Updates from நவம்பர், 2013 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 7:07 am on November 18, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  அமெரிக்க தமிழ் சிறுகதைகள் 

  சமீபத்தில் ஆப்பிள் ஐபுக்கிலும், அமேசான் கிண்டில் புக் ஸ்டோரிலும் வெளியிட்ட எனது அமெரிக்க சிறுகதைகள் தொகுப்பைப் படித்து விட்டு நண்பரும், எழுத்தாளருமான சரசுராம் எழுதியனுப்பிய மிக நீண்ட மின்னஞ்சல்:

  ————
  நிமிடங்களாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. திரும்பிப் பார்ப்பதற்குள் பல யுகங்களை கடந்திருப்போம். கழியும் நொடிகளை அனுபவித்து ரசித்து போகிறவர்கள் நிச்சயம் புத்திசாலிகள். பாக்யவான்கள். இது சராசரி. நான் சொல்ல வருவது அதுவல்ல. அதையும் தாண்டி புனிதமானது என்கிற மாதிரி ஒன்று. அது கரையும் காலத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்ட படைப்பாளியை பற்றியது.. அதுவும் ஒரு எழுத்தாளனைப் பற்றியது. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் எதுவுமே வீணில்லை என்று சொல்லலாம். அவனுக்கு நடக்கும் நல்லதும் சரி கெட்டதும் சரி அதை தன் வெளிப்பாடாய் படைப்பாய் மாற்றிக் கொள்ளும் வரம் பெற்றவன் அவன். அதை உங்கள் “துகள்கள்’ மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. துகள்கள் துகள்களல்ல. ஒவ்வொன்றும் மலைகள். ஒவ்வொன்றையும் கடக்க கடக்க ஒரு அனுபவத்தை மனதில் ஒரு பாடமாய் எழுதிச் செல்கிறது.

  அமெரிக்கா மீது இருக்கும் வெறும் கனவுகளை உங்கள் துகள்கள் தைரியமாய் உடைத்து எறிகிறது. அது தூசிபடாத தேசம் என்கிற இமேஜின் மீது எச்சிலை உமிழ்கிறது. அங்கிருக்கும் துக்கங்கள் சந்தோசங்கள் அங்கே பொழப்பு நடத்த பண்ணுகிற தகிடுதத்தங்கள் என அது உலகம் அனைத்திற்கான பொதுவிதியென சொன்னதோடு இல்லாமல் அமெரிக்காவின் முகமூடியையும் அது கிழித்தெறிகிறது.

  ”பிழைப்பு’ கதையில் வருகிற அந்த சேல்ஸ்மேனின் நிலையும், ’மோப்பக் குழையும்’ கதையில் வரும் தியாகு மற்றும் மேனகாவின் வெளிப்பாடும் பின்தங்கிய நாடுகளைவிட மோசமானதாய் இருந்தது. எதிரில் பேசுபவன் ஓர் இந்தியன் என்று தெரிந்தும் அவனை ஏமாற்ற துணிவது அவன்மீது எந்த சினேகமும் வராமல் எப்படி அங்கே வாழ்ந்துவிடவேண்டுமென்கிற முனைப்பு பரிதாபமாய் இருந்தது. வேலையில்லா காலத்தில் ’எக்ஸானந்தா’வை நம்பவேண்டிய சூழ்நிலை சிரிப்புக்கு பின்னால் மறைந்திருந்த அந்த பரிதாபம், ஒருத்தருக்கொருத்தர் இந்தியர்களாக இருந்தாலும் உதவி செய்யக்கூட முடியாத அந்த நிலையில்லாத சூழலைச் சொல்லும் ‘பஸ் சினேகம்’, அந்த அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம் வாழந்து பார்க்க ஆசைப்பட்டு பொய்களாய் அடுக்கி மாட்டிக் கொள்ளும் “கனேடியன் விஸ்கி’யில் வரும் ரவியும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆயிரம் யோசனைகள், பெற்ற குழந்தையை கூட வைத்துக் கொள்ளமுடியாத அந்த ’பாலூட்டிகள்” கதையில் வரும் அந்த பெண்ணின் பரிதாபமும், ’மிச்சம்’ கதையில் வரும் அமெரிக்கா இந்தியா என இருபக்கமுமான அந்த நியாயமும் (’என் சொந்த நாட்டில் நான் ஒரு மைனாரிட்டி மாதிரி உணர்கிறேன்’), அரைஞாண் கயிற்றால் மாட்டிக் கொண்டு மீளூம் அந்த இளைஞனும், ’ஒரு தடவை பலி கொடுத்தது போதும்..’ என்று அமெரிக்க வாழ்வின் துயரத்தை ஒற்றை வரியில் சொல்லி முடிக்கும் அந்த சுமிதா (பலூன்) வும் மறக்கவே முடியாதவர்கள். அதிலும் அந்த ‘மையவிலக்கு’ சிறுகதை இந்தியா எப்படி இருந்த போதிலும் தான் விட்டு வந்த வாழ்க்கையை மீட்க துடித்து டிக்கெட் எடுத்து தன் ஊருக்கு வந்து கண்கலங்கி பேசும் கிரிதரன் இந்த மொத்த கதைகளுக்குமான ஹைலைட்டாக இருந்தார்.

  ‘மன்னிக்கவும்..’ ‘கடல் கடந்தவன்’ ‘பாண்டேஜ்’ ‘கிச்சாமி’ ”நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு’ என மற்ற கதைகளும் பக்கங்களை நிரப்பியதாக இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் ரசிக்க வைத்தன.

  அமெரிக்க வாழ்க்கையையும், அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் இவ்வளவு தூரம் இனி எழுதிவிட முடியுமா தெரியவில்லை. தலைக்கு மேல் எப்போதும் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிற வரிகள் அமெரிக்க வாழ்விற்கான சாரம்சம்.

  இதை இங்கிருக்கும் மெயின்ஸ்ட்ரீம் பத்திரிக்கைகளில் எழுதியிருந்தால் இதன் ரீச் இன்னும் உச்சத்தைத் தொட்டிருக்கும். படிக்கிறவனை மென்மையாய் கைபிடித்து ரசிக்க சொல்கிற நடை. இயல்பாய் வருகிற சுவாரஸ்யம். அழகாய் வெளிப்படுகிற நகைச்சுவை. தமிழ் எழுத்துலகம் உங்களை மிஸ் பண்ணிவிட்டது சத்யராஜ்குமார். தமிழ்நாட்டில் இருந்து எழுத்துலகில் ஆட்சி செய்யாமல் உலகத்தின் ஒரு மூலையில் கொஞ்சம் பேருக்கு மட்டும் படைத்துக் கொண்டு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பொருளாதார துரத்தலில் இன்னும் எழுத்தையும் சுமந்து கொண்டு சலிக்காமல் நீங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

  வாழ்ந்த காலம். நாம் அறிந்த மனிதர்கள். நமக்கு மட்டுமே நடந்த அனுபவங்கள் இவற்றை சொல்லிவிட்டு, பதிவு செய்துவிட்டு போவதைவிட இலக்கியத்திற்கு வேறென்ன செய்துவிட முடியும்? அதைவிட வேறென்ன இலக்கியமாக இருக்க முடியும்? ஒரு அமெரிக்க வாழ்க்கையின் சின்ன விமர்சனம் போல் வந்திருக்கும் உங்கள் “துகள்களுக்கு என் வாழ்த்துகள். கடைசியாய் ஒரு வேண்டுகோள். தொடர்ந்து எழுதுங்கள்.
  ————

  அமேசான் லின்க்:
  http://www.amazon.com/gp/search/ref=sr_nr_seeall_1?rh=k%3Asathyarajkumar%2Ci%3Astripbooks&keywords=sathyarajkumar&ie=UTF8&qid=1382093347

  ஆப்பிள் லின்க்:
  https://itunes.apple.com/us/book/tukalkal/id723822513?mt=11

   
 • சத்யராஜ்குமார் 6:00 pm on October 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பலூன் 


  வம்சி சிறுகதைப் போட்டிக்காக!


  நாற்றம் குடலைப் புரட்டியது. விரல் நரம்புகள் அறுந்து விழும் போல வலி. இந்த கண்றாவியின் பெயர் ட்யூனா என்றார்கள். ஆழக்கடலில் அகப்படும் ஏதோ ஒரு மீனின் வகை. பதினொரு மணிக்குள் இதை மாவு மாதிரி பிசைந்து வைக்க வேண்டும்.

  “சுமிதா, முடிஞ்சதா?” – சப்வே துரித உணவகத்தின் மேனேஜர் மேத்யூஸ் ஆங்கிலத்தில் கத்தினான்.

  தாங்க முடியாத நாற்றம் குமட்டியதில் அவனுக்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை. எதுவோ ஒன்று வயிற்றினடியிலிருந்து கிளம்பி, தொண்டைக்குழி அருகே வந்து அடைத்துக் கொண்டு மொத்தமாய் வெளியே வர எத்தனித்தது.

  பிசையும் ட்யூனாவை அப்படியே போட்டு விட்டு, பாத்ரூமுக்குள் ஓடினேன். உவ்வேஏஏய் என்று வாஷ்பேசின் பூராவும் வெள்ளையும், மஞ்சளுமான திரவமாய் தெறித்தேன். கண்களிரண்டிலும் குட்டை மாதிரி நீர் நிரம்பியது. வயிற்றைப் புரட்டிப் போட்டதால் மட்டுமல்ல, அழுகை பீறிட்டெழுந்ததாலும்தான்.

  வாயைக் கொப்பளித்து, முகத்தைக் கழுவின பின் – பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது, மேத்யூஸ் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். படபடப்போடு கத்தினான். “இன்னும் அரை மணி நேரத்தில் லஞ்ச் கூட்டம் அலை மோதும். தயாரா இருக்க வேண்டாமா? என்ன பண்ணிட்டிருக்கே நீ?”

  அவன் முன்னால் அழுது விடுவேன் போலிருந்தேன். “என்னால முடியலை மேத்யூஸ். இந்த ட்யூனா பிசையற வேலையை மட்டும் தயவு செஞ்சு எனக்குத் தராதே.”

  ஒரு பெரிய மூச்சிறைப்போடு கோபமாய் ஏதோ சொல்ல வந்தவன், விவாதித்துக் கொண்டிருந்தால் இப்போதைக்கு வேலையாகாது என்று முடிவெடுத்தவன் போல மிஷேலைக் கூப்பிட்டான்.

  மிஷேல் கறுப்பி. ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். அலட்சியமாய் பிசைய ஆரம்பித்தாள். எனக்கு குடலைப் புரட்டும் நாற்றம் அவளுக்கு நறுமணம் போல தெரிகிறது. பிசைந்து முடித்து கையைக் கழுவப் போகையில், கையில் ஒட்டியிருக்கும் மீன் மாவை ஆசையாய் நக்கவும் செய்வாள்.

  மிஷேல் செய்து கொண்டிருந்த வேலையை இப்போது நான் செய்ய வேண்டும். பெரிய பெரிய ட்ரேக்களில் அடுக்கி வைக்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை இயந்திர அடுப்பின் ரேக்குகளில் சொருகி சொருகி பதமாய் வெளியே எடுக்க வேண்டும்.

  ட்யூனா பிசைவது குடலைப் புரட்டும் கஷ்டம் என்றால் இது வேறு மாதிரி உயிரை வாங்குகிறது. அரிசி சாப்பிட்டு வளர்ந்த உடம்பில் அவ்வளவு வலு இல்லை. ட்ரேயை உயரமாய் தூக்கித் தூக்கி சீக்கிரத்திலேயே தோள்களிரண்டிலும் வலியெடுக்க ஆரம்பித்தது.

  ரொட்டித் துண்டுகளை அடுக்குகிற போது ஒரு துண்டு தவறி தரையில் விழுந்ததற்கு முந்தா நாள் மேத்யூஸ் அப்படித் திட்டித் தீர்த்தான். ஆங்கிலம் கூட சரியாகப் பேசத் தெரியாத இந்த மெக்சிகனிடம் சில டாலர்களுக்காக என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது.

  துரித உணவக வேலை என்பது ஸாண்ட்விச் சாப்பிடுகிற மாதிரி சுலபமாக இருக்கும் என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம். வெங்காயம் நறுக்கிப் போடுவதைத் தவிர வேறெதுவும் என்னால் முடியவில்லை.

  சேகரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வருகையில் பிரமித்துப் பார்த்த அமெரிக்கா வண்ணங்கள் நிரம்பிய மிகப் பெரிய பலூன் என்பது இப்போது புரிகிறது. ஆறே மாதத்தில் அது உடைந்து கிழிந்து அதன் உட்புற அசிங்கங்களை பார்க்க நேரிடும் என்று கற்பனை கூட செய்யவில்லை.

  முதன் முதலாக ஏர்போர்ட்டிலிருந்து வருகையில் – பெரிய பெரிய கட்டிடங்களையும், அகன்ற நெடுஞ்சாலைகளையும், அதில் தலை விளக்குகள் எரிய வரிசை கட்டி ஓடும் கார்களையும் குழந்தை மாதிரி பார்த்து பிரமித்துக் குதூகலித்தது இன்னும் மறக்கவில்லை.

  வீட்டு வாசலில் ஜம்மென்று ராஜாத்தி மாதிரி நின்றிருந்தது பி.எம்.டபுள்யூ கார். சமீபத்தில்தான் சினிமா நடிகை ஶ்ரீஷா வாங்கினார் என்று ஒரு வார இதழில் படித்தது ஞாபகம் வந்தது.

  கோட்டை மாதிரி வீடு. ஏழு படுக்கையறை. நாலு பாத்ரூம். இது சொந்த வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் மகாராணி. சந்தோஷத்தில் திக்குமுக்காடி ஹால் நடுவில் சேகரை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்தது அடிக்கடி கனவில் வரும்.

  அப்புறம் வாடைக் காற்றுக்கு இதமாய் சேகரை உரசிக் கொண்டே நயாகரா, நியூயார்க், க்ரேண்ட் கேன்யான் என்று சுற்றி வந்த ஹனிமூன். அவனுடைய வெகேஷன் முடிந்ததும், தேனிலவு பொசுக்கென்று முடிந்து விட்டது.

  ஆபிசுக்கு இறக்கை கட்டிக் கொண்டு பறந்தான். ராத்திரி ஆசையாய் அவனை கட்டியணைக்கும் போதுதான் ப்ளாக் பெர்ரி ஃபோனில் அலுவலக அழைப்பு வரும். லேப்டாப்பைத் திறந்து வி.பி.என் குகைக்குள் புகுந்தானென்றால் எப்போது மீண்டு வந்து படுக்கிறான் என்பதே தெரியாது. ப்ரொடக்’ஷன் சப்போர்ட்டாம்.

  “சுமிதா, கல்யாணம் முடிவானதும் ரெண்டு சம்பளம் வரும்ங்கிற நம்பிக்கையில்தான் வீடு வாங்கினேன். நீயும் வேலைக்குப் போனால்தான் வீட்டுக் கடன், கார் கடன் எல்லாம் கட்ட முடியும்.”

  வேலை பார்க்க அனுமதி அட்டை கிடைப்பதற்குள் சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் க்ராஷ் கோர்ஸ் அனுப்பி வைத்தான். மென்பொருள் துறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும். என்னதான் டெஸ்ட்டிங் சுலபம் என்று எல்லோரும் சொன்னாலும், எம். ஏ வரலாறு படித்த மண்டையில் இதெல்லாம் ஏறுவேனா என்றது. படிக்கக் கட்டிய பணம் போனதுதான் மிச்சம். நாலு இண்ட்டர்வியூவில் உளறிக் கொட்டிய பின், “எனக்கு சாப்ஃட்வேர் வராது சேகர்.” என்று அழுதேன்.

  சப்வே கடை எடுத்து நடத்தும் வட இந்திய நண்பர் மூலமாக இந்த வேலையை பிடித்துக் கொடுத்தான். இந்த வேலையின் கஷ்ட நஷ்டம் பற்றி கண்ணீல் நீர் முட்ட சேகரிடம் சொல்ல முயன்றால், “தயவு செஞ்சு வேலையை விட்டுடறேன்னு சொல்லிடாதே சுமிதா. ஏற்கெனவே ராத்திரி பகல், சனி, ஞாயிறுன்னு பார்க்காம வேலை பார்த்துட்டிருக்கேன். வீட்டுக் கடன் முடியற வரைக்கும் ரெண்டு பேருமே கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.”

  வேலை நாளில் சப்வேயில் உழன்றால், லீவு நாளில் அந்த நாலடுக்கு, ஏழு படுக்கையறை மாளிகைக்கு வேக்வம் போட்டு தாவு தீர்கிறது. ஆபிஸ் வேலை என்று சேகர் நழுவி விடுகிறான். முதலில் பார்த்து பிரமித்த அதே விஸ்தாரமான வீடு இப்போது எரிச்சலூட்டுகிறது.

  போதாக் குறைக்கு வீட்டைச் சுற்றி இருக்கும் லான் தரையில் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். புல் கொஞ்சம் தாறு மாறாய் வளர்ந்து விட்டால், கம்யூனிட்டி அழகு கெடுவதாக இருநூறு டாலர் அபராதம் விதித்து சிவப்பு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

  போன மாசம் லான் சமன்படுத்தும் போது, அடிவயிற்றில் சளீரென்று ஒரு மின்னல் தெறித்து, முதல் முதலாய் உருவான கரு கலைந்ததைப் பற்றி ஊருக்கு ஃபோன் பேசிய போது அம்மாவிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அம்மா அதிர்ச்சியில் ஆடிப் போவாள்.

  அவ்வப்போது ஒரு சில வாரக் கடைசிகளில் சேகருடைய நண்பர்களுடன் பாட்லக் என்ற பெயரில் கூட்டாஞ்சோறு! வெளியே ஒப்புக்கு சிரித்து கொண்டாடுகிற மாதிரி நடித்தாலும், இதற்கு வேறு தனியாய் சமைக்கணுமா என்று அயர்ச்சியாய் இருக்கும்.

  லஞ்ச் நேரம் முழுவதும் கால் கடுக்க நின்று ஸாண்ட்விச் கட்டிக் கொடுக்கும் வேலை இயந்திரத்தனமாய் நடந்தது. நாலு மணிக்குத்தான் அப்பாடா என்று மூச்சு வாங்க முடிந்தது.

  மேத்யூஸ் கூப்பிட்டு டாலர்களைக் கவரில் போட்டுக் கொடுத்தான். இன்றைக்கு சம்பள நாளா என்ன?

  “சுமிதா, ஐயாம் ஸாரி. உன்னை விட கொஞ்சம் வலுவான, துடிப்பான ஆள் வேணும். சம்பளக் கணக்கை செட்டில் பண்ணியிருக்கேன்.”

  என் கண்கள் மனசுக்குக் கட்டுப்படாமல் சட்டெனத் தளும்பியது. அதை அவனிடம் காட்டிக் கொள்ள விருப்பமின்றி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கடையை விட்டு அகன்றேன்.

  வீட்டில் சேகர் கடுப்போடு உட்கார்ந்திருந்தான். ராத்திரி பூராவும் என்னிடம் பேசவே இல்லை. இந்நேரம் இருபது முப்பது பேரிடம் எனக்கு அடுத்த வேலை கிடைப்பதற்காக போன் பேசியிருப்பான். காலையிலும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிப் போய் விட்டான்.

  பனிரெண்டு மணி நேரமாய் யாரிடமும் வாயைத் திறந்து பேச முடியாமல் மவுனமாய் இருப்பதே பைத்தியம் பிடிக்க வைத்து விடும் போலிருக்கிறது.

  கார்ட்லெஸ் போன் எடுத்து இந்தியாவுக்கு எண்களை அழுத்தினேன். மறுபக்கம் அப்பாவின் குரல் கேட்டது. “சுமிதா, எப்படி இருக்கேம்மா?”

  “நல்லாருக்கேம்பா” என்ற சம்பிரதாயமான பொய்யைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

  “நீ அனுப்பின ஃபோட்டோ, விடியோ எல்லாம் தங்கராசு இப்பதான் டிவிடில போட்டுக் காட்டினாம்மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. எம்மாம் பெரிய வீடுன்னு பக்கத்து வீட்டு மணியகாரர் வாயைப் பிளந்தாரு. அக்கா பிஎம்டபுள்யூவா வெச்சிருக்கான்னு காலேஜுல படிக்கிற சபரீசுப் பையன் ஆச்சரியமாக் கேட்டான். எப்படியோ நாங்க ஆசைப்பட்டபடி காரு பங்களாவோட அமெரிக்காவுல ஒரு சொகுசான வாழ்க்கை உனக்கு ஆத்தா புண்ணியத்தில் அமைஞ்சிருச்சு. நேர்த்திக் கடன் மட்டும் இன்னும் பாக்கி இருக்கம்மா. ஒரு வருசம் நல்லபடியாப் போகட்டும்ன்னுதான் காத்திருந்தேன். அம்மனுக்கு நேர்ந்து விட்ட நம்ம லட்சுமி ஆட்டை அடுத்த வாரம் கோயில்ல பலி குடுக்கலாம்ன்னு இருக்கோம்.”

  “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். ■

  – சத்யராஜ்குமார்

   
 • சத்யராஜ்குமார் 8:39 am on February 21, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சிறுகதை. சிக்கல்கள். [4] 

  விஷயம் ரெடி. அடுத்தது என்ன?

  பாத்திரத் தேர்வு!

  எடுத்துக் கொண்ட விஷயத்தை எந்த மாதிரியான பாத்திரங்கள் மூலமாக கொண்டு செல்வது? பல சமயம் விஷயமே ஒரு சில கதாபாத்திரங்களை தீர்மானித்து விடும்.

  உரையாடல் சிறுகதைப் போட்டியில் தேர்வாகிய மைய விலக்கு என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால், அமெரிக்க வாழ்க்கைக்கு ஒட்டாத பெரியவர்கள்தான் கதையின் விஷயம்.

  ஆக கதைக்கு ஒரு வயதான கேரக்டர் நிச்சயம் தேவை. அது அப்பாவா, அம்மாவா என்பது இந்தப் பின்னணியில் என்ன மாதிரி கதை எழுதப் போகிறேன் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

  சில சமயம் பாத்திரத் தேர்வுக்காக யோசிக்கும்போதே அழகான கதையும் தட்டுப்படும்.

  அப்படித்தான் மைய விலக்கு கதைக்காக சென்னை அப்பாவையும், அமெரிக்கா மகனையும் பாத்திரங்களாக முடிவு செய்த போது, அந்தப் பிரச்சனைக்கான புதிய கோணம் தட்டுப்பட்டது.

  பாத்திரங்கள் முடிந்த அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

  தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள் சிறுகதையில் இருந்தால் குழப்பமும், அலுப்பும் மிஞ்சுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  சில சமயம் துணை கதாபாத்திரங்கள் கதையின் போக்கிற்காகத் தேவைப்படலாம்.

  உதாரணமாக மைய விலக்கு கதையில் அவனின் மனைவியும், குழந்தைகளும்.

  இந்த கதாபாத்திரங்கள் சம்பந்தமாய் நான் கையாளும் இன்னொரு முக்கியமான நுட்பம் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.

  (தொடரும்)


  அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி