனைவி. ஆகவே எனக்கும், அகிலுக்கும் மட்டும் movietickets.com-ல் முன்பதிவு செய்தேன். 3-11 வயது வரை அரை டிக்கட் வாங்கினால் போதும் என்று அந்த தளத்தில் போட்டிருந்ததால் அகிலுக்கு பாதி விலையில் டிக்கட்.

  உன்னைப் போல் ஒருவன்

  உன்னைப் போல் ஒருவன்


  “ஏன் ஒன்பது மணிக்கே கிளம்பணும்?” என்று கேட்ட அகிலுக்கு தமிழ் படம்ன்னா கூட்டம் அலை மோதும். லேட்டாய் போனால் நீ ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலும் உட்கார வேண்டி வரும் என்று பதில் சொன்னேன். சிவாஜி, சந்திரமுகி அனுபவம். அவன் அதிருப்தியாய் தலையாட்டினான். Fairfax-ன் கிழகோடியில் தியேட்டர். இந்த திரையரங்கையும், இன்னும் சில திரையரங்குகளையும் ரிலையன்ஸ் குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வாரம் ஒரு தெலுங்கு அல்லது ஹிந்தி படம் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.

  தமிழ்ப்பட ரசிகர்கள் இணையம் தாண்டி வர மறுப்பதால் மணிரத்னம், கமல், ரஜினி படங்கள் வந்தாலொழிய தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. பத்து நிமிஷ டிரைவில் தியேட்டரை அடைந்தபோது அகில் நான் சொன்னதை நம்பினான். அங்கே பெருந்திரளாய் கூட்டம். திருவிழா உணர்வு ஏற்பட்டது. மச்சி, மச்சான் என்று செந்தமிழ் குரல்கள் கேட்டன.

  கவுண்ட்டரில் போய் இணையத்தில் முன்பதிவு செய்த கடன் அட்டையை கொடுக்க, இ-டிக்கெட் கிடைத்தது. அங்கே 3-5 வயது வரை அரை டிக்கட் என்று ஒரு அறிவிப்பு பெரிதாய் எழுதி ஒட்டியிருந்தது பார்த்து திடுக்கிட்டாலும், இணையத்தில் வாங்கினால் எதுவுமே சகாய விலையில் கிடைக்கும் என்று சமாதானமாகிக் கொண்டேன்.

  பூட்டியிருந்த கண்ணாடிக் கதவின் முன்னால் டைனோசரின் வால் மாதிரி பெரிய க்யூ. அதில் நானும், அகிலும் போய் இணைந்து கொண்டோம். இப்படி ஒரு கூட்டம் ஆங்கிலப் படங்களுக்கு அரிதிலும் அரிது என்பதால் அந்த காம்ப்ளக்ஸின் இதர கடைகளுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் வினோதமாய் பார்த்து ரசித்துச் சென்றார்கள்.

  இதற்குள் எனக்கு அறிமுகமான சிலர், ‘ஹாய்’ சொன்னார்கள். க்யூவில் முன்னால் நின்றிருந்த இரு இளைஞர்கள் அங்கே ரகம் ரகமான கார்களில் வந்திறங்கும் நம்மவர்களையும் அவர்கள் கார்களையும் ஒருவர் பாக்கியில்லாமல் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ”எந்த ஒரு தேசிப்பயலாவது இப்படி ஒரு கார் (க்ரைஸ்லர் PT Cruiser) வாங்குவானா? இது காலேஜ் பொண்ணுங்க வாங்கி ஓட்டற கார்!”

  படம் பார்க்கும் ஆவலில் சாப்பிடாமல் கிளம்பி வந்து விட்ட ஒரு குடும்பத்தின் பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

  தனது வெள்ளைக்கார காதலியுடன் க்யூவில் நின்றிருந்தார் ஒரு பச்சைத் தமிழர். சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்த அந்த அழகான அமெரிக்கப் பெண்தான் சென்டர் ஆப் அட்ராக்’ஷன். பல இளைஞர்களின் காதில் புகை. அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது.

  காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.

  மணி பத்தான பின்னும் கதவு திறக்காததால் அகில், “என்னப்பா ஒன்பதே முக்கால் ஷோன்னு சொன்னீங்க?” என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது.

  இருட்டான கொட்டகைக்குள் நுழையும்போது ஹிந்தி பட ட்ரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் இருக்கை பிடித்து அமர்ந்த பின்தான் இதெல்லாம் ஒரு கூட்டமே இல்லை என்று புரிந்தது. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை.

  சாவகாசமாய் படம் துவங்கி டைட்டில் கார்டு போட ஆரம்பிக்க, கமலுக்கும், ஸ்ருதிக்கும் மட்டும் சப்பையாய் கை தட்டினார்கள். அதற்கப்புறம் ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை.

  இடைவேளையில் மெக்சிகோ நாட்டுக்காரியின் கையால் சமோசா வியாபாரம் அமோகமாய் நடந்தது. மீடியம் கோக்… நாலரை டாலர். இரவு பனிரெண்டே கால் மணி போல படம் முடிந்தது.

  Netflix ஸ்ட்ரீமிங் மீடியாவில் A Wednesday நாலைந்து முறை பார்த்து விட்டதால் இந்தப் படம் புதிதாய் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. தமிழுக்கு இப்படி ஒரு படம் அவசியம்தான் என்று மட்டும் மனசில் பட்டது.

  ரொம்ப நாள் கழித்து பல நண்பர்களை அங்கே குடும்பத்தோடு சந்தித்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு நாங்கள் எல்லோரும் தியேட்டர் வாசலிலேயே உட்கார்ந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஏழெட்டு குடும்பங்கள்! குழந்தைகள் அந்த அர்த்த ராத்திரியில் ஜாலியாய் ஓடிப் பிடித்து விளையாடின.

  நன்றி கமல் ஸார்.

  • சத்யராஜ்குமார்
   
  • என். சொக்கன் 10:29 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது//

   :))))

   ஒரு சின்ன யோசனை –> Comments link topலமட்டும் இருக்கிறது டெம்ப்ளேட் பிரச்னைன்னு புரியுது, ஆனா பலர் அதைக் கவனிக்காம போயிட வாய்ப்பு உண்டு. பேசாம ஒவ்வொரு போஸ்ட்லயும் கீழ ஒரு வரி நீங்களே காபி – பேஸ்ட் செஞ்சுடலாமே – இன்னும் அதிகப் பேர் கருத்துச் சொல்வார்கள், அந்தப் புண்ணியத்தால் உங்களுக்கு அடுத்த கமல் படத்தில் ஒரு சின்ன வேஷம்கூட கிடைக்கலாம்!

   • சத்யராஜ்குமார் 11:11 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    சொக்கன், நீங்கள் சொல்வது சரி. இந்த டெம்ப்ளேட் மாற்றிய பிறகு கருத்து சொல்வது குறைந்துள்ளது. குழுவாக பதிவு செய்ய இந்த வார்ப்புருதான் (ஹையா தமிழ்!) சரியாக இருக்கிறது. உங்கள் அருமையான யோசனையை செயல்படுத்த முயன்றேன். வேலை செய்யவில்லை. ஜாவாஸ்க்ரிப்டினால் காண்பிக்கப்படும் கருத்துப் பெட்டிக்காக அந்த லின்க்கில் dyanamic-ஆக ஒரு எண் சொருகப்படுகிறது. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்! கமல் படத்தில் சான்ஸ் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கு. 🙂

  • அறிவிலி 10:59 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   போச்சுரா… இன்னோரு உ.போ.ஒ விமர்சன்மா என்று வநதேன். நல்ல வேளை, படத்தை பத்தி நெறைய எழுதாம, உங்க அனுபவத்த எழுதிருக்கீங்க. 🙂

  • subhashree 12:46 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   oh..nothing about mr.mohanlal…so sad..anyway nice description…i enjoyed especially ..kamal is talking in english for that beautiful girl..ha..ha..ah…good…u remind me too much of mr.sujatha….

   • சத்யராஜ்குமார் 10:08 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    சுபஸ்ரீ, மோகன்லாலும் சரி, அந்த இளம் அதிகாரிகளும் சரி அருமையாக நடித்திருந்தார்கள். சலங்கை ஒலியில் கமலை குதிக்க வைத்து தாறுமாறாக போட்டோ எடுத்து விட்டு, ”அய்யே காலு! இது தலை!” என்று வழியும் குண்டு பையன்தான் படத்தின் இயக்குனராமே!

  • ila 1:52 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நாங்க ஏழு பேர் தான் இருந்தோம்,. முதல் நாள்

   • சத்யராஜ்குமார் 10:10 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இளா, வியாழக்கிழமை ராத்திரி படம் பார்க்க கூட்டம் கூடுவது கொஞ்சம் சிரமம்தான். 😦 பொதுவாக கமல், ரஜினி படங்களை கூட்டமில்லாத தியேட்டரில் பார்ப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது, இல்லையா?

  • REKHA RAGHAVAN 8:01 முப on செப்ரெம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.//

   இந்த வரிகளை ரசித்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் செய்கிற அங்க சேஷ்டைகளுக்காகவே விரும்பி போவதால் கதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு.

   ரேகா ராகவன்.

  • டைனோ 9:13 முப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   >>>பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா<<>>அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்<<>>போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி <<>>நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது. <<>>ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை<<<

   பஞ்ச் இல்லாம முடிச்சது!

   உங்க க்ராப்டை சிலாகிக்காம படிக்க முடியல… நல்ல எழுத்துங்க உங்களுக்கு!

  • RaviSuga 10:18 முப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள், அருமை.

  • Sentil 1:32 பிப on செப்ரெம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   “காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.”

   Dear Satya, As I read the title, am very sure you would have captured many special incidents happened around you during the movie other than the movie itself. As expected you have sincerely done it. Very hilarious.

   • சத்யராஜ்குமார் 6:25 பிப on செப்ரெம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    செந்தில், ஒரு திரைப்படத்தை வீட்டில் DVD-யில் பார்ப்பதற்கும், தியேட்டரில் பார்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்கள்தான். அவசர வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றால் இழக்கும் பலவற்றில் அதுவும் ஒன்று. உங்கள் கருத்துக்கு நன்றி!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி