Updates from ஓகஸ்ட், 2012 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 11:49 am on August 28, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: , சித்ரன் ரகுநாத், சோதனை, டாக்டர், , kubrick's cold caloric test   

  க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட் 

  இன்று நண்பர் ஒருவரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைக்காக எப்போது எந்த டாக்டரிடம் போனாலும் தவறாமல் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எதையாவது ஒன்றை மேற்கொள்ளச் சொல்லி எழுதித் தருகிறார்கள். எல்லா டாக்டர்களுக்கும் இம்மாதிரியான லேப் மற்றும் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் உள்ளது என்பதே அவர் அங்கலாய்ப்பின் மையக் கரு. டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாகவே வேலை செய்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கடைசியில் சொல்லிவிடுகிறார்களாம். அதுதான் நமக்கே தெரியுமே. இப்படிப் போய் அப்படி வருவதற்குள் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது பழுத்துவிடுகிறது என்றார். உண்மையான கவலைதான்.

  இந்தப் புலம்பலைக் கேட்டபோது ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டு இதுமாதிரி ஒரு சில சோதனைகளைக் கடந்த ஞாபகம் தலை தூக்கியது. அப்போது எனக்கு அடிக்கடி முன் அறிவிப்பில்லாமல் தலை சுற்றல் நிகழும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன். திடீரென்று அறை சுழல்வது போல் தோன்றும். நான் மட்டும் நிலையாய் உட்கார்ந்திருக்க அறையில் இருக்கிற பொருட்களும், மேசை நாற்காலிகளும் ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பிப்பதுபோல பிரமை ஏற்படும்.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதை நான் மட்டும் உணர்வதுபோல் இருக்கும். இந்த சுற்றலின் விளைவாக உடலில் – குறிப்பாக உடலுக்குள் இருக்கும் வயிற்றில் – ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு குமட்டல் மேல் நோக்கிப் புறப்படும். பிறகு செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு தள்ளாடியபடி வாஷ்பேசினை நோக்கி உடனடியாக விரையவேண்டியிருக்கும். வயிற்றுக்குள் இருக்கும் பகுதிகள் வெளியே வந்து விழுவதுபோல தொடர்ந்து தீவிர வாந்தியவாதியாக கொஞ்ச நேரம் இருக்க நேரிடும். சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

  இது போல மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு தடவை சலூனில் முடி திருத்தம் செய்துகொண்டிருந்தபோது இப்படி நேர்ந்து பாதியிலேயே எழுந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான்கு பில்டிங் தள்ளியிருக்கிற என் வீட்டில் இறங்கி பாக்கெட்டில் அகப்பட்டதை ட்ரைவரின் கையில் திணித்து வாஷ்பேசினை நோக்கி ஓடினேன்.

  இதை இப்படியே விட்டுவிட்டால் சரியாகாது என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட் டாக்டரை அணுகினேன். பிரச்சனையைக் கேட்டுவிட்டு ஒரு சில பரிசோதனைகளைச் செய்யவேண்டுமென்றார். நான் என் உடம்புக்குள்ளிருந்து ரத்தம் முதலான திரவப் பொருட்களை சாம்பிள் கொடுத்துவிட்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனேன். எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிவித்தார். பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் பக்கத்திலேயே ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் இருப்பதாகவும் அவர் எனக்கு “க்யூப்ரிக் கோல்டு கலோரிக் டெஸ்ட்- என்று ஒன்றைச் செய்வார் என்றும் அறிவித்தார். கேட்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் இந்தப் பரிசோதனை எதற்கு என்று கேட்டபோது அவர் சொன்னது: நாம் நிற்கும் போதும் நடக்கும்போதும் உடம்பை பேலன்ஸ் செய்வது நம் காதுகள்தாம். காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஆகி பேலன்ஸ் தவறினால் இது போல தலைசுற்றலோ, நடக்கும்போது தள்ளாடலோ ஏற்படும் என்றார்.

  இந்த க்ளினிக்-லிருந்து இரண்டு வீடுகள் தள்ளி  அந்த இளம் கா.மூ.தொ நிபுணரின் க்ளினிக் இருந்தது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு ரிஷப்ஷனில் உட்கார்ந்து சுவரில் “For Sale” என்று எழுதி மாட்டியிருந்த அவர் மனைவியின் தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை பார்த்தவாறே டாக்டர் செய்யப்போவது எந்த மாதிரியான டெஸ்ட் என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் கிஞ்சித்தும் பிடிபடவில்லை. பிறகு நான் அந்த டாக்டரை சந்தித்தபோது என்னை அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு  வரச்சொன்னார்.

  போனேன். இளம் நர்ஸ்கள் சகிதம் வந்த டாக்டர் என்னை அறை நடுவாந்திரம் இருந்த ஒரு படுக்கையில் ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்கச் சொன்னார்.  பிறகு ஒரு பெரிய சிரிஞ்சை எடுத்தார். நர்ஸ்கள் ஒரு மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தார்கள். பனிக்கட்டி உருகி உருவாகிய நீரை சிரிஞ்சால் உறிஞ்சினார். பின்னர் கொஞ்சம் பொறுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு எனது வலது காதுக்குள் சிரிஞ்சை வைத்து பீய்ச்சினார். சிலீர் என்ற பனி நீர் காது ஜவ்வை முத்தமிட உடம்பு முழுக்க ஓடியது ஒரு மின்சாரச் சிலிர்ப்பு. உடலின் ஒவ்வொரு அணுவும் ஜில்லென்று கூச, அந்த உணர்வை எப்படிச் சொல்வது? “உச்ச மகிழ்வுக்கும் உச்ச வலிக்கும் அனுபவிப்பவனிடம் அடைமொழி இல்லை. மேலும் எம் வலி ஆகாது உம் வலி” என்று கல்யாண்ஜியின் கவிதை வரிகளை இந்த உணர்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

  இப்போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு அறை மெதுவாகச் சுழல ஆரம்பிக்கும். டாக்டர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார். தலை சுற்றுகிறதா? எந்தத் திசையில் சுற்றுகிறது என்று கேட்பார். சரியாக இரண்டு நிமிடம் கழித்து தலை சுற்றுவது நிற்கும்.  டாக்டர் ஒரு தாளில் எதையோ குறித்துக் கொள்வார். பிறகு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்கும், செவிலிகளுக்கும் ஓய்வு. பின்னர் எதிர் திசையில் ஒருக்களித்துப் படுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிஞ்ச், குளிர் நீர் உறிஞ்சல், இடது காதுக்குள் பீய்ச்சல். இப்போதும் தலை சுற்றல் ஏற்படும். ஆனால் முன்னர் ஏற்பட்டதற்கு எதிர் திசையில். சரியாக இரண்டு நிமிடம். பின்னர் நின்றுவிடும்.

  இரண்டு வெவ்வேறு திசைகளிலான, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தலைசுற்றல்களினால் தள்ளாடி இருக்கையில் அமர்ந்த என்னிடம் “பேலன்ஸ் சரியாத்தான் இருக்கு. எதுவும் ப்ராப்ளம் இல்லை” என்றார் டாக்டர். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட்.

  கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டரின் பிள்ளைதான் இந்த இளம் காது மூக்கு தொண்டை டாக்டர் என்று பின்னர் தெரிந்தது. அதன்பிறகு எனக்கும் அந்த பிரச்சனை சட்டென்று நின்றுவிட்டது.

   
 • பொன்.சுதா 6:17 am on October 20, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும் 

  நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.

  பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.

  இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
  swine1
  சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.

  7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.

  இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
  swine3
  மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.

  இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.

  முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

  அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • பொன்.சுதா

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
 • சித்ரன் ரகுநாத் 10:53 am on August 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: ஆரோக்கியம், , பன்றிக் காய்ச்சல், , swine flu   

  ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல் 

  maskமெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் ப்டம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள்.

  மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ!

  பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில:

  1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது.

  2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை.

  3. Calcarea Carb – 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம்.

  4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?)

  5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.

  6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல்.

  7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம்.

  8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம்.

  இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

  ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன.

  ‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார்.

  அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

   
  • ஓவியன் 11:28 முப on ஓகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

   ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ?

  • சத்யராஜ்குமார் 12:11 பிப on ஓகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   டாக்டரின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், எந்த தைரியத்தில் ஒரு டாக்டரிடம் போவது என்று கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. 😐

  • பினாத்தல் சுரேஷ் 1:26 பிப on ஓகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த லீவு சமாசாரம் பயங்கரமாய் குழப்புகிறது. மழைக்காக லீவ் என்றால் மழைவிட்டதும் தொடங்கலாம். இப்போது எப்போது தொடங்கலாம் என்று லீவ் விடுகிறார்கள்?

   டாக்டர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது 🙂

  • யாத்ரீகன் 1:53 பிப on ஓகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   >> ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ? <<<

   :-))))))))))

  • என். சொக்கன் 1:55 பிப on ஓகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பதிவு, அதைவிட நல்ல தலைப்பு, நன்றி 🙂

   இப்போதெல்லாம் யாராவது பலமாகத் தும்மினாலே பயமாக இருக்கிறது – பத்திரிகைகளும் டிவிகளும் இந்தப் பயத்துக்கு நன்றாகத் தீனி போடுகிறார்கள் – இவர்களுக்கு அடுத்த பரபரப்பு கிடைக்கும்வரை இது தொடரும்!

   – என். சொக்கன்,
   பெங்களூர்.

  • REKHA RAGHAVAN 1:36 முப on ஓகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இதென்னடா தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்று உள்ளே புகுந்து படித்துவிட்டு கடைசி பாராவுக்கு வந்தால் தலைப்பு வைக்கிறதில் நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு நினைக்கவச்ச அருமையான பதிவு. என்னை பொறுத்த வரை அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியே போவதை நிறுத்தினாலே பன்றி என்ன ஓணான் (வந்தாலும் வரும்) காயச்சல்லிலிருந்து கூட தப்பித்துவிடலாம்.

   ரேகா ராகவன்

  • படிக்காதவன் 3:16 முப on ஓகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பதிவு. நாங்கள் அலுவலகத்தில் கூட கவசம் அணிந்து தான் வேலை பார்க்கின்றோம்.

  • சித்ரன் 1:10 முப on ஓகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பின்னூட்டங்களுக்கு நன்றி. பள்ளிகள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துவிட்டன. அரசாங்கத்தின் உத்தரவால் மீடியாக்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக பீதி குறைந்து பரிசோதனை மையங்களில் கூட்டம் குறைந்திருக்க வாய்ப்புண்டு. எப்படியோ ப.கா கட்டுப்படுத்தப்பட்டு ஒழிந்தால் சரி.

   • uma 1:58 முப on ஓகஸ்ட் 24, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நல்ல பதிவு சித்ரன். நமக்கு வந்தால் கூட பரவாயில்லை, பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என்று அச்சமாகத்தான் இருக்கிறது. இன்று என் பசங்களுக்கு light fever, cold and cough. நல்ல வேளை டாக்டர் இது சாதரண காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். சீக்கிரம் இதற்கு எதாவது vaccination கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி