அந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கு பதினாறு வயதிருக்கலாம். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது நான் அட்லாண்ட்டிக் சிட்டியில் சீசர்ஸ் என்னும் சூதாட்ட விடுதியின் பின் வாசலில் நின்றிருந்தேன். சற்றே இருட்ட ஆரம்பித்திருந்தது. கூப்பிடு தூரத்தில் கடல். கடற்கரையை ஒட்டி மரப்பலகைகளால் ஆன அகலமான பிளாட்பாரம். இருமருங்கிலும் கடைகள். இதற்கு போர்டு வாக் என்று பெயர். திருவிழா போல ஜனங்கள் எதிரும் புதிருமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அரை குறை ஆடை யுவதிகளுக்கும் பஞ்சமில்லை. போதையினாலோ, கொண்டாட்ட மனநிலையினாலோ தள்ளாடிக் கொண்டும், கூக்குரலிட்டுக் கொண்டும் சாரை சாரையாய் கடந்து செல்லும் ஜனங்கள். ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக் கொள்பவர்களின் ப்ளாஷ் மின்னல்கள்.
அவளுக்கு நான் பதில் சொல்ல முயன்ற கணத்தில் என் செல்போன் ஒலித்தது.
“சத்யா, நான் இளா பேசறங்க. நாங்க சீஸர்ஸுக்கு பின்னால வந்துட்டோம். நீங்க எங்க இருக்கிங்க?”
துபாயிலிருந்து பணி நிமித்தமாய் அமெரிக்கா வந்திருக்கும் பெனாத்தல் என்னும் ப்ளாகரையும், ராம்சுரேஷ் என்ற எழுத்தாளரையும் ஒரு சேர சந்திப்பதற்காகத்தான் அங்கே காத்திருந்தேன். இதோ வந்து விட்டார்கள்.
அந்தப் பெண்ணிடம், “ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்… ” என்று சொல்லி விட்டு, “நானும் அங்கதாங்க நிக்கறேன்.” என்று சொல்லிக் கொண்டே கண்களால் ஜனத்திரளை அறுத்த படி மெல்ல நடந்து சென்றேன்.
சற்று தொலைவில் இலவசக் கொத்தனார், கேயாரெஸ், வெட்டிப்பயல் பாலாஜி, ஸ்’ரீதர் நாராயணன் மற்றும் டைனோபாய் (என அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர்) புடை சூழ சுரேஷ். நெடு நெடுவென உயரமாய் தெரிந்தார். முகத்தில் தாராளமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு. அமெரிக்க வாழ் இந்தியர்களை விட வெள்ளை வெளேர் நிறம்.
அந்த அசைவ நகரத்தில் வந்ததும் வராததுமாய் பியர்ஸ் மால் எனப்படும் சைவ ஸ்தலத்துக்கு அவர்களை கூட்டிச் செல்ல நேர்ந்ததை எண்ணி லேசாக நெஞ்சம் விம்மினாலும் அங்கே நடந்த ஒலி ஒளி தண்ணீர் நடனத்தை அந்த இளைஞர் கூட்டம் ரசிக்கவே செய்ததால் ஒரு சொட்டு திருப்தி.
‘வாட்டர் ஷோ எங்கே எங்கே?’ என போனில் விசாரித்துக் கொண்டே இருந்த பாஸ்டன் பாலாஜி சினிமா போலிஸ் போல எல்லாம் முடிந்த பின் வந்து சேர்ந்தார்.
அதன் பின் பேசிக் கொண்டே அரை மணி நேரம் போர்டு வாக். சில மணி நேரம் பிட்சா கடை பெஞ்ச்சு. வாய் ஓயாமல் பேச்சு. பற்களும் தாடையும் சுளுக்கிக் கொள்ளுமளவு சிரிப்பு.
பெரும்பாலும் எழுத்தும், எழுத்தாளர்களும் சார்ந்த அரட்டை. இணைய எழுத்தாளர்கள், இணையா எழுத்தாளர்கள் பற்றி கிண்டல். சமகால எழுத்தாளர்கள், அகால எழுத்தாளர்கள் குறித்த அலசல். மணி இரவு பனிரெண்டு ஆகி விட்டிருக்க, கேசினோ சிட்டிக்கு வந்து விட்டு சூதாட்ட விடுதிக்கு வெளியே அலைவது என் பெயருக்கு முன்னாலுள்ள அடைமொழி போலுள்ளது என்று வெட்டி பாலாஜி விசனப் பட, பெனாத்தல் சுரேஷை அழைத்துக் கொண்டு கேசினோவுக்குள் செல்ல முடிவானது.
அத்தோடு சந்திப்பை முடித்துக் கொண்டு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட நான், மீண்டும் சீஸர்ஸ் பின் வாசலை நெருங்கிய போதுதான் முதலில் என்னிடம் அங்கே பேசிக் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பற்றிய ஞாபகம் சுருக்கென்று மூளையைக் குத்தியது.
அவள் இத்தாலியா, அமெரிக்காவா, ப்ரெஞ்ச் வம்சாவளியா என தீர்மானமாய் சொல்ல இயலவில்லை. ஆனால் கவலையின் ரேகைகள் அழுத்தமாய் அவள் முகத்தில் பதிந்திருந்தது. இன்னமும் ப்ளஸ் டூ தாண்டாதவள் என்பதை கண்களைக் கவ்வியிருந்த வெகுளித்தனம் மூலம் அறிய முடிந்தது.
லேசாய் தளும்பியிருந்த விழிகளோடு, “உன்னோட போனை நான் உபயோகிக்கலாமா? ” என்றுதான் கேட்டாள்.
என் நெற்றியில் அரும்பிய கேள்விக்குறிகளை உணர்ந்து மேலும் சொன்னாள். “கூட்டத்தில் என்னோட குடும்பத்தை விட்டு பிரிஞ்சிட்டேன். அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணனும்.”
எனக்கு உதவ விருப்பமாகவே இருந்தது. நேர்மையான பெண்ணாகத்தான் தெரிந்தாள். ஆனாலும் தயக்கம். செல்போனை இரவல் கொடுத்து தீவிரவாதியாக மாட்டிக் கொண்ட அப்பாவி ஆஸ்திரேலிய இந்தியர் நினைவுக்கு வந்து பயமுறுத்தினார்.
ஏன் பல வருஷங்களுக்கு முன்னால் எனக்கே இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்த புதுசு. ஒரு நேர்முகத் தேர்வுக்கு என்னை காரில் அழைத்துச் சென்றவர், முடிந்த பிறகு கூப்பிடச் சொல்லி செல்போனை இரவல் தந்து விட்டுப் போய் விட்டார். இண்ட்டர்வியூ முடிந்த பின் பார்த்தால் சார்ஜ் காலாவதியாகி உயிரிழந்து கிடந்தது. போவோர் வருவோரிடமெல்லாம் இரவல் கேட்டுப் பார்த்தேன். எல்லோரும் முகத்துக்கு நேராக, “ஸாரி, தர முடியாது. ” என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனார்கள்.
நேர்முகத் தேர்வளித்த கம்பெனியின் ரிசப்ஷனுக்கே திரும்பிச் சென்று, ஒரு போன் பண்ணிக்கலாமா எனக் கேட்க, சுவரில் மாட்டியிருந்த பொதுத் தொலைபேசியைக் காட்டி, “அதைப் பயன்படுத்து.” என்று நிர்தாட்சண்யமாய் சொன்னார்கள்.
குவார்ட்டர் எனப்படும் 25 சென்ட் சில்லறைக் காசைப் போட்டால்தான் அது வேலை செய்யும். நல்ல வேளையாய் என்னிடம் இருபது டாலர் இருந்தது. இந்தியாவிலிருந்து கொண்டு வந்த சொற்ப சொத்தில் மிச்சம் இருந்தது அது மட்டும்தான். எனக்கு அடுத்து இண்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண காத்திருந்த தெலுங்கு பெண்ணிடம் தயங்கித் தயங்கி, “போன் பண்ணனும். குவார்ட்டர்ஸ் இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே இருபது டாலரை நீட்டினேன்.
இருபது டாலரை வாங்கிக் கொள்ள மறுத்தாள். ஆனால், இண்ட்டர்வியூவில் என்னவெல்லாம் கேட்டார்கள் என்று என்னை அவள் பத்து நிமிஷம் பர்சனல் இண்ட்டர்வியூ செய்து தெரிந்து கொண்டு விட்டு, அதன்பின் பர்சில் துழாவி நாலைந்து குவார்ட்டர் நாணயங்களை எடுத்துக் கொடுத்தாள்.
புதிய தேசத்தில், முகமறியா நபர்களுக்கு மத்தியில் நடுக்கடலில் தத்தளித்தது போன்ற உணர்வு. அதே போலத்தான் இப்போது அந்தச் சிறிய பெண்ணுக்கு இருந்திருக்கும். இந்த இடம் பார்ப்பதற்கு கோலாகலமாய் இருந்தாலும் மிக மிக அபாயகரமான இடமும் கூட. புகையும், சாராயமும், மதுவும், மாதருமாய் குழந்தைகளுக்கு லாயக்கில்லாத தலம்.
இப்படிப்பட்ட இடத்தில் குழந்தையுமல்லாத, குமரியுமல்லாத ஒரு அழகான பெண் திசை மாறி தனியே அகப்பட்டுக் கொண்டு – அங்கே கடந்து செல்லும் நூற்றுக் கணக்கான ஜனங்களில் ஏனோ என் மேல் நம்பிக்கை கொண்டு உதவி கேட்டிருக்கிறாள்.
போன் தர தயக்கமாயிருந்தால் இரண்டு டாலர் கொடுத்து பொதுத் தொலைபேசியில் பேசுமாறு சொல்லி விட்டு வந்திருக்கலாம் என்று இப்போது யோசனை தோன்றி மனசு படபடவென்று அடித்துக் கொள்கிறது.
நான் பாட்டுக்கு ஜஸ்ட் ஏ மினிட் என்று விட்டேற்றியாய் சொல்லி விட்டுப் போயே போய் விட்டேன்.
அவள் நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாய் இருந்தது.
பெனாத்தல் சுரேஷையும் மற்ற நண்பர்களையும் சந்தித்த சந்தோஷத்தை விடவும், அந்த வெகுளிப் பெண்ணுக்கு உதவ மறுத்த குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருக்க கனத்த மனத்துடன் அட்லாண்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வந்தேன்.
வெடிகுண்டுகளால் மனிதர்களை அழிக்கும் தீவிரவாதம் இது போன்ற தருணங்களில் இயல்பாகத் துளிர் விடும் மனிதாபிமானத்தையும் சேர்த்து அழித்து வந்திருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
சித்ரன் ரகுநாத் 11:27 பிப on ஜனவரி 17, 2015 நிரந்தர பந்தம் |
எழுதியிருக்கலாமே..