Tagged: காஞ்சி ரகுராம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • காஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, காஞ்சி ரகுராம், காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்   

  காற்றடைத்த பையடா! 

  பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

  கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

  இந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.

  கார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப்  பட்டியலிடுகிறார்.

  கைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை நாம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா?!)

  உடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.

  1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.

  2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.

  3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.

  சில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

  உலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

  நாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன?

   
 • காஞ்சி ரகுராம் 6:22 am on June 22, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: இந்திரப்பிரஸ்தம், காஞ்சி ரகுராம், , பர்ஜ் கலீஃபா, , லிஃப்ட்   

  அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம் 

  ஒன், டூ, த்ரீ, ஃபோர்… உலகின் அதிவேக லிஃப்டினுள் மானிட்டர், வினாடியைவிட வேகமாய் எண்ணிக்கையை காட்டத் தொடங்கியது. அதன் பின்புறத்தில் மேகங்கள் கீழிறங்குவது போல் அனிமேஷன். சரி, லிஃப்ட் புறப்படப்போகிறது என நினைத்தேன். சில நொடிகளில், விமான டேக் ஆஃப்-இல் நிகழ்வது போல காதடைத்த போதுதான் லிஃப்ட் நகர்வதே உறைத்தது. அசைவின்றி, நகரும் உணர்வு சிறிதுமின்றி, வினாடிக்கு 18 மீட்டர் வேகம் (64 km/h). ஒண்ணரை நிமிடத்தில், 124-ஆவது தளத்தில் கதவு திறந்தது.

  அட் தி டாப் – பர்ஜ் கலீஃபா.

  160 தளங்களுடன் உலகின் உயரமான கட்டிடம். 124 தளம் வரை மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி. தளர்வான மணலின்மேல், தளராமல் எழுப்பப்பட்ட கட்டிடம் வாய்பிளக்க வைக்கிறது. 95 கிலோமீட்டர் வரை இதன் உச்சி தெரியுமாம்.

  நான்கு நாட்கள் முன்னதாகவே டிக்கெட் வாங்கினால்தான் உச்சிக்குச் செல்ல முடியும். அவ்வளவு கூட்டம்.  உச்சியிலிருந்து இண்டராக்டிவ் டெலஸ்கோப் மூலம் ஒட்டு மொத்த துபாயும் தெரிகிறது. ஒரு பொட்டல்வெளிப் பாலைவனத்தில், தொலைநோக்குத் திட்டமுடன், எத்தகைய உழைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹரிசாண்டல் சிட்டி – துபாய் என்பதை, அத்தனை உழைப்பையும் ஓரிடத்தில் குவித்து உருவாக்கப்பட்ட வெர்ட்டிகல் சிட்டி – பர்ஜ் கலீஃபாவின் உச்சி உலகிற்கே பாடம் நடத்துகிறது.

  தரைதளத்தில் இது உருவாக்கப்பட்ட விதம், அதன் குழு பற்றி ப்ரொஜெட்டர்கள் படம் ஓட்டிகொண்டே இருக்கின்றன. உலகின் பல மூலைகளிலிருந்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குழு அது. தினமும் 12,000 நபர்களை வழிநடத்திய குழு அது. அவர்களெல்லாம் நம்மைப் போல் சாதாரண மனிதர்களே. ஆனால், ஒரு குறிக்கோளுடன் ஓர் அலைவரிசையில் இணைந்து உழைத்தால் எவ்வளவு தூரம் உயர முடியும் என்பதற்கு இக்குழு உதாரணம். 828 மீட்டர் உயர்ந்திருக்கிறார்கள்.

  இக்கட்டிடத்தின் கீழ் தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது – துபாய் மால். பல இண்டர்நேஷனல் பிராண்ட் கடைகள், நேஷனல்-ஜியோகிராஃபிக் சானலில் மட்டுமே பார்த்த பலவித மீன்களைக் கொண்ட அக்வேரியம், அரண்மனை போன்ற தோற்றத்துடன் தங்க வைர கடைகள், பலதேச ருசிகளுடன் உணவகங்கள் – இப்படி பலப்பல. இங்கே வருபவர்களில் ஐரோப்பியர்கள் அதிகம். பிறந்து ஒருவாரமே ஆன பிஞ்சுக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

  பெட்ரோலைத் தவிர வேறெந்த வளமுமற்ற மணலில், நீர், உணவு, வசிப்பிடம், அதி நவீன வசதிகள், சாதனைச் சின்னங்கள் என அனைத்தையும் ‘டெவலப் ஆர் டை’ என்ற மனநிலையுடன் தருவித்ததில் இன்று இருநூறுக்கும் மேற்பட்ட தேசத்தவர் வசிக்கிறார்கள். ஒரு வரியில் சொல்வதென்றால், வசிக்கவே முடியாத நிலத்தில் இந்திரப்பிரஸ்தம் உருவாக்கிய பாண்டவர்களின் இதிகாச உவமைக்கு கலிகால உவமேயம் – துபாய்.

  அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!

  அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

  அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

  அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்

   
  • கீதப்ப்ரியன்|geethappriyan 6:35 முப on ஜூன் 22, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நண்பரே,
   போய்வந்துவிட்டீர்களா?அதில் நானும் ஒரு மூளையில் வேலை பார்த்துள்ளேன்,என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது,இன்னும் படங்கள் எடுத்திருக்கலாமே?

  • anvarsha 6:53 பிப on ஜூன் 22, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   துபாயில் எண்ணை வளம் இல்லை! எல்லாம் சுற்றுலா மற்றும் கடன் பணம் தான்! அதனால் தான் இப்போது பணமில்லா சிக்கலில் துபாய்.

 • காஞ்சி ரகுராம் 10:27 pm on June 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: காஞ்சி ரகுராம், , சஃபாரி, , துபாய் பஸ் ஸ்டாண்ட், , , விவேகானந்தர் தெரு   

  அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ் 

  அறுபதடிக்கும் மேல் சரிவான பெரும் மணல் பள்ளம். அதன் உச்சியில் சறுக்கி சிக்கிக் கொண்டு நின்றது எங்கள் டொயோட்டா SUV கார். “எல்லாரும் இறங்கி காரை பின் பக்கமாக இழுங்க” என்றார் டிரைவர். இப்பள்ளத்தில் எப்படி இறங்க முடியும்?! உள்ளிருந்த ஐந்து பேருக்கும் வயிறு பிசைந்தது. வேறுவழியில்லை, இதோ பாருங்க என அவர் ரிவர்ஸ் எடுக்க முயல திணறித்திணறி சரியத் தொடங்கியது கார். எல்லாருக்கும் மூச்சடைக்க, ஒரு முறுவலை உதிர்த்து அவர் ஆக்ஸிலரேட்டரை மிதிக்க பள்ளத்தில் சீறி இறங்கியது கார்…. வாஆஆஆ…வ்……. வெல்கம் டு துபாய் டெஸர்ட் சஃபாரி.

  முதல் பள்ளத்தில் ட்ரைலரைக் காட்டிய டிரைவர் அதன் பிறகு 70mm பனோராமா படமே காட்டினார். பாலைவனத்தின் மேடுகளில், முகடுகளில், பள்ளங்களில், சரிவுகளில், விதவித கோணத்தில், விதவித வேகத்தில் படு லாவகமாக புழுதி பறக்க அவர் காரோட்டியது ஒரு லைவ் ஆக்‌ஷன் திரில்லர். ஒரு முகட்டின் உச்சிக்குச் சென்று பக்கவாட்டில் காரை சரியவிட்டுக் காட்டியது, கிளாசிக் டிரைவ்.

  “நீங்கள்தான் ஜேம்ஸ்பாண்ட்டா?” எனக் கேட்டேன். ஹஹ்ஹஹ்ஹா.. எனச் சிரித்து கலகலப்பாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசியபடியே ஓட்டினார். அரேபியர்களின் பாரம்பரிய உடையில் கம்பீரமாக இருந்தார். ஒரு கை கியரிலும் மறுகை ஸ்டியரிங்கிலும் வைத்து படு கேஸூவலாக ஓட்டினாலும் அவர் கண்ணிரண்டும் படு ஷார்ப். ஒரு இமைப்பில் பிசகினாலும் குட்டிக் கரணம்தான். ஆனால் அவரின் பயிற்சியும் முதிர்ச்சியும் தோரணையில் தெரிந்தது.

  தங்கியிருக்கும் ஹோட்டலில் ஒருநாள் முன்னதாகச் சொல்லிவிட்டால் டெஸர்ட் சஃபாரிக்கு ஏற்பாடுகள் பக்கா. மதியம் 3 மணிக்கு ஒரு கார் அழைத்துச் செல்கிறது. துபாய் சிட்டியிலிருந்து ஒரு மணி நேரப் பயணம். (வழியில் ஆளரவமற்ற ஓரிடத்தில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. அதுதான் துபாய் பஸ் ஸ்டாண்டாம். இன்னொரு முறை அங்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால், விவேகானந்தர் தெருவை விசாரிக்கலாமென நினைக்கிறேன்!). பின் டெஸர்ட் சஃபாரிக்கு பிரத்யேக டிரைவர் ஓட்டும் காருக்கு மாற்றிவிடுகிறார்கள். நாற்பது நிமிடத் திரில்லருக்குப்பின் பாலையின் நடுவில் இறக்கி விடுகிறார்கள்.

  ஒட்டகச் சவாரி, நாமே ஓட்டும்படி சிறிய ஜீப்கள், நாலு சக்கரம் பொருத்திய பைக், மணல் ஸ்கீயிங் என பொழுது போக்குகள். வட்ட வடிவமாக குடிசைகள் இருக்க, நடுவில் மேடை போட்டு நட்சத்திர வடிவில் திண்டுகள் போல அமைத்திருக்கிறார்கள். பலதேச சுற்றுலா பயணிகள் சங்கமிக்கிறார்கள். ஒரு ஐரோப்பிய பெண் அரேபிய உடையணிந்து படமெடுத்துக் கொள்கிறார். ஒரு பெண் குடுவை பைப்பில் புகைப்பதுபோல் போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் புகைத்தே போஸ் கொடுக்கிறார். ஒரு தாய்லாந்து பெண் கையில் மருதாணியால் தேளை வரைந்துகொண்டு உடன் வந்தவர்களிடம் காட்டிக்காட்டி மகிழ்கிறார். மற்றொருவர் பழக்கப்படுத்திய பருந்தை கையில் வாங்கி வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கிறார். ஒவ்வொரு பெண்ணிற்கும் எத்தனை சின்னச்சின்ன ஆசைகள். அதைக் காணத்தான் நமக்கு எத்தனை பெரிய பெரிய ஆசைகள்!

  ஒன்பது மணிக்கு மேடையில் நடனம் துவங்குகிறது. மூன்றடுக்கு பாவாடை அணிந்து கையில் டோலாக்குடன் ஒருவர் சுற்றிச் சுற்றி ஆடத்தொடங்குகிறார். டோலாக்கிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஒன்பது டோலாக்குகளை எடுக்கிறார். அதை அடித்துக் கொண்டு, கீழே விழாமல் பிடித்துக் கொண்டு, வேகத்தை குறைக்காமல் ஆடிக் காட்டியது ரசிக்கும் படி இருக்கிறது. பாவாடையிலிருந்து ஒன்பது குடைகள் எடுத்தும் மேஜிக் நடனமாடினார்.

  பின்னர் டின்னர் பப்ஃபே. மீண்டும் நடனம். இப்போது ஒரு அரபு அழகு பெண்மணி, தன் பொன்னிடையை அசைத்து அசைத்து ஆடுகிறாள் பெல்லி டான்ஸ். (ம்ஹூம். இதை விவரிப்பதாய் இல்லை. வீட்டில் வசையோசை கடகடவெனக் கேட்கும்).

  வானமும் பாலையைப்போல வற்றியிருந்தது. நட்சத்திரங்களின்றி. பிறைமதி ஒளியுமி்ழ, மொபைல் சிக்னலின் எல்லைக்கப்பால், எங்கோ ஒரு பாலையின் நடுவில், பல தேச பல வயது மக்களுடன், திண்டில் சாய்ந்தமர்ந்து, நிதானமாக உணவை ருசித்து, நடனத்தை ரசிப்பது ஒரு புதிய அனுபவம்.

  ஆச்சரியமாய்க் குளிரத்தொடங்கியது. நடனம் முடியும் தருவாயில், டிரைவர் நம்மை சரியாக அடையாளம் கண்டு அழைத்துச் செல்கிறார். மனமின்றியே புறப்பட்டேன். ஹோட்டலை அடைந்தபோது பேண்ட் பாக்கட் அதிகப்படியாக கனத்தது. எடுத்தால்… உள்ளங்கையளவு துபாய் பாலை மணல்.

  அடடா துபாய்! – 1 : துபாய் மெயின் ரோடு

  அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

  அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

  அடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி