Tagged: சுற்றுச்சூழல் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • பொன்.சுதா 1:04 pm on July 18, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அவைநாயகன், இயற்கை, ஓசை, கவிதை, காடு, காடுறை உலகம், , சுற்றுச்சூழல், பறவைகள், பொன்.சுதா, வனம், விலங்குகள்   

  கானகத்தின் குரல் 

  கவிஞர் அவைநாயகனின் ‘காடுறை உலகம்’  கவிதைப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.

  இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘சூரிய செதில்கள்’ 1988 ல் வெளியானது. இது ஒரு ஹைக்கூ தொகுப்பு. வெகுவாக பாரட்டப்பட்ட புத்தகம் அது. அதன் பிறகு சில தொகுதிகள் வெளியிடும் அளவிற்கு கவிதைகள் எழுதி அவைகள் பல பத்திரிக்கைகளில் வெளி வந்திருந்தாலும், 23 வருடங்கள் கழித்து ‘காடுறை உலகம்’ அவரின் அடுத்த கவிதைத் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. இது பசுமை இலக்கியம் என்று அறியப்படுகின்ற இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் இலக்கிய வகையில் முன்னோடியான ஒரு முயற்சி.

  வனங்களையும், வன உயிரினங்களையும் அதன் முக்கியத்துவம் அறிந்து,  நேசித்து, நுட்பமாய் உணர்வதினால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கவிதைகள் இவை.

  பொதுவாகவே இயற்கை, மற்றும் வன உயிர்களைப் பற்றிய நூல்கள் சிறப்பான செய்திகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் கொண்டிருந்தாலும், அவை படைப்பாற்றலற்ற வறண்ட மொழியைக் கொண்டவையாக இருப்பது தான் பெருங்குறை. அதன் காரணமாகவே அந்த அறிய புதையல்கள் புதையுண்ட நிலையிலேயே இருக்கின்றன.

  ’காடுறை உலகம்’  வன அறிவியலை உட்செறித்து படைப்பு மொழியில் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முழு வெற்றி அடைந்திருக்கிறது.

  இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்ததாலேயே சங்கப் பாடல்களில் இயற்கையை பற்றிய பதிவுகள் முதன்மையானவையாக இருக்கின்றன. அந்த மரபின் நீட்சியாகவே இக் கவிதைகள் முகம் கொள்கின்றன.

  ’காடுறை உலகம்’ ஒரு வன அனுபவமாகவே பதிகின்றது மனதில். சூரியனின் ஒளி இழைகள் ஊடுருவ முடியாத ஒரு அடர்வனத்தில் ஒரு காட்டுப் பூவாய் நம்மை மாற்றி விடுகின்றன கவிதைகள். பறவைகளின் சிறகடிப்பில் நாமசைகிறோம். நீர் நிலைகளில் இறங்கும் புலியின் மீசையைப் பூச்சி என்று எண்ணி பிடித்திழுக்கும் மீனாக இருக்கிறோம் சில கணங்களில். காட்டைக் கீறி எழும் தார்ச் சாலைகளின் பயங்கரத்தை உணர்கிறோம். பட்டுப் போன மரங்கள் என்று நாமறிந்தவைகள் பாம்புகளின் வாழ்விடங்கள் என்பதாய் அர்த்தமாகிறது. உணவுக்காகப் பிடித்த பூச்சியை முள்ளில் மாட்டி வைத்து ஆற அமர உண்ணும் கீச்சான் அறிமுகமாகிறது.

  தையல் சிட்டு, கடமான், காட்டுப் பன்றி, யானை, மந்தி, நாரை, உடும்பு, பனங்காடை, மலை அணில், கரடி, வரகுக் கோழி, உன்னிக் கொக்கு, பஞ்சரட்டை, புலி, பெருநாகம், செந்நாய், குரங்கு, கழுகு, சிங்கவாலி, நாகணவாய், ஓணான், சிறுத்தை, மயில், அட்டைப் பூச்சி, பெரணி, காட்டுப் பூனை, போன்றவை தனது ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றன. படித்து முடித்து நம்மிடம் நாம் திரும்பும் போது காடு என்பது தனி உலகம் எனப் புரிகிறது. காட்டின் இயக்கியல் மனித அத்துமீறல்களினால் சிதைவுறுகிறது என்பதும் அறிவாகிறது.

  சிறுகல் எரிய குளத்தில் விரியும் பெரும் வளையங்களாக, சிறு சிறு கவிதைகள் பெரும் காட்சிகளையும், அனுபவங்களையும் எழுப்புகின்றன மனப்பரப்பில் அலைஅலையாய்.

  உதாரணக்  கவிதை:

  தானாய் ஒரு

  கல் பெயர்ந்தாலும்

  வீடிழக்கும்

  சிற்றுயிர்கள்.’

  இந்தப் புத்தகத்தின் இன்னோரு சிறப்பு. கவிதைகளில் குறிப்பிடப்படுகின்ற உயிரினங்கள் மற்றும் கருப் பொருட்கள் வழவழப்பான தாளில் வண்ணப் புகைப்படங்களாக அச்சிடப்பட்டு கவிதைகளின் அருகிலேயே இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் எங்கோ இணையத்தில் தரவிறக்கப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் மேற்கு மலைத் தொடரின் காடுகளில் தொழில்முறை வனவிலங்கு புகைப்பட நிபுணர்களால் எடுக்கப்பட்டவை. புகைப்படங்களுக்கு கீழே அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய குறிப்புகளும் கடைசிப் பக்கங்களில் காணக் கிடைக்கின்றது.

  அவைநாயகன்  கவிஞர்  மட்டுமல்லாமல் சூழல் போராளியாக களத்திலும் இருப்பவர்.

  இந்நூலை கோவையில் இயங்கி வரும் ‘ஓசை’ என்கிற சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ‘ஓசை’ சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடமும், மக்களிடம் ஏற்படுத்த தொடர்ந்து இயங்கி வருகின்றது. சூழலுக்கு எதிராக இயங்குபவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றது.  ஓசை காளிதாசன் மற்றும் அவைநாயகனும் இந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார்கள்.

  படித்துப் பாதுகாக்க வேண்டிய இந்நூலை படைத்த அவைநாயகனும், இதை வெளியிட்ட ஓசை அமைப்பும் மிக முக்கியமான ஒரு பணியை செய்து முடித்திருக்கிறார்கள் பசுமை இலக்கியத்திற்கு.

  இந்நூல் கோவை விஜயா பதிப்பகத்திலும், சென்னையில் புதிய புத்தக உலகத்திலும் (New Booklands), டிஸ்கவரி புக் பேலஸ்ஸிலும் கிடைக்கின்றன. கோவையில் ஓசை அலுவலகத்திலும் பெறலாம்.

  ஓசை பற்றி அறிய:   http://www.greenosai.org

  தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com, pasumaiosai@yahoo.com

  ஓசை அலுவலக எண்: 0422-4372457

   
 • சித்ரன் ரகுநாத் 7:00 am on October 9, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: சுற்றுச்சூழல்   

  மலிவு விலை அனுபவம் 

  சென்னைவாசியாக இருக்கப்பட்ட ஜீவராசிகள் யாராவது இந்த இடத்துக்கு ஒரு முறையேனும் விஜயம் செய்திருக்காவிடில் அவர்களுக்கு நரகத்தில் “நெருக்கிப்பிழி” தண்டனை நிச்சயமாக ரிஸர்வ் செய்து வைக்கப்படும். ஏற்கெனவே அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அந்த தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வேன். மனிதக் குரல்களும் பாத்திர பண்டங்களின் சப்தங்களும், மேனேஜர் நாச்சிமுத்து எங்கிருந்தாலும் கிரவுண்டு ஃப்ளோருக்கு வரவும் என்று மைக் அறிவிப்புகளும், டிவியில் இடைவிடாது அலறும் விளம்பரங்களும் நிரம்பி வழியும் கூடங்கள். குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைக்கான மலிவு விலைப்பொருள்கள். தங்கள் அரட்டை போக மிச்சமிருக்கும் நேரத்தில் கஸ்டமரை கவனிக்கும் பையன்கள். பெண்பிள்ளைகள். பாலிதீன் கவர்களில் டெலிவரி டேபிளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குப் சறுக்கும் நாம் வாங்கிய பொருட்கள். ஐநூறு ரூபாய் தாள்களை அநாயாசமாக சரசரவென எண்ணும் கேஷியர் (பொடிப்) பையன்கள். நம் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கண்களால் பகிரங்கமாய் சோதனை செய்யும் வாயிற்காப்போன்கள்.

  வெறும் மின்விசிறிகளுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த கட்டிடம் காலப்போக்கில் நவீனமாகி குளிரூட்டப்பட்டிருக்கிறது. இம்முறை உடைகள், தோல் பொருட்கள் விற்கிற பகுதிக்குச் சென்ற போது திடீரென்று எனக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தின் செருப்பிலிருந்து எழும் தூசு, விற்பனைப் பையன்கள் துணிகளை அடிக்கடி உதறுவதால் எழும் நெடி, மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் முடை நாற்றம், இன்னபிற எல்லாம் ஏ.சியில் கலந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறதாய் உணர்ந்தேன். பிராணவாயு போதவில்லை என்று தோன்றியது. பிரம்மாண்டமான pollution.

  எந்த இடம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு “நெருக்கிப்பிழி”-யில் பத்து சதவிகிதம் தள்ளுபடி.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி