Tagged: அனுபவம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 11:49 am on August 28, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அனுபவம், சித்ரன் ரகுநாத், சோதனை, டாக்டர், , kubrick's cold caloric test   

  க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட் 

  இன்று நண்பர் ஒருவரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைக்காக எப்போது எந்த டாக்டரிடம் போனாலும் தவறாமல் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எதையாவது ஒன்றை மேற்கொள்ளச் சொல்லி எழுதித் தருகிறார்கள். எல்லா டாக்டர்களுக்கும் இம்மாதிரியான லேப் மற்றும் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் உள்ளது என்பதே அவர் அங்கலாய்ப்பின் மையக் கரு. டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாகவே வேலை செய்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கடைசியில் சொல்லிவிடுகிறார்களாம். அதுதான் நமக்கே தெரியுமே. இப்படிப் போய் அப்படி வருவதற்குள் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது பழுத்துவிடுகிறது என்றார். உண்மையான கவலைதான்.

  இந்தப் புலம்பலைக் கேட்டபோது ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டு இதுமாதிரி ஒரு சில சோதனைகளைக் கடந்த ஞாபகம் தலை தூக்கியது. அப்போது எனக்கு அடிக்கடி முன் அறிவிப்பில்லாமல் தலை சுற்றல் நிகழும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன். திடீரென்று அறை சுழல்வது போல் தோன்றும். நான் மட்டும் நிலையாய் உட்கார்ந்திருக்க அறையில் இருக்கிற பொருட்களும், மேசை நாற்காலிகளும் ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பிப்பதுபோல பிரமை ஏற்படும்.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதை நான் மட்டும் உணர்வதுபோல் இருக்கும். இந்த சுற்றலின் விளைவாக உடலில் – குறிப்பாக உடலுக்குள் இருக்கும் வயிற்றில் – ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு குமட்டல் மேல் நோக்கிப் புறப்படும். பிறகு செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு தள்ளாடியபடி வாஷ்பேசினை நோக்கி உடனடியாக விரையவேண்டியிருக்கும். வயிற்றுக்குள் இருக்கும் பகுதிகள் வெளியே வந்து விழுவதுபோல தொடர்ந்து தீவிர வாந்தியவாதியாக கொஞ்ச நேரம் இருக்க நேரிடும். சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

  இது போல மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு தடவை சலூனில் முடி திருத்தம் செய்துகொண்டிருந்தபோது இப்படி நேர்ந்து பாதியிலேயே எழுந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான்கு பில்டிங் தள்ளியிருக்கிற என் வீட்டில் இறங்கி பாக்கெட்டில் அகப்பட்டதை ட்ரைவரின் கையில் திணித்து வாஷ்பேசினை நோக்கி ஓடினேன்.

  இதை இப்படியே விட்டுவிட்டால் சரியாகாது என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட் டாக்டரை அணுகினேன். பிரச்சனையைக் கேட்டுவிட்டு ஒரு சில பரிசோதனைகளைச் செய்யவேண்டுமென்றார். நான் என் உடம்புக்குள்ளிருந்து ரத்தம் முதலான திரவப் பொருட்களை சாம்பிள் கொடுத்துவிட்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனேன். எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிவித்தார். பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் பக்கத்திலேயே ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் இருப்பதாகவும் அவர் எனக்கு “க்யூப்ரிக் கோல்டு கலோரிக் டெஸ்ட்- என்று ஒன்றைச் செய்வார் என்றும் அறிவித்தார். கேட்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் இந்தப் பரிசோதனை எதற்கு என்று கேட்டபோது அவர் சொன்னது: நாம் நிற்கும் போதும் நடக்கும்போதும் உடம்பை பேலன்ஸ் செய்வது நம் காதுகள்தாம். காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஆகி பேலன்ஸ் தவறினால் இது போல தலைசுற்றலோ, நடக்கும்போது தள்ளாடலோ ஏற்படும் என்றார்.

  இந்த க்ளினிக்-லிருந்து இரண்டு வீடுகள் தள்ளி  அந்த இளம் கா.மூ.தொ நிபுணரின் க்ளினிக் இருந்தது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு ரிஷப்ஷனில் உட்கார்ந்து சுவரில் “For Sale” என்று எழுதி மாட்டியிருந்த அவர் மனைவியின் தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை பார்த்தவாறே டாக்டர் செய்யப்போவது எந்த மாதிரியான டெஸ்ட் என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் கிஞ்சித்தும் பிடிபடவில்லை. பிறகு நான் அந்த டாக்டரை சந்தித்தபோது என்னை அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு  வரச்சொன்னார்.

  போனேன். இளம் நர்ஸ்கள் சகிதம் வந்த டாக்டர் என்னை அறை நடுவாந்திரம் இருந்த ஒரு படுக்கையில் ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்கச் சொன்னார்.  பிறகு ஒரு பெரிய சிரிஞ்சை எடுத்தார். நர்ஸ்கள் ஒரு மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தார்கள். பனிக்கட்டி உருகி உருவாகிய நீரை சிரிஞ்சால் உறிஞ்சினார். பின்னர் கொஞ்சம் பொறுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு எனது வலது காதுக்குள் சிரிஞ்சை வைத்து பீய்ச்சினார். சிலீர் என்ற பனி நீர் காது ஜவ்வை முத்தமிட உடம்பு முழுக்க ஓடியது ஒரு மின்சாரச் சிலிர்ப்பு. உடலின் ஒவ்வொரு அணுவும் ஜில்லென்று கூச, அந்த உணர்வை எப்படிச் சொல்வது? “உச்ச மகிழ்வுக்கும் உச்ச வலிக்கும் அனுபவிப்பவனிடம் அடைமொழி இல்லை. மேலும் எம் வலி ஆகாது உம் வலி” என்று கல்யாண்ஜியின் கவிதை வரிகளை இந்த உணர்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

  இப்போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு அறை மெதுவாகச் சுழல ஆரம்பிக்கும். டாக்டர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார். தலை சுற்றுகிறதா? எந்தத் திசையில் சுற்றுகிறது என்று கேட்பார். சரியாக இரண்டு நிமிடம் கழித்து தலை சுற்றுவது நிற்கும்.  டாக்டர் ஒரு தாளில் எதையோ குறித்துக் கொள்வார். பிறகு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்கும், செவிலிகளுக்கும் ஓய்வு. பின்னர் எதிர் திசையில் ஒருக்களித்துப் படுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிஞ்ச், குளிர் நீர் உறிஞ்சல், இடது காதுக்குள் பீய்ச்சல். இப்போதும் தலை சுற்றல் ஏற்படும். ஆனால் முன்னர் ஏற்பட்டதற்கு எதிர் திசையில். சரியாக இரண்டு நிமிடம். பின்னர் நின்றுவிடும்.

  இரண்டு வெவ்வேறு திசைகளிலான, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தலைசுற்றல்களினால் தள்ளாடி இருக்கையில் அமர்ந்த என்னிடம் “பேலன்ஸ் சரியாத்தான் இருக்கு. எதுவும் ப்ராப்ளம் இல்லை” என்றார் டாக்டர். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட்.

  கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டரின் பிள்ளைதான் இந்த இளம் காது மூக்கு தொண்டை டாக்டர் என்று பின்னர் தெரிந்தது. அதன்பிறகு எனக்கும் அந்த பிரச்சனை சட்டென்று நின்றுவிட்டது.

   
 • காஞ்சி ரகுராம் 8:01 am on May 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அனுபவம், , , , Dubai   

  அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!! 

  ஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணோம்! சாலையின் இருகோடிக்கும் விரிந்திருந்த அப்போர்டைத் தாண்டி அதே வேகத்தில் டாக்ஸி சென்றது. சந்தேகத்தை கேட்டு விட்டேன். டிரைவர் நம்ம மலையாளிதான். என் கன்னித் தமிழைப் புரிந்துக் கொண்டு, மலையாளத் தமிழில் விடை தந்தார். கார்களின் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கார்டைச் சுட்டிச் சொன்னார், “அது ரீசார்ஜபிள் ப்ரீ பெய்டு ரோடு டாக்ஸ் கார்ட் (டாக்ஸிகள் விதிவிலக்கு). டோல் கேட்டைக் கடக்கும்போது, அதனடியில் இருக்கும் சென்சார்கள் தொடர்பு கொண்டு அச்சாலைக்கான சுங்கதைக் கழித்து விடும்”. அட!

  மெட்ரோ இரயில். ஸ்மார்ட் கார்டுதான் டிக்கெட். பயணத் தேவைக்கேற்றபடி அதையும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். கண்ணாடிக் கட்டடக்கலை நிபுனத்துவத்தை எடுத்துக் காட்டும் இரயில் நிலையங்கள். டிரைவரின்றி இயங்கும் ஆடோமேடிக் இரயில்கள். பிளாட்ஃபாரமும் கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இரயில் வந்து நிற்கும் போது, அதன் கதவுகளும், பிளாட்ஃபார்மின் கதவுகளும் ஒருசேரத் திறக்க ஏசியில் குளிர்ந்தபடியே இரயிலினுள் நுழையலாம். ஐயோ, ஃபர்ஸ்ட் கிளாசில் நுழைந்து விட்டேனோ என பயம் கவ்விக் கொண்டது. (பின்னே என்ன சார், மூல பௌத்திர நோட்டிஸ்கள் இல்லாவிட்டால் எப்படி?). இரயிலின் கோடிவரை விழிகளை ஓட்டினால், எல்லாமெ டாப் கிளாஸ். முதல் பெட்டி மட்டும் கோல்ட் கிளாஸ். அதற்குத் தனியாக கோல்ட் ஸ்மார்ட் கார்ட். நான் நினைத்ததை விட நான்கு ஸ்டேசன் முன்னாடியே இறங்க வேண்டி வந்தது. நிலைய வாயிலில் இருக்கும் ஆக்ஸெஸ் பாய்ண்ட்டில் ஸ்மார்ட் கார்டைக் காட்டிய போது, நான் பயணித்த தூரத்திற்கு மட்டும் உண்டான தொகையை கழித்துக் கொண்டு மீதியைக் காட்டியது டிஸ்பிளே. அட!

  மெட்ரோ பஸ். GPS கருவி பொருத்தப்பட்ட இப்பஸ்ஸில் அடுத்து வரப்போகும் மூன்று ஸ்டாபிங்கின் பெயர்கள் அதற்கான தூரம் எல்லாம் டிவியில் ஒளிர்கிறது. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க என்று சகபயணியை நச்சரிக்க வேண்டியதில்லை. முக்கியமாக இதில் கண்டக்டரே இல்லை. இரயிலுக்கு எடுத்த அதே ஸ்மார்ட் கார்ட் இங்கும் செல்லுபடியாகும் (ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து). இறங்கும் போது கதவருகே இருக்கும் கருவி பயணத்தொகையை ஸ்மார்ட் கார்டில் கழித்துவிடும். அட!

  அன்றைய அலுவல் முடித்து டாக்ஸியில் ஹோட்டலுக்குத் திரும்பினேன். ரிசப்ஷனிஸ்ட்டிடம் சற்று நேரம் அளவளாவி விட்டு (இங்கே டிமாண்டுக்கு ஏற்ப, வார விடுப்பு நாட்களுக்கு ஏற்ப ரூம் வாடகை மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பற்றி மட்டும்தான் பேசினேன். வேறொன்றுமில்லை!) என் ரூமினுள் நுழைந்தேன். ரூம் கீயும் ஸ்மார்ட் கார்டுதான். கட்டிய தொகைக்கான நாட்கள் கடந்துவிட்டால் கதவு திறக்காது. சட்டென உணர்ந்தேன். மொபைலைக் காணவில்லை. ஹோட்டல் போனிலிருந்து என் எண்ணை அவசரமாய் அழைக்க, டாக்ஸி டிரைவர்தான் பேசினார். “இது சீட்டுக்கடியில் விழுந்து விட்டது. இப்போது ஒரு சவாரியை விடச் சென்று கொண்டிருக்கிறேன். இருபது நிமிடத்தில் வந்து தருகிறேன்” என்றார் (ஹிந்தியில்). சொன்னபடி வந்து விட்டார். சவாரியை விட்ட இடத்திலிருந்து புதிய சவாரியாக மீட்டரை ஓடவிட்டு வந்திருக்கிறார். மொபைலைத் தந்து, மீட்டர் காட்டிய 24 திராம்-ஐ (துபாய் கரன்ஸி) மட்டும் பெற்றுக் கொண்டு சலாம் சொன்னார் அந்த பாகிஸ்தானி ட்ரைவர். அட!

  எவ்வூருக்குச் சென்றாலும், காலையில் வாக்கிங்கோ ஜாகிங்கோ செல்வது என் சிலநேரப் பழக்கம். அதன்படி துபாய் சாலைகளில் ஓட்டமாய்த் துவங்கினேன். தார் சாலைகளையும், அதை ஒட்டி இருக்கும் டைல்ஸ் நடைபாதைகளையும் தவிர்த்து விட்டால் எங்கும் மணல் மணல் மட்டுமே. அதில் ஓடியபடி காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் வழி விட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டிடங்களை ரசித்தேன். அதனருகில் நின்றிருந்த கார்களில் ஒன்று மட்டும் மணலை அப்பிக் கொண்டிருக்க அதன் முகப்பு வைப்பரில் ஒரு துண்டு சீட்டு சொருக்கப்பட்டிருந்தது. அருகே சென்று படித்தால், துடைக்காமல் வைத்திருந்ததற்கு அபராதம் 100 திராம். ஓ! வியப்படைந்த எனக்கு வேறோரு விஷயம் உறுத்தியது. சாலைகளில் மழை நீருக்கு வடிகால்களைக் காணோம். மணல் அப்படியே நீரை உறிஞ்சும் விதமாக ஏதேனும் ஹைடெக்காக செய்திருப்பார்களோ எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. பின்பு விசாரித்ததில் தெரிந்தது. துபாயில் மழையே பெய்யாதாம். அடக் கடவுளே!

  அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

  அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

  அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

  அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்

   
 • சரசுராம் 12:03 pm on June 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அனுபவம், , மொட்டைமாடி   

  மொட்டை மாடி.. மொட்டை மாடி… 

  கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.

  கோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது.   பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல்  அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.

  துணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.

  அந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும்.  தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.

  எங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.

  எங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.

  எங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு  மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள்? ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி  தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.

  எப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.

  பல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று.  நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது? அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.

   
  • ஆயில்யன் 12:22 பிப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂

   அதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம்! மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட!

   //அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./

   LOL:)))))))

  • ஜெகதீஸ்வரன் 11:00 முப on ஜூன் 26, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே!…

   வாழ்க வளமுடன்!

   – ஜெகதீஸ்வரன்.
   http://sagotharan.wordpress.com

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி