விஸ்கி
என் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு.
ரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி..
”எந்த ஸ்கூலு?”
பள்ளியின் பெயரைச் சொன்னேன்.
“அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்”
”ஸ்கூல்”
”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு?
“ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்”
“தின்னவேலிலேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா?”
“இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா?”
“ஸ்கூலா? ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா?”
“அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..”
“த்தோடா… அட்ரஸ் இல்லேன்ற! எப்டி கண்டுபுடிப்ப? ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு?”
“இல்ல. இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான?..”
“இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா? வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..”
“அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..”
“ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா?!”
இந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்..
“த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்ஷனு … எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா?”
“வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..”
“போன என்னாண்ட குடு… நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ”
நண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல?”
கொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது.
நான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார்.
“இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு… ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..”
’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..”
வண்டியைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட? ந்தா.. நில்லுன்றன்ல?’
“ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன்.
“இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு… நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்… அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு… பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு…
விஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது.
நண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்.. சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும்? ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற? பேமானி…”
திரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார்.
ஆயில்யன் 1:39 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் |
சரக்கு வுட்டுக்கிட்டு இது மாதிரி லந்து கொடுக்கறதுக்குன்னே நிறைய பார்ட்டீங்க இருக்கு போல 🙂 சரக்கு உள்ள போயிட்டாலே அவுங்களும் நல்லா உசரத்துக்கு போயி குந்திக்கினு வுடற அலம்பல் இருக்கே அவ்வ்வ்வ்வ் 🙂 பாவம் அந்த ஆட்டோ டிரைவரு லக்கேஜ் ஏத்திக்கிட்டு எங்க போய் திரிஞ்சுக்கிட்டிருக்காரோ ! :))
நண்பன் 10:50 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் |
இந்த பதிவோட நோக்கம் என்ன?
சித்ரன் 4:27 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் |
இந்தப் பதிவின் நோக்கம் எனக்கேற்பட்ட அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான்..
minimeens 4:30 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் |
இது ரொம்ப அழகு…!
தாகன் 11:44 முப on ஜூலை 7, 2010 நிரந்தர பந்தம் |
இந்த ஜென்மத்தில் இனிமேல் வேற யார்கிட்டேயும் address கேக்க மாட்டிங்க!!!!!
செந்தில் 10:13 பிப on ஜூலை 8, 2010 நிரந்தர பந்தம் |
சித்ரன்ஜி, முகவரி அறிந்திட மளிகை கடை அல்லது துணி தேய்ப்பவரை அனுகவும், இவ் இருவரும், அவர்களின் சுற்த்தாரை பெரும் அளவு அறிந்து வைத்திர்பார்கள்.