Updates from செப்ரெம்பர், 2016 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 9:04 pm on September 27, 2016 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  கிரந்தம் தவிர்! 2.0 

  ஐந்து வருடங்களூக்கு முன்பு என்னிடமிருந்த புல்வெளி டாட் காம் (http://pulveli.com) என்ற இணைய முகவரியில் கிரந்தம் தவிர்! என்ற தேடுபொறியை என்னாலான சிறு தமிழ்ச் சேவையாக அமைத்துக் கொடுத்தேன்.

  அப்போதே சொன்னது போல ஒரு புனைவு எழுத்தாளனாக முற்றிலுமாக கிரந்தச் சொற்களைத் தவிர்த்து எழுதுவது எனக்கு இயலாத செயலாக இருந்தாலும், தமிழ்க் கட்டுரைகளில், தமிழ் வர்ணனைகளில்  தமிழ்ச் சொற்களை முடிந்த வரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதிலிருப்பதே நல்ல விஷயமாகும் என்று நினைக்கிறேன். இது ஆங்கிலச் சொல் கலப்புக்கும் பொருந்தும்.

  சமஸ்கிருதம், ஹிந்தி உட்பட உலகத்தின் எந்த மொழியையும் நான் வெறுப்பவன் அல்ல. கிரந்த எழுத்துக்களைத் தமிழில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனும் இல்லை. ஜானி ஜானி யெஸ் பாப்பா என்று உச்சரிக்க ஜா-வும், ஸ்-உம் கை ஒலி கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறேன்.

  அதே சமயம் பல நேரங்களில் இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்ற தடுமாற்றம் ஏற்படும்போது ஓர் எளிய தேடு கருவி இருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி உருவாக்கிய இந்தப் பொறி இன்று முதல் புல்வெளி டாட் காம் என்ற முகவரியிலிருந்து  சொல் டாட் புல்வெளி டாட் காம் (http://chol.pulveli.com) என்ற முகவரிக்கு இடம் பெயர்கிறது.

  இக்கருவியின் தொழில்நுட்பப் பங்களிப்பு மட்டுமே என்னுடையது. இதன் ஆன்மா @kryes ஆவார். அதாவது இக்கருவியில் நீங்கள் தேடிப் பெறும் 90 சதவீத சொற்களை உள்ளிட்டிருப்பவர் அவரே. மீதி பத்து சதவீதம் பயனர்கள் அளித்திருக்கிறார்கள். பயனர் தந்த சொற்களை மட்டுறுத்துபவர்கள் @kryes, @arutperungo மற்றும் @madhankrish ஆவார்கள்.

  எல்லோரையும் கிரந்தம் தவிர்க்கச் சொல்லிப் பிரசாரம் செய்வது என் நோக்கம் இல்லை. அது என் வேலையும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ்க் கதைகளில் ஆங்கிலம் மிகக் கலந்து எழுதி வந்த எனக்கு ஒரு பேட்டியில் சுஜாதா தமிழ்க் கட்டுரை, கதைகளில் முடிந்த வரை நல்ல  தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் குறிப்பிட்ட பிறகுதான் உறைத்தது. அதன்பின் என்னை மாற்றிக் கொண்டேன். அது மாதிரி எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தக் கருவி சிறு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

  அப்புறம் இன்னொரு முக்கியமான செய்தி. இத்தளத்தை மொபைல் ஃபோனில் படிக்க வசதியாக இப்போது மாற்றி வடிவமைத்திருக்கிறேன். இனி உங்கள் செல்பேசியிலும் இதைப் பயன்படுத்தி மகிழ்க.

  கிரந்தம் தவிர்! புதிய முகவரி குறித்துக் கொள்க!: http://chol.pulveli.com

  5 வருடங்களுக்கு முன்பு கிரந்தம் தவிர்! கருவி உருவான கதை: https://inru.wordpress.com/no-kranth/

   
 • சத்யராஜ்குமார் 12:07 am on January 31, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மூன்றாம் காதல் – Beta Version 

  என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் தொழில் நுட்பக் காதல் நன்றாகவே தெரியும்.

  தமிழில் முதல் முதலாக ஒரு மொபைல் மின்னூல் கொண்டு வந்து ஐஃபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆப் ஸ்டோரில் வெளியிட்டதும் தெரியும். இதில் முக்கியமான விஷயம் அப்போது அந்த ஃபோன்களில் தமிழ் எழுத்துருவுக்கான சப்போர்ட் வந்திருக்கவில்லை. இப்போதும் அமேசான் கிண்டிலில் தமிழ் சப்போர்ட் இல்லை. இருந்த போதிலும் திக்குமுக்காடி ஒரு தமிழ்ப் புத்தகத்தை அதில் பதிப்பித்திருக்கிறேன். ஆப்பிள் ஐ-புக்கிலும் அமெரிக்க பின்னணியிலான இருபது சிறுகதைகள் கொண்ட அதே புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.

  போன வாரம் எழுத்தாளர் @nchokkan கூகிள் புக்ஸ் பற்றி எழுதி என் கவனத்தைக் கவர்ந்தார். துகள்கள் சிறுகதைத் தொகுப்பை சோதனை ஓட்டமாக அதில் வெளியிட்டுப் பார்த்தேன். சுய பதிப்புக்கு இந்த பிளாட்பார்ம் மிக இலகுவாக இருப்பதாக உணர்கிறேன்.

  ஒரு காலத்தில் பிரபல வார இதழ்களில் சிறுகதைகள் எழுதுவதோடல்லாமல், பொழுதுபோக்கு நாவல்களும் எழுதிக் குவித்து வந்தேன். மாலைமதி, மோனா உட்பட ஏராளமான மாத இதழ்கள் தொடர்ந்து என் கதைகளை விரும்பி வெளியிட்டு வந்ததே அதற்கு முக்கிய காரணம். டி.வி தொடர்கள் பிரபலமடையத் துவங்கியபோது மாத நாவல்களுக்கு ஒரு தேக்கம் வந்தது. அதே சமயம் நான் அமெரிக்கா வந்து விட்டேன்.

  3rd-loveஎப்படி சிறுகதைக்கென்று ஒரு கிக் இருக்கிறதோ அதே போல் இது போன்ற பொழுது போக்குக் கதைகளில் ஒரு கட்டுரையாக வறட்சி தட்டும்  விஷயங்களைக் கூட மிக எளிதாக வாசகருக்குக் கடத்தி விட முடியும் சௌகரியம் இருக்கிறது. ஒரு குற்றமும், அதற்கான தீர்வுமே பெரும்பாலான கதைகளின் மையக் கருவாக இருந்தாலும், ஒவ்வொரு கதையிலும் வரும் விதவிதமான கதாபாத்திரங்கள், பாத்திரச் சூழல்கள் கதையின் பரிமாணத்தை மாற்றிக் காட்டுகின்றன.

  கூகிள் புக்ஸ் என்னை அப்படிப்பட்ட கதைகளை மீண்டும் எழுதேன் என்கிறது.

  எதையோ தேடப் போய் என் இணைய தளத்தில் தடுக்கி விழுந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் முற்றிலும் புதிய வாசகர்களும் அவ்வப்போது எதையாவது எழுதினால்தான் என்ன என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தபடி இருக்கிறார்கள்.

  ஆகவே, “மூன்றாம் காதல் ” என்று ஒரு பொழுது போக்கு நாவல் எழுத உத்தேசித்திருக்கிறேன். வாஷிங்டன் டி.சி வாழ்க்கைக்கென்றே சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிற பகுதிகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கே கூட பரிச்சயமற்றவையாக இருப்பதை அறிந்து வியந்ததுண்டு. இந்த வட்டார வாழ்க்கையே கதையின் களம். அந்த வகையில் இதை ஓர் அமெரிக்காவின் வட்டார நாவல் எனக் கொள்ளலாம். எதைப் படித்தாலும் அதில் ஆன்ம தரிசனம் தேடும் போக்கு இணையத்தில் தற்சமயம் இருப்பதால் அதெல்லாம் இங்கே கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  ஆனால் இந்த முறை ஒரு புதிய அணுகுமுறையை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். அதாவது நாவலை கூகிள் புக்ஸில் பதிப்பிப்பதற்கு முன்னதாக Beta Version-ல் வாசகர்களைப் பங்கு பெறச் செய்து பார்க்கலாமே என்று எண்ணுகிறேன்.  விருப்பமுள்ளவர்கள் srk.writes at gmail.com என்ற முகவரிக்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version என்று சப்ஜெக்ட்டில் போட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். அல்லது @ksrk -க்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version எனக் குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சலை DM செய்யுங்கள். அத்தியாயங்கள் நான் எழுத எழுத சுடச் சுட உங்களை வந்து சேரும். அத்தியாயங்கள் குறித்து நீங்கள் ஆக்கபூர்வமான கருத்துகள் சொன்னால், குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால், அவைகள் எனக்கு ஏற்புடையவையாக இருந்தால், அதன்படி கதை மாற்றியமைக்கப்படும். இறுதிப் புத்தகத்தில் ஏற்கத்தக்க ஆலோசனை அளித்தவர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்வேன்.

  மொத்தத்தில் இது ஒரு சோதனை முயற்சி. கால வரையறை எதையும் தீர்மானிக்கவில்லை. வாரம் ஓர் அத்தியாயம் எழுதக் கூடும். என்னுடைய நேரமும், உங்களுடைய வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளதென்பதைப் பொறுத்து இந்த ப்ராஜெக்ட் இனிதே நிறைவு பெறும் அல்லது நிறைவு பெறாமலே போனாலும் போகும். 🙂

  This project is on hold now. Sorry about that! 😦

   

   

   
 • காஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, , காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்   

  காற்றடைத்த பையடா! 

  பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

  கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

  இந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.

  கார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப்  பட்டியலிடுகிறார்.

  கைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை நாம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா?!)

  உடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.

  1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.

  2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.

  3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.

  சில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

  உலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

  நாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன?

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி